வெள்ளி, 4 அக்டோபர், 2013

"தமிழ்நாடு பிரியும்” ---சுஜாதா அன்று ஏன் இப்படிச் சொன்னார்?!?!

இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, 'நீட்' திணிப்பு, மூடநம்பிக்கைத் திணிப்பு, கடைசியாகக் கன்னடன் சூரப்பாவின் துணைவேந்தர் நியமனம்  என்று எதை எதையோ திணி திணி என்று திணித்துக்கொண்டிருக்கிறது மோடி அரசு. 

அடுத்து வருவது, சற்று முன்னர்[08.09.2020 காலை 07.35 மணி] தினத்தந்தி நாளிதழில் வாசித்த ‘திடு’ செய்தி.

//                                   இந்திப் பிரிவில் தமிழர்களுக்குப் பணி

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தித் திணிப்பு

                 ஜி.எஸ்.டி. உதவி கமிஷணர் பரபரப்புக் குற்றச்சாட்டு                //

தமிழனுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்துகிற இன்றைய சூழலில் எழுத்தாளர் சுஜாதாவின் இக்கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.

“இன்னும் முப்பத்தேழு ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு சுதந்திரப் பிரதேசம் ஆகும்” என்று 1993 இல் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. அவர் தீர்க்கதரிசியல்ல; ஆனாலும் சிறந்த சிந்தனையாளர்; மகா புத்திசாலியும்கூட!

கட்டுரையை ஐந்தில் ஒரு பங்காகச் சுருக்கியிருக்கிறேன்.

இன்றைய தினம் லட்சக்கணக்கானவர்கள் டைப் அடித்தும், கயிறு சுற்றியும், மூடி போட்டும், லேபிள் ஒட்டியும் அற்பத்தனமான வேலைகளில் சிறைப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள், டெக்னாலஜி மூலம்.

இப்போது பல வேலைகள் புதிதாகத் தோன்றிக்கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

ஆஸ்பத்திரிகளில் ஸிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் எடுப்பது; ஃபேக்ஸ் எந்திரம், டெலிபிரிண்டர் ரிப்பேர் செய்வது. கிராமங்களில், சூரிய ஒளி பானல்கள் அமைப்பது; டி.வி க்கு இணைப்புத் தருவது; வீடு வீடாகப் போய் டெலிஃபோனுக்கு செண்ட் அடிப்பது என்று நிறையப் புதுப் புது வேலைகள்.

எல்லாமே சுவாரஸ்யமானவை.

இனி, சுவாரஸ்யமற்ற வேலைகளைக் கணிப்பொறிகள் மட்டுமே செய்யும்.

புதிய வேலைகளுக்குப் புதிய புதிய திறமை கொண்ட மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.

இம்மாதிரி தொழில் தெரிந்தவர்களுக்கு மதிப்பு அதிகம்; வருமானமும் அதிகம். ஒரு நாள் டெக்னீஷியன் வரவில்லையென்றால், சில டாக்டர்கள் ஆயிரக் கணக்கில் வருமானம் இழப்பார்கள்.

இனி வருங்காலத்தில், தவிர்க்க இயலாத இந்த டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியால், சில அடிப்படைகள் கலைக்கப்பட்டுவிடும்.

அறுபது, எழுபது வயது முதியவர், டெலிஃபோன் மூலம் ஒரு சிக்கலான சாதனத்தைப் பழுது பார்த்துத் திருத்த முடியும்; தூரத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவார், தன் ஞானத்தை...அனுபவத்தைப் பயன்படுத்தி, ஒரு தாய் தொட்டிலை ஆட்டிக்கொண்டே அவ்வப்போது ஒரு கணிப்பொறித் திரையில் சில தனிப்பட்ட செய்திகளை விரும்பினவர்களுக்குத் தர முடியும். பன்னிரண்டு வயதுச் சிறுமி தன் பன்னிரண்டு வயதுத் திறமைகளை மட்டும் பயன்படுத்தி மாதம் ஐயாயிரம் சம்பாதிக்க முடியும்.

மற்றபடி, வீடு பெருக்குதல், சாணி தெளித்தல், அலம்புதல், கூட்டுதல், இணைத்தல் போன்ற ‘போர்’ அடிக்கும் வேலைகளை இயந்திரங்கள் செய்யும்.
வேலை என்பது விரும்பினபோது எல்லோருக்கும் கிடைக்கும்

எந்தத் திறமையாக இருந்தாலும் அதற்கேற்ப வேலை கிடைக்கும். 
வேலை எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும்

இந்தியாவில் இந்த நிலை எப்போது வரும் என்று கேட்பின் இந்த நாடு முதலில் சில சௌகரியமான அம்சங்களாகப் பிரிய வேண்டும்.


கர்னாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் யாவும் ஜப்பானையும் விட அதிகப் பரப்பளவும் ஜனத்தொகையும் கொண்டவை.
இவை அனைத்தும் தனிப்பட்ட சுதந்திரப் பிரதேசங்களாக நிச்சயம் பிரிந்துவிடும். இந்தப் பிரிவைப் பற்றி நாம் பயப்படத் தேவையில்லை. இப்போது, முன்னாள் சோவியத் யூனியன் போல, ஐரோப்பியக் கண்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் இதற்கு முகமன் கூறுகின்றன.

ஒவ்வொரு மாநிலமும் பிரிந்த பின் அவை கலாச்சாரத்திலும் இனத்திலும் ஒன்றுபட்டு செங்குந்தர், நாடார், ஐயங்கார், கானாடுகாத்தான் செட்டியார் போன்ற பிரிவினைகள் இல்லாமல், ‘ஜப்பானியன்’ என்பது போல, ‘தமிழன்’ என்ற ஒருமை கிடைப்பது இந்த மாறுதல்களுக்கு முதன் முதல் தேவை.

என் கணிப்பில் இது நிகழ இன்னும் முப்பத்தேழு வருஷங்கள் ஆகும்.

 *                                *                               *
சுஜாதாவின் [மறைவு: ஃபிப்ரவரி 27, 2008] இந்தக் கணிப்பு வெளியாகி [கட்டுரை 1993 எழுதப்பட்டது] 24 ஆண்டுகள் முடிந்துவிட்டன.


இன்னும் 13 ஆண்டுகளில் தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டும். இது சாத்தியமா?

“சாத்தியமே” என்று நான் சொல்ல மாட்டேன். சொன்னால்.....

அடுத்த என் பதிவு வெளிவருவதற்கான சாத்தியமே இல்லாமல் போய்விடும்!!!

நீங்கள் சொல்லலாம்..........

 உங்கள் மனதுக்குள்! எத்தனை முறை வேண்டுமானாலும்!!

திங்கள், 30 செப்டம்பர், 2013

ஐயோ பாவம் ‘அந்த’ப் பெண்கள்!!!

"இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் ஆயிரக் கணக்கான பெண்களில் பலரும் சிறு வயதிலேயே தந்தை, தாய்மாமன், மச்சான், சொச்சான் போன்ற மிக நெருங்கிய ரத்த உறவு கொண்டவர்களாலேயே வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்டவர்கள்; குடும்ப உறுப்பினர்களாலும் சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள்" என்கிறார் இந்தத் தொழிலில் ‘முத்துக் குளித்த’ ஒரு ’முன்னாள்’ பிரபலம்! [பெயர் தவிர்க்கப்படுகிறது. interviewed in 'Not For Sale’, 2004]

"இதில் ஈடுபட்டவர்கள் பலரும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இத்தொழிலைத் தலை முழுகியவர்கள்.” ['Avaria', Shelly Lubben's Blog, 06.12.2007].

இதில் ஈடுபடுத்தப்படும் பெண்களின் சராசரி வயது 18 ஆகும்.[ABC News quoted on erasethedark.com]

நிறையச் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இளம் பெண்கள் வருகிறார்கள். ஆனால், உண்மையில் சம்பாதிப்பவர்கள், பேரழகும் கட்டான உடலமைப்பும் அதிர்ஷ்டமும் உள்ள கொஞ்சம் பெண்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், தரகர்களும்தான்.

இதில் ஈடுபடும் தொழில்காரிகள், A, B, C என வகைப்படுத்தப்படுகிறார்கள்.

'A’ தரத்தில் உள்ளவர்களைத் தயாரிப்பாளர்கள் தேடிப் போவார்கள்; கேட்கும் ஊதியத்தைக் கொடுப்பார்கள்; மிகவும் மரியாதையாக நடத்துவார்கள்.

Bயும் Cயும் நம் சினிமாக்களின் துணை நடிகைகள் போல! மேற்சொன்ன கவுரவங்கள் மிஸ்ஸிங்! [Jonathan Morgan, ex .... director, The Guardian, march 17, 2001].
.
“இது மிகப் பயங்கர அனுபவம். இதில் ஈடுபடும்போது, பெண்கள் வலியால் துடிப்பார்கள்; அலறுவார்கள். இவர்களில் பலரும் பாலியல் தொற்று நோய்களுக்கும், H.I.V தொற்றுக்கும் ஆளாகிவிட்டவர்கள்”என்றிப்படித் தன் அனுபவங்களை அடுக்குகிறார் ஒரு male....performer [at the Los Angeles Hearings of The Attorney General Commission, 2005] 

தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறிது காலத்திலேயே குடும்ப உறவுகளால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப் படுகிறார்கள் இவர்கள். போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, மனநோயாளிகளாய் மாறுகிறார்கள்.

இத்தொழிலில் ஈடுபட்டவர்களில் மிகப் பலரின் , குறிப்பாகப் பெண்களின் வாழ்க்கை பாழாகியிருக்கிறது. 75%---80% பேர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டவர்கள். நிறையத் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளனவாம்.

இளம் பெண்களைக் காவு வாங்கும் ‘அந்த’த் தொழில் எது என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அது.....

ஆங்கிலத்தில் ‘........phy’ என்று சொல்லப்படும் ஆபாசப் படத் தயாரிப்பு!

இவ்வகைப் படங்களைத் தயாரிப்பதற்கான சிறந்த மையமாக Hungary- Budapest திகழ்கிறதாம்!

55% நிறுவனங்கள் [Internet Child .... Industry] அமெரிக்காவிலும், 33% நிறுவனங்கள் ரஷ்யாவிலும் உள்ளனவாம். 


இந்தத் தொழிலில் நம் பாரதேசம் பின்தங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது!


ஒரு பக்கத்தில் ஆண் பெண் சமத்துவத்துக்கான ஆக்கபூர்வமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க, வக்கிர புத்தியுடன் பெண்களை உடலுறவில் ஈடுபடுத்திப் படம் எடுத்து உலகம் முழுக்கப் பரவவிட்டுப் பணம் சம்பாதிக்கிறது ஆண் வர்க்கம்.

இணைய வலைத்தளங்களில் உலா வரும் கோடிக்கணக்கான ஆபாசப் படங்களைத் தடை செய்ய வேண்டும் என்று அவ்வப்போது சில குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் அவையும் பின்னர் அடங்கிவிடுகின்றன.

ஆபாசப் படங்களுக்கு எதிரான குரல் [anti .... websites] இணையத்தில் ஒலிப்பதே இல்லையா என்னும் ஆதங்கத்தில் தேடுபொறிகள் வாயிலாகத் தேடிய போது பல தகவல்கள் கிடைத்தன. மேற்கண்டவை அவற்றில் சில.

உடலுறவு கொள்ளும் ‘முறைகள்’ குறித்துப் படங்கள் [ஓவியங்களைப் பயன்படுத்தி] தயாரிப்பதும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இளைஞர்களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு முன்னரே காண்பித்துப் பாலுறவுக் கல்வி கற்றுத் தருவதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

நடைமுறை சாத்தியம் இல்லாத,  உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கிற படங்களை எடுத்து அவற்றைப் பலரும் பார்க்க வழிவகை செய்வது கண்டிக்கத் தக்க மாபெரும் குற்றம் ஆகும். அக்குற்றங்களை வேரோடு களைவது இன்றைய இளைஞர்களால் சாத்தியப்படும்.

அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான மிக மிகச் சிறிய முயற்சியே இப்பதிவு.

தங்களின் வருகைக்கு நன்றி.