செவ்வாய், 31 மே, 2022

கடவுள் ஒரு பொருட்டல்ல! மதவாதிகளே நம் இலக்கு!!

உடல் வலிமையைப் பொருத்தவரை ஓர் உயிரினம் மற்றொன்றைப் போல் இல்லை. பலம் குறைந்தவை, தம்மினும் பலம் வாய்ந்த உயிரினங்களைக் கண்டு அஞ்சி அவற்றிற்கு அடங்கி வாழும் நிலை உள்ளது.

உயிர்கள் ஒன்றையொன்று வதைத்துக் கொன்று உணவாக்கிக்கொள்வது மற்றொரு நிலை.

பிறப்பதும் இன்பதுன்பங்களை அனுபவித்துக்கொண்டே இனவிருத்தி செய்து வாழ்ந்து மடிவதும் இன்னுமொரு நிலை. இவை இயற்கையாய் அமைந்தவை எனலாம்.

இவை குறித்துக் காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து மனிதர்கள் நொந்து சாவதும் இயற்கைதான். 

சிந்திப்பதற்கு அடிப்படையாய் அமைந்திருப்பது ஆறாவது அறிவு.

இது வாய்க்காமல் இருந்திருந்தால், 'ஏன், எதற்கு, எப்படி' என்றெல்லாம் கேள்விகள் எழுப்பாமால் ஏனைய உயிர்களைப் போலவே வாழ்ந்து மடிந்து மண்ணாகிப் போவான் மனிதன்; மரணபயம் குறித்த அனுபவம் தவிர்க்கப்பட்டிருக்கும். 

எது எப்படியோ, இந்த மரணபயம் உட்படப் பல துன்பங்களையும் குறைந்த அளவிலான இன்பங்களையும் அனுபவித்து மறைவதே 'இயற்கை' என்று சொல்லிக்கொண்டு கொஞ்சமேனும் ஆறுதல் பெறுவது சாத்தியமானதாக உள்ளது.

உலகங்களும் உயிர்களும் இயற்கையாய்த் தோன்றியவை அல்ல; எல்லாம் கடவுளின் படைப்பு என்று சொல்லிச் சொல்லி இதையும் சாத்தியமற்றதாக ஆக்கும் கைங்கரியத்தைச் செய்தார்கள் மதவாதிகள்.

இவர்கள் கற்பித்த கடவுளுக்கு வேறு வேறு திருநாமங்கள் சூட்டி[இயற்கைச் சிற்றங்களைக் கண்டு அஞ்சிய ஆதி மனிதன், நீர் ,நெருப்பு, காற்று ஆகிய இயற்கை அம்சங்களை மட்டுமே வழிபட்டான் என்பது நினைவுகூரத்தக்கது] அவர்களின் புகழ் பாடி, மக்களை நம்பவைத்துத் தங்களை அவதாரங்களாகவும் மகான்களாகவும் ஆக்கிக்கொண்டதோடு, ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம், ஆவி, பூதம் என்று எவையெல்லாமோ இருப்பதாகச் சொல்லி மக்கள் மீது ஏராள மூடநம்பிக்கைகளைத் திணித்ததே இவர்கள் நிகழ்த்திய சாதனைகள் ஆகும்.

இதை நிகழ்த்த, இவர்களுக்கு இவர்களால் உருவாக்கப்பட்ட மதங்கள் பயன்பட்டன.

எனவே, மூடநம்பிக்கைகள் ஒழிய, தொடர் பரப்புரைகள் மூலம் மக்களின் சிந்திக்கும் திறனை வளர்த்தல் வேண்டும். மக்கள் சிந்தித்தால்.....

மதங்களோடு மதவாதிகளும் காணாமல் போவார்கள்.

இவர்கள் காணாமல் போனால், இல்லாத கடவுளை 'இல்லை' என்று சொல்லி மக்களை நம்பச் செய்வது ஒரு பொருட்டே அல்ல!

======================================================================================

திங்கள், 30 மே, 2022

இவன் நல்லவனா, கெட்டவனா?!

//ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மகன் சதீஷ்குமார்(வயது36). இவர் முதல் மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டு 2ஆவதாக 'ராதா பிருந்தா' என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 

பின்னர் இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.  அந்தப் பெண்ணின் முதல் கணவர் மூலம் பிறந்த மகளுக்கு இவர் பாலியல் தொந்தரவு தரவே, இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கொஞ்சம் நாள் கழித்து, சதீஷ்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். ஜெயிலுக்குச் சென்று வந்ததால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.// 

இது செய்தி[https://www.dailythanthi.com/News/State/suicide-709632].

ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து  இரு மனைவியரையும் விவாகரத்துச் செய்த இவன், மூன்றாவது மனைவியின் மகள் வேறொருவருக்குப் பிறந்திருந்தாலும் அவளைத் தன் மகளாகவே கருதிப் பாதுகாக்காமல் அடாத செயலில் ஈடுபட்டது கடும் கண்டனத்திற்குரியது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடுவதும் தவறில்லை. அரேபிய நாடுகளில் நடப்பது போல் கல்லால் அடித்துக் கொல்லப்படவேண்டியவன் இவன் என்றுகூடச் சொல்லலாம். ஆனால்.....

'மனம் உடைந்து காணப்பட்ட நிலையில் இவன் தற்கொலை செய்துகொண்டான்' என்னும் செய்திதான் நம்மைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

இவன் முழுக்க முழுக்க ஒரு மிருகமாக இருந்திருந்தால், தனக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்படவிருக்கும் தண்டனையிலிருந்து தப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பானே தவிரத் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.

இவன் மனம் உடைந்துபோய் இருந்திருக்கிறான்.

நாலு பேர் மத்தியில் இனி தலை நிமிர்ந்து நடமாட முடியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

மூன்று பெண்களை அனுபவித்திருந்தும், 'போதும் என்னும் மனம்' இல்லாமல் ஒரு சிறுமியைச் சீரழித்துவிட்டோமே என்னும் மனசாட்சியின் சாடலும் காரணமாக இருக்கலாம்[பாலுணர்வு எத்தனைக் கொடூரமானது என்பதை எந்தவொரு கணத்திலும் மனித இனம் மறவாதிருப்பது மிகவும் அவசியம்].

ஆக, தான் செய்த குற்றங்களை நினைத்து வருந்துகிற மனித குணமும் இவனுக்கு இருந்திருப்பது தெரிகிறது.

மனிதப் பண்பு குறைந்து மிருகக் குணம் இவனிடம் மிக்கிருந்ததற்கு, இவனைப் பெற்றவர்கள் நல்ல வாழ்வியல் நெறிகளைக் கற்றுக் கொடுத்து வளர்க்காதது காரணமாக இருக்கலாம்; நிராதரவான நிலையில் இவன் வளர்ந்த சூழல் ஏதுவாக அமைந்திருக்கக்கூடும்.

எது எப்படியோ, ஒரு குற்றவாளியான இவன், தான் செய்த குற்றத்தை உணர்ந்து தனக்குதானே தண்டனை கொடுத்துக்கொண்டிருக்கிறான்.

எனவே, இவனை நல்லவன் என்றும் சொல்லலாமா?

சொல்லலாம். இவன் வாழ்ந்த சூழலே இவனைக் கெட்டவனாக வாழச் செய்திருக்கிறது  என்பதே நம் பதில்.