புதன், 13 நவம்பர், 2024

எதிரிகளை[ஊழல்வாதிகள்]த் தலைகீழாய்த் தொங்கவிடும் அமித்ஷா! அவர் எப்போது...?

//ஜார்க்கண்ட் மாநிலம் பாக்மாராவில் பிரசாரம் செய்த அமித்ஷா, மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நிலக்கரி கடத்தல் நிறுத்தப்படும் என்றார்; ஊழல் செய்த அரசியல் தலைவர்களை எல்லாம் தலைகீழாகத் தொங்கவிடுவோம் என ஆவேசமாகத் தெரிவித்தார்// =செய்தி.

பேசியிருப்பவர் பிரதம மோடியின் வலது இடதுக் கரங்களாக இருப்பவரும், அமைச்சரவையில் 2ஆம் இடம் வகிப்பவரும் ஆன உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஆம், அமித்ஷா என்னும் அமைச்சரேதான்.

ஊழல் பேர்வழிகளைக் கண்டறிந்து, அவர்களின் ஊழலை அம்பலப்படுத்தித் தண்டனை பெற்றுத் தருவதற்கான[அமலாகத்துறை, காவல்துறை, நீதிமன்றம் போன்றவற்றின் உதவியுடன்] முழு அதிகாரம் பெற்றிருக்கும் இவர், தன்னிச்சையாக ஊழல்வாதிகளைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம் என்று பேசியிருக்கிறார்.

எங்கே தொங்கவிடுவார்?

மரக்கிளைகளிலா, தூக்குமரத்திலா, மக்கள் காணும் வகையில் பொது இடங்களிலா?

அம்மணமாகவா, உடுத்திய ஆடையுடனா?

ஏராள அதிகாரங்கள் படைத்த அமைச்சர் என்பதால் மனம்போன போக்கில் இப்படிப் பேசியிருக்கிறார்.

இவரின் பதவிக்காலம் முடிந்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில்[உத்தரகாண்ட் ஒரு சுண்டைக்காய் மாநிலம்] இவரின் அரசியல் எதிரிகள் ஆட்சியைக் கைப்பற்றினால்.....

“ஊழல் பெருச்சாளி அமித்ஷாவைப் பொது இடத்தில், மக்கள் கண்டு கண்டு ரசிக்கும் வகையில், அம்மணமாகத் தொங்கவிடுவோம்” என்று எவரோ ஓர் எதிராளி பேசினால் அது தவறாகுமா?

இவர் அமித்ஷாவா, அடாவடி ஷாவா?!

செவ்வாய், 12 நவம்பர், 2024

ஆங்கிலத்தில்[நாடாளுமன்றத்தில்] கேள்வி கேட்டால் அடி உதை!?!?!

ஊடகச் செய்தியின்படி, ஆங்கிலத்திலோ பிற இந்திய மொழிகளிலோ கேள்விகள் கேட்டால் இந்தியில் மட்டுமே பதிலளிப்பதில் ‘இந்தி’ய அமைச்சர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இது பெரிதும் வரவேற்கத்தக்கது; இந்தியர்கள் அனைவரும் மகிழ்ந்து பாராட்டுவதற்கு உரியது.

இந்தி அலுவல் மொழி அல்ல எனினும், இந்தியாவில் பெரும்பான்மையோரால் பேசப்படுகிறது என்று சொல்லப்படுவதும், அறிவியல் துறையில் உலகம் கண்டிராத பெரும் வளர்ச்சி கண்டிருப்பதுமான இந்தியை இந்தியக் குடிமக்கள் அனைவரும் கற்றிருப்பது மிகவும் அவசியம்.

நடாளுமன்ற உறுப்பினர்களைப் பொருத்தவரை இந்தியைப் பிழையறப் பேசுவதும் எழுதுவதும் மிக மிக மிக அவசியம்.

குறிப்பாக, நாடாளுமன்றக் கூட்டங்களில் அவர்கள் பங்கு பெறும்போது மறந்தும் ஆங்கிலத்தில்[பிற மொழிகளிலும்] பேசுவது மன்னிக்கக் கூடாதது மட்டுமல்ல, தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.

எனவே, ‘இந்தி’யர் அல்லாதவர் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பும்போது ‘இந்தி’ய அமைச்சர்கள் இந்தியில் மட்டுமே பதில் அளிப்பதைக் குறைகூறும் கேரள நாட்டுக்காரரின் செயல் கண்டிக்கத்தக்கது.

இப்போது இந்தியில் மட்டுமே பதிலளிக்கும் ஒன்றிய அமைச்சர்கள், வருங்காலத்தில் ஆங்கிலத்திலோ இந்தி அல்லாத மொழிகளிலோ கேள்வி கேட்பவர்களை அசிங்கமான வார்த்தைகளால் சாடுவதோடு, கையில் கிடைக்கும் ஆயுதங்களால்[மைக் போன்றவை] தாக்குதல் நடத்தவும்கூடும்.

இவ்வாறான தாக்குதல்களே, இந்தி தெரிந்தவன்தான் உண்மையான இந்தியன் என்பதை உணரச் செய்யும்.

ஒருவேளை.....

‘இந்தி’யர் அல்லாதவர்கள்[தன்மானம், சூடு, சொரணை எல்லாம் இருந்தால்] ஒருங்கிணைந்து இந்தியாவை இரண்டாக[இந்தியர்-அல்லாதவர்] உடைக்கும் நோக்கத்துடன் போராடினால், வலிமை வாய்ந்த நம் ராணுவத்தை ஏவி, அவர்களை அடக்கி ஒடுக்கிவிடலாம் என்பதை ‘இந்தி’ய அமைச்சர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

வாழ்க இந்தி! வளர்க ‘இந்தி’யரின் ஆதிக்கம்!!