ஞாயிறு, 10 ஜூலை, 2022

ஆறறிவைச் சீரழிக்கும் அமர்நாத் பனிலிங்கம்!!!

இமயமலையில், கடல் மட்டத்திலிருந்து 12 ஆயிரத்து 756 அடி உயரத்தில்  பல மலை முகடுகள் உள்ளன.

அவைகளில் ஒரு முகட்டில் 130 அடி உயரத்துக்குப் பெரிய குகை ஒன்று உள்ளது.

குகையின் ஒரு பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டுக் கீழ்நோக்கித் தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்கும்.

சொட்டுகிற இந்த நீர், பனிப்பருவத்தில் தரைப்பகுதியில் பனித்திட்டாக உறைகிறது. தொடர்ந்து சொட்டிக்கொண்டிருக்கிற நீர்த்துளிகள் அதன் மீது விழுந்து பனிக்கட்டிகளாக மாறிக்கொண்டிருப்பதால், திட்டின் உயரம் படிப்படியாக உயர்ந்து, ஒரு கட்டத்தில் ஒரு தடிமனான தூண் போல் காட்சியளிக்கிறது.

பனிக்கட்டியாலான சிறு தூண் போல் இது தென்படுகிறதே தவிர, வழக்கமாகக் கோயில்களில் நாம் பார்க்கிற முழுமையான சிவலிங்க வடிவை இது பெற்றிருக்கவில்லை[கீழே படத்தில் உள்ளது போல] என்பது அறியத்தக்கது.

இதனை ஒட்டி, மேலிருந்து சிதறுகிற நீர்த்துளிகள் உறைந்து, இதன் இடப்பக்கதில் ஒரு பனி வடிவமும், வலப்பக்கத்தில் இரண்டு பனி வடிவங்களும் உருவாகிக் காட்சியளிக்கின்றன[உதவி:https://kkrwhatsapp.blogspot.com/2019/02/amarnath-temple.html#.YsuGMHbP23A ]

நம் பக்திப் பித்தர்கள் நடுவில் சிறு தூண் போல் நிற்கும் பனிக்கட்டிக்குச் சிவலிங்கம் என்றும், இடப்புறம் உள்ள பனிக்கட்டிக்கு 'வினாயகர்' என்றும், வலப்பக்கம் உள்ள இரண்டினில் ஒன்றுக்குப் பார்வதி' என்றும், மற்றொன்றுக்குப் 'பைரவர்' என்றும் பெயர் சூட்டித் தொழுது பரவசப்படுவதை வழக்கமாக்கிவிட்டார்கள்[மேலும் ஒரு பனித்திட்டு உருவாகியிருந்தால் அதற்குச் 'சுப்ரமணியன்' என்று பெயர் வைத்திருப்பார்கள்].

மே மாதம் முதல் ஆகஸ்டுவரை உருவாகும் இவ்வாறான பனித் திட்டுகள் அதன் பிறகு படிப்படியாயக் கரைந்து மறைந்துவிடுகின்றன.

இது இயற்கையான ஒரு நிகழ்வு மட்டுமே.

சிவபெருமான்தான் தன்னைச் சிவலிங்கம் ஆக்கிகொள்கிற அதிசயத்தை நிகழ்த்துகிறார் என்றால், அதற்கு அந்தக் குறிப்பிட்ட நான்கு மாதங்களை மட்டுமே அவர் ஏன் தேர்ந்தெடுத்தார்?

பனிக்காலம் முடிந்த பின்னரான வெப்பம் கூடுகிற பருவங்களிலும் அதிசயம் நிகழ்த்திப் பக்தர்களை மெய் சிலிர்க்கச் செய்யாதது ஏன்?

இந்த அதிசயத்தைப் பனி சூழும் இமயமலையின் முகடுகளில் மட்டும் நிகழ்த்தாமல்.....

கோடைக் காலத்தில் கடும் வெப்பம் நிறைந்த பிற பகுதிகளிலும் பனி வடிவ லிங்கமாக வடிவெடுத்துப் பக்தர்களுக்கு அருள்பாலிக்கலாமே? இதைச் செய்தால் பகுத்தறிவாளர் என்று சொல்லிக்கொள்கிற நாத்திகவாதிகள்கூட பரமசிவனின் பரம பக்தர்களாக மாறுவார்களே!

மனப்பக்குவம் இல்லாத சாமானியரான பக்தர்களுக்கு மேற்கண்டவாறெல்லாம் சிந்திக்கத் தெரியாது. கடவுள் மீதான பக்தியை வளர்ப்பதாகச் சொல்லி மக்களிடம் வாக்குகள் பெற்று நாட்டை ஆளுகிறவர்களுக்கு அவசியம் தெரிந்திருக்கும்.

தெரிந்திருந்தும், 'பனிலிங்கம் என்பது பனிக்காலத்தில் உருவாகிற ஒரு வடிவமே தவிர, சிவபெருமானின் இன்னொரு வடிவமான சிவலிங்கம் அல்ல' என்று விவரித்துச் சொல்லி, ஆண்டாண்டுதோறும் பனிலிங்கத்தைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களைத் தடுத்து[இமயமலையின் இயற்கை அழகை ரசிக்க நினைத்தால், பனிப்பருவம் நீங்கலாகப் பிற பருவங்களில் செல்லலாம்] கடும் மழைக்கும் பெரு வெள்ளத்திற்கும் பலர் பலியாவதைத் தவிர்க்கலாம்.

ஏன் செய்யவில்லை?

மக்களில் பெரும்பாலோர் இம்மாதிரி மூடத்தனங்களிலிருந்து விடுபடாமல் இருப்பதே தங்களுக்குச் சாதகமானது என்று நினைக்கிறார்களா?

வெள்ளி, 8 ஜூலை, 2022

சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழிசையை அவமதித்த அந்த 'அவன்' யார்?!

சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்ற புதுவை ஆளுநர் தமிழிசை அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து அபிசேக நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அவரை அணுகிய ஒருவன் அவரை வேறு இடத்தில் அமரச் சொல்லியிருக்கிறான்[காரணம் ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை].

அவனுக்குத் தமிழிசை அவர்கள் தந்த பதில்.....

"நான் இங்கேயே அமர்ந்திருப்பேன்" என்பது. அதை உரிமையுடன் சொன்னதாகவும் ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டிருக்கிறார்.

'உரிமையுடன்' என்னும் சொல்லை அம்மையார் அவர்கள் பயன்படுத்தியதிலிருந்தே, அந்த உரிமையைப் பறிக்கும் வகையில் அந்த நபர் நடந்துகொண்டிருக்கிறான் என்பது உறுதிப்படுகிறது.

ஆயினும், தான் அவமானப்படுத்தப்பட்டதை மூடி மறைக்கும் வகையில் ஆளுநர் அவர்கள், "அவர்கள்[தீட்சிதர்கள்] எனக்கு வேண்டிய மரியாதையைக் கொடுத்தார்கள்" என்றும், "எனக்கும் நடராசருக்கும் இடையில் நாரதர் தேவையில்லை" என்றும் நிகழ்வுக்குத் தொடர்பில்லாத எதையெல்லாமோ சொல்லியிருக்கிறார்.

செய்தி:

#சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவமதிக்கப்பட்டது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், “எனக்கும் நடராஜருக்கும் இடையில் நாரதர் தேவையில்லை, அபிஷேகம் செய்வது தெரிய வேண்டும் என்று அங்கே உட்கார வைத்தார்கள். ஒருவர் அங்கே இருந்து எழுந்து செல்ல வேண்டும் எனக் கூறினார். நான் உரிமையோடு இங்கேயே அமருவேன் என்று கூறினேன். நான் அவருக்கு அடிபணிய மறுத்தேன் என்பது உண்மை. சிதம்பரம் நடராஜர் கோயிலில் எனக்கு எந்த ஒரு மன வருத்தமும் ஏற்படவில்லை. எனக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை அவர்கள் கொடுத்தார்கள். நானும் கொடுத்தேன். யாரையும் அவமானப்படுத்துவது சரியான முறையல்ல. ஆனால் அவர்கள் எந்த நோக்கத்திற்காக அப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை” என்றார்# -https://tamil.samayam.com/?back=1

[இதே செய்தி பிற தளங்களிலும் வெளியாகியுள்ளது. https://www.puthiyathalaimurai.com/newsview/142865/Tamilisiai-Soundararajan-speaks-about-her-experience-in-Chidambaram-temple-yesterday

-https://tamil.oneindia.com/news/cuddalore/tamilisai-soundararajan-told-that-what-happened-to-her-in-chidambaram-natarajar-temple-465414.html].

தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட சிதம்பரம் நடராசர் கோயில் தமிழ்நாட்டு மக்களுக்கு உரிமையானது.

வழிபட வருவோருக்கு இடையூறு இல்லாத வகையில் எங்கு வேண்டுமானாலும் இருந்து வழிபட உரிமையுண்டு. உண்மை இதுவாக இருக்க, மக்களில் ஒருவரான தமிழிசை[ஆளுநராக வேண்டாம்] அவர்களை இடம்பெயருமாறு சொன்ன அந்த நபர்/அவன் யார்?

கோயிலை நிர்வகிக்கிற தீட்சிதர்கள் குழு அவனின் அடாவடித்தனம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்ததா?

இல்லையெனின்.....

இவர்களுக்குக் கோயிலை நிர்வகிக்கும் உரிமையை வழங்கிய உச்ச நீதிமன்றம், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் மாநில அரசு, அல்லது நடுவணரசுக்கு உத்தரவிடுமா?

'பாஜக' கட்சியைச் சேர்ந்த தமிழிசைக்காக, பாஜக மேல் மட்டத் தலைவர்கள் உரிய வகையில் முறையீடு செய்வார்களா?

மேற்கண்டவற்றில் எதுவும் நடைபெற வாய்ப்பே இல்லையெனின்.....

தனக்கு ஏற்பட்ட அவமானம் தமிழ் இனத்துக்கே ஏற்பட்டதாகக் கருதித் தமிழ் மகளாகிய தமிழிசை அவர்கள் தன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வாரா?