ஞாயிறு, 14 டிசம்பர், 2014

கல்யாணமாம் கல்யாணம்!... மேட்டுக்குடி கல்யாணம்!!

இது புத்தம் புதிய கதை. தரமான படைப்புகளைத் தேடி அலையும் முன்னணி இதழ்கள்[5 லட்சம் பிரதிகளுக்கு மேலே விற்பனையாகும் வார இதழ்கள் மட்டும்] என்  அனுமதி பெறாமலே இதை வெளியிட்டுக்கொள்ளலாம். சன்மானம்? “ஊஹூம்.....வேண்டாங்க.”

கதை.....

“உங்க முதலாளி வீட்டுக் கல்யாணம் எப்படி இருந்திச்சி?” வீடு திரும்பிய தங்கமுத்துவிடம் அவன் மனைவி பரிமளா கேட்டாள்.

“பிரமாதம். கார்கள் மட்டும் பத்தாயிரம் தேறும். மண்டபத்தில் இடமில்லாம வெளியே போட்டிருந்த பந்தலிலும் கூட்டம் நிரம்பி வழிஞ்சுது. ஒரு பெரிய அரசியல் கட்சி மாநாடு தோத்துடும்.”

“அம்மாடி...! அவ்வளவு ஜனங்களா? சாப்பிட்டியாய்யா?”

“பஃபேயில் நீள...நீள...கியூ. ஒரு மணி நேரம் தட்டேந்தி வரிசையில் நின்னுதான் சாப்பிட முடிஞ்சுது. வகை வகையான உணவுப் பண்டம். பல அய்ட்டங்களை நான் கண்ணால பார்த்ததே இல்லை. ஒன்னு விடாம வாங்கிச் சாப்பிட்டேன். ஒன்னைவிட ஒன்னு ருசி. கை கழுவின அப்புறம் பெரிய கப்பில் ஃபுரூட் சாலெட், மலை வாழைப் பழம், ஸ்வீட் பீடான்னு எதையும் விட்டு வைக்கல.....”

வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த பரிமளா, “ வாய் ஊறுதுய்யா” என்றாள்.

“நினைச்சா எனக்கு இன்னமும் ஜொள்ளு ஊறுது. வயசுப் பொண்ணுக நிறைய வந்திருந்தாங்க. எல்லாம் வெய்யில் படாம வளர்ந்த குட்டிக. கண்ணுக்குக் குளிர்ச்சியா கொழு கொழு தளதளன்னு.....”

‘நறுக்’ என்று அவனின் தோள்பட்டையில் அவள் கிள்ள, “ஆ...” என்று அலறினான் தங்கமுத்து.

“ரொம்பவே வழிஞ்சிருக்கே. வேற என்ன பார்த்தே? சொல்லு” என்றாள் பரிமளா.

“அசத்தலான வரவேற்பு வளைவு, மேடை அலங்காரம், இன்னிசைக் கச்சேரி...இப்படிச் சொல்லிட்டே போகலாம். நல்ல வேளை, என்னோட நீ வரலை.”

“வந்திருந்தா.....”

“பொம்மணாட்டிங்க கட்டியிருந்த காஸ்டிலியான பட்டுப் புடவைகளைப் பார்த்து ரொம்பத்தான் ஏங்கியிருப்பே. அவங்க போட்டிருந்த தங்க நகைகளைச் சேகரிச்சா நாலு கோணிச் சாக்கு தேறும்.”

“ம்ம்ம்.....” நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளிப்படுத்திய பரிமளா, “எல்லாம் சரி, பொண்ணு மாப்பிள்ளை ஜோடிப் பொருத்தம் எப்படி?” என்றாள்.

“அவங்களை யாரு பார்த்தா?”

“கல்யாணத்துக்குப் போய்ட்டு பொண்ணு மாப்பிள்ளையைப் பார்க்கலையா? நல்ல கூத்தய்யா.” வாய்விட்டுச் சிரித்தாள் பரிமளா.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

செவ்வாய், 9 டிசம்பர், 2014

அம்மம்மா.....! ‘அம்மா’வா அன்று இப்படிப் பேசினார்?!

'குமுதம்’ இதழில், 1982 முதல் 2012 வரையிலான காலக் கட்டத்தில் நான் எழுதிய 18 ஒ.ப.கதைகள் வெளியாயின. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் அனுப்பிய படைப்புகளில் ஒன்றுகூட வெளியாகவில்லை[குமுதத்தின் தரம் உயர்ந்து என் படைப்புகளின் தரம் தாழ்ந்துவிட்டது!]

அந்த இதழில் வெளியான என் முதல் கதையைப் பதிவாக வெளியிட்டு ஆறுதல் பெற நினைத்தேன். கதை வெளியான குமுதம் இதழைப் புரட்டியபோது, ஒரு செய்தி கண்ணில் பட்டது. கதையை விடச் செய்தி பல மடங்கு சுவையானது என்பதால் அதை இங்கு பதிவு செய்கிறேன்[‘மூடர் உலகம்' என்னும் என் வலைப்பதிவு Remove செய்யப்பட்ட சோகத்திலிருந்து இன்னும் விடுபடாத நிலையில்!!!].


செய்தியின் தலைப்பு:
ஜெயலலிதா அரசியலில் குதிக்கப் போகிறாரா?

சென்னையில் கைத்தறிக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியின் இருபத்தெட்டாவது நாள் விழாவில் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம்:

“தமிழக அரசியலில் காலாவதியாகிவிட்ட சில அரசியல்வாதிகள் சில பத்திரிகைகளை நடத்துகிறார்கள். அந்தப் பத்திரிகைகளில் ஆதாரமில்லாத கற்பனைச் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பாரதி விழாவுக்குச் சென்று கலந்துகொண்டேன். உடனே ஒரு பத்திரிகையில், ஜெயலலிதா மந்திரியாகப் போகிறார் என்று செய்தி வெளியிட்டார்கள்.

திரைப்படக் கல்லூரி முதல்வர் நீலகண்டன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவரைப் பார்த்துவர மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். உடனே அந்தப் பத்திரிகையில் மறுநாள் ஒரு செய்தி வெளி வருகிறது. நீலகண்டனுக்குப் பதில் திரைப்படக் கல்லூரி முதல்வராக ஜெயலலிதாவை நியமிக்கப் போகிறார்கள் என்று. அப்படி எதுவுமே நடக்கவில்லை.

இப்போது நான் கைத்தறிக் கண்காட்சிக்கு வந்திருக்கிறேன். இதைக் காரணமாக வைத்து நாளைக்கே ஒரு செய்தி போட்டாலும் போடுவார்கள்.  அனகாபுத்தூர் ராமலிங்கத்துக்குப் பதிலாகக் கோ-ஆப்டெக்ஸ் ஆலோசனைக் குழுத் தலைவராக ஜெயலலிதா நியமிக்கப்படப் போகிறார் என்று. இப்போதே அனகாபுத்தூர் ராமலிங்கத்திற்கு ஒரு உறுதியைத் தருகிறேன். எனக்கு அந்தப் பதவி மீது ஆசை கிடையாது.

ஒரு பத்திரிகையில் இன்னொரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரி முதல்வர் பதவி வேண்டாம். கொடுத்தால் மந்திரி பதவி கொடுங்கள். இது மாதிரிப் பதவியெல்லாம் வேண்டாம் என்று நான் கூறிவிட்டேனாம்.

உறுதியாகக் கூறுகிறேன். எனக்கு எந்தப் பதவி மீதும் ஆசை கிடையாது.......”  -‘மக்கள் குரல்’
                                                                                                                   

மேற்கண்டவாறு, ‘மக்கள் குரல்’ பத்திரிகையை மேற்கோள் காட்டிக் குமுதம் வார இதழ்[20.05 1982, பக்கம் 1] செய்தி வெளியிட்டிருந்தது.

‘அம்மா’ இப்படிப் பேசியிருப்பார்களா? நம்ப முடிகிறதா?

பொய்ச் செய்தி வெளியிட்டது குமுதமா, மக்கள் குரலா?

=============================================================================================