சனி, 14 மார்ச், 2015

குமுதம் இதழில் ஜோதிடச் சக்ரவர்த்தி ஏ.எம் ராஜகோபாலனின் ‘புளுகு’ப் புராணம்!!!

ஜோதிடத்தின் பெயரால் புதிய புதிய மூடநம்பிக்கைகளைப் பரப்பும் பிரபல ஜோதிடர்களில் தலையாயவர் ஏ.எம்.ராஜகோபாலன். ‘பரிகாரத் தலங்களும் அவற்றின் சூட்சுமங்களும்’ என்னும் தலைப்பில் ‘குமுதம்’[16.03.2015] இதழில் இவர் புளுகத் தொடங்கியிருக்கிறார். 

‘அண்டப் புளுகு’, ‘ஆகாசப் புளுகு’ என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவற்றிற்கு உதாரணம் தேடி வேறு எங்கும் அலைய வேண்டாம். இவர் எழுதும் கட்டுரைத் தொடரைத் தொடர்ந்து வாசித்தாலே போதுமானது.

‘மிகவும் சூட்சுமமான பல ரகசியங்கள், மந்திரப் பிரயோக முறைகள், விஞ்ஞானபூர்வமான சக்திகள் ஆகியவற்றைத் தங்கள் கடினமான தவத்தினால் கண்டறிந்த நம் வேத கால மகரிஷிகள்....’ என்று தொடங்குகிறது இவரின் இந்த வாரக் குமுதம் கட்டுரை.

கட்டுரையின் தொடக்கத்திலேயே இப்படி வார்த்தை ஜாலம் புரிந்து வாசகனை  மயங்க வைக்கிறார் ஜோதிடச் சக்ரவர்த்தி.

‘ரகசியம்’ என்னும் சொல்லுக்கு நாம் பொருள் அறிவோம். அதென்ன ‘சூட்சுமமான ரகசியம்’? 

‘விஞ்ஞான பூர்வமான சக்தி’  என்கிறார். சக்தியின் ஓர் உட்பிரிவா இது? புரியவில்லையே!?

இந்தக் கட்டுரையில் மகான்களின் ‘ஜீவசமாதி’ பற்றியும் பேசுகிறார். 

சமாதி என்பது, சடலத்தை அடக்கம் செய்த இடமாகும். ஒருவர் மரணமுற்ற பின்னர், அவர் உடம்பிலிருந்து உயிர்[ஜீவன்] பிரிந்துவிடுவதாக ஆன்மிகவாதிகள் பலரும்  சொன்னார்கள்; சொல்கிறார்கள். 

உடம்பிலிருந்து பிரிந்து வெளியெங்கும் அலைந்து திரியும் ஜீவனுக்குச் சமாதி கட்டிச் சிறை வைக்க இயலுமா? குறிப்பாக, மகான்கள் எனப்படுபவர்களின் ஜீவன்களைச் சமாதிகளுக்குள் சிறை வைப்பது இயலாத செயலன்றோ?

உண்மை இதுவாக இருக்க..........

'ஜீவசமாதி’ என்று இவர் குறிப்பிட்டிருப்பது பெரும் பிழையாகும்.

‘தங்கள்[மகான்கள்] சரீரத்தைவிட்டு வெளியேறிய அந்த வினாடியே சூட்சும திவ்ய சரீரம் ஒன்று தயாராக இருக்கும். அந்தச் சூட்சும சரீரத்தில் இருந்துகொண்டு, தங்களை நாடி வரும் பக்தர்களின் துயர்களைக் களைந்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்கின்றனர் சித்த மகா புருஷர்கள்’ என்கிறார் இந்த ஜோதிடக்கலை வேந்தர்.

சித்த மகா புருஷர்கள், தம்மைத் தேடி வரும் பக்தர்களுக்கு மட்டும்தான் நல்வாழ்வு அளிப்பார்களா? உலகெங்கும் கோடானுகோடி பக்தர்கள் தாங்கொணாத் துயரங்களில் மூழ்கிக் கிடக்கிறார்களே, அவர்களையெல்லாம் தேடிப் போய்த் துயர் தணிக்கும் பணியில்  ஈடுபட மாட்டார்களா?

அரிய பெரிய ஜோதிடக்கலை சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியாளும் ராஜகோபாலன் பதில் தருவாரா?

‘சித்த புருஷர்களுக்கும் அவதார மகான்களுக்கும் ‘மரணம்’ என்ற அனுபவம் கிடையாது’ என்றும் குறிப்பிடுகிறார்.

மரணம்...சரி. அதென்ன ‘மரண அனுபவம்’?

மரணத்தை அனுபவித்தல்; அதாவது, செத்துப்போதல்.

மரண அனுபவம்  இல்லை என்று சொல்வதன் மூலம் மகான்களுக்கு மரணமே இல்லை என்கிறார் ஜோதிடர் திலகம். அவர்கள் மரணம் அடைவதில்லை; தாமாக, சரீரத்தைவிட்டு வெளியேறுகிறார்களாம்; சூக்கும திவ்விய சரீரத்தில் தம்மை நுழைத்துக்கொள்கிறார்களாம்!

இது நடைமுறை சாத்தியமா?

இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா?

இம்மாதிரிக் கதைகளைக் கட்டிவிட்டவர் எவராகவோ இருக்கலாம். இன்றளவும் மக்கள் மத்தியில் இவற்றைப் பரப்பும் கொடுஞ்செயலை ஜோதிடம் கற்ற ஆன்மிகவாதியான ராஜகோபாலனும் செய்துகொண்டிருக்கிறார்.

இவர் போன்றோருக்கு ஓர் உண்மையை  நினைவுபடுத்துவது என் போன்ற எளியவர்களின் கடமை.

குருதியும் நிணமும் எலும்பும் சதையுமாகப் பிறந்து வளர்ந்து, வயிற்றுப் பசி போக்கத் தின்று, ஜீரணித்து, மூத்திரம் பெய்து, மலம் கழித்து வாழும் அத்தனை மனிதர்களுக்கும்[உயிர்களுக்கும்] மரணம் என்பது தவிர்க்க இயலாதது. இவர் பட்டியலிடுகிற குல ஆச்சார்யர்கள், தவத்தினால் உயர்ந்த அருளாளர்கள், சித்த புருஷர்கள், மகான்கள் எனப்படும் எத்தனை பெரிய  மனிதர்களும்[மனிதர்களேதான்!] மரணத்தின் பிடியிலிருந்து தப்பிப் பிழைப்பது நடவாத செயல். மரணத்திற்குப் பிறகு இந்த உடம்பிலிருந்து ஆன்மாவோ ஆவியோ வெளியேறுவது உண்மையோ பொய்யோ, மகான்கள் தாம் விரும்பிய போது தாமாக வெளியேறுகிறார்கள் என்றுரைப்பது பொய்...பொய்யே. அவ்வாறு வலிந்து உயிரைப் போக்கிக்கொள்வதற்குப் பெயர் தற்கொலை.

கட்டுரையின் முற்பகுதியில், மேற்கண்டவாறு பல பொய்களைப் பட்டியலிட்டதோடு,  வாழ்ந்து மறைந்த ஓர் ‘அழுக்கு[ச்] சாமியார்’ பற்றிப் புனைந்து, புகழ்ந்து கட்டுரை எழுதியிருக்கிறார் ராஜகோபாலன்.

‘அழுக்குச் சித்தர், அவதரிக்கும்போதே தன[ம]து சரீர உணர்ச்சிகளுடன் இணைந்து ஒட்டாமல் தனித்தே நிற்கும் இயல்புடன் பிறந்தவர்’ என்கிறார் ஜோதிடச் சக்ரவர்த்தி. இந்த மண்ணுலகில் வாழும் அத்தனை பேர் காதுகளிலும் பூச்சுற்ற ஆசைப்படுகிறார் இவர். இவர்தம் ஆசை நிறைவேற, தத்தம் சமாதிகளைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கும் அவதார புருஷர்களின் ஜீவன்கள் அருள் புரிவதாக!

‘மகான் அழுக்குச் சித்தரின் சரியான அவதாரத் தேதி தெரியவில்லை’ என்று குறிப்பிடுகிற ஜோதிடர், ‘அழுக்குச் சாமியார்’ என்று அழைக்கப்பட்ட இம்மகான், சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் கார்த்திகை மாதத்தில், மிருகசீர்ஷம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பது மட்டும் தெரிகிறது’ என்கிறார். எப்படித் தெரிந்தது என்பது, ராஜகோபாலன், திவ்ய சரீரத்தில் அருள்பாலித்து வரும் அழுக்குச் சாமியார் என இருவர் மட்டுமே அறிந்த சூட்சும ரகசியம்!

‘மகான் ஸ்ரீ அழுக்குச் சித்தர் தமது ‘அவதார காரியம்’ நிறைவேறிவிட்டதை[???] அறிந்து கி.பி.1918ஆம் ஆண்டு, கார்த்திகை மாதம், மிருகசீர்ஷம் நட்சத்திர தினத்தன்று, தமது தூலசரீரத்தைத் துறந்து, வேட்டைக்காரன் புதூரில், தானே தேர்ந்தெடுத்த புனித[இறைவன் படைப்பில் அனைத்து இடங்களும் புனிதமானவைதாமே???] இடத்தில் ஜீவசமாதி நிலையில் அமர்ந்தார். கண்ணைப் பறிக்கும் ஓர் ஒளியாய் ஸ்வாமிகள் அவரது திவ்ய சரீரத்திலிருந்து வெளி வந்ததை, அருகிலிருந்த திரு.ராமு முதலியாரும், அவரது மனைவியார் திருமதி அலர்மேலுவும் கண்டு திகைத்துக் கற்சிலை ஆயினர்’ என்று எழுதிச் செல்கிறார் ஜோதிடக்கலை ஏந்தல்.

ராமு முதலியாரும் அலர்மேலுவும் சொன்னதை இவர் நம்பலாம். இவர்தம் எழுத்தை வாசிக்கிற பிறரும் நம்ப வேண்டும் என்று ராஜகோபாலன் எதிர்பார்க்கிறாரா? அது நடக்காது.

போதைப் பொருள்களை விற்று, உண்போரை மயக்கத்திற்குள்ளாக்குவது குற்றம் என்றால், மாயாஜாலக் கதைகள் புனைந்து மக்களை நம்பச் செய்து  மயக்கத்தில் ஆழ்த்துவதும் குற்றமே.

ராஜகோபாலன் போன்றவர்கள் குற்றவாளிகளே என்பதை மக்கள் உணரும் காலம் வருமா?!

****************************************************************************************************************************************************

வியாழன், 12 மார்ச், 2015

“அடப் போய்யா... நீயும் உன் கடவுளும்” [வினோதமான அனுபவப் பகிர்வு!!]

பிச்சைக்காரர்களைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை!   அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிச்சை எடுக்கவே தகுதி இல்லாதவர்கள்.

சிக்குப் பிடித்த தலைக்கு ஷாம்பு தேய்த்துக் குளிக்க வைத்து, காக்கி உடுப்பை மாட்டி, ஒரு நிறுவனத்தின் வாயிலில் மடக்கு நாற்காலி போட்டு உட்கார வைத்தால், ஒரு நாள் முழுக்க அவர்களால் தூங்கி வழியாமல் காவல் புரிய முடியும்.

எதிர்பாராத சூழ்நிலையில் அனாதையாக்கப்பட்டு, அடுத்த வேளைச் சோற்றுக்கே வழி இல்லாமல் பிறரிடம் கையேந்தப் போய், அப்புறம் அதுவே சவுகரியமாய்த் தோன்ற, அவர்கள் நிரந்தரப் பிச்சைக்காரர்களாக மாறுகிறார்கள்.

பிச்சைக்காரர்கள் வருவது தெரிந்தாலே, பார்வையைத் திசை திருப்பி, எவருடைய வருகையையோ எதிர்பார்ப்பதுபோல் பாவனை செய்வதில் நான் சமர்த்தன்!

கையேந்துகிறவன் தகுதி வாய்ந்த பிச்சைக்காரனாக இருந்தால் மட்டுமே ஒத்தை ரூபாய் [அது இல்லாவிட்டால், “சில்லரை இல்லை. போ...போ”] போடுவேன். அதற்கும், அரை நிமிட நேரமாவது, “மவராசரே, ரெண்டு நாளா பட்டினி. தானம் பண்ணுங்க தர்ம துரையே”ன்னு  நின்று அடம் பிடிக்க வேண்டும்.

இவ்வகையில் ‘அதர்ம துரை’யான எனக்குப் பிச்சை போடுவதில் கொஞ்சம் நாட்களுக்கு முன்பு  ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

கோவை சென்றுவிட்டு, ஊர் திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, காலில் பிய்ந்த செருப்புக்கூட இல்லாமல், கோலூன்றிய ஒரு கிழவன் என்னிடம் கை நீட்டிச் சொன்னான்:  “வெடுக்கு வெடுக்குன்னு நெஞ்சு வலிக்குது சாமி. கபகபன்னு எரியுது. ஆஸ்பத்திரி போவணும். நடக்கச் சத்தில்ல. ஆட்டோவில்தான் போவணும். ஒரு பத்து ரூபா கொடுத்தீங்கன்னா...” அவன் சொல்ல நினைத்த மிச்சத்தைக் கலங்கிய அவனின் கண்கள் சொல்லி முடித்தன.

அவனை 100% நம்பினேன்[நீங்களும் இது கதையல்ல என்று நம்பலாம்!]. பத்து ரூபாயை நான் நீட்ட, “ஏழெட்டு பேர்கிட்ட கேட்டேன். யாரும் என்னை நம்பிப் பணம் கொடுக்கல. நீங்க கொடுத்தீங்க. நீங்க கடவுள் மாதிரி”  என்று குரல் தழுதழுக்கச் சொல்லி அகன்றான். 

நடக்கவே நடக்காது என்று நம்புகிற ஒன்று நடந்து முடிந்துவிட்டால் மனிதர்களுக்குக் கடவுள் நினைப்பு வந்துவிடுகிறது. முழுசா ஒரு பத்து ரூபாயை யாரும் பிச்சையாகக் கொடுக்க மாட்டார்கள் என்பது அந்தக் கிழப் பிச்சைக்காரனுக்குத் தெரியும்தான். இருந்தும் ஓர் அவசரத் தேவைக்காகக் முயற்சி செய்திருக்கிறான். எதிர்பாராதது நடந்தபோது அவனால் கடவுளைப் போற்றாமல் இருக்க முடியவில்லை. 

இந்த நிகழ்வு முடிந்த சிறிது நேரத்தில் என் சிந்தனை வானில் ஒரு சிறு பொறி.

இன்னும் கொஞ்சம் பிச்சைக்காரர்களுக்குத் தலா பத்து ரூபாய்  கொடுத்து, அவர்களிடம், “நீ கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டால் அவர்களின் பதில்கள் என்னென்னவாக இருக்கும்?
அறிந்துகொள்ளும் ஆர்வம் என் நெஞ்சில் ‘சிக்’ என்று ஒட்டிக்கொண்டுவிட்டது.

பார்வையை அலைய விட்டதில்,  நரைத்த தலைமுடியும் காதில் பேசியுமாகத் தரையில் விரித்த துண்டின் மீது கால்கள் நீட்டி, சாலையோரம் ஒருவன் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவனைக் கண்டுகொள்ளாதது போல் கடக்க முயன்றபோது, “ஐயா, தர்மம் பண்ணுங்க” என்று கும்பிட்டான்.

அவனிடம் பத்து ரூபாயை நீட்ட, தயக்கமாகப் பார்த்தான்.

“பத்து ரூபா. உனக்குத்தான் வெச்சிக்கோ. நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. நீ கடவுளை நம்புறியா?”

“நம்புறதா? உங்க உருவத்தில் எனக்குப் பத்து ரூபா தந்தது அந்தக் கடவுள்தாங்க” என்றான் அவன்.

இன்னும் ஒன்பது பேரிடம் இதே கேள்வியைக் கேட்பது என் திட்டம்.

சொந்த ஊர் திரும்பிய பின்னர், பேருந்து நிலையம், கடைவீதி, கோயில் என்று வேறு வேறு இடங்களில் வேறு வேறு சமயங்களில் பிச்சைக்காரர்களைத் தேடிப் பிடித்ததையோ, அவர்களுக்குப் பத்துப் பத்து ரூபாய் கொடுத்து, “கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டதையோ விவரித்து உங்களைச் சலிப்படையச் செய்யாமல், அவர்கள் சொன்ன பதில்களைக் கீழே வரிசைப் படுத்துகிறேன்.


இரண்டு: 
‘இப்படி உங்களைக் கேட்க வெச்சதே அந்தக் கடவுள்தாங்க.”

மூன்று:
“பிச்சைக்காரன் நான் ஒருத்தன் நம்பலேன்னா கடவுள் இல்லேன்னு ஆயிடுமா?”

நான்கு:
“கடவுளை நம்பாம வேற யாரை நம்புறது? சொல்லுங்கய்யா.”

ஐந்து:
‘கோயில் வாசலில் வெச்சி இப்படி ஒரு கேள்வி கேட்குறீங்களே, இது நியாயமுங்களா?”

ஆறு:
”நான் பிச்சை கேட்குறேன். நீங்க பிச்சை போடுறீங்க. இது எதனால? எல்லாம் அந்தக் கடவுளோட திருவிளையாடல்தானுங்க.”

ஏழு: 
“இந்த நேரத்தில் நீங்கதாங்க எனக்குக் கடவுள்.”

எட்டு:
“காசேதான் கடவுளுங்க. அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமுங்க.” [கண்கள் சிமிட்டி, ராகம் போட்டுப் பாடுகிறான்].

ஒன்பது:
“நான் பத்து வருஷமா பிச்சை எடுக்கிறேன். பைசா முதலீடு இல்லாம தினமும் நூறு ரூபாய்க்குக் குறையாம சம்பாதிக்கிறேன். எல்லாம் கடவுள் கருணையாலதாங்க.”

ஒன்பதுபேருக்குப் பத்துப் பத்து ரூபா பணம் கொடுத்துப் பேட்டி எடுத்தாயிற்று. ஒருவர் மிச்சம் இருக்கிறாரில்லையா?

ஓர் உணவு விடுதி வாசலில், கிழிசல் பேண்ட் போட்ட ஒரு பிச்சைக்காரனைச் சந்தித்தேன். அவனுக்குப் பணம் ஏதும் கொடுக்காமல் கேள்வியை மட்டும் முன் வைத்தேன்.

“நீ கடவுளை நம்புறியா?”

“தானம் பண்ணுங்கய்யா.” -அவன்.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுப்பா.” 

“ஒத்த ரூபா பிச்சை போட வக்கில்ல. பெருசா கேள்வி கேட்க வந்துட்டே. போய்யா நீயும் உன் கடவுளும்” என்று சொல்லி முறைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான் அவன்.

அவனின் திமிர்ப் பேச்சு எனக்குள் உறுத்தியது என்றாலும் கடவுளை, “உன் கடவுள்” என்று எனக்கே எனக்கு மட்டும் சொந்தமாக்கியது பிடித்திருந்தது.