வெள்ளி, 2 ஜூன், 2017

உலகில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லையா?

கேள்வி கேட்டவர் காந்தியடிகள். பதில் சொன்னவர்: பெரியார். வெகு சுவையான பழைய சம்பவம். படிக்கலாமே!

1957ஆம் ஆண்டில் பெங்களூரில் பெரியாரும் காந்தியாரும் சந்தித்தபோது[‘கிளர்ச்சிகளும் செய்திகளும்’ 1. ப. 2995].....
காந்தியார்: உங்களுக்கு ஒரு பார்ப்பனரிடம்கூட நம்பிக்கையில்லையா?

பெரியார்: நம்பிக்கை ஏற்படமாட்டேன் என்கிறது.

காந்தியார்: இராசகோபாலாச்சாரியாரிடம்கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

பெரியார்: அவர் நல்லவர்; உண்மையானவர்; தியாகி; சுயநலம் இல்லாதவர். அதே நேரத்தில் அவர் அவர்களது வகுப்பு[பிராமணர் ஜாதி] நலனுக்கும் உண்மையான தொண்டராக இருக்கிறார். அவர்களுக்காகவும் அவர் சுயநலமில்லாமல் தொண்டு செய்கிறார். எங்கள் நலத்தை[பிராமணர் அல்லாதார்] அவரிடம் நம்பி ஒப்படைக்க முடியாது.

காந்தியார்: இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால், உலகத்தில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லை என்பது உங்கள் கருத்தா?

பெரியார்: இருக்கலாமோ என்னவோ எனக்குத் தென்படவில்லை.

காந்தியார்: அப்படிச் சொல்லாதீர்கள். நான் ஒரு பிராமணனைப் பார்த்திருக்கிறேன். சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் நல்ல பிராமணன் என்றே நான் கருதுகிறேன். அவர் யார் தெரியுமா? அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே.

பெரியார்: அப்பாடா! தங்களைப் போன்ற மகாத்மாவினுடைய கண்ணுக்கே இப்பரந்த உலகத்தில் ஒரே ஒரு நல்ல பிராமணன் தென்பட்டாரென்றால் எங்களைப் போன்ற சாதாரணப் பிறவிகளின் கண்களுக்கு எப்படி உண்மைப் பிராமணன் தென்பட முடியும்?
===============================================================================

நன்றி: திருமழபாடி நண்பர் முனைவர் அ. ஆறுமுகம் அவர்கள்.

செவ்வாய், 30 மே, 2017

அமரர் ஜெயலலிதாவும் அந்தக்கால மேட்டூர் அணையும் நம்மவூர்ப் பாதாளச் சாக்கடைகளும்!

மேட்டூர் அணையில் தூர்வாரும் நிகழ்ச்சியை முதலமைச்சர் தொடங்கிவைத்தது குறித்த செய்தியைத்  தமிழ் நாளிதழ்கள் பலவும் வெளியிட்டுள்ளன.

மற்ற நாளிதழ்களில் இடம்பெறாத ஒரு தகவல் தினத்தந்தியிலும் தினமலரிலும் இடம்பெற்றுள்ளது.

தினமலர்[29.05.2017]: ‘...முன்னதாக, ஜெயலலிதாவின் உருவப்படத்துக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன....’

தினத்தந்தி[29.05.2017]: ‘...தூர்வாரப்படும் இடத்துக்கு அருகில் ‘ஹோமம்’ வளர்த்துச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது...’

இரண்டு செய்திகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம், ‘தூர்வாரப்படும் இடத்துக்கு அருகில், ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு முன்னால், ஹோமம் வளர்த்துச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன’ என்னும் முழுமையானதொரு தகவலை நம்மால் பெற முடிகிறது.

இத்தகவலை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நான் எழுதும் மடல். 

தமிழக முதல்வர் அவர்களே,

மேட்டூர் அணையில் ‘தூர்வாரும்’ பணியை நீங்கள் தொடங்கி வைத்துள்ளீர்கள். பாராட்டுக்குரிய பணி இது.

இது தொடர்பான விழா தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டது.

தனிப்பட்ட முறையில், புதுமனை புகுவிழாவிலோ வாழ்க்கையில் சனி புகாமல் தடுக்கும் விழாவிலோ ‘ஹோமம்’ என்ன மலையுயர அக்கினிக் குண்டமே வளர்த்து, விடிய விடிய  வேத மந்திரங்கள் ஓதிப் பூஜைகள் நடத்தலாம். அதைத் தடுக்கவோ தட்டிக்கேட்கவோ எவருக்கும் உரிமை இல்லை.

ஆனால், மதச்சார்பற்ற அரசு நடத்தும் விழாவில், ஹோமம் வளர்த்துப் பூஜைகள் செய்வதென்பது குறிப்பிட்ட ஒரு மதம் சார்ந்த சடங்கு ஆகும். இது தவறான ஒரு முன்னுதாரணமும்கூட.  இதைத் தாங்களும் அறிவீர்கள்.

குறிப்பிட்டதொரு மதத்தின் கடவுளை நினைந்து பூஜைகள் நடத்துவதே தவறு என்னும்போது, காலஞ்சென்றவரும் முன்னாள் முதலமைச்சரும் ஒரு சராசரிப் பெண்ணுமான[தனிப்பட்ட முறையில் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் அவரைக் கடவுளாகப் போற்றுவதையோ, கடவுள்களின் கடவுளாகத் துதிபாடுவதையோ எவரும் தடுக்கவோ தட்டிக்கேட்கவோ இயலாது; கூடாது] ஜெயலலிதாவின் உருவப்படத்தை முன்னிலைப்படுத்திப் பொது இடத்தில் பூஜைகள் செய்தது பெரும் தவறு ஆகும்.

இம்மாதிரியான தவறுகள் இனியும் நேர்தல் கூடாது என்பதே என் போன்றவர்களின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தத் தூர்வாரும் பணி நடைபெறுகிறது.

இதே வேளையில்,  தமிழ்நாட்டிலுள்ள பாதாளச் சாக்கடைகளைத் தூர்வாரும்[தூய்மைப்படுத்தல்] பணி தினம் தினம் பல்வேறு நகரங்களிலும் நடைபெறுவது தாங்கள் அறியாததல்ல.

அணையைத் தூர்வாரும் பணியில் ஆபத்துகள் மிக மிகக் குறைவு. அனைத்து அசிங்கங்களும் நோய்களும் சங்கமம் ஆவதால் சாக்கடைகளைத் தூர்வாரும் பணியில் ஏழைத் தொழிலாளர்கள் பலர் செத்திருக்கிறார்கள்; செத்துச் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் உடல்நலத்தோடு உயிரையும் காப்பதற்காக அவ்வப்போது ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்ய வேண்டும் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா நீங்கள்?

அப்புறம் எதற்கு அணையைத் தூர்வாருவதற்கு மட்டும் ஜெயலலிதா, கடவுள், ஹோமம், பூஜைகள் எல்லாம்?!

சிந்திப்பீர்களா முதல்வர் அவர்களே?