புதன், 3 நவம்பர், 2021

என்னைக் கிறங்கடித்துக் கிளுகிளுப்பூட்டிய 'சுராங்கனி'!!!

1975இல் இலங்கை வானொலி மூலம் மிகவும் பிரபலமடைந்தது என்கிறார்கள், 'சுராங்கனி... சுராங்கனி...' என்னும்  'பாப்' பாடல்; நான் கேட்டதில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு, தற்செயலாக 'youtube'இல் கண்டும் கேட்டும் ரசித்து மகிழ்ந்தேன்.

மகிழ்ந்தேன் என்பதைவிடவும் 'மயங்கினேன்' என்பதே சரி.

4 நாட்களில் பல முறை ரசித்த பிறகும் மயக்கத்திலிருந்து விடுபடவில்லை.

இந்த அளவுக்கு என்னைக் கிறங்கடித்துத் தொடர் மயக்கத்தில் ஆழ்த்தியது, மலேசிய வாசுதேவனுடன் இணைந்து பாடிய 'ரேணுகா' என்பவரின் காந்தக் குரலா, பின்னணி இசையின் முற்றிலும் மாறுபட்ட ரிதமா, சிரிப்பூட்டும் பாடலின் உள்ளடக்கமா, கிளுகிளுப்பூட்டும் கவர்ச்சிப் புன்னகையுடன் வளைந்தும் நெளிந்தும் குனிந்தும் நிமிர்ந்தும் சுழன்றும்  நளின நடனம் புரியும் அந்த அழகுப் பெண்ணா என்று பல முறை எனக்கு நானே கேள்விகள் கேட்டதில் விடையும் கிடைத்தது. 

'இவை எல்லாமும்தான்' என்பதே அது.

கீழ்வரும் அந்தக் 'காணொலி' உங்களை வெறுமனே மகிழ்விக்குமா, மயக்கவும் செய்யுமா என்பது எனக்குத் தெரியாது. உங்களுக்காகப் பகிர்ந்திருக்கிறேன்[பாடல் குறித்த மற்ற விவரங்கள் காணொலியில்]:


==========================================================================

அமேசான் கிண்டிலில் என் புதிய நூல்[36]:

நரகவாசல்!!!: [விழிப்புணர்வுக் கட்டுரைகளும் கதைகளும்] (Tamil Edition)

செவ்வாய், 2 நவம்பர், 2021

சூரசம்ஹாரமும் கொசு ஒழிப்பும்!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 'சூரன் வதை[சூரசம்ஹாரம்]' நடைபெறவுள்ள நவம்பர் 9ஆம் தேதியன்று, அரசு நிறுவனங்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் 'உள்ளூர் விடுமுறை' அறிவித்துள்ளது[தொ.கா. & நாளிதழ்] என்பது இன்றையச் செய்தி.

சூரனை இந்த நாளில்தான் முருகன் வதம் செய்தாரென்று பக்தர்கள் நம்புகிறார்கள். அதை ஒரு விழாவாகவும் கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் அதைக் குதூகலமாகக் கொண்டாடுவதற்கு வசதியாகத்தான் இந்த விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

முருகன் தமிழ்க் கடவுள் என்று போற்றப்பட்டாலும், 'சூரன் என்று ஒருவன் இருந்தான்; அவனை முருகன் வதம் செய்தார் என்று சொல்லப்படுவதை நம்புவது[மிகப் பலருக்குக் கதையே தெரியாது என்பது மிகப் பெரிய சோகம்] பகுத்தறிவுக்கு ஏற்ற செயலல்லவே' என்று நாம் சொல்ல நினைக்கும் அதே வேளையில், 'தீபாவளி, தலையாடி போன்ற பண்டிகைகள் கொண்டாடக் காரணமான நிகழ்வுகளும் கட்டுக்கதைகள்தானே?' என்னும் கேள்விகள் ஒருபுறம் எழுந்தாலும்.....

அவற்றுக்காக எடுக்கப்படும் விழாக்களில்  பட்டாசு வெடித்து மகிழ்தல், சுவையான தின்பண்டங்களைச் சுவைத்து இன்புறுதல்; [சின்னஞ் சிறுசுகள்] தேங்காய் சுட்டுப் பரவசமடைதல் என்று வழக்கப்படுத்திக்கொண்டதால் ஆண்டுதோறும் இவ்வகைப் பண்டிகைகள் அனுமதிக்கப்படுகின்றன என்பது யாவரும் அறிந்ததே.

திருச்செந்தூர்க் கோயிலில், சூரன் வதை செய்யப்படும் நிகழ்வும் வழக்கப்படுத்தப்பட்ட ஒன்றுதான்.

இவையெல்லாம் கதைகளே என்று எத்தனைதான் வலியுறுத்திச் சொன்னாலும், இவை பற்றிச் சிந்தித்து, விழாக்கள் கொண்டாடுவதை மக்கள் இப்போதைக்குக் கைவிட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

பழக்கவழக்கம் காரணமாகத் தொடர்ந்து கொண்டாடப்படும் இவற்றை எவ்வகையிலேனும் இயல்பு வாழ்க்கைக்குப் பயன் தருபவையாகவும் கொஞ்சம் மாறியமைத்தால், அது பெரும் வரவேற்புக்கு உரியதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனலாம்.

"மேற்கண்ட அரக்கர்கள் எல்லாம் செத்தழிந்து ஒழிந்துவிடவில்லை; இன்றளவும் மிகப் பல நோய்களுக்குக் காரணமாக உள்ள, கண்ணுக்குத் தெரியும் கொசுக்கள், தெரியாத நச்சுக் கிருமிகள் போன்றவற்றின்  உருவில் வாழ்கிறார்கள்" என்று மக்களிடம் எடுத்துச் சொல்லி, நம்ப வைத்து[பிற கதைகளை நம்புவது போலவே இதையும் நம்புவார்கள்], விழா நாட்களில் அவை உற்பத்தியாகும் சாக்கடை போன்ற இடங்களைத் தூய்மைப்படுத்தல், மருந்து தெளித்தல் என்று பயனுள்ள பணிகளைச் செய்து முடித்த பின்னர், பட்டாசு வெடித்தல், தின்பண்டங்கள் சுவைத்தல், திரைப்படம் பார்த்தல் என்றிவற்றையும் செய்திட அவர்களைப் பழக்கப்படுத்தினால், அது சமுதாயத்திற்குப் பெரும் நன்மைகளை அளிப்பதாக அமையும் என்பது நம் எண்ணம்.

இதை, உரிய முறையிலான அறிவிப்புகள் மூலமும், ஊடகப் பரப்புரைகள் வாயிலாகவும் அரசு சாதித்துக் காட்டுதல் வேண்டும் என்பது நம் கோரிக்கை.