வியாழன், 21 ஏப்ரல், 2022

'உக்ரைன்' போருக்குப் பின் புடினுக்குப் புத்தி பேதலிக்கும்!?

'உக்ரைன்' போரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது இப்போது எவருக்கும் தெரியாது.

போரில் தோற்றால்.....

ஒரு வல்லரசின் அதிபர் என்ற முறையில் ஒரு சின்னஞ் சிறிய நாட்டிடம் அடைந்த தோல்வியைப் 'புடின்' அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாது.  அதன் விளைவு அவரின் மனநிலை பாதிக்கப்படலாம். 

போரில் வென்றால்.....

கட்டுக்கடங்காத மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கித் திளைப்பார்.

கொஞ்சம் நாட்கள் கழித்துத்தான் இயல்பு நிலைக்குத் திரும்புவார்[இப்போது போரின் வெற்றியைப் பற்றி அல்லாது வேறு எதையும் சிந்திக்கும் நிலையில் அவர் இல்லை]. 

அந்நிலையில், தான் நிகழ்த்திய போரால் உக்ரைன் மக்கள் பட்ட விவரிப்புக்கு அடங்காத துன்பங்கள் பற்றி, ஊடகங்களில் வெளியான செய்திகளை நினைவுகூர்ந்து சிந்திக்கும் வாய்ப்பு அவருக்கு அமையும்.

அப்போது அவர் அறிய நேரும் துயரச் செய்திகள் கீழ்க் கண்பவையாகவும், இவை போன்றவையாகவும்  இருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

*ரஷ்ய ராணுவத்தினரின் வன்முறையிலிருந்து தப்பிக்க முயன்றவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார்கள். அவர்களில் பலர் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்கள்.

*நகரங்களிலும் கிராமங்களிலும் சித்திரவதை செய்யப்பட்ட உக்ரைன் மக்களின்   சடலங்கள் தெருக்களில் சிதைந்து சிதறிக் கிடந்தன.

"உக்ரைனில் இருந்து வரும் அகதிகளில் பெரும்பான்மையான பெண்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டுப் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 

*ரஷ்யப் படைவீரர்களின் தாக்குதலுக்கு உள்ளான பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தண்ணீர், உணவு மற்றும் மருந்து கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

*உணவும் உறக்கமுமின்றி, வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். மெத்தை மற்றும் போர்வைகளால் மூடப்பட்ட உருளைக்கிழங்கு அடுக்குகளில்கூட ஒளிந்திருந்து ரஷ்ய ராணுவத்தினரின் கொடூரத் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முயல்கிறார்கள்.

*போர்க் கைதிகளில், பெண்கள் ஆண் குழுக்களின் முன்னால் நிர்வாணப்படுத்தப்பட்டுத் துன்புறுத்தல்களுக்கும் கற்பழிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்... படுகிறார்கள்.

*UNICEFஇன் அவசரகாலத் திட்டங்களின் இயக்குனராக 31 ஆண்டுகள் பணியாற்றிய 'மானுவல் ஃபோன்டைன்', "பணிக் காலத்தில் மிகக் குறைந்த நேரத்தில் இவ்வளவு சேதம் ஏற்பட்டதை நான் அரிதாகவே பார்த்திருக்கிறேன்" என்றார்[ஊடகப் பேட்டி].

அவர் மேலும் கூறுகையில், "3.2 மில்லியன்  குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப் பேர் போதிய உணவு இல்லாத நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 1.4 மில்லியன் மக்கள் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறார்கள். 4.6 மில்லியன் மக்கள் மாசடைந்த நீரைப் பயன்படுத்துகிறார்கள்" என்றார்.

*ஞாயிற்றுக்கிழமை தலைநகர் கியேவுக்கு வெளியே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் புகைப்படக் கலைஞர் 'மிகைல் பாலிஞ்சக்' எடுத்த புகைப்படம் உலகையே திகிலடையச் செய்தது. அதில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்களின் உடல்கள் போர்வையின் கீழ் மூடப்பட்டிருந்தன. பெண்கள் நிர்வாணமாக இருந்தனர். அவர்களின் உடல்கள் ஓரளவு எரிக்கப்பட்டிருந்ததாகப் புகைப்படக்காரர் கூறினார்.

*பெண்கள் மற்றும் சிறுமிகள் ரஷ்ய வீரர்களால் தாங்கள் அனுபவித்த அட்டூழியங்களைக் காவல்துறை, ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடம் கூற முன்வந்துள்ளனர்.  

*கூட்டுப் பலாத்காரம், துப்பாக்கி முனையில் நடக்கும் தாக்குதல்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கற்பழிப்புகள் ஆகியவை பற்றிய தகவல்கள் புலனாய்வாளர்களால் சேகரிக்கப்படுகின்றன.

*"எங்களின் அவசரகால ஹாட்லைனுக்குப் பெண்கள் மற்றும் சிறுமிகளிடமிருந்து உதவி கோரிப் பல அழைப்புகள் வந்துள்ளன. ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு உடல் ரீதியாக உதவுவது சாத்தியமில்லை. சண்டையின் காரணமாக எங்களால் அவர்களை அடைய முடியவில்லை” என்று லா ஸ்ட்ராடா உக்ரைனின் தலைவர் 'கேடரினா செரெபாகா' கூறினார், 

*'உக்ரேனிய நகரமான 'சபோரிஜியா'வில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் தப்பிப்பிழைத்தவர்கள் வருகிறார்கள். அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று அழைப்பது தவறு. ரஷ்யாவின் உக்ரைன் தாக்குதலால் விளைந்த பயங்கரங்களைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டிருக்கும் பாவிகள் அவர்கள் என்பதே பொருந்தும்.'

*அவர்களின் முகங்களில் நீங்காத நிழலாய் ஒட்டிக்கொண்டிருந்தது பல நாள் அதிர்ச்சி.

*அந்தக் கும்பலில் ஒரு ஜோடி[மரியுபோலிலிருந்து தப்பிவந்தவர்கள்]யினர் சொல்கிறார்கள்.....

"நாங்கள் எங்களின் முழு வாழ்நாளைக் கழித்த எஙகளின் நகரம் இப்போது எலும்புக் கூடுகள் நிறைந்த பேய் நகரமாகக் காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் சாம்பல் மேடுகள். கிட்டத்தட்ட எங்கள் வாழ்க்கையும் சாம்பலானது என்றால் அது மிகையல்ல."

*'ஸ்கை' நிருபர் மார்க் ஸ்டோணிடம் ஒரு நோயாளி சொன்னது:

"வெடிகுண்டு ஒன்று விழுந்ததில், எங்கள் வார்டில் இருந்த ஜன்னல்கள் அனைத்தும் உடைந்தன. 

எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை; சென்ட்ரல் ஹீட்டிங் இல்லை; நோயாளிகள் படுத்துக்கொள்ளப் போதிய இடவசதி இல்லை. கடும் குளிர். போர்த்துக்கொள்ளக் கொஞ்சம் போர்வைகள் மட்டுமே இருந்தன.

இந்தக் குண்டுகள் மற்றும் பல்வேறு பீரங்கிகளை நினைத்து மக்கள் அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனையின் ஜன்னல்களிலிருந்து பல மாடிக் கட்டிடங்கள் எரிவதை நாங்கள் பார்த்தோம்.

மக்கள் அழுவதை எங்களால் கேட்க முடிந்தது. அது கொடுமையாக இருந்தது. மேலும் அவர்கள் பயந்து ஒதுங்குவதற்காக மருத்துவமனைக்குக் குழந்தைகளுடன் வருகிறார்கள். 

வந்தவர்களில் பலரும் காயம் அடைந்தவர்கள். சிலருக்குக் கைகளோ கால்களோ இல்லை.

அது ஒரு பேய் நகரம். ஒன்பது மாடிக் கட்டிடங்களின் எலும்புக்கூடுகள்.

குண்டுகள் வெடித்தபோது, பலர் தாங்கள் பதுங்கியிருந்த கட்டடங்களின் அடித்தளங்களிலேயே நசுங்கிப் பிணம் ஆனார்கள். "

இவ்வாறான கொடூர நிகழ்வுகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினால் 'புடின்' அவர்கள், "நானா, ஏதுமறியாத அப்பாவி மக்கள் இத்தனைக் கொடூரமான துயரங்களை அனுபவிக்கக் காரணமானேன்" என்று வருந்துவார்; அவரின் மனசாட்சி வாட்டி வதைக்கும்; மனநிலை பாதிக்கப்பட நிறையவே  வாய்ப்பு உள்ளது!

மேலே இடம்பெற்ற துயர நிகழ்வுகள் கீழ்க்காணும் ஊடகச் செய்திகளிலிருந்து திரட்டிச் சுருக்கிப் பதிவு செய்யப்பட்டவை.

https://news.sky.com/story/ukraine-war-couple-who-survived-45-days-of-hell-in-war-torn-mariupol-tell-of-their-escape-12591999   

https://timesofmalta.com/articles/view/putin-honours-brigade-accused-of-ukraine-atrocities.949081

https://edition.cnn.com/2022/04/14/europe/ukraine-russia-atrocities-eyewitness-intl-cmd/index.html

https://www.aljazeera.com/news/2022/4/6/mariupol-mayor-accuses-russia-of-atrocities

https://www.theguardian.com/world/2022/apr/03/all-wars-are-like-this-used-as-a-weapon-of-war-in-ukraine

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

'கருந்துளை[black hole]' குறித்த கலக்கல் கட்டுரை!!!

அறிவியலின் மீது அளவற்ற காதல் கொண்ட இளைஞர் 'ரா.பிரபு'[புனைபெயர்: 'அறிவியல் காதலன்']. அறிவியல் செய்திகளைத் தமிழில் சுவைபடச் சொல்லுவதில் வல்லவர். 

'கோரா'வில் கேட்கப்பட்ட, 'கருந்துளை' தொடர்பான கேள்விக்கு இவர் தந்த பதில் இங்கே  பதிவாக்கப்பட்டுள்ளது.

                                           *   *   *   *   *

"பிளாக் ஹோல்"... ஒரு நிறமற்ற ரகசியம்

அறிவியலில்....அதாவது வான் அறிவியலில் ஆர்வம் உடையவர்கள், எப்போதும் பார்த்து வியக்கும் ஒரு பொருள் இந்தப் 'பிளாக் ஹோல்' ஆகும்.

பிரபஞ்சத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று இது.

இதைப் பொருள் என்று சொல்லலாம். ஆனால் எக்கச்சக்கமான சக்தி ரூபமாக இருப்பதால், இதைச் 'சக்தி' என்றும் சொல்லலாம்.  

இதை நாம் பார்க்க முடியாது(பிளாக்ஹோல் என்ற பெயரை வைத்து இதன் நிறம் கறுப்பு என்னும் முடிவிற்கு வருதல் கூடாது).

இதைப் பற்றிச் சொல்வதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி.....

உங்கள் பின் தலையை உங்கள் கண்களாலேயே பார்க்க முடியுமா? [கண்ணாடி அல்லது, போட்டோ எடுத்தல் என்று ஏதும் செய்யாமல் நேரடியாக நம் கண் கொண்டு பார்ப்பது).

முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பிளாக் ஹோல்.....

அது எங்கே இருக்கிறது? ஒன்றா, பலவா?

அது இந்தப் பிரபஞ்சத்தில் பல கோடி எண்ணிக்கையில் இருக்கிறது.

அதை விளக்குவது கடினம் என்றாலும் அதன் சக்தி எப்படிபட்டது என்பதை இப்போது அறியலாம்.

உங்களிடம் நான் ஒரு எலுமிச்சம் பழத்தைக் காட்டுகிறேன். இது சாதாரண எலுமிச்சை அல்ல, மாஜிக் எலுமிச்சை[அதாவது, கருந்துளை எலுமிச்சை] என்று கருதிக்கொள்ளுங்கள்.

உங்கள் மொபைலை வாங்கி, எலுமிச்சையால் அதைத் தொட்டால் மொபைல் அப்படியே ரப்பர் போல உறிஞ்சி உள்ளிழுக்கப்பட்டு எலுமிச்சைக்குள் சென்று மறைந்துவிடுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்.

பக்கத்தில் நின்ற ஆட்டோ அல்லது காரை இதனால் தொட்டாலும் அவை முற்றிலுமாய்க் கரைந்து எலுமிச்சைக்குள் அடக்கமாவதாக எண்ணிக்கொள்ளுங்கள்.

பிளாக் ஹோலுக்கு அருகே செல்லும் பொருளின் நிலையும் இதுதான்.

கோடி கோடி மடங்கு ஈர்ப்பு விசை கொண்டது பிளாக் ஹோல். ஓரு சிறிய ப்ளாக் ஹோல் மிகப் பெரிய சூரியனை இழுத்து விழுங்கி ஏப்பம் விடக்கூடியது என்றால் உங்களால் வியக்காமல் இருத்தல் சாத்தியமில்லை.

பிரபஞ்சம் என்பது உண்மையான ஒரு 'இன்விசிபில்' பொருள்.

பிளாக் ஹோல் எனப்படும் இந்தக் 'கரும் துளை' எப்படி உண்டாகிறது என்பது பற்றி இனி அறிவோம்.

நம் சூரியனைவிட அளவில் பெரிய நட்சத்திரங்கள் அழியும் போது, அழிதல் நிறைவு பெற்றவுடன் அது ப்ளாக் ஹோலாக மாறிநிற்கிறது.  அதன் பின்னர் அது பல நட்சத்திரங்களை விழுங்கும் ராட்சத வலிமை கொண்ட ஒன்றாக விண்ணில் அலையத் தொடங்குகிறது.

அடுத்து, நட்சத்திரம் அழியும் போது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். 

ஏதோ மெழுகுவத்தியை ஊதி அணைப்பதைப் போல 'டப்' என நடந்து முடியும் விஷயம் அல்ல இது. இது, ஒரு நீண்ட நெடியதொரு பிராசஸ் ஆகும். 

ஒரு' நட்சத்திர அழிதல்' நடந்து முடியப் பல லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.

அழியப்போகும் கட்டத்தில் அந்த நட்சத்திரம் தனது வழக்கமான அளவை விட மிக பெரிதாக வீங்குகிறது.

உதாரணத்திற்கு, நமது சூரியன் அந்த நிலையில் வீங்கினால் கிட்டத்தட்ட அது சனிக் கிரகம்வரை அடைத்துக் கொள்ளும்.

இந்த நிலையில் இதன் பெயர்  'சிகப்பு அரக்கன்'[(red giant)

வெளிப் பகுதி இப்படி வீங்கிக்கொண்டு இருக்க, இதன் மையப் பகுதி ஈர்ப்பு விசையில் தனக்குள்தானே சுருங்கத் தொடங்குகிறது... அதிபயங்கர விசையில் .

இதன் சென்டர் கோர் மேலும் மேலும் அடர்த்தி அதிகமாகி அதன் அணுக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு... கிட்டத்தட்ட, பலா பழத்தை அமுக்கி ஒரு கடுகு அளவுக்குச் சுருக்கியது போலச் சுருங்கிவிடும்.

இப்போது இந்த மையப் பகுதியின் பெயர்(white dwarf )வெள்ளைக் குள்ளன்..

ஒரு கட்டத்தில் மேல் பகுதி பலூன் போல வீங்கிக்கொண்டே போக மையப் பகுதி சுருங்கிக்கொண்டே போக நட்சத்திரம் வெடித்துச் சிதறுகிறது. இந்த நிகழ்வின் பெயர் சூப்பர் நோவா. இந்த நிலையில் இது வெளிப்படுத்தும் வெளிச்சம் இருக்கிறதே, அது அதன் வாழ்நாளில் வெளிப்படுத்திய மொத்த வெளிச்சத்தைவிடவும் அதிகம்.

அந்தச் சுருங்கி கொண்டே சென்ற மைய பகுதியின் நிறை மற்றும் ஈர்ப்புச் சக்தி அதிகரித்துகொண்டே சென்று முடிவில் பிளாக் ஹோல் உற்பத்தி ஆகிறது.

இப்போது இதில் இருக்கும் நிறை மற்றும் ஈர்ப்புச் சக்தி முடிவிலியாகிறது..

இனி இதை நெருங்கும் எதையும் இது உறிஞ்சி நொறுக்கி இழுத்து கொள்ளும் அது ஒளியாக இருந்தாலும் கூட.

பூமியிலிருந்து ராக்கெட் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் விண்ணை நோக்கிப் புவியின் ஈர்ப்பு விசையை மீறிச் செல்ல வேண்டும் என்றால் அது வினாடிக்கு 11.2 கி. மி வேகத்தில் சென்றாக வேண்டும். அதனைத்தான் நாம் escape velocity என்று அழைக்கிறோம். அதற்குக் குறைவான வேகம் இருந்தால் பூமி மீண்டும் இழுத்து கொள்ளும்.

ஆக, சூரியனின் எஸ்கேப் வேளாசிட்டியானது 600 கி. மி /வினாடி என்றாகிறது.

ஆனால், அந்தக் கருந்துளை அல்லது 'கரும் பாழ்' என்ற பிளாக் ஹோலில் உள்ளே நுழையும் ஓளி தனது 3 லட்சம் கிலோமீட்டர்[வினாடிக்கு] என்ற சூப்பர் வேகத்தை வைத்துக்கூட தப்பி வெளியே வர முடியாது என்றால் அதன் ஈர்க்கும் சக்தியை, எஸ்கேப் வேலாசிட்டியை அறிந்துகொள்ளலாம்.

நாம் இப்படிபட்ட மகா ஈர்ப்புவிசைக்குள் நுழைந்தால் என்னாகும்?

பல அறிஞர்கள் பல வகையாகச் சொல்கிறார்கள். ஒன்று கூட ரசிக்கும் விதமாக இல்லை. அவர்கள் வர்ணனைக்கு நரக லோகத் தண்டனைகள் எவ்வளவோ தேவலாம் .

நாம் கிட்ட தட்ட பல மைல் தூரத்திற்கு ரப்பர் போல இழுக்க படுவோம்; நமது தலையைவிட நமது பாதம் அதிக ஈர்ப்பை உணரும். நெருங்க நெருங்க அழுத்தம் கூடிக்கொண்டே போகும். நமது உடலில் ஒரு இடத்தில ஏற்படும் அழுத்ததிற்கும் உடலில் ஒரு செ. மி தள்ளி ஏற்படும் அழுத்திற்கும் வித்யாசம் பல டன் கூடி இருக்கும். நமது அணுக்கள் சிதைந்திட, பொருள் நிலையிலிருந்து சக்தி நிலைக்கே நாம் மாறிவிடுவோம்.

இதில் காலமும் வெளியும் வளைக்கப்பட்டிருக்கும் என்பதால் நமது பின் தலையை நாமே காணும் வகையில் அந்த ஒளியை வளைத்து நமக்கே அது காட்டும்.

இதில் இரண்டாவதாகச் சொல்லபடும் கோட்பாடுதான் சுவாரசியமானது.

அதாவது, அதில் நுழையும் நாம் இறக்க மாட்டோம். உண்மையில் அதில் நுழையும் எந்தப் பொருளும் அழிவது இல்லை. மாறாக, சக்தி நிலையாக மாறி வேறு ஒரு பரிமானத்திற்குச் சென்றுவிடுகின்றன.

பிளாக் ஹோலில் நுழைபவை எல்லாம் வேறு எங்கோ ஒரு வானத்தில் வேறு பரிணமானத்தில் எட்டிப் பார்க்கின்றன(இணைப் பிரபஞ்சம் கட்டுரையில் நான் சொன்னதைப் போன்ற பிரபஞ்சம்).

ப்ளாக் ஹோல் வேறு உலகத்திற்கான கதவு. இதுவும் ஒரு தியரிதான்.

ஓளிகூடத் தப்பிக்காது என்று சொல்லப்பட்டாலும் ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் அதை மறுத்தார். அதிலிருந்து கதிர் வீச்சு தப்பி வெளியேறுகிறது என்றார்.

அதற்கு holkins radiation என்றே பெயர் வைத்துவிட்டார்கள்.

இரண்டு பிளாக் ஹோல் நெருங்கி வந்தால் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பெரிய பிளாக் ஹோல் ஆகிறது. மேலும் பலது ஒன்று சேர்ந்தால் அது சூப்பர் மாசிவ் பிளாக் ஹோல் ஆகிறது.

நமது பால்வெளித்திரள்... galaxyயின் மையப் பகுதியில் இருப்பது இப்படி ஒரு super massive black holeதான்.

அதன் ஈர்ப்பு விசைதான் மொத்த galaxy யையே ஈர்த்துப் பிடித்து வைத்துள்ளது..

எது எப்படியோ, இன்றுவரை black hole இருப்பதை நாம் உணறுவதே அது மற்ற பொருட்களின் மேல் ஏற்படுத்தும் விளைவை வைத்துத்தான். மற்றபடி, அதைப் பார்க்கவோ அல்லது விரிவாக ஆராயவோ இன்னும் விஞ்ஞானிகளுக்குச் சாத்தியபடவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

https://ta.quora.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88