செவ்வாய், 26 மார்ச், 2013

’அதுக்கு’ ’இது’தானா இடம்!? [ஒரு பக்க ‘அனுபவ’க் கதை!!]

புகழ் பெற்ற , திருச்செங்கோடு மலைக்கோயிலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தில் முகிழ்த்த கதை இது!!!

அப்போது எனக்கு முப்பது வயது.

இயல்பாகவே, இறை வழிபாட்டில் ஈடுபாடு இல்லாத நான், அன்பு மனைவியின் தட்ட முடியாத வேண்டுதலின் பேரில், திருச்செங்கோடு மலைக் கோயிலுக்குச் செல்ல நேர்ந்தது.

வாகனங்கள் செல்லுவதற்கான சாலை வசதியெல்லாம் அப்போது இல்லை. படிகளில் பயணம் செய்துதான் மலை உச்சியிலுள்ள மாதொருபாகனைத் தரிசிக்க வேண்டும்.

கால் வலியைச் சற்றே குறைக்க, படிகளை எண்ணிக்கொண்டே ஏறுவது ஒருவகை நம்பிக்கை.

“ஒன்னு...ரெண்டு...மூனு...”

நினைவு சிதறாமல் எண்ணியபடி மேலே சென்று கொண்டிருந்தேன்.

எண்ணிக்கை சில நூறுகளைக் கடந்தபோது.....

“ம்...ம்...ம்...விடுங்க.” மனதைக் கிறங்கடிக்கும் இளம் பெண்ணின் சிணுங்கல் ஓசை கேட்டது.

அதிர்ச்சியுடன், பார்வையைச் சற்றே உயர்த்திய போது, களைப்பாறுவதற்கான ‘ஓய்வு மண்டபம்’ கண்களில் பட்டது. மலையின் உச்சி வரை இவ்வகை மண்டபங்கள் உள்ளன.

எதிர்ப்பட்ட மண்டபத்தின் உள்ளே, ஒரு வாலிபனின் அரவணைப்பில் ஓர் இளம் பெண் நெளிந்துகொண்டிருந்தாள்.. அவளின் கன்னங்களை வருடி, இதழ்களில் முத்தமிடும் கட்டத்தை அவன் அணுகிவிட்டிருப்பது தெரிந்தது..

படி எண்ணுவதை அறவே மறந்தேன். அடுத்த அடி வைக்கவும் மனமில்லாமல், நின்ற இடத்தில் நின்ற போது.....

”இங்கே வேண்டாம். அந்த மண்டபத்துக்குப் போயிடலாம்” என்று அவள் சொல்ல, அவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.

“இவர்களின் காமக் களியாட்டத்துக்குப் புனிதமான இந்தக் கோயில்தானா கிடைத்தது” என்று முணுமுணுத்துக்கொண்டே, சற்று இடைவெளி கொடுத்து அவர்களைப் பின்தொடர்ந்தேன்.

வழியில், சரிவான பாறையில் வடித்தெடுத்த அந்தப் பிரமாண்ட ஐந்து தலை நாகத்துக்குக் குங்குமப் பொடி தூவினேன்.

பக்கவாட்டில், அறுபது அறுபது விளக்குகள் கொண்ட அறுபதாம் படியைக் கடந்த போதும், கை நீட்டும் பிச்சைக்காரர்களுக்குச் சில்லரை போட்ட போதும்கூட, என் பார்வை அந்த இணையை விட்டு விலகாமலே இருந்தது.

“ஒரு சாமி கோயிலில், தட்டுறதும் தொட்டுத் தடவுறதும் இடிக்கிறதுமா ஜல்சா பண்ணிட்டுப் போறான். கலி முத்திப் போச்சி.” இறங்கி வந்துகொண்டிருந்த கும்பலில் ஒரு பெரியவர் மனம் நொந்து சொன்னது கேட்டது.

தொடர்ந்த மலையேறும் பயணத்தில், ’தேவரடியார் மண்டபம்’ குறுக்கிட்டது. அதனுள் நுழைவதைத் தவிர்த்துப் பக்கவாட்டுப் பாதையில் செல்வதே பக்தர்களின் வழக்கம்.

அந்த இளஞ்ஜோடியோ, தயங்காமல் அதனுள் நுழைந்தது.

உள்ளேயிருந்து வந்த தொடர்ச்சியான  ‘இச்...இச்...இச்...” ஓசை என் செவிகளில் பாய்ந்து என்னைச் சுட்டெரித்தது.

“ஈனப் பிறவிகள்” என்று மனத்தளவில் சாடிக்கொண்டே நகர முற்பட்டபோது, எனக்குப் பின்னாலிருந்து பேச்சுக் குரல்.

“தள்ளிகிட்டு வந்திருக்கான்.”

“இளசு...புதுசு.”

”நல்ல சான்ஸ். வாங்கடா.”

பக்கவாட்டுக் குன்றுகளின் மறைவிலிருந்து நான்கு முரடர்கள் வெளிப்பட்டார்கள்.

தண்ணியடித்துவிட்டுக் களவாடிய பணத்தை வைத்துச் சூதாடும் கும்பல் அது. குன்றுகளுக்கும் புதர்களுக்கும் இடையே உள்ள மறைவிடங்கள்தான் அவர்களின் பாசறை.

என்னையும் தாக்கக்கூடும் என்பதால், அவர்களின் பார்வையில் தட்டுப்படாமலிருக்க, மண்டபத்தைக் கடந்து, படிகளை ஒட்டிய ஒரு பெரிய குன்றின் மறைவில் பதுங்கி, நடக்கவிருப்பதைக் கண்காணித்தேன்.

நான் பயந்தது போல ஏதும் நடந்துவிடவில்லை.

ரவுடிகளின் காலடிச் சத்தம் கேட்டோ என்னவோ, அந்த ஜோடி மண்டபத்திலிருந்து வெளியேறி, விரைந்து படியேறியது.

ரவுடிகளும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.

“புத்தி கெட்ட புள்ளைகளா இருக்கே. இவர்களின் இன்ப விளையாட்டுக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?” என்று அலுத்துக் கொண்டேன்.

 அன்று பார்த்துப் பக்தர்களின் வருகையும் மிகக் குறைவாக இருந்தது. அவர்களிலும் இளைஞர்களைக்  காண முடியவில்லை. அச்சத்தில் என் ஒட்டுமொத்த உடம்பும் லேசாக நடுங்கத் தொடங்கியது. நீண்ட இடைவெளி கொடுத்து, மிக மெதுவாகப் படிகளில் பயணித்தேன்.

அந்த இளஞ்ஜோடிக்கு நேரப்போகும் ஆபத்தைத் தாறுமாறாகக் கற்பனை செய்துகொண்டே படியேறிய போது மேலேயிருந்து கூச்சல் கேட்டது.

கோயிலுக்குள் இருந்த ஒரு கும்பல், மலடிக் குன்றை நோக்கி விரைந்துகொண்டிருப்பது கண்டு, அவர்களுடன் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

குன்றின் அருகே....

காதலர்களைக் காணோம்; ரவுடிகளையும் காணோம்.

நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர், தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ நாங்க பத்து பேர் குன்றைச் சுத்திட்டுத் திரும்பும் போது, அந்த ஜோடி எங்களைக் கடந்து போச்சு. குழந்தைப் பேறு இல்லாததால, மலடிக் குன்றைச் சுத்தப் போறாங்கன்னு நினைச்சோம்; அங்கிருந்து குதிச்சித் தற்கொலை பண்ணிக்குவாங்கன்னு எதிர்பார்க்கல.’

சொல்லிவிட்டு, அவர்கள் விட்டுச் சென்ற கடிதத்தைப் படித்தார்: “வெவ்வேறு சாதியில் பிறந்துவிட்ட எங்கள் காதலுக்கு, அர்த்தமில்லாத கட்டுப்பாடுகள் கொண்ட இந்தச் சமுதாயத்தில் இடமில்லை. கொஞ்ச நேரமேனும் , இந்தச் சமுதாயத்தைத் துச்சமாக மதித்து நடந்து கொண்டதில் ஒருவித அற்ப சந்தோசம். அந்தத் சந்தோசத்துடன் இந்தக் கேடுகெட்ட உலகத்தைவிட்டே போகிறோம்.”

“இவர்களுக்குக் காமக் களியாட்டம் புரிய வேறு இடம் இல்லையா?” என்று எரிச்சலுடன் முன்பு முணுமுணுத்த வார்த்தைகளை நெஞ்சுருக நினைத்துப் பார்க்கிறேன்.

ஆண்டுகள் பல உருண்டோடிவிட்ட நிலையிலும், இந்தச் சம்பவம் என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்பு; மலையின் உச்சியில், செங்குத்தான பகுதியில் அமைந்துள்ளது ‘மலடிக் குன்று’.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அதை வலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது திருச்செங்கோடு வட்டார மக்களின் நம்பிக்கை.

அது சாத்தியமோ இல்லையோ, காதலில் தோல்வியுற்றவர்களும், பிற தோல்விகளைக் கண்டவர்கள் பலரும் அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டது மிகப் பெரிய சோகம்.

நான் மலைக் கோயிலுக்குச் சென்று மிகப்பல ஆண்டுகள் ஆயிற்று. இப்போதைய நிலவரத்தை  அறியேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++














சனி, 23 மார்ச், 2013

"கடவுள் இல்லை” -அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அறிவிப்பு!!!

ஊடகங்களில் இப்படியொரு செய்தி வெளியானால், இம்மண்ணுலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

எனக்கு நானே எழுப்பிக் கொண்ட கேள்வி இது.

பதிலும் என்னுடையதே.

இந்தக் கேள்வி-பதிலின் நோக்கம் அனைவரையும் சிந்திக்கத் தூண்டுவது மட்டுமே; எவரொருவர் மனதையும் புண்படுத்துவது அல்ல.

கடவுள் என்று ஒருவர் இல்லையென்பது உறுதி செய்யப்பட்டால், இப்போதைய நம் வாழ்க்கை முறையில் பெருத்த மாற்றங்கள் நிகழுமா?

’நிகழும்’ என்று நம்புவோர் மிகப் பலர்?

தர்ம சிந்தனை புதை குழிக்குப் போக, அதர்மம் தலைவிரித்தாடும்.

திருட்டு, கொள்ளை, கொலைச் சம்பவங்கள் பெருகும். [இப்போது என்ன வாழுகிறது என்று யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்].

இளம் பெண்களைக் கடத்துவதும் கற்பழிப்பதும் அதிகரிக்கும்.

நல்லவர்களும் கெட்டவர்களாக மாற, சுய நலம் மேலோங்க, இந்த உலகமே கலவர பூமியாக மாறி, மனித இனம் போரிட்டு அழிந்து போகும்.

மிகப் பலரின் இந்த நம்பிக்கை பலிக்குமா?

நிச்சயமாக இல்லை.

கடவுளுக்குப் பயந்துகொண்டு மனிதன் குற்றம் புரியாமல் இருந்ததில்லை. [கடவுள் நம்பிக்கையாளர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்; மேலே படியுங்கள்.]

ஒருவனுக்கு உரியதைப் பறிக்க, அல்லது திருட இன்னொருவன் அஞ்சுவதற்குக் காரணம், கடவுள் பயமல்ல; பொருளுக்கு உரியவனால் அல்லது அவனைச் சார்ந்தவர்களால் தாக்கப்படுவோம் என்ற முன்னெச்சரிக்கையே காரணம்.

காவலரிடம் பிடிபடுவோம்; நீதிமன்றம் தண்டிக்கும் என்று நம்புவதும் தலையாய காரணம் ஆகும்.

அகப்பட்டுக் கொள்வதற்கான சூழ்நிலை இல்லாதிருந்தும், ஒருவன் குற்றம் புரியாமல் இருப்பானாயின், அதற்கு, ‘பட்டினி கிடந்து மாய்ந்தாலும் இன்னொருவன் உழைப்பில் வந்தது நமக்கு வேண்டாம்’ என்று நினைக்கும் அவனின் மனப் பக்குவமே காரணம்.

இத்தகைய மன உறுதி ஒருவனுக்கு வாய்ப்பது, அவனுடைய சுய சிந்தனையால்; அவனைச் சார்ந்தவர்களின், சான்றோர்களின், அறிஞர்களின் வழிப்படுத்தலால்தான்.

எல்லாம் கடவுளால் என்று சொல்வதும் வலியுறுத்துவதும் மனித இனத்துக்குச் செய்யும் துரோகம் ஆகும்; மனிதனின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் முயற்சி ஆகும்.

சிந்திப்பதும் செயல்படுவதும் மனித முயற்சியாலேயே சாத்தியப்படும் போது, கடவுளைத் துணைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை; இல்லவே இல்லை.

’பிறப்பு ஏன்? இறப்பு ஏன்? துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கை ஏன்?’ என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண்பது இயலாது என்பதை உணரும்போது, கடவுளைச் சரணாகதி அடைகிறான் மனிதன். அவ்வாறு சரணாகதி அடைந்தாலும், மேற்குறிப்பிட்டது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை என்பதை அவன் உணர மறுக்கிறான்.

குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவனின் மூளையில் கடவுள் நம்பிக்கை திணிக்கப்படுகிறது.

ஒரு குழந்தையின் தாத்தா செத்துப் போக.....

‘செத்துப் போறதுன்னா என்ன/” என்று கேட்கும் குழந்தையிடம், “செத்துப் போறதுன்னா, தாத்தா சாமிகிட்ட போய்ட்டார்” என்று காலங்காலமாக நம்மவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐயமற அறியப்படாத, அல்லது, உணரப்படாத கடவுளைக் குழந்தையின் மனதில் திணித்து, வளரும் அதன் அறிவை ஏன் முடமாக்க வேண்டும்/

‘நம்மோட இந்த உடம்பு செயல்பட முடியாம அழியறதுதான் சாவு” என்று எதார்த்தமாகச் சொல்லலாம்.

“அழுகிப் போனா நாறும். புதைக்கிறோம், இல்லேன்னா எரிச்சிடுறோம்”என்றும் சொல்லலாம்.

இம்மாதிரி எதார்த்தமான பதில்கள் குழந்தைகளை அச்சுறுத்தும்; வாழ்வின் மீதான பற்றுதலைக் குறைக்கும் என்பதால்.....

குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு, “இதைப் பத்தியெல்லாம் பெரியவங்க சொல்லியிருக்காங்க. நீ பெரியவன் ஆகும் போது எல்லாம் புரிஞ்சிக்கலாம்; நீயே கண்டுபிடிச்சிச் சொல்லலாம்” என்றிப்படிச் சமாளிப்பதே புத்திசாலித்தனம் ஆகும்.

தன் குழந்தை இன்னொரு குழந்தையை அடித்தால்.....

“அடிக்கிறது தப்பு. அது பாவம். சாமி தண்டிக்கும்” என்று பயமுறுத்துவதைத் தவிர்த்து, “நீ அடிச்சா அவன் திருப்பி அடிப்பான். அவனால முடியலேன்னா, உன்னைவிடப் பலசாலியைக் கூட்டி வந்து அடிப்பான். நீயும் துணைக்கு ஆள் தேட வேண்டி வரும். இரு தரப்பாரும் மாறி மாறி அடிச்சிக்க ஆரம்பிச்சா, யாருமே சந்தோசமா வாழ முடியாது” என்று சொல்லித் திருத்துவதே அறிவுடைமை ஆகும்.

இவ்வாறெல்லாம், எதார்த்த நிலையைப் புரிய வைத்து வளர்க்கப்படும் பிள்ளைகள், கடவுளை நம்பி, மேலும் பல மூட நம்பிக்கைகளுக்கு உள்ளாகி, மனச் சிதைவுக்கு ஆளாகாமல், சிறந்த சிந்தனையாளர்களாக உருவெடுப்பார்கள்; நல்லவர்களாக வாழ முயல்வார்கள்.

ஆக, மனிதர்கள் நல்லவர்களாக வாழ்வது மனிதர்களால்தான்; கடவுளால் அல்ல.

எனவே, ’கடவுள் என்று ஒருவர் இல்லை’ என்று அறிவிக்கப்பட்டாலும் இப்போதைய இயல்பு வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.