ஞாயிறு, 9 ஜூலை, 2023

"விருப்ப உடலுறவு பலாத்காரம் அல்ல”... நீதிமன்றத் தீர்ப்பு! யாருடைய விருப்பம்?

ஒடிசா மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ‘பாலியல்’ பலாத்காரக் குற்ற வழக்கில், ஏற்கனவே வழங்கப்பட்ட உச்ச நீதிம்ன்றத் தீர்ப்பை[‘விருப்ப உடலுறவு’ பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம் பத்திரிகைச் செய்தியில் இடம்பெறவில்லை] மேற்கோள் காட்டி, “திருமணம் செய்வதாக உறுதியளித்து, ஒரு பெண்ணுடன் உடலுறவுகொண்டு, சில காரணங்களால் அவளை அவன் திருமணம் செய்வது நடவாமல் போனால், அவனின் செயல்[உடலுறவு கொண்டது] பலாத்காரம் ஆகாது” என்று தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி.

தீர்ப்பு நம் உள்மனதை உறுத்துகிறது.

திருமணம் செய்வதாக உறுதி அளித்த அந்த ஆண்மகனுக்கு, ஏதோ சில காரணங்களால் தான் அளிக்கும் ‘உறுதிமொழி நிறைவேறாமல் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது’ என்பது தெரியாதா?

இது என்ன ‘சும்மா’ ஒரு முத்தம் தரும் விசயமா?

“கண்டிப்பாக உன்னைக் கல்யாணம் செய்துக்குவேன். அட்வான்ஸா ஒரே ஒரு முத்தம் கொடு” என்று வாக்குறுதி கொடுத்து முத்தம் பெறுவதும் இதுவும் ஒன்றா?

‘இது’ விசயத்தில் பெண்கள் அவ்வளவு எளிதில் ஏமாறமாட்டார்கள் என்றாலும், தாங்கள் நேசிக்கும் ஆடவர்களின் உறுதிமொழியை எளிதில் நம்பிவிடும் பலவீனம் அவர்களுக்கு உண்டு என்பது அறியத்தக்கது.

எனவே, தன்னை நம்பியவளுடன் உடலுறவுச் சுகத்தை அனுபவித்துவிட்டு, ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி, திருமணம் செய்ய மறுப்பது தண்டனைக்குரிய குற்றம்தான்.

ஆடவன் வாக்குறுதி ஏதும் தராமலிருந்து, பெண் தானாகவே தன் விருப்பத்தைத் தெரிவித்திருந்தால் மட்டுமே, ஆடவன் மணம் புரியாதது குற்றம் அல்ல என்று சொல்லலாம்.

“நல்ல நம்பிக்கையில் செய்யப்பட்ட வாக்குறுதியை மீறுவதற்கும், தவறான வாக்குறுதிக்கும் இடையே நுட்பமான வித்தியாசம் உள்ளது” என்றும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

மணமாகாத ஒரு பென்ணுடன், ‘வாக்குறுதி கொடுத்து உடலுறவு கொள்வதே தவறு’ என்னும்போது, வாக்குறுதிகளுக்கிடையே வித்தியாசம் இருப்பதாக அவர் சொல்லியிருப்பதை எப்படி விமர்சிப்பது?

அவர் உயர் நீதிமன்ற நீதியரசர் ஆயிற்றே!

சனி, 8 ஜூலை, 2023

உச்சம் தொட்ட, தலீபான்களின் பெண்கள் மீதான அடக்குமுறை!!!

2021இல் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோதே, பெண்களின் கல்வி, அலுவலகங்களில் பணியாற்றுதல், பொதுப்பணி செய்தல் போன்றவற்றிற்குத் தடை விதித்தார்கள்.

தொடர்ந்து, பொது இடங்களில்  அவர்கள் தலை முதல் கால்வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிதல் உட்பட ஏராளமான கட்டுப்பாடுகளை அவர்களுக்கு விதித்துவருகின்றனர். 

இந்நிலையில், புதிய உத்தரவு ஒன்றைத் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். https://edition.cnn.com/videos/world/2023/07/05/exp-afghanistan-beauty-salons-close-fst-070511aseg1.cnn

//ஆப்கானிஸ்தானில் உள்ள சலூன்களுக்குத் தலிபான்கள் அறிவித்துள்ள தடைக்கு மத்தியில் கடையை மூடுமாறு அழகு நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுகிறது// என்பதே அந்த உத்தரவின் சாராம்சம்.

ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக, வீட்டுக்குள் புழங்கும் நேரம் தவிர வெளியிடங்களில் பெண்கள் முற்றிலுமாய்த் தங்கள் உடல் மறைத்தே நடமாடுகிறார்கள்[‘பெண் பர்தாவைக் கொண்டு தன்னை மறைக்காவிட்டால் தவறான செயல்கள்(Immoral Activities) செய்வதற்கு அது தூண்டுகோலாய் அமைந்துவிடும். அதனால்தான் இன்று பரவலாகக்  காணப்படும் Eve Teasing(பெண்களைக் கேலி செய்வது) கற்பழிப்பு, கொலை, கொள்ளை என்று இவை போன்ற பல இன்னல்களுக்குப் பெண்கள் ஆளாக்கப்படுகிறார்கள்’[???] -இது, சம்பந்தப்பட்ட இஸ்லாமியர்கள் சொல்லும் காரணம்]. https://www.islamkalvi.com/jeddah_essay_competition/women_3rd_place.htm

பர்தா அணிவது சரியா தவறா என்று ஆராய்வது நம் நோக்கம் அல்ல. கட்டுப்பாடுகளை விதித்தவர்களுக்கும், கட்டுப்படுத்தப்பட்ட பெண்களுக்குமான பிரச்சினை அது.

இங்கு நமக்கு எழும் சில சந்தேகங்கள்:

வீட்டுக்கு வெளியே முற்றிலுமாய் உடல் மறைத்து நடமாடும் ஆப்கானிஸ்தான் பெண்கள், வீட்டுக்குள்ளே மட்டுமாவது[திருமண நிகழ்வுகள் உட்பட] அழகு நிலையங்களுக்கு[ம்]ச் சென்று தங்களை அலங்கரித்துக் கொள்வதன் மூலம் ஒருவரை ஒருவர் முழுமையாகப் பார்த்து மகிழும் வாய்ப்பு இருந்தது. 

தலீபான்கள், இந்த உத்தரவின் மூலம் அந்த மிகக் குறைந்த அளவிலான அற்ப மகிழ்ச்சிக்கும் உலை வைத்துவிட்டார்கள்.  

இதற்கு மேலும் பெண்களிடமிருந்து பறிப்பதற்கான சுதந்திரம் ஏதும் இல்லை என்றே சொல்லலாம். ஒருவேளை, மிச்சம் சொச்சம்னு சுதந்திரம் இருந்து, அதன் மூலம் கொஞ்சுண்டு மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பார்களேயானால்.....

சிறுமிகள் முதல் கிழவிகள் வரையிலான அத்தனைப் பெண்களையும் மொட்டை போட்டு, உடம்பெங்கும் வெள்ளையடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தித் திருஷ்டி பரிகாரப் பொம்மைகள் போல ஆக்கிவிடலாம்.

”லாம்” எல்லாம் இல்லை, இதையும் செய்வார்கள்; பெண்களுக்கு எதிரான, இதைவிடவும் இழிவான அத்தனை அட்டூழியங்களையும் செய்யக்கூடியவர்கள்தான் தலீபான்கள்!