திங்கள், 10 செப்டம்பர், 2012

முதல் அறுவை!

ஆனந்த விகடனில் [5.9.12] வெளியான, பிரபல எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதை [’அடுத்த முறை’] இங்கே ‘அறுவை’ செய்யப்படுகிறது!                                            

 முதல் அறுவை!

கதை சொல்வது ஒரு கலை.

நெடுங்கதையோ குறுங்கதையோ, கதை கேட்கும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு.  சொல்வது அத்தனை சுலபமல்ல..

அதில் தேர்ந்தவர்கள் கதை இலக்கிய வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்.

புதினம், சிறுகதை, நாடகம் போன்றவற்றை உள்ளடக்கிய இந்தக் கதை இலக்கியம் அமோக வளர்ச்சி பெற்றது கடந்த நூற்றாண்டில்தான்.

இதன் வளர்ச்சியில் படைப்பாளர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் பங்களிப்பு இருப்பது போலவே, பருவ இதழ்களுக்கும் முக்கிய பங்குண்டு.

இன்றைய காலக்கட்டத்திலும் ,கதை இலக்கியப் பணியில் இவை ஈடுபட்டு வருவது யாவரும் அறிந்ததே.

இவற்றின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

பருவ இதழ்களில், பிறவற்றைக் [மாத, மாதம் இருமுறை, காலாண்டு வெளியீடுகள்] காட்டிலும் வார இதழ்களின் விற்பனை மிக அதிகம் எனலாம்.

குமுதம், குங்குமம், ஆனந்தவிகடன், ராணி, கல்கி, தேவி, பாக்யா போன்றவை விற்பனையில் முன்னணி வகிப்பவை.

இவற்றில் வெளியாகும் சிறுகதை, ஒரு பக்கக் கதை போன்றவற்றின் ‘தரம்’ குறித்த என் மதிப்பீடுகளைப் பிறருடன் பகிர்வதற்காகவே இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பகிர்வு  பிறருக்கு, குறிப்பாக வளரும் இளம் படைப்பாளிகளுக்கு ஓரளவேனும் உதவும் என்ற நம்பிக்கையுடன்.................

 முதன் முறையாக, இவ்வார ஆனந்த விகடனில் [5.9.12] வெளியான, பிரபல எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதையைப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறேன்.

‘சுருக்’,  ’நறுக்’ பற்றியெல்லாம் கவலைப்படாமல், சிறுகதைக்குப் பல பக்கங்கள் ஒதுக்குகிற விகடன், இக்கதைக்கும் நான்கு பக்கங்களுக்கு மேல் ஒதுக்கியிருக்கிறது. இதன் சுருக்கத்தை...........

“கொஞ்சம் இரு. சுருக்கத்தை அப்புறம் சொல்லலாம். முதல்ல கதைத் தலைப்பு என்னன்னு சொல்லு”

என்ன இது, திடீர்னு ஒரு குறுக்கீடு! யாருங்க நீங்க?

“நான் யாரா இருந்தா என்ன? ஒரு X ன்னு வெச்சிகிட்டு பதில் சொல்லு”.

சொல்றேன்.

‘அடுத்த முறை’..........இதுதான் தலைப்பு.

“என்னப்பா இது? தலைப்பு கவர்ச்சியா, வாசகனைப் படிக்கத் தூண்டுறதா இருக்கணும்னு சொல்வாங்க. இது அப்படி இல்லியே”.

அது உண்மைதாங்க. ஆனா, இவரை மாதிரி பிரபல நட்சத்திர எழுத்தாளர்களிடம் அதை எதிர்பார்க்கக் கூடாதுங்க. ரொம்ப கனமான ‘கதைக்கரு’ வை வெச்சிச் கதை வடிக்கிறவங்க இவங்க. தலைப்பெல்லாம் இவங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல

“நடை எப்படி?”

”அவர் நடை எனக்கு எப்படிங்க தெரியும்? அசோகமித்திரனை நான் பார்த்ததே இல்லீங்க”.

“இந்த லொள்ளுதான் வேண்டாங்கிறது. வாசகன் கொட்டாவி போடாம படிச்சி முடிக்கணும்னா, கதை நடை [style] சூப்பரா இருக்கணும்பாங்களே, அந்த நடையைக் கேட்டேன்”.

அதை ஏன் கேட்குறீங்க. நாலு பக்கத்தைப் படிச்சி முடிக்கறதுக்குள்ள நாலஞ்சி தடவை தூங்கி விழுந்துட்டேன். அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?. பிரபல எழத்தாளர்னா, அழுத்தமான ‘கதைக்கரு’ இருக்கா? உன்னதமான ‘உள்ளடக்கம்’ இருக்கான்னுதான் பார்க்கணும்.

“அப்படியா, சரி. இனிமே நீ கதைச் சுருக்கம் சொல்லலாம்”.

அவன் பேரு ஸ்ரீகுமார். வேலை பார்த்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பொண்ணு ரமாவும் இவனும் வீட்டாருக்குத் தெரியாம கல்யாணம் கட்டிக்கிறாங்க......

“கொஞ்சம் இருப்பா....ஏன்? ரெண்டு வீட்டிலும் எதிர்ப்பா?”

இவங்க முன்கூட்டியே வீட்டில் அனுமதி கேட்டதாகவே தெரியல. ஒரு கட்டத்தில், ’என்கிட்ட சொல்லியிருந்தா நான் எல்லார் சம்மதத்தையும் கேட்டுப் பத்திரிகை வெச்சிக் கல்யாணம் செய்திருப்பேன். தம்பி, ஏன் இந்தத் திருட்டுக் கல்யாணம்?’ என்று இவன் மாமனார் இவன்கிட்டே சொல்றார். அப்புறம் ஏன் இவங்களுக்கு அசோகமித்திரன் திருட்டுக் கல்யாணம் செஞ்சி வெச்சார்னு தெரியல.

“அதை அவர்கிட்டதான் கேட்கணும். மேலே சொல்லு”.

ஸ்ரீகுமாரும் ரமாவும் மாலையும் கழுத்துமா பெத்த அம்மா முன்னால வந்து நிற்கிறாங்க. அவள் போட்ட கூச்சலில் தெருவே கூடிடுது.

“அடப் பாவமே!”

கண்ணீரும் கம்பலையுமா நிற்கிற பெண்டாட்டியை அவள் வீட்டில் விட்டுட்டுத் தன் வீட்டுக்கு வருகிறான் ஸ்ரீகுமார். நீ வேலைக்குப் போக வேண்டாம். அவள் மூஞ்சியில் முழிக்க வேண்டாம். நான் உனக்கு நல்ல பொண்ணாப் பார்க்கிறேன்” என்கிறாள் இவன் அம்மா.

“அம்மா நீ அப்பாவைச் சித்திரவதை பண்றதோட நிறுத்திக்கோ’ என்று கடுபடிக்கிறான் ஸ்ரீகுமார்.

“அறுவை மருத்துவா, கொஞ்சம் இருப்பா. எனக்கொரு சந்தேகம். குமாரோட அம்மா தன் புருஷனை எப்படியெல்லாம் சித்ரவதை பண்ணினாளாம்? கொஞ்சம் விளக்கமா சொல்லேன்”.

அது சாத்தியமில்ல.

“ஏன்?”

கதாசிரியர் இதைப் பத்தி ஒன்னுமே சொல்லல.

அந்த அம்மா கேரக்டரை எப்படிப் படம் பிடிக்கிறார்? அவங்க நல்லவங்களா, கெட்டவங்களா, இல்லை, ரெண்டுங்கெட்டானா?”

மன்னிக்கனும். இதுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது.

“கதையை முழுசா படிச்சியா?”

வரிவரியா வார்த்தை வார்த்தையா படிச்சுட்டேன். அந்த அம்மாவை அசோகமித்திரம் ஒழுங்கா ’கேரக்டரைஸ்’ பண்ணவே இல்லை.

”நல்லா யோசனை பண்ணிச் சொல்லு. ஸ்ரீகுமாரோட அப்பா வாயால அந்த அம்மாவின் குணாதிசயங்களை ஆசிரியர் விவரிச்சிருப்பாரே?”.

அதையும் அவர் செய்யல.

‘போகட்டும். மாமியார் பண்ணின கலாட்டாவில், கண்ணீரும் கம்பலையுமா பிறந்த வீடு போனாளே ஸ்ரீகுமார் பெண்டாட்டி....என்ன பேர் சொன்னே.... ஆங்...ரமா. அவளைப் பத்தி சொல்லு அறுவை”.

கல்யாணமாகி ஏழெட்டு மாசத்தில் அது அமெரிக்கா போயிடுச்சி.

“அமெரிக்காவுக்கா, எதுக்கு?”

இந்தக் கேள்விக்கும் அ.சோ.மித்திரன்தான் பதில் சொல்லணும்.

”என்னாய்யா எதைக் கேட்டாலும் அவரையே கை காட்டுறே”.

கதை எழுதினவர் அவர்தானே.

“அந்தப் பொண்ணு பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கா?”

தெரியல. அதைப் பத்தியும் அவர் சொல்லல.

‘தெரியல...தெரியல....தெரியல. உன் கிட்டே நான் கதை கேட்க வந்ததே தப்பு. பாதியில் விட்டுட்டுப் போகவும் மனசில்ல. சொல்லு. ”இங்க நடக்குற கதையை அமெரிக்காவுக்கு ஏன் கடத்தினார்? இதுக்காவது பதில் தெரியுமா?”

அவரைச் சந்திக்க முடிஞ்சா கேட்டுச் சொல்றேன்.

”நீ ஒன்னும் கேட்க வேண்டாம். மிச்சம் இருக்கிற கதையைச் சொல்லி முடி”.

அமெரிக்காவிலிருந்தே ஃபோன் பேசிப் பேசி ஸ்ரீகுமாருக்கு தெம்பூட்டி, இவனை B.A. பாஸ் பண்ண வெச்சுடறா ரமா. இவனையும் அமெரிக்காவுக்கு வரவழைச்சு சொந்தமா ஒரு சிற்றுண்டிக் கடை வெச்சுத் தர்றா. சில வருஷங்கள் கழிச்சி, குழந்தைகளோட மாமனார் வீட்டுக்கு வந்த இவன், தான் மட்டுமே பெத்தவங்களைப் பார்த்துட்டு  அமெரிக்கா திரும்பிடறான். நாலு வருஷம் கழிச்சி, இப்போ பெத்தவங்களைச் சந்திக்கிறான். இவங்க சந்திச்சிப் பேசுற இந்தச் சம்பவம்தான் ‘அடுத்த முறை’ என்னும் இந்தச் சிறுகதையின் தொடக்கம். நான் சொன்ன மத்த சம்பவங்கள் எல்லாம் ’பின்னோக்கு’ [flash back] என்ற உத்தியைக் கையாண்டு ஆசிரியர் சொன்னது.

”அது என்ன பின்னோக்கு உத்தி? விளக்கமா சொல்லு”.

ஒருத்தன் ஊரைச் சொல்லி, பேரைச் சொல்லி, ஆதியோடந்தமா கதையை விவரிக்கிறது பழைய கதை சொல்லும் பாணி. அப்படியில்லாம, கதையின் நடுவில் வர்ற சுவையான சம்பவத்தைக் கதையின் தொடக்கமா வெச்சி, மற்ற சம்பவங்களை அடுக்கிட்டுப் போறதைத்தான் பின்னோக்கு உத்தின்னு சொல்வாங்க. இந்த உத்தி, மிச்சக் கதையையும் ஆர்வத்தோட படிக்கத் தூண்டும்.

‘இந்த உத்தி இந்தக் கதையிலும் ஆர்வத்தைத் தூண்டுதா?”

இல்ல. ஆனாலும் கதை முழுக்கப் படிச்சுட்டேன். கதையின் முடிவைச் சொல்லிடுறேன். என்ன சொன்னேன்? ஸ்ரீகுமார் நாலு வருசத்துக்கு அப்புறம் அம்மாவைச் சந்திச்சான், இல்லியா?

“சொல்லு”.

‘நீ மட்டும் வந்திருக்கிற, நான் ரமாவையும் என் பேரப் புள்ளைகளையும் பார்க்க வேண்டாமா?” என்கிறாள் அம்மா. [அம்மாவிடம் இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்ததுன்னு ஆசிரியர் விளக்கல].

அடுத்த முறை [இதுதான் கதையின் தலைப்பு] பெத்தவங்களை அமெரிக்காவுக்குக் கூட்டிட்டுப் போறதா ஸ்ரீகுமார் சொல்றான்.

அம்மா உடம்பு பூதம் மாதிரி பெருத்து நகர முடியாம இருக்கா. ”பத்து வருஷமா ஏதேதோ மருந்து சாப்பிடுறா” ன்னு அப்பா சொல்றார். அதுக்கு மேல அவருக்கு ஏதும் சொல்ல முடியல. அப்பாவை நொந்து கொள்கிறான் குமார்.

அம்மாவை டாக்டரிடம் அழைத்துப் போவதாகக் குமார் சொல்ல, அவள் மறுக்கிறாள்.

பெற்றோருக்குத் தேறுதல் சொல்லிவிட்டு அமெரிக்காவுக்குப் பயணம் புறப்படுகிறான் குமார்.

‘கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.அம்மா அவனைக் கட்டிக் கொண்டாள். அழுத மாதிரி தெரியவில்லை’ என்கிறார் ஆசிரியர்.

அவன் ஊர் போய்ச் சேர்ந்தவுடன், ”உங்கள் அம்மா போய்விட்டாள்” என்கிறாள் ரமா.

வாசகன் எதிர்பார்க்காத ஒரு முடிவைக் [suspense] கொடுத்துக் கதையை முடிக்கிறார் அசோகமித்திரன். இவர் இந்த உத்தியை இங்கே கையாண்டது பாராட்டத்தக்கது.

”ஒரு வழியா கதையை விரிவாகவே சொல்லி முடிச்சிட்டே. இந்தக் கதையின் மூலமா அசோகமித்திரன் சொல்ல நினைப்பது [message]? அல்லது, இந்தக் கதையின் ‘கரு’ [theme] என்ன என்பதைப் புரியும்படி சொல்லிடு”

எந்த ஒரு கதாபாத்திரத்தையும் முழுமையா சித்திரிக்கல. நிகழ்ச்சி அமைப்பிலும் தெளிவான திட்டமிடல் இல்ல. அப்புறம் எப்படி கருவைக் கண்டுபிடிக்கிறது?

"புனைகதை அறுவை மருத்துவன்னு பெத்த பேர் சூட்டிக்கிட்டு இப்படி நழுவுனா எப்படி? நல்லா சிந்திச்சிப் பாரு. அசோகமித்திரன் எவ்வளவு பெரிய எழுத்தாளர். கருவைக் கதைக்குள்ளே எங்காவது ஒளிச்சி வெச்சிருப்பாரு. நல்லா தேடு”.

ஆங்...கண்டுபிடிச்சுட்டேன். ஸ்ரீகுமாரின் அப்பாவும் மனைவிக்குக் கட்டுப்பட்டவராய் பெத்த தாயைத் தவிக்க விட்டவர். அந்த அம்ம இறந்தபோதுகூட இவர் அவரோடு இல்லை என்ற தகவல் கதையில் இடம் பெற்றிருப்பது இப்போது நினைவுக்கு வருது. ஸ்ரீகுமாரும் தன் அப்பவைப் போலவே தன் தாயைத் தவிக்க விட்டவன். அவள் சாகும்போது இவன் அவளுடன் இல்லை. இதன் மூலம் அசோகமித்திரன் சொல்ல நினைப்பது..............................

’இந்தக் காலத்துப் பிள்ளைகள் எல்லாம் பெண்டாட்டிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இவர்களைப் பெற்று வளர்த்தவர்கள் நிராதரவாக வாழ்ந்து, அனாதைகளாகச் செத்துப் போகிறார்கள்’.

உண்மையில் இதுதான் இந்தக் கதையின் கருவா?

என்னுடைய இந்த விமர்சனம் ஏற்கத் தக்கதா?

கதையைப் படித்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

குறிப்பு:

இது முதல் இடுகை மட்டுமல்ல; ‘முன்னோட்ட இடுகை’யும்கூட.

வாரத்தில் மூன்று நாட்களேனும் இடுகை சேர்க்கும் எண்ணம் உள்ளது. சூழ்நிலையின் பாதிப்பால் இடுகைகளின் எண்ணிக்கை குறையவும் கூடும்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

சனி, 18 ஆகஸ்ட், 2012

குயவனும் கடவுளும்

கடவுள் உண்டென்று சொல்லும் ஆன்மிக அறிஞர்கள்[வஞ்சப் புகழ்ச்சியல்ல] வழக்கமாக முன்வைக்கும் ஓர் எடுத்துக்காட்டு, ’ஒரு மண்பானை தானாகத் தோன்றாது. அதைப் படைக்க ஒரு குயவன் தேவை. அது போல, உலகங்களையும் உயிர்களையும் பிறவற்றையும் படைக்கக் கடவுள் தேவை’ என்பதாகும்.

ஒரு குயவன், கண்களை மூடித் திறந்தோ, விரித்த உள்ளங்கையை மேலே உயர்த்தியோ[அபயக்கரம் போல] பானையைப் படைத்ததில்லை; களிமண், நீர் போன்ற மூலப் பொருள்களை சேர்த்து, தண்டச் சக்கரம், தட்டுப் பலகை[பானையைத் தட்டிச் சீர்படுத்தும் கருவி] போன்ற துணைக் கருவிகளைக் கொண்டுதான் படைத்தார்; படைக்கிறார். அது போல, கடவுள் தனக்குரிய மூலப் பொருள்களையும் துணைக் கருவிகளையும் எங்கிருந்து அல்லது எவரிடமிருந்து பெற்றார் என்று எம்மைப் போன்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு,  உரிய விளக்கம் தரப்படாத நிலையில்......

அவற்றைக் கடவுள் தனக்குள்ளிருந்தே  எடுத்துக் கொண்டிருக்கலாம். அது உண்மை என்றால், உலகில் உள்ள அத்தனை பொருள்களும் கடவுள் தன்மை வாய்ந்தவையே. அது அவ்வாறாயின், கடவுளின் கூறான நம் உடம்பு, ஒரு துன்பம் வரும்போது  கிடந்து துடிக்கிறதே, அது ஏன் என்று  ஐயம் எழுப்பினோம்.

இதற்கான விளக்கத்தையும், கடவுள் இருப்பதை உறுதிப்படுத்த முயலும் அறிஞர்களிடமிருந்து பெற இயலவில்லை.

இந்நிலையில் மீண்டும் ஒரு வினாவை, அவர்கள் முன் வைக்கிறோம்.[பிரபஞ்சம், கடவுள் என்று சொல்லிச் சொல்லி வினாக்கள் தொடுப்பதே இந்த ஆளுக்கு வேலையாகப் போய்விட்டது என்று எரிச்சலடையாதீர். ‘சரக்கு’ தீர்ந்துவிட்டதால், கடவுள் தொடர்பான ‘தொடர் பதிவு’களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறோம். ‘இதை எப்போதோ செய்திருக்கலாம்’ என்று ஏடாகூடமாக எவரும் பின்னூட்டம் போட்டுவிடாதீர்!!]

குயவன் தனக்குத் தேவையான  துணைக் கருவிகளை அவரே உருவாக்கிக் கொள்ளவில்லை. அவற்றைப் படைத்தளித்தவர்கள் குயவனைப் போன்ற பிற மனிதர்களே.

ஆக, குயவர் பானையைப் படைக்கத் தொடங்குவதற்கு முன்னரே, துணைக் கருவிகளை உருவாக்கும் படைப்புத் தொழில் ஆரம்பம் ஆகிவிட்டது என்பது உண்மை.

இதைப் போலவே, கடவுள் படைப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, துணைக் கருவிகளைப் படைக்கும் தொழில் நடைபெற்றிருக்க வேண்டும்{தரப்பட்ட எடுத்துக்காட்டை[குயவனின் பானை படைக்கும் தொழில்] அடிப்படையாகக் கொண்டுதான் இந்த விளக்கங்களைத் தருகிறோம்}.

அந்தத் தொழிலைச் செய்தவர்கள் யார்?

கடவுளுக்கு இணையாக, படைக்கும் ஆற்றல் பெற்ற அவர்கள் யார்?

அவர்களும் கடவுள்கள்தானே?

அக் கடவுளர்கள் எத்தனை பேர்?  படைக்கப்படாமல் என்றென்றும் இருந்து கொண்டிருப்பவர்கள் என்பதால் அவர்களையும் போற்றிப் புகழ்ந்து வழிபடலாமா?

நம் கண் முன்னே நடக்கும் சில நிகழ்ச்சிகளை உதாரணம் காட்டி, புலன்களாலோ ஆறாவது அறிவாலோ அறியப்படாத, கடவுள் என்று சொல்லப்படுபவரை நிரூபிக்க முயல்வது எத்தனை தவறு என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

அறியப்பட்ட ஒன்றை ஒப்புமை காட்டி அறியப்படாத ஒன்றை விளக்கும் போது, அந்த ஒப்புமை முழுமையானதாக[’முழுமையாக’ என்று நாம் குறிப்பிடுவது, மூலப் பொருட்கள், துணைக்கருவிகள், துணை நின்றவர்கள், படைப்புத் தொழிலைச் செய்தவர் என்று ஒரு படைப்புக்குக் காரணமான அனைத்தையும்... அனைவரையும் உள்ளடக்கியது] இருத்தல் அவசியம்.

போகிற போக்கில், “பானையைப் படைக்க ஒரு குயவன் தேவை. அது போல், உலகத்தைப் படைக்கக் கடவுள் தேவை” என்று சொல்லிச் செல்வது ஏற்கத்தக்க விவாத முறையல்ல.

ஏற்புடைய பதில் தருவதைத் தவிர்த்து.....

“உன்னுடைய அறிவைக் கொண்டு, கடவுள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டேன்” என்று எவராயினும் சவால் விடக்கூடும்

எம்மைப் பொருத்தவரை, ”கடவுள் இல்லை” என்று சொல்வதைத் தவிர்த்து, கடவுளானவர் அடிப்படை ஆதாரங்களுடன் நிரூபிக்கப் படவில்லை என்றுதான் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

”கடவுளை விமர்சனம் செய்வதற்கு, அவரினும் மேலான அறிவு படைத்தவர்க்கே தகுதி உண்டு” என்று வாதம் புரிபவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நாம் தரும் பதில்.....

“முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபியுங்கள். அதன்பிறகு, ஒரு போதும் அவர் குறித்து நாங்கள் வாய் திறக்க மாட்டோம்” என்பதுதான்.

தன்னளவில் ஒருவர் கடவுளை நம்பினால் அதைக் குற்றம் சாட்ட எமக்கோ பிறருக்கோ உரிமையில்லை. அதே அவர், பொது மக்கள் மனங்களில் தன் நம்பிக்கையைத் திணிக்க முயலும்போது, அதில் குறுக்கிட எல்லோருக்கும் உரிமை உண்டு.

கடவுளின் ‘இருப்பை' நிலைநாட்ட முயலும் ஆன்மிக அறிஞர்களுக்கு நாம் நினைவுபடுத்துவது.....

துணைக் கருவிகளை வழங்கிய கடவுளர் எத்தனை பேர்?

நேரிடையான பதில் தேவை.

”நீ நாத்திகன். கடவுள் இல்லை என்று சொல்லித் திரிகிறாய். அப்படிச் சொல்லி என்ன சாதிச்சே? உன் குடும்பத்தில் உள்ளவர்கள் கோவிலுக்குப் போவதில்லையா? ஊருக்கும் உலகத்துக்கும் நீ என்ன செஞ்சி கிழிச்சே?” என்பதான கேள்விகளை முன் வைப்பது விவாதத்தின் போக்கைத் திசை திருப்பும் முயற்சியாகும்

மீண்டும் சொல்கிறோம்.

ஒரே ஒரு கேள்வியைத்தான்  முன் வைத்திருக்கிறோம்.

அறிஞர்களிடமிருந்து எதிர்பார்ப்பது அதற்கான பதிலை மட்டுமே.

இது சவால் அல்ல; வேண்டுகோள் மட்டுமே.