ஞாயிறு, 8 அக்டோபர், 2023

ரவுடி படப்பைக் குணாவுக்கு நம் வாழ்த்துகள்!!!

8 கொலைகள், 11 கொலை முயற்சிகள், கொள்ளை, ஆள்கடத்தல் என்று 48 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி படப்பை குணா, ‘பாஜக’வில் இணைந்து மாவட்ட அளவிலான ஒரு பதவியைப் பெற்றிருப்பது பற்றி ஊடகங்கள் பலவும் பரபரப்பூட்டும் செய்திகளை வழங்கிவருகின்றன.

பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட... படும் ஒரு பக்கா ரவுடி மாவட்ட அளவில் பதவி பெற்றது குறித்துப் பாஜக தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது விசயம் பிரதமர் மோடிக்குத் தெரியாதா என்றால் அவசியம் தெரிந்திருக்கும்.

தெரிந்திருந்தும் இவனுக்கு இவருக்குப் பதவி வழங்கப்பட்டதை மோடி அனுமதித்திருப்பது அநியாயம், அக்கிரமம் என்றெல்லாம் கொந்தளித்துக் கூக்குரல் எழுப்புவோர், பல குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தாலும், எந்தவொரு வழக்கிலும் படப்பையார்[உலகமகா புத்திசாலி] மீதான எந்தவொரு குற்றமும் இந்நாள்வரை நிரூபிக்கப்படவில்லை என்பதை நினைவுகூரத் தவறிவிட்டார்கள். பெரும் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களின் பழிப்புரைகளை அலட்சியப்படுத்துபவர் களாகவும், காவல்துறையின் ‘கவனிப்பு’களுக்கு அஞ்சாத இரும்பு நெஞ்சம் படைத்தவர்களாகவும் இருப்பதை நாம் மறந்துவிடுதல் கூடாது.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்தப் படப்பைக் குணா.

இவர் கவுரவிக்கப்பட்டதை அடுத்து.....

குற்றங்கள் பல புரிந்து காவல்துறையின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்துகொண்டிருக்கும் பக்கா ரவுடிகள் பலரும், படப்பையாரின் பரிந்துரை பெற்று மோடியாரின் ஆசீர்வாதத்துடன் ‘பாஜக’வில் இணைவார்கள் என்பது உறுதி.

கடத்தல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி என்று அவர்கள் செய்த குற்றங்கள் பட்டியலிடப்பட்டு, தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு, அவரவர் தகுதிக்கேற்ப மாவட்ட அளவிலோ, வட்ட அளவிலோ பதவிகள் வழங்கப்பட்டுக் கவுரவிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்.

‘பாஜக’வின் வாழ்நாள் விசுவாசிகளாக மாறும் அவர்கள், தேர்தல் பணிகள் தொடங்கியவுடன், வெற்றி வாய்ப்புள்ள மாற்றுக் கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தி வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவிடாமல் தடுப்பார்கள்.

அவர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் எதிராளிகள் போட்டியிடும் தொகுதிகளில், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், வாக்குப் பெட்டிகளைக் கடத்துதல் போன்ற அடாவடித்தனங்களில் ஈடுபட்டு, மறு வாக்குப்பதிவின் மூலம் ‘பாஜக’ வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்குப் பேருதவி செய்வார்கள்.

இதன் மூலம், திராவிடக் கட்சிகள் முற்றிலுமாய் முடங்கிப்போக, தமிழ்நாட்டில் ‘பாஜக’ ஆட்சியைக் கைப்பற்றும் நிலை உருவாகும்.

உலகில் முதன்முதலாக, ரவுடிகளுக்குக் கட்சியில் உயர் பதவிகள் கொடுத்து, தேர்தல்களில் தொடர் வெற்றிகளைக் குவித்த வரலாற்று நாயகன் என மோடியை ஒட்டுத்த உலகமும் போற்றிப் புகழும். இது 1000% உறுதி!

வெள்ளி, 6 அக்டோபர், 2023

அவர் சமரச சன்மார்க்கவாதியாம்! இவர் சனாதன தர்மியாம்!!

‘அருட்பிரகாச வள்ளலார்’ என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் 200ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட நிறைவு விழா தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, "பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை வள்ளலார் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்" என்று கூறியுள்ளார்[https://tamil.oneindia.com/].

வள்ளலார் உயிரோடு இருந்தால் பெண்களுக்கான ஒதுக்

கீட்டைப் பாராட்டியிருப்பார் என்பது மோடியின் எதிர்பார்ப்பு;

பேராசையும்கூட. 

'எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்குச் சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்; மத வெறி கூடாது' ஆகியவை வள்ளலாரின் முக்கியக் கொள்கைகள்[https://ta.wikipedia.org/wiki/].


அவர் மோடிக்குப் பாராட்டுரை வழங்கியிருப்பார் எனின், அதற்கு முன்னால்.....

“இந்தியாவை மதச் சார்பின்றி[சமரச சன்மார்க்கம்] வழிநடத்த வேண்டிய நீங்கள்,  இந்துத்துவா வெறியை வளர்க்கிறீர்கள்; இந்த நாட்டின் பெயரை ‘இந்து ராஜ்ஜியம்’ என்றோ, ‘ராமராஜ்ஜியம்’ என்றோ மாற்ற முயல்கிறீர்கள்; இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்த்து, இந்த நாட்டின் பிற மொழிகளையும்,  அந்த மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட இனங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து அழிக்க நினைக்கிறீர்கள். இதுவா நீங்கள் என் சமரச சன்மார்க்க நெறியைப் பின்பற்றும் லட்சணம்?” என்று கேட்டிருப்பாரே, அதற்குப் பிரதமர் மோடியால் ஒளிவு மறைவு இல்லாமல் பதில் சொல்லியிருக்க முடியுமா?

இதே விழாவில் கலந்துகொண்ட, புனிதராம் ஆளுநர் ரவி, 

“அனைவரும் ஒன்று என்று வள்ளலார் சொல்வதுதான் சனாதன தர்மம்”  என்று சனாதன தர்மத்திற்குப் புத்தம் புதிய விளக்க உரையை வழங்கியிருக்கிறார்.

பாவம் சனாதன தர்மம், இவரையும், இவரைப் போன்ற இதர  அதர்மவாதிகளிடமும் சிக்கிப் படாதபாடு படுகிறது அது.


“அனைவரும் சமம்[ஒன்றுதான்] என்பது சிந்திக்கத் தெரிந்த எவரொருவரும் வலியுறுத்துகிற வாழ்வியல் நெறியாகும். இதைச் சொல்ல சனாதன தர்மம், சர்வலோக நிவாரணம் எல்லாம் தேவையில்லை.


வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை அறநெறிகளும்[தர்ம நெறி] சனாதன தர்மத்தில் அடங்குகின்றன என்று மக்களை நம்பச் செய்ய இவர்கள் செய்யும் அலப்பறை கொஞ்சநஞ்சமல்ல.


மாநிலத்தை ஆளுபவர் அல்லவா, அனைத்தும் தெரிந்த மகான் என்னும் நினைப்பில் மனம்போன போக்கில் எதையும் பேசலாம்; எப்படியும் பேசலாம்; பேசுகிறார்; பேசிக்கொண்டே இருக்கிறார் ரவி!


தமிழர்களை மன நோயாளிகள் ஆக்கி, அவர்களின் மொழிபற்றையும் இனப்பற்றையும் அறவே இல்லாமல் செய்வதற்குத்தான் இவரை ஆளுநர் கிரீடம் சூட்டி இங்கு அனுப்பியிருக்கிறார் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் மோடி.

                                   

                            *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/chennai/pm-modi-is-confident-that-vallalar-would-have-appreciated-the-33-reservation-for-women-545207.html

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D