புதன், 7 மே, 2014

‘சிடு மூஞ்சி’களையும் சிரிக்க வைக்கும் சிறுகதை!!! [எச்சரிக்கை: மீள்பதிவு!]

இக்கதையைப் படித்ததும் வாய்விட்டுச் சிரிப்பீர்கள்! அது சாத்தியப்படாவிட்டால், என்மீதான கோபத்தைத் தணிக்க ‘மைனஸ் ஓட்டு’ குத்துங்கள்!!


கதைத் தலைப்பு:       வி.வி.வி.ஐ.பி.ஜோதிடர்

“ஒரு வாரத்தில் முடிவு அனுப்புவோம்” என்று ‘நேர்முகம்’ போன இடத்தில் சொல்லியிருந்தார்கள். ஆறு நாள் ஏமாற்றத்துடன் கழிந்தது செந்தில் முருகனுக்கு. ஏழாவது நாளான அன்று தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

அவன் கையில் ‘புத்தாண்டு ராசி பலன்கள்-2010’ இருந்தது. தன் ராசிக்குரிய பலன்களில் பார்வையைச் செலுத்தினான்.

‘இந்த ராசி அன்பர்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. குரு பகவான் மட்டுமல்லாது ஜீவன ராசிக்காரரான சனி பகவானின் அருட்பார்வையும் இருப்பதால், வேலை இல்லாதவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்’ என்ற நல்ல செய்தியும் அதில் இடம் பெற்றிருந்தது.

திருப்தியுடன் தலையசைத்தான் செந்தில் முருகன். இது அவன் எதிர்பார்த்த பலன்தான். வேலைக்கு விண்ணப்பம் போடும்போதே, ‘சோதிட மாமணி’ தட்சிணாமூர்த்தியிடம் அவன் தன் ஜாதகத்தைக் கொடுத்த போது, அவரும் இதையேதான் சொன்னார்.

தட்சிணாமூர்த்தி சாதாரண ஆளல்ல; ஜோதிட சாஸ்திரத்தைக் கரைத்துக் குடித்தவர்! பெரிய பெரிய ’வி.வி.வி.ஐ.பி’ களுக்கெல்லாம் குடும்ப ஜோதிடர். அவர் சொல்வது நடந்தே தீரும் என்பார்கள். பாண்டவர் காலத்துச் ‘சகாதேவனின் பரம்பரை வாரிசு’ என்றுகூடச் சொல்வார்கள்.

நம்பிக்கையுடன் தபால்காரரின் வருகைக்குக் காத்திருந்தான் செந்தில் முருகன்.

செந்தில் முருகனுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை. வேலைக்கு விண்ணப்பம் போடும்போதெல்லாம் ஏதாவது ஒரு ஜோதிடரைப் பார்த்துவிடுவான். அவர் சொல்லுகிற நேரத்தில்தான் விண்ணப்பம் அனுப்புவான். கடந்து போன ஆண்டுகளில், எத்தனையோ ஜோதிடக்கலை விற்பன்னர்களைச் சந்திக்கும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. எல்லோருமே அவனுக்கு வேலை கிடைக்கும் என்றுதான் சொன்னார்கள். அவர்கள் வைத்த காலக்கெடுதான் வித்தியாசப்பட்டது.

‘சோதிடச் சக்ரவர்த்தி’ மாமண்டூர் பெரியசாமி, “ஏழாம் இடத்தில் சனி குடிகொண்டிருக்கிறார். ரெண்டு ஆண்டு போகணும். வேலை கிடைச்சுடும்”என்றார். செந்தில் முருகன் பட்டம் பெற்று வேலை தேடத் தொடங்கிய போது நடந்தது இது.

“ஏழாம் இடத்தில் சனி இருந்தாலும் குரு பகவானின் பார்வையும் இருக்கு. எண்ணிப் பத்து மாசத்தில் வேலை வீடு தேடி வரும்”. இப்படிச் சொன்னவர் ‘சோதிட சிரோமணி’ சிவசுப்ரமண்யன். 

“ராகு கேது சாதகமற்ற நிலையில் இருந்ததால் ரொம்பப் பாதகமான நிலை நீடிச்சுது. இப்போ கெடுபலன் முடிஞ்சி விடிவு காலம் வந்துடுத்து. சனியால் வந்த பிரச்சினையும் நிவர்த்தி ஆயிடும். அதிகபட்சம் ஆறு மாசம். சனி பகவானுக்கு பத்து நாள் எண்ணை தீபம் ஏத்து. அரசாங்க வேலையே கிடைச்சுடும்” என்று கணித்துச் சொன்னவர் ‘சோதிடக்கலை ஏந்தல்’ சுந்தரபுரி சுந்தரசாமி அவர்கள்.

இப்படி.....இன்னும் பல சோதிட திலகங்கள் செந்தில் முருகனின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, வேலை கிடைக்கும் என்றே சொன்னார்கள். கிடைக்காவிட்டால் “இந்த ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன்” என்று சவால் விட்டுச் சபதம் எடுத்துக் கொண்டவர்களும் உண்டு!

யார் எதைச் சொல்லியும் நேற்றுவரை, சல்யூட் அடித்துவிட்டு, உட்கார்ந்து தூங்கும் ‘நைட் வாட்ச்மேன்’ வேலை கூடக் கிடைக்கவில்லை!

செந்தில் முருகனுக்கு வயது ஏறிக்கொண்டே போனது. அவன் சந்தித்த ஜோதிடர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே போனது. அன்று வரை அவன் ஜோதிடர்களுக்குக் கொடுத்த காணிக்கையை வைத்து ஒரு மளிகைக் கடையே நடத்தலாம்!

ஆனாலும், அவன் அப்படியெல்லாம் கணக்குப் பார்க்கிற ஆளல்ல. அவன் ஜோதிடத்தை ஒரு ‘தெய்வீகக் கலை’ என்று நம்புகிறவன். ஜோதிடர்கள் கணித்துச் சொல்வது பிசகிப் போனாலும், “என் துரதிர்ஷ்டம், எந்த வேலையும் எனக்குக் கொடுத்து வைக்கல” என்று சொல்வானே தவிர, ஜோதிடர்களையோ ஜோதிடக் கலையையோ ஒரு நாளும் அவன் பழித்துப் பேசியதில்லை.

தபால்காரரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான் செந்தில் முருகன். அவனைச் சுற்றி, ‘புத்தாண்டுப் பலன்’, ‘சனி பெயர்ச்சிப் பலன்’, ‘குரு பெயர்ச்சிப் பலன்’, என்று விதம் விதமான ராசி பலன் புத்தகங்களும், ‘ஜோதிடக் கலை’, ‘ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்’, ‘நீங்களும் ஜோதிடர் ஆகலாம்’ என்று வகை வகையான ஜோதிடப் புத்தகங்களும் குவிந்தும் இறைந்தும் கிடந்தன.

“சார் போஸ்ட்”.

“தபால்காரர் எறிந்துவிட்டுப் போன கடித உறையைக் கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் எடுத்துப் பிரித்தான் செந்தில் முருகன்.

வழக்கமான முடிவுதான்! அவன் தேர்ந்தெடுக்கப் படாததை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்கள்.

அதற்கப்புறம், வேலைக்கு விண்ணப்பம் போடுவதையும் ஜோதிடம் பார்ப்பதையும் அடியோடு நிறுத்திவிட்டான் செந்தில் முருகன்.

நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் காலை வேளை.

புறநகர்ப் பகுதியில், பேருந்து நிலையத்தை ஒட்டிய ஒரு காலி மனையில் போடப்பட்ட ஒரு கீற்றுக் கொட்டகையில் செந்தில் முருகன் அமர்ந்திருந்தான்.

அவனுக்கென்று ஒரு மேசையும் நாற்காலியும். மேசைக்கு எதிரே ஐந்தாறு மடக்கு நாற்காலிகள். பக்கவாட்டிலிருந்த சிறிய மர அடுக்கில் புத்தகங்கள். உயரே சாமி படங்கள்.

ஓர் ஒளைஞர் உள்ளே நுழைந்து மடக்கு நாற்காலியில் அமர்ந்தார். “பட்டம் வாங்கி ரெண்டு வருசத்துக்கு மேல ஆச்சி. வயசும் எறிட்டே போகுது. வேலை கிடைச்சபாடில்ல. பார்த்துச் சொல்லுங்க” என்று தன் ஜாதகத்தைச் செந்தில் முருகனிடம் நீட்டினார்.

அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு, பேப்பரில் கட்டங்கள் வரைந்து, அவற்றில் கிரகங்களின் இருப்பைக் குறித்து முடித்து ஆராயத் தலைப்பட்டான் செந்தில் முருகன்.

ஆமாம், அவன் இப்போது ஒரு முழு நேர ஜோதிடர்; எதிர்கால வி.வி.வி.ஐ.பி.ஜோதிடர்!

“தம்பி, இந்தப் புத்தாண்டு உங்க வாழ்க்கையில் புதிய திருப்பத்தைக் கொடுக்கும். பத்தில் சனி இருந்தாலும் குரு பார்வை இருக்கு. கவலை வேண்டாம். எண்ணி ஆறு மாசத்தில் வேலை உங்க வீடு தேடி வரும். சனிக் கிழமை தவறாம..........”

செந்தில் முருகன் சொல்லிக்கொண்டு போக, திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த இளைஞர்.

****************************************************************************************************************

சனி, 3 மே, 2014

ஒரு ‘தினக்கூலி’ கடவுள் ஆன கதை!!!

இது ஏற்கனவே 90 பேர் மட்டுமே படித்த கதை. 900000 பேராவது படித்துப் பாராட்ட வேண்டும் என்னும் ‘பெரும்பேராசை’யில் மீள்பதிவாக [தலைப்பு மாற்றப்பட்டுள்ளது] வெளியிடுகிறேன். [உண்மையான காரணம், சரக்கு தீர்ந்துடிச்சிங்க!]

                  
கண்ணுச்சாமி ரொம்பவும் இளகிய மனசுக்காரன்.

காலை நேரத்தில், வழக்கம்போல வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபோது, அவனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த எழுபது வயது மதிக்கத் தக்க ஒரு முதியவரை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான் ஒரு வாகன ஓட்டி.

ரத்த காயங்களுடன் தார்ச்சாலையில் சரிந்து விழுந்தார் பெரியவர்.

யாரும் உதவாத நிலையில், ஆட்டோ பிடித்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தான். சோதித்த மருத்துவர்கள், “மயக்கமா இருக்கார். பயப்பட ஒன்னுமில்ல” என்றார்கள்; மிகவும் தாமதமாகவே சிகிச்சையளித்தார்கள்.

நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு, அவரைப் பார்க்க அவன் அனுமதிக்கப் பட்டான்.

முதியவருக்குச் சுயநினைவு திரும்பியிருந்தது.

அவரை நெருங்கி, “நல்லா இருக்கியா பெரியவரே?” என்று குரலில் கனிவு பொங்கக் கேட்டான் கண்ணுச்சாமி.

அவனை உற்றுப் பார்த்த அவர், “நல்லா இருக்கேன்பா. நீ.....நீதான் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தியா?” என்றார்.

“ஆமா. மோட்டார் சைக்கிளில் அடிபட்டு மயங்கி விழுந்துட்டே. உன்கிட்டே செல்ஃபோன் இல்ல. ஒரு அடையாள அட்டைகூட இல்ல. உன் குடும்பத்தார்க்குத் தகவல் தர முடியல. உனக்கு மயக்கம் தெளியட்டும்னு காத்திருந்தேன்” என்றான்.

“நீ கடவுள் மாதிரி வந்து என்னைக் காப்பாத்தினே. நீ நல்லா இருக்கணும்ப்பா”. குரல் தழுதழுக்கச் சொன்னார் முதியவர்.

“பெரியவரே, நான் கடவுள் மாதிரியெல்லாம் வரல. சாதாரண மனுசனாத்தான் வந்தேன். நான் பஸ் ஸ்டாண்டில் மூட்டை சுமக்கிறவன். உனக்கு உதவி பண்ணினதில் இன்னிக்கி வேலை கெட்டுது. கைவசம் இருந்த அம்பது ரூபாயை ஆட்டோவுக்குக் கொடுத்துட்டேன். வெறும் கையோட வீட்டுக்குப் போனா, ‘கைப்பிடி அரிசியில்ல; மறக்காம வாங்கி வான்னு சொல்லி அனுப்பிச்சேன். யாருக்கோ உதவி பண்ணினேன்னு இப்படி வெறுங்கையோட வந்து நிக்கிறியே, உனக்கு ஏன்தான் இப்படிப் புத்தி கெட்டுப் போச்சோ’ன்னு என் பெண்டாட்டி கத்துவா. எப்படிச் சமாளிக்கப் போறனோ? அந்தக் கடவுள்தான் வழிகாட்டணும்” என்று சொல்லி வெறுமையாய்ச் சிரித்தான் கண்ணுச்சாமி.

“எனக்கு ஒரே புள்ள. ஒன்னுக்கும் உபயோகம் இல்லாத இந்தக் கிழவனை வீட்டோட இருக்க வெச்சி ஒரு வேளைச் சோறு போடுறான். எப்பவாவது அஞ்சோ பத்தோ தருவான்.” என்று சொல்லிவிட்டு, சட்டைப் பையைத் துழாவிய முதியவர் கொஞ்சம் சில்லரையை எடுத்துக் காட்டினார்.

அதில் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்ட கண்ணுச்சாமி, “காயின் ஃபோனில் உன் வீட்டுக்குத் தகவல் தந்துட்டுப் போறேன். ஃபோன் நம்பர் சொல்லு” என்றான்.

#####################################################################################