புதன், 27 பிப்ரவரி, 2013

‘விவாகரத்து’ செய்வோருக்கான ‘சிறப்பு’ச் சிறுகதை!

“இதுபோன்ற[‘பிரிவுபச்சாரம்’] கதையை நான் படித்ததே இல்லை” என்கிறார் கும்பகோணம் ஜெயலட்சுமி கோபாலன்![அக் 10, 2004 தினமலர்-வாரமலர்]

திருமணமான ஓர் ஆண்டுக்குள்ளாகவே, 30% தம்பதியர் ‘மணவிலக்கு’ச் செய்து கொள்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம் [பத்திரிகைச் செய்தி]. பிரிவைச் சந்திப்பதற்குள்ளாக, வழக்கு விசாரணை, அவச்சொல், பொருள் இழப்பு போன்ற காரணங்களால் அளப்பரிய மன உளைச்சலுக்கு அவர்கள் உள்ளாகிறார்கள். இந்த அவலம்தான் இக்கதை உருவாவதற்கான முதற்காரணம்!

இனி, கதைக்குக்குள் நுழையலாம்.....

தலைப்பு:                                 பிரிவுபச்சாரம்

“சரண்யா, அசோக் வீட்டு ஃபங்சனுக்குப் போகணுமே. நேரமாச்சு. கிளம்பு.”

“நீங்க மட்டும் போனா போதாதா?”

”சேச்சே...அசோக், சுனிதா ரெண்டு பேரும் வீடு தேடி வந்து கூப்பிட்டாங்கள்ல? நாம ரெண்டு பேரும் போகணும்.”

“சரிங்க.”

அடுத்த அரை மணி நேரத்தில், சரண்யாவும் அவள் கணவன் கார்த்திக்கும் ஒரு விழா மண்டபத்தில் நுழைந்தார்கள்.

அசோக், சுனிதா ஜோடிக்கு ஓர் ஆண்டு முன்பு திருமணம் நடந்த அதே மண்டபம். அதே கிழமை. அதே முதல் தேதி. நேரம் மட்டும் மாறியிருந்தது. கல்யாணம் நடந்தது காலை நேர சுபமுகூர்த்தம். இந்த விழா நடப்பது மாலை நேரத்தில்.

கெட்டி மேளம்; மங்களப் பொருட்கள்; இன்னிசைக் கச்சேரி; வீடியோ; ஃபோட்டோ; மேடை அலங்காரம்.....என்று அப்போது மண்டபம் களை கட்டியிருந்தது. இன்று அவையெல்லாம் மிஸ்ஸிங்.

மேடையில் ஒரு மேஜை மட்டும். அதன் மீது ஒரு மைக்.

மண்டப முகப்பில், அசோக்கும் சுனிதாவும் சிரித்த முகங்களுடன் எல்லாரையும் வரவேற்று விருந்துண்ண அனுப்பி வைத்தார்கள்.

விருந்துக்குப் பிறகு விழா ஆரம்பமானது.

மேடையில் அசோக்கும் சுனிதாவும் மட்டும்.

அசோக்கின் தந்தை, மேடையேறி வரவேற்புரை ஆற்றிவிட்டு இறங்கினார்.

அசோக் எழுந்தான்.

“விடைபெறு விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இதே மண்டபத்தில் ஓராண்டுக்கு முன்பு எங்கள் திருமணம் நடந்தது. நீங்கள் எல்லோரும் வந்திருந்து நாங்கள் இன்ப வாழ்வு வாழ வாழ்த்தினீர்கள். அதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

எடுத்துக்காட்டான தம்பதியராய் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று எங்களிடம் வேண்டுகோள் வைத்தீர்கள். அதை நிறைவேற்ற இயலாமைக்கு வருந்துகிறேன்; நாங்கள் வருந்துகிறோம்.

எதிர்பாராத விதமாக, எங்களிடையே சிக்கல்கள் முளைத்துவிட்டன. எவ்வளவோ முயன்றும் அவற்றைச் சரி செய்ய இயலவில்லை.

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் ஏற்பட்ட போதும் ஒருவரையொருவர் அநாகரிகமாகத் தூற்றிக் கொள்ளவில்லை. ஆரோக்கியமான முறையில் கலந்து பேசி, பிரிவது என்று முடிவெடுத்தோம்.  நல்ல எண்ணங்களுடன் பிரிகிறோம்.

சேரும்போது அழைத்தோம். பிரியும்போதும் அழைப்பதுதானே நாகரிகம். அழைத்தோம் வருகை புரிந்தீர்கள். அனைவருக்கும் மனப்பூர்வ நன்றி.”

பேசி முடித்தான் அசோக்.

சுனிதா எழுந்தாள்.

“அசோக் மிகவும் நல்லவர். வாழ்க்கைப் பாதையில் இவருடன் இணைந்து செல்ல இயலாமைக்கு வருந்துகிறேன். இவர் உயரிய பண்பாளர். ஆடவர்களுக்கு முன்னுதாரணம்.

அனைவருக்கும் நன்றி.”

இருவர் கண்களிலும் நீர்த்துளிகள் அரும்பியிருந்தன. வலிந்து செய்த புன்னகையுடன் கையசைத்தார்கள்.

மண்டப முகப்பிற்கு வந்து நின்று, கரம் கூப்பி அனைவரையும் வழியனுப்பி வைத்தார்கள்!

திங்கள், 18 பிப்ரவரி, 2013

கடவுளும் கடத்தப்பட்ட ஒரு சிறுமியும்! [ஒரு பக்கக் ’குட்டி’க் கதை]

இது, கடவுளின் கருணைக்கு ஏங்கும் ஒரு [அப்]பாவியின் கதை!!

சாலையில் நடந்துகொண்டிருந்த செல்வராசு, சொகுசுக் கார் ஒன்று, ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டதைக் கண்டான்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுவனை, ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை ஒன்றில் சேர்த்தான்; அடையாள அட்டையிலிருந்த தொ.பே.எண்ணுக்குத் தொடர்பு கொண்டு அவனின் பெற்றோரை வரவழைத்தான்.

மருத்துவரைச் சந்தித்துத் திரும்பிய சிறுவனின் தந்தை, செல்வராசுவிடம், “பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க புள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். கடவுளா பார்த்து உங்களை அனுப்பியிருக்கார். ரொம்ப நன்றிங்க” என்று செல்வராசுவின் கரங்களைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

“என் பத்து வயசுப் பொண்ணு காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. சின்னஞ்சிறு குட்டிகளைக் கடத்துறதும், கற்பழிச்சிச் சிதைச்சிக் கொலை பண்ணுறதும் அடிக்கடி நடக்குதே. என் செல்லம் என்ன ஆனாளோ”ன்னு தினம் தினம் வேதனைப்பட்டுப் பட்டினி கிடந்து செத்துப் போனா என் பெண்டாட்டி. நானும் நடைப் பிணமா வாழ்ந்துட்டிருக்கேன். நீங்க புண்ணியம் செஞ்சவங்க. கேட்காமலே கடவுள் உங்களுக்கு உதவியிருக்கார். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன், கடவுள்கிட்டச் சொல்லி என் மகளைக் கண்டுபிடிச்சித் தரச் சொல்லுங்கய்யா.” கண்களில் கண்ணீர் பெருக, நா தழுதழுக்கச் சொன்னான் செல்வராசு.

செய்வதறியாது விழித்தார் சிறுவனின் தந்தை.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

மனிதர்கள் மனம் இளகிச் செய்யும் நல்ல செயல்களைக்கூட, கடவுளின் கருணையோடு தொடர்புபடுத்துவது நம்மில் பெரும்பாலோரின் வழக்கமாக உள்ளது. இதை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே இக்கதை. 

கடவுளின் ‘இருப்பு’ பற்றிய விவாதத்தைத் தூண்டுவது நம் நோக்கமல்ல; விருப்பமும் அல்ல.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000