புதன், 13 மார்ச், 2013

நீங்கள் ’சாதனை’ ஏதும் நிகழ்த்தாதவரா? உங்களுக்காகவே இந்தக் கதை!!

இது, ‘குமுதம்’ இதழின் தரத்தை உயர்த்திய சிறந்த கதை!
கதைப் பெயர்: சாதனை
எழுதியவர்: ஒ.ப.கதைப் பிரியன்! ஹி... ஹி... ஹி!!!

“என்னோட ஸ்கூல்மேட் ஒருத்தருக்குக் கலைமாமணி விருது கிடைச்சிருக்கு.”- செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த வாசுதேவன் சொன்னார்.

“அப்படியா? உங்களோட காலேஜில் ஒன்னாப் படிச்ச ஒருத்தருக்கு ஏதோ நாவல் போட்டியில் முதல் பரிசு கிடைச்சிருக்கிறதாச் சொன்னீங்களே?” என்றார் அவர் மனைவி தேவி.

“அது போன மாசம். அதையும் பத்திரிகையில் பார்த்துத்தான் தெரிஞ்சிட்டேன். அது மட்டுமில்ல, என்னோட படிச்ச ஒரு பொண்ணு, இந்த வருசம் செஸ் போட்டியில், ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வாங்கியிருக்கு. இப்படி, இன்னும் யாரெல்லாமோ எதையெல்லாமோ சாதிச்சிருக்காங்க. என்னோட படிச்சவங்க சாதனைகள் நிகழ்த்துறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆனா, அவங்களோட படிச்ச நான் எதுவுமே சாதிக்கல.” மிகுந்த வருத்தத்துடன் சொன்னார் வாசுதேவன்.

"வணிகவரித் துறையில் அதிகாரியா இருக்கீங்க. ஏராளமான வாய்ப்பிருந்தும் லஞ்சமே வாங்காம கடமையைச் செய்யுறீங்க. பாராட்டையும் விருதையும் எதிர்பார்க்காத இந்தச் சாதனைக்கு வேறு எந்தச் சாதனையும் ஈடாகாதுங்க.”- தேவியின் குரலில் பெருமிதம் பொங்கி வழிந்தது.

                               000000000000000000

***23.09.2009 ‘குமுதம்’ இதழில் வெளியானது. பக்கம்: 89.

குமுதம் ஆசிரியருக்கு நன்றி.

செவ்வாய், 12 மார்ச், 2013

ஒரு கிராமப்புறத்துக் கிழவியின் கதை! [அசத்தும் நாட்டுப்புற நடையில்!!]

”காத்தாலேயிருந்து மரத்தடியிலேயே கிடத்தி வெச்சிருக்கியே, என்ன நோக்காடு வந்துது?”-இது மருமகள்! “நீ செத்துத் தொலைச்சா கருமாதிச் செலவுக்குக்கூடக் காசில்ல.”-இது மகன்!!

கதைத் தலைப்பு:                       சுமை

சேலம்- கோவை நெடுஞ் சாலையில், சங்ககிரியை அடுத்த ஆறாவது கிலோ மீட்டரில், பல்லக்காபாளையம் செல்லும் உராட்சிப் பாதை கிளைவிடும் இடம். சாலையின் விளிம்பில், முகம் வைத்து நீண்டு கிடக்கும் பனை ஓலை வேய்ந்த அந்தத் தேனீர்க் கடை நல்லப்பனுடையது.

கடையை ஒட்டி, வரிசையில் குந்தியிருந்த ஐந்தாறு குடிசைகளுக்கும் சேர்த்துக் குடை பிடித்துக்கொண்டிருந்தது ஒரு பெரிய ஆலமரம்.

அதன் நிழலில், தன்னைப் போலவே காலாவதி ஆகிப்போன ஒரு கயிற்றுக் கட்டிலில் சிறு பிள்ளையைப் போல முடங்கிக் கிடந்தாள் அத்தாயி. கிழவிக்கு அன்று உடம்பு சுகமில்லை.

பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்த ஆடு மேய்க்கும் சிறுமிகளில் ஒருத்தி, “ஆயா...ஒம் மருமூவ கூப்புடுது” என்றாள்.

சோறு உண்ணத்தான் மருமகள் அழைக்கிறாள் என நினைத்துவிட்ட அத்தாயி, “இப்போ சோறு வேண்டாம். ஒரு தம்ளாரு சுடு தண்ணி மாத்தரம் கொண்டாரச் சொல்லு” என்றாள்.

சில வினாடிகளில் மருமகள் வந்தாள். சூடான நீரோடு அல்ல; சுடச்சுட வார்த்தைகளோடு.

“நானும் பார்த்துட்டிருக்கேன். சாணி பொறுக்கப் போகாம காத்தாலேயிருந்து மரத்தடியிலேயே கிடத்தி வெச்சிருக்கியே, என்ன நோக்காடு வந்துது? ஊரு ஒலகத்தில் வயசானவங்க இல்ல? அவங்களுக்கெல்லாம் நோய் நொடி வர்றதில்ல? இதா ஆச்சி அதா ஆச்சி, உயிர் போகப் போகுதுங்கிற மாதிரி கட்டிலே கதின்னு படுத்துக் கிடக்கிறே. யார் யாருக்கோ சாவு வருது; இந்தச் சனியனுக்கு ஒரு சாவு வருதா?” என்று பொரிந்து தள்ளினாள்.

ஒரு சாணக் கூடையை அத்தாயி மீது வீசிவிட்டுப் போனாள்.

நெடுஞ்சாலையில் சாணம் பொறுக்கிக்கொண்டிருந்தாள் அத்தாயி.

கூடையிலிருந்து சிதறிய சாணத்தில் ஊன்றிய கால்கள் சறுக்கிவிட, இடம் பெயர்ந்து, சாலையின் நடுவே மல்லாந்து விழுந்தாள் கிழவி. 

கடூரமான ‘கிறீச்’ ஒலியோடு சாலையைத் தேய்த்து நின்றது ஒரு லாரி.

”ஏம்ப்பா நல்லப்பா, இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கிற  இந்தக் கிழவி, சாணி திரட்டி வந்து வறட்டி தட்டிப் போட்டுத்தான் உன் வீட்டு அடுப்பு எரியணுமா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தான் டீ ஆற்றிக்கொண்டிருந்த நல்லப்பன்.

கடை எதிரே, லாரி ஓட்டுநரின் ஆதரவில் தன் தாய் நிற்பதைக் கண்டான்.

மவுனமாய்க் கிழவியை அழைத்துப் போய்க் கட்டிலில் கிடத்தினான்.

“காடு வா வாங்குது; வீடு போ போங்குது. இந்த வேலைக்கெல்லாம் போகச் சொல்லி உன்னை யார் அடிச்சது? நீ லாரியில் அடிபட்டுச் செத்துத் தொலைச்சிருந்தா, இப்போ கருமாதிச் செலவுக்குக்கூடக் கையில் காசில்ல. வேளா வேளைக்குக் கொட்டிகிட்டுச் சும்மா கிடந்து தொலையேன்.”

பேசி முடித்துவிட்டு நகர்ந்தான் நல்லப்பன்.

அதோ.....மருமகள் வந்துகொண்டிருக்கிறாள்!

********************************************************************************************************************************************