செவ்வாய், 31 மே, 2016

நடுவணரசுக்கு ஒரு நடுநிலைச் சிந்தனையாளனின் கடிதம்!

“ஹரித்வார், ரிஷிகேஷில் இருந்து தூய்மையான கங்கை நீரை இ-காமர்ஸ் தளம் மூலம் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி அஞ்சல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியிருக்கிறார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்[தி இந்து, 31.05.2016].

‘மதச்சார்பற்றது’ என்று சொல்லப்படும் ஓர் அரசு, குறிப்பிட்ட ஒரு மதத்தின் ஏஜண்டாகச் செயல்படுவது தவறு என்பதை நடுவணரசு இன்றளவும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சிவபெருமான் தன் தலையில் சுமந்திருப்பதால் கங்கையே புனிதமானது என்று நம்பியது பழைய நம்பிக்கை. அது மூடநம்பிக்கையும்கூட என்பதை நடப்பு அறிவியல் யுகத்திலும் இந்த அரசு உணரத் தவறிவிட்டது. அரசின் இச்செயல், மக்களிடமுள்ள மூடநம்பிக்கைகளை அடியோடு களைவதற்குப் பதிலாக, நீர் வார்த்து வளர்த்தெடுக்கவே செய்யும். இது பற்றியும் நடுவணரசு சிந்தித்ததாகத் தெரியவில்லை.

அனைத்துப் பொருள்களுக்கும் ஆதாரமாக உள்ள பஞ்சபூதம் எனப்படும் மண், நீர், காற்று, நெருப்பு, வெளி ஆகிய ஐந்துமே  ஆண்டவனால் படைக்கப்பட்டவைதாம் என்றால் மற்ற நான்கிற்கும் இல்லாத அத்தனை புனிதம் நீருக்கு, குறிப்பாகக் கங்கை நீருக்கு மட்டும்  வாய்ப்பது சாத்தியமே இல்லை என்பதை ஆளும் வர்க்கம் அறியாமலிருப்பது விந்தையிலும் விந்தை!

புனிதமான ஆறுகளிலும் குளங்களிலும் நீராடுகிற பக்த கோடிகளில் எவரும், புனிதமானது என்று கருதிக் கடவுளின் படைப்பான நெருப்பில் குளிக்காமலிருக்கும் ‘இரகசியம்’ இவர்கள் அறியாததன்று.

தூய்மையான கங்கை நீரைத் தலையில் தெளித்துக்கொண்டால் செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம் என்பது மக்கள் பலரின்  நம்பிக்கை. இவர்கள் அத்தனைபேரும் ஹரித்வாருக்கும் ரிஷிகேஷத்திற்கு சென்று கங்கையில் மூழ்கிப் பாவம் தொலைப்பது சாத்தியமற்றது என்பதால், தபாலில் ‘புனித நீர்’ அனுப்பும் பணியை மேற்கொள்ள நடுவணரசு முன்வந்துள்ளது போலும்.

எது எப்படியோ, புனிதத்தை விற்பனை செய்வது ஒரு தப்பான காரியம் மட்டுமல்ல, திட்டத்தை நிறைவேற்றக் காலதாமதமும் ஆகும் என்பதையேனும் இந்த அரசு புரிந்துகொள்ள வேண்டும்; தபால் மூலம் காசுக்குக் கங்கை நீரை விற்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

“இது சாத்தியமே இல்லை” என்று அது பிடிவாதம் பிடிக்குமேயானால், இந்த அரசுக்கு நாம் முன்வைக்கும் ஒரு நல்லெண்ணப் பரிந்துரை.....

புனித கங்கை நீரை விமானங்களில் எடுத்துச் சென்று இந்தப் புண்ணிய பூமியெங்கும் தெளிக்கலாம்[சில நாட்களில் இந்தப் பணி முடிந்துவிடும்]. இங்கு வாழும் அனைத்து மக்களும் புண்ணியவான்களாக ஆவார்கள்!!!

எம் பரிந்துரையை ஏற்குமா நம் நடுவணரசு?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++















ஞாயிறு, 29 மே, 2016

‘புகழ்’ பெறத் துடிக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு.....

கருப்பொருள் எதுவாயினும், வாசகரின் மனம் கவரும் வகையிலும் அவர்களுக்குப் பயன்படும் வகையிலும் எழுதினால் புகழ் பெறலாம் என்பது உண்மைதான். புனைகதை எழுத்தாளர்களின் எண்ணிக்கை பெருகிவரும் நிலையில் அது சாத்தியமாவதற்கு    நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. தவிர்க்க வழியே இல்லையா? உண்டு என்பதே நம் பதில். படியுங்கள்.
மேலே, 'எதையும்’ என்றதில் ‘பாலுணர்வுக் கதை’களைச் சேர்க்க வேண்டாம்.

இவ்வகைக் கதைகளைத் தனிமையில் படித்து மனதுக்குள் சிலாகித்தாலும், பொது இடங்களில் பழித்துப் பேசுவதே நம்மவரில் மிகப் பெரும்பாலோர் வழக்கம். 

விறுவிறு நடையில் மண் மணம் கமகமகமக்கும் அற்புதமான புனைகதைகளைப் படைத்தளித்த, கரிசல் காட்டு எழுத்தாளர்  கி. ராஜநாராயணன், கொஞ்சம் பாலுணர்வுக் கதைகளையும்[பாலுணர்வைப் பதப்படுத்துபவை அல்ல; தூண்டுபவை!] எழுதியதற்காகக் [’தாய்’ என்னும் வார இதழில் வெளி வந்தன; நூல் வடிவமும் பெற்றது] கடும் கண்டனங்களுக்கு  ஆளானார் என்பது வாசகர் பலரும் அறிந்ததே.

சிறந்த நாவல்களும் சிறுகதைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் வழங்கிய, எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன், ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ தொகுத்ததற்காக எழுந்த எதிர்ப்பலையில்  எதிர் நீச்சல் போட்டதையும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.

எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் பாலுணர்வைத் தூண்டும் படைப்புகளைத் தரும் எண்ணம்  வேண்டவே வேண்டாம்.

வேறு எதை எழுதுவதாம்?

குடும்பக் கதைகளும் மர்மக் கதைகளும் பேய்க் கதைகளும் எழுதுவதற்கு நம்மில் ஏராள எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். சரித்திரக் கதைகளுக்கும் அறிவியல் கதைகளுக்கும் நகைச்சுவைக் கதைகளுக்கும் கடும் பஞ்சம் நிலவுகிறது.

சாண்டில்யனுக்குப் பிறகு வரலாற்றுக் கதைகள் எழுத ஆட்கள் இல்லை. 

அறிவியல் அறிவு உள்ளவர்களுக்குத் தமிழில் எழுதத் தெரிவதில்லை. எழுதத் தெரிந்தவர்களுக்குப் போதிய அறிவியல் அறிவு இல்லை. எனவே, தமிழில் அறிவியல் கதைகள் உதிப்பதற்கான தருணம் எப்போது மலருமோ தெரியாது.[சுஜாதா, இத்துறையில் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை]

கல்கி, தேவன், துமிலன், சாவி போன்றோருக்குப் பிறகு, நகைச்சுவைக் கதைகளை எழுதிக் குவித்தவர் ‘அப்புசாமி-சீதாப்பாட்டி புகழ்’ பாக்கியம் ராமசாமி மட்டுமே.

இவரும் காலமாகிவிட்டார்[தகவல் அளித்த நண்பர் பகவான்ஜிக்கு நன்றி].]

இவரையடுத்து......................

தமிழ்ப் புனைகதை உலகில் ஒரு பரந்த வெற்றிடமே தென்படுகிறது.

நீங்கள் எழுத்தாளராக இருந்தால், ஏதாவது ஒரு தளத்தில் முதல் ஆளாகக் கால் பதிக்கலாம். 

குறிப்பிடப்பட்ட மூன்றில் நகைச்சுவையாக எழுதுவது சற்றே எளிது. ஆனால் அதற்கும்கூட, ஆழ்ந்த நகைச்சுவை உணர்வும் தளராத மன உறுதியும் கடின உழைப்பும் அவசியத் தேவை.

எனக்கும் ஆசை இருந்தது; இருக்கிறது; போதிய உழைப்பு மட்டும் இல்லை. அதனால்தான் இந்தப் ‘பரிந்துரை’ப் பதிவு!