செவ்வாய், 15 நவம்பர், 2016

நம்பாதீர், நம்பாதீர்.....ஜோதிடத்தை நம்பாதீர்!

http://naanmaanudan.blogspot.com என்னும் ஒரு புதிய வலைப்பக்கத்தில் வெளியான பதிவின் நகல் இது. அதன் உரிமையாளருக்கு நன்றி.


விண்ணில் உலவும்  கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவை பற்றிய தங்களுக்குள்ள அரைகுறைப் புரிதலுடன் நீண்ட நெடுங்காலமாய் மக்களை ‘அறிவிலிகள்’ ஆக்கிகொண்டிருக்கிறார்கள் ஜோதிடர்கள்.

நீங்கள் ஜோதிடம் பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், கீழ்க்காணும் கேள்விகளை அவர்களிடம் கேட்டுவையுங்கள். சிலரேனும் திருந்தக்கூடும்.


                                                        கேள்விகள்:
ஒன்று:
கோள்கள் வரிசையில் உள்ள ராகுவையும் கேதுவையும் ‘நிழல் கோள்கள்’ என்கிறீர்கள். அவை பூமி, சந்திரன் ஆகியவற்றின் நிழல்கள்தான்.  நீங்கள் சொல்வதுபோல், ‘நிழல் கோள்கள்’ என்று எவையும் இல்லை. அவற்றையும் கணக்கில் கொண்டு நீங்கள் பலன் சொல்வது தவறு அல்லவா? 

இரண்டு:
பூமியும் ஒரு கோள்தான். இதைக் கணக்கில் கொள்ளாமல் மக்களுக்குப் பலன் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இதனால் அவர்களுக்குப் பெரும் தீங்குகள் விளையும் என்பதை அறிவீர்களா?

மூன்று:
திங்கள்[சந்திரன்] என்பது பூமியைச் சுற்றிவரும் ஒரு துணைக்கோள். அதை முதன்மையான ஒரு கோளாகக் கருதிப் பலன் சொல்லுகிறீர்கள். இது தவறு என்பதை நீங்கள் உணர்ந்தது உண்டா? இல்லையெனில், இனியேனும் உணர்வீர்களா?

நான்கு:
மற்ற கோள்கள் தெறித்து விலகித் திசை கெட்டு ஓடிவிடாதவாறு அவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது ஞாயிறு[சூரியன்],  அந்த ஞாயிறு பூமியைச் சுற்றுகிறது என்று ஜோதிட முன்னோடிகள் அறியாமையால் சொன்னதையே இந்த அறிவியல் யுகத்திலும் நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். திருந்தவே மாட்டீர்களா? ஜோதிடத் தொழிலைக் கைவிடவே மாட்டீர்களா?

ஐந்து:
யுரானஸ், நெப்டியூன், புளூட்டோ போன்ற கோள்களும் விண்ணில் உலவிக்கொண்டிருக்கின்றன. உங்கள் ஜோதிடக் கணக்கில்  இவை இடம்பெறவில்லை.  இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் எப்படி ஜாதகம் கணிக்கிறீர்கள்?

ஆறு:
செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களுக்கும் துணைக்கோள்கள் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். இவற்றையும் நீங்கள் கணக்கில் கொள்வதில்லை.

உங்களின் ஜோதிடக்கலை முன்னோடிகள் தங்களுக்கிருந்த அரைகுறை வானிலை அறிவைப் பயன்படுத்தித்தான் ஜோதிடக் கணக்கை வகுத்துவிட்டுப் போனார்கள் என்னும் உண்மை இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. இனியும் பொய்யான பலன்களைச் சொல்லி மக்களின் வாழ்க்கையை வீணடிக்கப் போகிறீர்களா?

இக்கேள்விகளை என் கணினியிலேயே நகல்கள் எடுத்து அவ்வப்போது, அறிந்தவர் அறியாதவரிடமெல்லாம் வினியோகித்து வருகிறேன். எனக்கான பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்று!
===========================================================================================================
உதவி: ‘பெரியார் சாத்தித்ததுதான் என்ன?’, தமிழ்க்குடி அரசுப் பதிப்பகம், சேப்பாக்கம், சென்னை - 600 005.

புதன், 21 செப்டம்பர், 2016

‘நான் லட்சத்தில் ஒருவன்!’ [அனுபவக் கதை!!]

இது நடந்து ஆறு மாதம்போல இருக்கலாம்.

அந்தி மயங்கும் நேரத்தில், அந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகிய பருவப் பெண்ணொருத்தி ரவுடிகளால் கடத்தப்பட்டாள். அப்போது அங்கு நிறையவே இளவட்டங்கள் இருந்தார்கள். கடை வாசல்களில் அதிவேக ‘பைக்’குகள் வரிசை கட்டியிருந்தன. அவள் கடத்தப்பட்ட இடத்துக்கு நேர் எதிரே ஒரு ‘வாடகைக் கார் நிறுத்துமிடம்’கூட இருந்தது. எல்லாம் இருந்தும்..........

‘விருட்’டென ஒரு வாகனத்தில் அல்லது, வாகனங்களில் சீறிப் பாய்ந்து ரவுடிகளை விரட்டிப் பிடித்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதற்குக் கதாநாயகனோ நாயகர்களோ இல்லை என்பது கொடுமை. கொடுமையிலும் கொடுமை.

அவள் கடத்தப்பட்ட சில வினாடிகளில் ஒரு மாயாஜாலம் போல நூறுபேர் கூடிவிட்டார்கள். வேறெதற்கு? வேடிக்கை பார்க்கவும் கதை பேசவும்தான்!

“இந்நேரம் ரவுண்டானாவைக்கூடக் கடந்திருக்க மாட்டானுக. பத்து பேர் சேர்ந்து ரெண்டு டாக்ஸி பிடிச்சிச் சேஸ் பண்ணினா அவனுகளை அமுக்கிறலாம்.” -யாரோ ஒருவர் யோசனை சொன்னார். சொன்னவர் யாரென்று ஆளாளுக்குக் குரல் வந்த திக்கில் தேடினார்கள். ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“கார் போற வேகத்தைப் பார்த்தா ரவுண்டானாவைக் கடந்து ரொம்ப தூரம் போயிருப்பாங்க. நாமக்கல், சங்ககிரி, ஓமலூர்னு நாலஞ்சி கிளையா ரோடு பிரியுது. எதுல போனானுகன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?” -எதார்த்தமாகச் சொன்னார் ஓர் உள்ளூர் ஆசாமி.

“அப்படியே கண்டுபிடிச்சாலும் நாம வெறுங் கையோட போயி அவனுகளை மடக்குறது அவ்வளவு சுலபமில்லீங்க. அவங்க கையில்  ஆயுதம் இருக்கும். போட்டுத் தள்ளிட்டானுகன்னா நம்ம புள்ள குட்டிகளை யார் காப்பாத்துறதாம்?” -சொன்னவர் கடமை உணர்வுள்ள ஒரு குடும்பஸ்தர்.

”பிக்பாக்கெட், வழிப்பறி மாதிரி பொண்ணுகளைக் கடத்துறதும் சர்வ சாதாரணம் ஆயிடிச்சி.”

“கடத்திட்டுப் போயிக் கற்பழிக்கிறது மட்டுமில்ல, துண்டு துண்டா வெட்டிப் போட்டுடறானுக.”

“கிழவிகளைக்கூடத் தூக்கிட்டுப் போயிக் கற்பழிக்கிறாங்க.” சொல்லி முடித்த ஒரு வழுக்கைத் தலையர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் சிரிக்காததால் சீரியஸான முகபாவம் காட்டினார்.

இம்மாதிரியான வீண் பேச்சுகள் தொடர்ந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஒரு ஜோல்னா பையர். “ஆளாளுக்கு வெட்டிக் கதை பேசிட்டிருந்தா எப்படி? செல்ஃபோன் வச்சிருக்கிறவங்க போலீஸுக்கு ஒரு ஃபோன் போடுங்கப்பா” என்றார் உரத்த குரலில். அவரிடம் செல்ஃபோன் இல்லையாம்!

“ஃபோன் பண்றது பெரிய காரியம் இல்ல. ‘நீ யாரு? எங்கிருந்து பேசற? பொண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்வி மேல கேள்வி கேப்பான் போலீஸ்காரன். கேஸ்ல நம்மை முக்கிய சாட்சியா போட்டுடுவான். சொந்த வேலையை விட்டுட்டுக் கோர்ட்டுக்கு நடையா நடக்கணும். ரவுடிங்களும் நம்மைப் பழி வாங்காம விடமாட்டாங்க. நமக்கு எதுக்கய்யா இந்த வம்பு தும்பெல்லாம்” என்று பேசிவிட்டு இடத்தைக் காலி செய்துகொண்டிருந்தார் ஒரு புத்திசாலி.

அவருடைய எதார்த்தமான பேச்சு எல்லோரையும் பாதித்திருக்க வேண்டும்.

கும்பல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது.

நான் நெஞ்சுக்குள் குமுறினேன்.

‘சே, என்ன மனிதர்கள்!’

ஓர் இளம் பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகிறாள். நூறு ஆண்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!

ஆண்களா இவர்கள்?

ஆண்மை உள்ளவர்களே ஆண்கள். பெண்ணை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல, உரிய தருணங்களில் அவளின் ‘மானம்’ காப்பதுதான் உண்மையான ஆண்மை.

இந்த மண்ணில் ஆண்மையுள்ள ஆண்களின் எண்ணிக்கை அருகிவிட்டதா?

லட்சத்திற்கு பத்துபேர் தேறுவார்களா?

கோபிக்காதீர்கள்..........அந்தப் பத்தில் நீங்களும் ஒருவரா?

யோசிக்கிறீர்கள்?

ஏதோ கேட்க நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே.

“இந்த அசம்பாவிதம் எப்போது நடந்தது?” என்கிறீர்களா?

ஆறு மாசம் முந்தி.

“எங்கே?”

சேலத்தில்.

“உனக்கு எப்படித் தெரியும்? செய்தித்தாள்ல படிச்சியா?””

இல்லீங்க. நானே நேரில் பார்த்தேன்.

“அட!...வேடிக்கை பார்த்த நூறு பேரில் நீயும் ஒருத்தன்! இல்லையா?”

அது வந்து.......

“என்னய்யா வந்து போயி, பத்தோட பதினொன்னா நீயும் வேடிக்கைதான் பார்த்திருக்கே. அந்தப் பொண்ணைக் காப்பாத்த நினைக்கலே. அப்போ, நீயும் ஒரு பேடிதான். அதாவது, ஆண்மையில்லாதவன். சரிதானே?”

அது வந்து.....அது வந்து.....வந்து.....