வியாழன், 12 செப்டம்பர், 2024

அவன் சொன்னான், “நீ வேசி”... அவள் கேட்டாள், “நீ.....”[உண்மைக் கதை]

‘அவள்’ தனக்குத் துரோகம் செய்கிறாள் என்று ‘அவன்’ நம்பினான்.

அவன் தன் மீது வீண் பழி சுமத்துவதாக அவள் சொன்னாள்.

இது தொடர்பாக அடைக்கடி வாக்குவாதம் செய்தாலும் இருவரும் தத்தம் நிலையில் உறுதியாக இருந்தார்கள்.


ஒரு கட்டத்தில்…..


“ஆயிரம் கோயில்களில் நான் சத்தியம் பண்ணுவேன். நீ வேசி.” -அவன்.


“நான் வேசிதான். என்னை என்ன பண்ணுவே?” -ஆவேசக் கூச்சல் எழுப்பினாள் அவள்.


“துண்டு துண்டா வெட்டிப்போடுவேன். நமக்கு இருக்கிற ஒரே பொண்ணு அனாதை ஆயிடுமேன்னு யோசிக்கிறேன்” -அவன் முணுமுணுத்து அமைதி காத்தான்.


விவாதம் பிறிதொரு நாளில்  தொடர்ந்தபோது…..

“நீ திருந்துவேன்னு நினைச்சேன், திருந்தல. இப்பவும் நீ வேசிதான்” என்றான் அவன்.

“ஆமாடா, நான் இப்போ மட்டுமல்ல, எப்பவும்  வேசிதான். நீ சரியான ஆண்பிள்ளையா இருந்தா நான் ஏன் வேசித்தனம் பண்ணுறேன்?” என்று எகத்தாளம் தொனிக்கக் கேட்டு, நக்கலாகச் சிரித்தாள் அவள்.


அவள் கேள்வியில் நியாயம் இருப்பதாக அவனின் உள்மனம் நினைத்தது. ஆனால், அது குறித்து ஆராயவிடாமல் அவனின் தன்மானம்[“சரியான ஆண்பிள்ளையாக இருந்தால்…”] தடுத்தது.


அன்று இரவே அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவனால் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டாள்.


அவனுக்குச் சாகும்வரை ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ கிடைக்கலாம்.


போதிய பாதுகாப்புடன் வாழும் பெண் பிள்ளைகளையே கடத்தி வன்புணர்ந்து சீரழிக்கும் கயவர்களும் காலிகளும் நடமாடும் உலகில், இனி நிராதரவான இவர்களின் பெட்டைக்  குழந்தையின் கதி?


ஒட்டுமொத்த உலகமும் கேட்கவேண்டிய கேள்வி இது. கேட்டால்…..


காலப்போக்கில் விடைகள் கிடைக்கப்பெறலாம். 


புதன், 11 செப்டம்பர், 2024

இனியேனும் உண்மை பேசுவாரா மோடி?!

எதிர்வரும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அந்த லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் என்பது செய்தி [https://www.hindutamil.in/news/india/1185414-a-developed-india-by-2047-pm-narendra-modi-promises.html].

“லட்சியத்தை நோக்கி முன்னேறிவருகிறோம்” என்று மோடி பெருமிதப்பட்டது ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்பு[19 ஜனவரி 2024].

“லட்சியத்தை நோக்கிய நம் பயணத்தில் பின்தங்கியிருக்கிறோம்” என்று உண்மையை உரைக்காமல் பொய் பேசியிருக்கிறார் பிரதமர்.

இந்தியா 2024-க்கான உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சரிவைக் கண்டிருக்கிறது என்பதே உண்மை.

ஆதாரச் செய்தி:

#யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024-ஆம் ஆண்டுக்கான உலகின் ‘சிறந்த நாடுகள்’இன் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இம்முறையும் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. 2-ஆவது இடத்தில் ஜப்பான், 3-ஆவது இடத்தில் அமெரிக்கா, 4-ஆவது இடத்தில் கனடா, 5-ஆவது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன.

வாழ்க்கைத் தரம், தொழில்முனைவு, சாகசம், சுறுசுறுப்பு, பாரம்பரியம், கலாச்சார நோக்கம் உட்பட 10 தன்மைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

89 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 33-ஆவது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு, பட்டியலில் இந்தியா 30-ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது 3 இடங்கள் பின்னகர்ந்துள்ளது#

* * * * *

https://www.hindutamil.in/news/world/1309305-best-countries-in-world-switzerland-tops-india-at-33rd-place-1.html