வெள்ளி, 29 மார்ச், 2024

ஈஷா யோகா மையத்தில் ‘ஈசன்’ ஜக்கியின் தரிசனம் எப்போது?!

‘ஜகத்துக்கு[உலகம்] மட்டுமல்லாமல், ‘சத்’[கடவுள்]துக்கும் குருவான ஜக்கியார் மூளை அறுவைக்குப் பின்னர் பூரண குணம் பெற்று வீடு திரும்பினார்’ என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன[https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20240328-148758].

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தையே தியானம் கற்பிக்கும் இடமாகவும், வாழிடமாகவும் கொண்ட பரமாத்மா ஜக்கி ‘வீடு திரும்பினார்’ என்னும் செய்தி நம்மைப் பெரு மகிழ்ச்சியில் மட்டுமல்லாமல், திகைப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

அவருக்கென்று தனியே வீடு இல்லாத நிலையில்[வீடு எங்கே உள்ளது என்பதை எந்தவொரு ஊடகமும் வெளியிடவில்லை!] வெளியான இந்தப் பொய்ச் செய்தி, தீராத பெரும் துயருக்கு நம்மை ஆளாக்கியுள்ளது.

மேலும்.....

சிவராத்திரிக் கும்மாளத்தின்போது, தன் காலில் விழுந்த கவர்ச்சிக் கன்னி காஜல் அகர்வாலின் கன்னம் தொட்டு அவரைப் புளகாங்கிதம் அடையச் செய்தாரல்லவா[சமந்தாவைக் கிள்ளியதும் நினைவுகூரத்தக்கது], அந்தக் காஜலா, ரசிகர்களின் கனவுக் கன்னி தமன்னாவா அடுத்த ஈஷா மையத் தலைவர்[தலைவி] யார் என்று கேள்வி எழுப்பி வலையுலக அன்பர்களும் சில ஊடகக் குசும்பர்களும் அலப்பறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் அறியத்தக்கது.

இது வாசுதேவனாரின் கௌரவத்திற்கும், புகழுக்கும்[‘பிறவி ஞானி’ என்று போற்றப்படுதல்] இழுக்குச் சேர்ப்பதாக உள்ளது.

இம்மாதிரி வதந்திகள் இனியும் உலா வருவதைத் தடுத்திட மகான் ஜக்கி அவர்கள் உடனடியாக இஷா மையத்திற்கு வருகைபுரிந்து, அவரின் பக்தர்களுக்கு இலவசத் தரிசனம் தந்து, கடல் அளவிலான அவர்களின் கவலையைப் போக்கியருளுதல் வேண்டும் என்பது நம்மைப் போன்றோர் கோரிக்கை.

வாழ்க ஜகதீஸ் வாசுதேவன்! தொடர்க அவரின் ஆன்மிகத் தொண்டு!! வளர்க அவரின் இறைச் சக்தி!!!

                                  *   *   *   *   *

https://tamil.filmibeat.com/news/cheyyaru-balu-has-answered-that-the-next-sadguru

-is-tamannaah-and-not-kajal-agarwal-130209.html

வியாழன், 28 மார்ச், 2024

“இந்தியா குடியரசல்ல, பணக்காரர்களின் அரசு”... நிர்மலா சீத்தாராமன் வாக்குமூலம்!!!

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ‘டைம்ஸ் நவ்’ செய்திச் சேனலின் நிகழ்ச்சி ஒன்றில், "தேர்தலில் போட்டியிடுவீர்களா?" என்று நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு இவர், “இல்லை” என்று பதில் அளித்துள்ளார்.

“தமிழ்நாடு அல்லது ஆந்திராவில் இருந்து தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களா என்று கட்சியின் தலைவர் என்னிடம் கேட்டார். இதைப் பற்றி யோசிக்கப் பத்து நாட்கள் எடுத்துக்கொண்டேன். தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லாததால் வேண்டாம் எனக் கூறிவிட்டேன்[இதைச் சொல்லப் பத்து நாட்கள் தேவையா?]” என்றார் நிர்மலா சீதாராமன்.


தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகம், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள்தான்[குறிப்பிட்ட சமூகத்தையோ மதத்தையோ சாராதவர் தான் என்கிறார். சாதியில் சிறுபான்மையினராக இவர் இருக்கலாம். பெரும்பான்மை இந்துமதம் சார்ந்தவர்தானே?] போட்டியிட்டு வெற்றி பெறமுடியும் என்பதையும் இவர் காரணமாகக் கூறியுள்ளார்.


மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் முக்கியப் ‘பாஜக’ தலைவர்களிடம் நிர்மலா சீத்தாராமனும் ஒருவர்.


தனியார் நிறுவனங்களிடம் கோடி கோடி கோடியாய் நன்கொடை[லஞ்சம்] வாங்கிக் குவித்து வைத்திருக்கும் கட்சி தங்களுடையது என்பதோ, வாக்காளர்களுக்கு லஞ்சம்[+மற்றச் செலவுகள்] கொடுத்து வாக்குகளைப் பெற ஒவ்வொரு வேட்பாளருக்கும் பாஜக’ தலைமை பணத்தை அள்ளிக்கொடுக்கிறது என்பதோ அம்மையாருக்குத் தெரியாதா?


அப்புறம் ஏன் “பணம் இல்லை. போட்டியிடவில்லை” என்கிறார்?


வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றி பெற விரும்பாத உத்தமக் குணத்தவராகவும் இவர் இருக்கக்கூடும்.


இந்தப் பதிவின் நோக்கம் நிர்மலா சீத்தாராமன் தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை ஆராய்வதற்கல்ல.


நம் நாட்டுக் குடியரசு ஆட்சியின் அவல நிலையை இவர் அம்பலப்படுத்தியதற்கு நன்றி சொல்வதற்குத்தான்.


இந்தியா குடிமக்களுக்கான அரசு[குடியரசு] என்கிறார்கள்.


குடிமக்கள் என்னும் சொல், இங்குள்ள ஏழைகள், பணக்காரர்கள் ஆகிய இரு சாராரையும் உள்ளடக்கியது.


இவர்களில் எவரொருவரும் தேர்தல்களில் போட்டியிட்டு நாட்டை ஆளும் ஆட்சிக் குழுவில் இடம்பெறலாம்.


ஆனால், பண வசதி இல்லாத ஏழைகளுக்கு இது எட்டாக் கனி என்பதைத்தான், “பணம் இல்லாததால் நான் போட்டியிடவில்லை” என்ற அம்மையாரின் வாக்குமூலம் உறுதிப்படுத்துகிறது.


நிதியமைச்சர் அவர்கள் ஒளிவு மறைவில்லாமல் இந்த உண்மையைப் போட்டுடைத்ததற்காக மனம் நிறைந்த நன்றியை அவருக்குக் காணிக்கை ஆக்குகிறோம்.


மேலும்.....


இந்தியா சாதி மத பேதமற்ற[குறிப்பிட்ட சாதியையோ மதத்தையோ சார்ந்தவர் அல்ல தாம் என்பதால் போட்டியிடவில்லை என்று அம்மையார் குறிப்பிட்டுள்ளார்], உலகின் மிகச் சிறந்த குடியரசு நாடு என்று வாய் கிழியப் பேசுவதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.

* * * * *

https://www.bbc.com/tamil/articles/ckk7pypnrx2o