வியாழன், 24 ஆகஸ்ட், 2023

‘காதல் யுகம்!’... சுடுகாட்டில் சுட்ட கதை!!

இறந்துபோன என் நண்பர் சுடுகாட்டில் எரிக்கப்பட்டார். அன்று ஈமச் சடங்கு. சடங்கு நிகழ்த்த வேண்டிய அவரின் ஒரே மகன், மொட்டை அடித்துக்கொண்டான்; தாடி மழிக்க மறுத்துவிட்டான்! அதற்கான காரணத்தைக் கருவாகக்கொண்டு எழுதப்பட்ட கதை இது. 

“தாடி வளர்க்கிறியே, உடம்பு சுகமில்லையா?” என்று கேட்டான் குமார்.

“இல்ல” என்றான் கீர்த்தி.

“ஸ்டைலுக்கா?”

“இல்ல.”

“வேண்டுதலா?”

“இல்ல.”

“கேட்கிறதுக்கெல்லாம் இல்ல நொள்ளைங்கிற. காரணத்தை சொல்லப் போறியா இல்லையா?” -கோபத்தின் எல்லையைத் தீண்டிவிட்டிருந்தான் குமார்.

“சர்மிளாகிட்டப் பல தடவை ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டேன். அவ மவுனம் சாதிக்கிறா. ’உன் பதில் கிடைச்சப்புறம்தான் தாடி எடுப்பேன்’னு சொல்லிட்டேன். இன்னிக்கி வரைக்கும் பதில் இல்ல” என்றான் கீர்த்தி, வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால்.

“காதலிக்க வேற பெண்ணா இல்ல. அவளை மறந்துடு.”

“முடியாதுடா.”

இது நடந்து சில நாட்களில், கீர்த்தியின் அப்பா மாரடைப்பில் காலமானார்.

சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.

அன்று ‘ஈமச் சடங்கு’.

“மொட்டை போடணும், வா கீர்த்தி.” -காரியம் செய்பவர் கீர்த்தியை அழைத்தார்.

அவன் சென்றான்.

அவனின் தலை முடியைச் சிரைத்து முடித்து, தாடி மீசையை மழிக்க முனைந்த போது, கீர்த்தி சொன்னான்; “தாடியை எடுக்க வேண்டாம்.”

“எடுக்காம சடங்கு செய்யக் கூடாது.”

“செஞ்சா என்ன?”

கூடியிருந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்தான் கீர்த்தி.

வேறு வழியில்லாமல், இறந்துபோன நண்பருக்கு ‘மகன் முறை’ ஆகும் ஒருவரை வைத்துச் சடங்குகள் செய்யப்பட்டன.

கீர்த்தி, தாடி மழிக்க மறுத்ததற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.

சுடுகாட்டில் குழுமியிருந்த கும்பல் களையத் தொடங்கியபோது, “கலியுகம் முடிஞ்சி போச்சி. இது காதல் யுகம்” என்று அடங்கிய குரலில் ஒருவர் சொன்னார், அருகில் இருந்தவர்களுக்கு மட்டும் கேட்கும்படியாக. துக்ககரமான அந்த நேரத்திலும் அவர்கள் ஒப்புக்குச் சிரித்து வைத்தார்கள்!

நானும்தான்!

                                     *   *   *   *   *

***2016ஆம் ஆண்டுப் படைப்பு; புதுப்பிக்கப்படாதது! ஹி... ஹி... ஹி!!!

புதன், 23 ஆகஸ்ட், 2023

’பெரிய்ய்ய்ய’ கவலையும் சின்னஞ்சிறுசுகளும்!!!

நான் நகர்ப்புறவாசி ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஓய்வுக்குப் பிறகு சென்னையில் வேலை பார்க்கும் மகன் வீட்டில் அடைக்கலம்.

உறவினர் இல்லத்துத் திருமண விழாவுக்காகப் பிறந்த ஊருக்கு வந்திருந்தேன்.

விழாவில் கலந்துகொண்டுவிட்டு அன்று மாலை சம வயதுக்காரனும், பள்ளியில் உடன்பயின்றவனுமான நண்பன் நவநீதனைச் சென்று பார்த்தேன்.

உடம்பு வெகுவாகத் தளர்ந்துபோய், கவலை அப்பிய முகத்துடன் காட்சியளித்தவனைத் தோள் வருடி, “ஏன் இப்படி ஆகிட்டே?” என்றேன்.

“நீ மட்டுமென்ன, என்னை மாதிரிதான் இருக்கே” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்:

“மருமக மட்டுமல்ல, மகனுமே என்னை ஒரு சுமையாக நினைக்கிறான். ரொம்ப அவசியபட்டாலொழிய என்கூடச் சரியாப் பேசுறதே இல்ல; என்னைக் கண்டுக்கிறதும் இல்ல. எப்போ ஒழிவான்னு இருக்காங்க. தூக்குல தொங்கிடத்தான் விருப்பம். அதுக்கான தைரியம் இல்ல. எது எப்படியோ, வயித்துக்கு மூனு வேளையும் சோறு போட்டுடறாங்க” என்றான் நண்பன்.

கண் கலங்கியிருந்தான். 

அவன் முகத்தை நிமிர்த்தி, “உனக்கு வயசு என்ன?” என்றேன்.

“உன் வயசுதானே எனக்கும். என்பது முடியப்போகுது.”

“அப்பப்போ வயசை நினைச்சுக்கோ. அடிக்கடி நினைச்சா, இன்னிக்கோ நாளைக்கோ எப்போ சாகப்போறமோன்னு கவலைப்பட ஆரம்பிச்சுடுவே. அது தீரவே தீராத பெரிய கவலை. அந்தக் கவலைக்கு முன்னால நீ இப்போ படுறது மாதிரியான கவலையெல்லாம் ரொம்ப அற்பமானதா ஆயிடும்..... 

பெருசாக் கவலைப்படுடா. நான் அதைத்தான் செய்துட்டிருக்கேன்” என்று சொல்லி முடித்ததும் என்னை ஆரத் தழுவிக்கொண்டான் நவநீதன்.

மிகப் பல நாட்களுக்குப் பிறகு, என் மனதுக்குள் இதமானதொரு சுகம் பரவுவதை உணர முடிந்தது.

                   *   *   *   *   *

***முதியவர்களுக்காக ‘பெரிய’ எழுத்து வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.