திங்கள், 29 ஆகஸ்ட், 2022

எரியுது அடிவயிறு!... ஏழுமலையானுக்கு ரூ100 கோடி நகை அலங்காரம்!!

ஒவ்வொரு புத்தாண்டு நாளிலும் திருப்பதி ஏழுமலையான் சாமியை அலங்கரிக்கப் பயன்படும் நகைகள் பின்வருமாறு:

இப்படியெல்லாம் அலங்கரித்தால்தான் ஏழுமலையான் தன் பக்தர்களுக்கு அருள்புரிவாரா?

பகவானின் மனதில் பரவசம் பொங்கி வழியுமா?

சிலை வடிவில் காட்சிதரும் ஏழுமலையான் என்றேனும் ஒரு நாள், ரூ100 கோடி நகை சுமந்த கோலத்தில் உயிர்பெற்று எழுந்தருளும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு கண்டு கண்டு இறும்பூது எய்துவோம் என்று பக்தகோடிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களா?

எதற்காக இந்தக் குழந்தைத்தனமான செயல்?

ஆலோசனை வழங்கிய அந்த அவதாரப் புருஷன் யார்? யாரெல்லாம்?

இவை எவையும் காரணமல்ல; ஏழுமலையானைக் குழந்தையாகப் பாவித்து, அலங்கரித்துக் கொண்டாடுவது காண்போரைக் களிப்பில் ஆழ்த்துவதே காரணம் என்கிறார்களா?

இது உண்மையா?

உண்மை எனின், ரூ100 கோடி அணிகலன்கள் சுமந்த கோலத்தில் ஏழுமலைகளின் அதிபதியைக் கற்பனை செய்தாலே என் அடிவயிறு எரிகிறதே, ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?.....

அடடே... நான் ஒரு நாத்திகன் என்பது மறந்தே போனது.

ஆம்... நாத்திகர்களுக்கு ஏழுமலையான் என்ன, வேறு எந்தவொரு கடவுளையும் பிடிக்காது! 

கந்தல் ஆடையுடன் வாழ்நாளைக் கழிக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள் நிறைந்த இந்தப் புண்ணிய பூமியில், ஒருவர் மட்டும் கோடி கோடி கோடி ரூபாய் அணிகலன்களுடன் காட்சி தருகிறார் என்றால் அடிவயிறு எரியத்தானே செய்யும்!!!

=========================================================================

***நகைப்பட்டியல் குறித்த தகவல், மறைந்த பத்திரிகையாளர் 'அ.மா.சாமி'அவர்களின் 'சுண்டல்'[நவமணி பதிப்பகம், சென்னை] என்னும் நூலிலிருந்து பெறப்பட்டது.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

வாழ்க வாழ்கவே 'எ.ப.சா'[எபசா]வும் 'ஓ.ப.செ'[ஒபசெ]வும்!!!

'EPS'[Edappadi Palani Samy] என்னும் 'எடப்பாடிப் பழனி சாமி' ஒரு தமிழர்[ஓ.பன்னீர்செல்வமும் தமிழர்தான்].

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோதெல்லாம் இவர் 'எடப்பாடிப் பழனிசாமி'யாகத்தான் இருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரான பிறகும் இவர் 'எடப்பாடிப் பழனிசாமி'யே. 

இப்போதும் அவர் அதே 'எடப்பாடிப் பழனிசாமி'தான்; Edappady PalaniSamy அல்ல.

இப்படி, இவர் பெயரைக் குறிப்பிட நேரும்போதெல்லாம் முழுப் பெயரையும் உச்சரிப்பதில் வாய் வலிக்கும், அல்லது நேரம் வீணாகும் என்று கருதினால், 'எ.ப.சாமி' அல்லது 'எபசா'என்று சொல்லலாம்; எழுதலாம்.

தி.நகர்[தியாகராய நகர்], திருச்சி[திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை[மயிலம்] என்றிப்படி எத்தனையோ ஊர்ப் பெயர்களைச் சுருக்கியிருக்கிறோம்.

தி.க., தி.மு.க., அ.தி.முக., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., கொ.ம.தே.க. என்றெல்லாம் அரசியல் கட்சிகளின் பெயர்களைச் சுருக்கியதும் இந்த சோம்பல் குணத்தின் விளைவுதான்.

இங்கெல்லாம் 'தமிழ் எழுத்து வடிவம்' புறக்கணிக்கப்படவில்லை.

எனவே, எடப்பாடி பழனிசாமியை 'எ.ப.சா'[எபசா]  என்பதில் தவறில்லை.

அ.தி.மு.க.வின் முன்னாள்[?] முதன்மை ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர் செல்வம் அவர்களையும், 'ஓ.பி.எஸ்.' என்பதற்குப் பதிலாக, 'ஓ.ப.செ.'[ஓபசே] என்று அழைக்கலாம்.

ஆக, இவர்களின் பெயர்களை இப்படித் தமிழ் எழுத்து வடிவிலேயே சுருக்கி வழங்குவதுதான் தமிழ் மொழி மரபுக்கும் தமிழின மாண்புக்கும் உரித்தான செயலாகும்[மு.கருணாநிதி அவர்கள் 'மு.க.' ஆனதும் நினைவுகூரத்தக்கது].

இம்மரபையும் மாண்பையும் மறந்து 'ஈபிஎஸ்', 'ஓபிஎஸ்'[ஆங்கில சொற்களைத் தமிழ் வரிவடிவில் எழுதுவதும் ஆங்கிலத் திணிப்பே] என்று குறிப்பிடும் ஊடகக்காரர்கள், இனியேனும் இவர்களை முறையே 'எ.ப.சா.'[எபசா]என்றும், 'ஓ.ப.செ.'[ஓபசெ] என்றும் குறிப்பிட வேண்டும் என்பதோடு, இயன்றவரை தூய தமிழில் செய்திகளை வெளியிடுதல் வேண்டும் என்பதும் என் கோரிக்கையாகும்.

சாமானியனான என்னை மதித்து இந்தக் கோரிகையை ஏற்பார்களா ஊடக முதலாளிகள்?