ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

'அவன்’... இருபது வயதில் இத்தனைக் காமமா?!

 எச்சரிக்கை!

கீழ்க்காண்பது, என் மிக மிக நெருங்கிய நண்பனுக்கான மறக்க முடியாத வாழ்க்கை அனுபவங்களில் ஒன்று.

தன் பெயரை அவன் வெளியிட விரும்பாததால், ‘அவன்’ என்னும் சுட்டுப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எப்போதெல்லாம் அவன் இம்மாதிரியான அனுபவத்தை என்னுடன் பகிர்கிறானோ[வலைப்பதிவு எழுதுவதில் அவனுக்குக் கொஞ்சமும் ஈடுபாடு இல்லை] அப்போதெல்லாம் அது இங்குப் பதிவு செய்யப்படும்.

சாமானியனான அவனின் அனுபவங்கள் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படும் என்பது என் நம்பிக்கை.

                                         *   *   *   *   *

பள்ளிப் படிப்பு முடிக்கும்வரை வகுப்பில் பெரும்பாலும் முதல் மாணவனாகவே ‘அவன்’ இருந்தான்.

பல பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் வாங்கினான்.

பள்ளி நாடகங்களில் மட்டுமல்லாமல், குழு சேர்த்துத் தன் சொந்த ஊரிலும் நாடகங்கள் நடத்தி மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறான்.

ஆசிரியர்களின் மதிப்பீட்டில் மிக நல்ல ‘புத்திசாலி’ மாணவன் அவன்.

அவனின் அம்மாவின் முன்னிலையில், “உன் மகன் ரொம்பப் புத்திசாலி” என்று யாராவது பாராட்டினால், “நான் இவனுக்கு ரெண்டு வயசு முடியறவரைக்கும் பால்[தாய்ப்பால்] கொடுத்தேனாக்கும்” என்று பெருமை பீத்திக்கொள்வாராம் அவர்.

“அதி புத்திசாலியாக இருப்பவர்களுக்குக் காம உணர்ச்சியும் அதிகமாக இருக்கும் என்பார்கள். அது என் விசயத்தில் முழு உண்மை என்பது நான் கல்லூரியில் சேர்ந்து கொஞ்ச காலம் ஆனபோது தெரிந்தது” என்று என்னிடம் சொல்லி, அவன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையும் விவரித்தான் நண்பன்[இம்மாதிரி அனுபவன் ஏராளம் இருப்பதாகவும், அவ்வப்போது சொல்வதாகவும் சொன்னான்].

“பேருந்துப் பயணங்களின்போது, அழகான பெண்ணைப் பார்த்தால், அவளை ரசிப்பதற்கு ஏற்ற வசதியான இருக்கையில் உட்கார்ந்து ரசித்துக்கொண்டே பயணிப்பதில் எனக்கு ரொம்பவே விருப்பம்.

சில தடவைகள், நான் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்குப் பதிலாக என்னால் ரசிக்கப்பட்டவளோடு சேர்ந்து இறங்கியதுண்டு.

அப்படிப்பட்டது இப்போது நான் சொல்லும் சம்பவம்.

அப்போது பட்டவகுப்பு இறுதித் தேர்வு நடந்துகொண்டிருந்தது.

அன்று கடைசித் தேர்வு. 

நகரப் பேருந்தில் தேர்வு மையத்திகுச் சென்றபோது, என் கெட்ட நேரமோ என்னவோ, பேருந்தில் வேறு இடமில்லாததால், எனக்கு அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள் ஒரு இளம் வயதுப் பெண்.

அவள் மிக அழகாக இருந்தாள். கட்டான உடலுடன் அப்பட்டமாகக் கவர்ச்சி தெரியும் வகையில் உடையுடுத்தியும் இருந்தாள்.

நான் வகைதொகையில்லாமல் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன்.

தற்செயலாக நிகழ்வதுபோல் அவளின் பக்க மார்பில் உரச வேண்டும்போலிருந்தது. ஆனால், கட்டுப்பாடான நல்ல குடும்பத்துப் பையன் என்பதால்... அதுதான் உனக்குத் தெரியுமே... ஆசையை வெகு சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.

பேருந்திலிருந்து இறங்கியபோதுதான், எனக்கு அவளுடனான அந்தப் பயணத்தால் எத்தனை பெரிய இழப்பு ஏற்பட்டது என்பது புரிந்தது.

அவளுடன் நான் இறங்கிய இடம் தேர்வு மையத்தைக் கடந்து பல நிறுத்தங்களுக்கு அப்பால்.

அரை மணி நேரம் முன்னதாகவே நான் தேர்வு மையத்தில் நுழைந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது. எழுதத் தவறிய அந்தத் தேர்வை அடுத்த ஆண்டுதான் எழுதினேன்.

இதனால், நான் பட்டதாரி ஆவது ஓராண்டு தள்ளிப்போனது.

வாலிப வயதில் பெண்ணைப் பார்க்கும்போது காம உணர்ச்சிக்கு உள்ளாவது இயல்புதான். ஆனால், நான் அது விசயத்தில் எத்தனைப் பலவீனமானவன் என்பதை அன்று உணர்ந்தேன்; பெரிதும் கலங்கிப்போனேன்.

இப்படி உணர்ச்சிவசப்பட்டுத் தவிப்பது அப்புறமும் தொடர்ந்தது. அதனால் நான் பட்ட வேதனை கொஞ்சநஞ்சமல்ல.....”

சொல்லி நிறுத்திய என் தோழன், “இன்னிக்கி இது போதும். இனியும் சொல்லுவேன்” என்று சொல்லி விடை பெற்றான். 

                                          *   *   *   *   *

முக்கியக் குறிப்பு:

நண்பனின் அனுபவம் வெளியாகும்போதெல்லாம் தலைப்பில் ‘அவன்’ என்னும் சுட்டுச் சொல்லும் தவறாமல் இடம்பெறும்.

சனி, 5 ஆகஸ்ட், 2023

உயிருள்ளபோதே மொய்க்கும் ஈக்கள்! அரிக்கும் புழுக்கள்!!

 ‘கோவை-சேலம்’ தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு கங்காபுரத்தில் அமைத்துள்ளது ‘இமயம் புற்றுநோயாளிகள் காப்பகம்’.

மருத்துவர் அபுல்ஹாசன், கண் மருத்துவர் சுகுமார், மருத்துவர் ராஜா ஆகியோர் இணைந்து இந்த மையத்தைத் தொடங்கினார்கள். இவர்கள் மூவரும்  இமயம் அறக்கட்டளையின் நிர்வாகிகள்.

“எவ்வகையிலும் சிகிச்சையளித்துக் காப்பாற்ற முடியாதவர்கள் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கான 'காப்பகம்' இது. இங்கே உள்ளவங்க அனுபவிக்கிறது நம்ம கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட வலி. ‘ஊசி போட்டுக் கொன்னுடுங்க’ன்னு கெஞ்சுற அளவுக்கு அத்தனைக் கொடுமையானது இந்த வலி” என்கிறார் மருத்துவர் அபுல்கசன்.

இங்குப் பணியாற்றுகிற முருகன்-பூங்கொடி தம்பதியர் சொல்கிறார்கள்[இவர்களின் பிள்ளைகளும் இங்கேதான் வளர்கிறார்கள்]:

“வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கன்னத்தின் ஒரு பக்கத்தில் ஓட்டை விழுந்துடும். மறு பக்கம் வழியா சாப்பிடக் கொடுக்கணும். ஒரு துணுக்கு அந்தப் பக்கம் பட்டுட்டாலும் கதறிடுவாங்க.

மார்பகப் புற்றுநோய் வந்தவங்களுக்கு நெஞ்சுப் பகுதி குழி ஆயிடும். அதைத் தினமும் சுத்தம் செய்யணும். ஒரு நாள் சுத்தம் செய்யலேன்னாலும் புழு வந்துடும். வலியைத் தாங்கவே முடியாது. ஊசி போட்டுக் கொன்னுடுங்கன்னு அலறுவாங்க.

சொந்தக்காரங்க இங்கேயே தங்கியிருந்து நோயாளிகளைக் கவனிச்சுக்கலாம். அதுக்கான வசதிகள் இங்கே இருக்கு. ஆனா, பெரும்பாலும் யாரும் வந்து தங்கறதில்லை.  உச்சபட்ச சகிப்புத்தன்மையும் கருணையும் தேவைப்படுற சேவை இது. நம்மில் எத்தனை பேருக்கு இந்தச் சேவை மனப்பான்மை இருக்கு?"

“புற்றுநோயின் இறுதிக்கட்ட நிலை மிகக் கொடுமையானது. மூச்சு இருக்கிறதா, இல்லையா என்பதைக்கூட அருகில் சென்று கவனித்தால் மட்டுமே தெரியும். உயிர் உள்ளபோதே, உடலில் ஈக்கள் மொய்ப்பதையும், புழுக்கள் அரிப்பதையும் பார்த்துள்ளேன். சில நேரங்களில் புற்றுநோயால் ஏற்படும் துர்நாற்றம், உற்றாரிடமிருந்து அவர்களை மேலும் தனிமைப்படுத்திவிடும்.

அப்துல் கலாம் திறந்துவைத்த இந்தக் காப்பகத்தில், கடந்த 10 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்டோர் இறுதி நாட்களைக் கடந்துள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 75 சதவீதம்  பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள். 

நோயைக்  குணமாக்கும்  மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதால், நல்ல சிகிச்சை அவர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது. பல மருந்துகளின் விலை ஆயிரக்கணக்கில் உள்ளது. இந்த நிலையில், புற்றுநோயிடம் முதலில் தோற்பவர்கள் ஏழைகள்தான். அதேபோல, குழந்தைகள், இளைஞர்களையும்கூட இந்த நோய் விட்டுவைப்பதில்லை. 

நிறையக் குழந்தைகள், பிறக்கும்போதே புற்றுநோயுடன் பிறக்கின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தப் புற்றுநோய்க்கு நிறைய ஊசி மருந்துகள் உள்ளன. ஆனாலும், இவை சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்த விலையில், மருந்து, மாத்திரைகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் மருத்துவர் சுகுமார்.

***வாசிக்கும்போதே ஒட்டுமொத்த உடம்பும் நடுநடுங்குகிறது. மரணம் கொடியதல்ல. அது தரும் வலி கொடியது... கொடியது!

* * * * *
உதவி: ‘இந்து தமிழ்’