திங்கள், 10 ஜூலை, 2017

உலகமகா கிறுக்கன்[ர்]!!!

நாமெல்லாம் உள்ளூர்க் கிறுக்கர்கள். உலகமகா கிறுக்கர்களும் இருக்கிறார்கள்! அவர்களில் ஒருவரைக் கீழே சந்தியுங்கள்.
#‘நட்டநடுச் சாலையில் கடவுளானவர் சிவலிங்க வடிவில் காட்சிதர அனுமதிக்கலாமா கூடாதா?’ -தெலங்கானா மாநிலத்துக் காவல்துறையினர்தான் இப்படியொரு குழப்பத்தில் சிக்கினார்கள். காரணம்..... 

ஹைதராபாத்திலிருந்து வாராங்கல் செல்லும் நெடுஞ்சாலையில் ஒருவர் போக்குவரத்தைத் தடை செய்து நடுரோட்டில் குழிதோண்டிக் கொண்டிருக்கிறார்’ என்று காவல்துறையினருக்குத் திடீர் தகவல் வந்தது. 

உடனே அந்த இடத்துக்கு மின்னலாக அவர்கள் சென்றபோது, வெயிலையும் பொருட்படுத்தாமல் 15 அடி ஆழம் தோண்டியதோடு, இன்னும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த மனிதரை அரும்பாடுபட்டுத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களின் பக்குவ விசாரணையில், “ரோட்டில் தன்னுடைய லிங்கம் இருக்கிறது என தோண்டச் சொன்னதே சிவன்தான்!” என்றாராம் அவர்! 

“...ஆனால், இன்னும் லிங்கம் கிடைக்கவில்லை...” என பயபக்தியோடு விளக்கம் கொடுத்து மிரள வைத்திருக்கிறார் அந்த ஆள். அவர், தெலுங்கானாவின் ஜன்காவோன் மாவட்டத்தைச் சேர்ந்த லக்கான் மனோஜ் என்பவர்[அவரும் அவரால் மூளைச்சலவை செய்யப்பட்ட அவரின் ஊர்க்காரர்களும் காவல் கைதிகளாகிக் கம்பி எண்ணுவதாகத் தகவல்!].#

நம் கேள்வி 1:
“சிவலிங்கம் உன் நெஞ்சக்கூட்டுக்குள்தான் இருக்கு”ன்னு அந்தப் பித்தன்[‘பித்தா பிறை சூடி.....’] சொல்லியிருந்தால் இந்தப் பித்தன்ர்[கிறுக்கன்ர்] என்ன செய்திருப்பான்ர்?!

கேள்வி 2:
பிறை சூடிய பித்தன் தன் பக்தனை இம்சைப்படுத்தாமல், சிவலிங்க வடிவில் மண்ணைத் துளைத்துக்கொண்டு வெளிப்பட்டு நெடுஞ்சாலையில் பிரசன்னமாகியிருந்தால், அதற்குத் ‘தான்தோன்றி சிவலிங்கேஸ்வரர்’ என்று நாமகரணம் சூட்டி, அங்கேயே கோயில் கட்டி, வேத விற்பன்னர்களை வைத்து மகாகும்பாபிஷேகமும் நடத்தியிருப்பார்களே நம் மகா ஜனங்கள், ஏன் செய்யவில்லை?!
சிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசிவசி
நன்றி: குங்குமம் வார இதழ்[14.07.2017].



சனி, 8 ஜூலை, 2017

“வதந்தீ...பரப்புங்கள்!” -‘மாநில, மத்திய’ அரசுகளுக்கு வேண்டுகோள்!!

‘மாங்கல்யத்தில் சிவப்பு நிறப் பவளம் இருந்தால் கணவரின் உயிருக்கு ஆபத்து’ -இப்படியொரு செய்தி கர்னாடகாவில் காட்டுத்தீ போல் பரவிவருகிறதாம்! விளைவு?

அதிர்ச்சிக்குள்ளான மணமான பெண்கள் தங்களின் மாங்கல்யத்தில் உள்ள சிவப்பு நிறப் பவள மணிகளை அகற்றிவருகின்றனர்[தி இந்து 08.07.2017] என்பது இன்றைய சூடான செய்தி.
இச்செய்தியால்  கர்னாடக அரசும் அதிர்ச்சி அடைந்ததாம். அவசரகதியில், ‘ஏதோ ஒரு சுயநலக்கும்பல் திட்டமிட்டு இந்த மூடநம்பிக்கையைப் பெண்கள் மத்தியில் பரப்பிவருகிறது. இந்த வதந்தியைப் பெண்கள் எவரும் நம்ப வேண்டாம். வதந்தி பரப்பும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஓர் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.

இந்தவொரு எச்சரிக்கை அறிக்கையை அரசு வெளியிட்டது தவறு என்பது எம் கருத்து.

கர்னாடக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் பெண்கள் தத்தம் மாங்கல்யத்திலுள்ள சிவப்பு நிறப் பவள மணிகளை ஓரிரு நாட்களில் அகற்றிவிடுவர் என்பது 100% உறுதி. காரணம்.....

இவ்வாறான, வதந்தியாக[விரைவில் அண்டை மாநிலங்களிலும் பரவிட வாய்ப்புள்ளது] உலாவரும் மூடநம்பிக்கைகளின் மீது எப்போதுமே பெண்களுக்கு[மக்களுக்கு] அசைக்க முடியாது நம்பிக்கை உண்டு.

எனவே,

உடனடியாக ஆற்ற வேண்டிய கடமை ஒன்று கர்னாடக அரசுக்கு மட்டுமல்லாமல் மற்ற மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் உள்ளது.

*****இம்மாதிரியான வதந்திகளுக்குத் தடை விதிப்பதற்குப் பதிலாக, இதுபோன்ற சில வதந்திகளை அரசாங்கங்களே அவ்வப்போது கிளப்பிவிட்டு, அரசு எந்திரங்கள் மூலமாகவும் ஜோதிடர்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரப்பிடவேண்டும். உதாரணத்துக்குச் சில.....

‘பாரததேசத்துத் திருமணமான பெண்கள் புனிதமான மாங்கல்யத்தைத் தவிர வேறு பொன்னாலான அணிகலன்களை அணியக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்தம் கணவன்மார்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும்’ என்பது ஒன்று[இதன்மூலம் பெண்களின் தங்கநகை மோகம் முற்றிலுமாய் அழிந்தொழியும்].

‘மணமான மங்கையர்கள் தத்தம் கணவன்மார்களையே தெய்வம் என்று மதித்து வழிபட வேண்டும். கணவன்களும் தத்தம் மனைவியரைத் தவிர வேறு சாமிகளை ஏறெடுத்தும் பார்த்தல் குற்றமாகும். மீறினால், அவர்தம் துணையின் உயிருக்குப் பங்கம் நேர்வது நிச்சயம்’ -இது பிறிதொரு வதந்தி[இதன் மூலமாகக் கடவுளின் பெயரால் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளுக்குச் சமாதி கட்டலாம்].

சமுதாயச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அவ்வப்போது இம்மாதிரி வதந்திகளைப் பரப்புவதை மாநில மத்திய அரசுகள் தத்தம் கடமை எனபதை உணர்தல் அவசியம்.

எத்தனை எத்தனை பெரியார்கள் வந்து பிறந்தாலும் நம் மக்களின் மனங்களில் வெகு ஆழத்தில் வேரோடிவிட்ட மூடநம்பிக்கைகளை அகற்ற முடியாது என்பதால் மேற்குறிப்பிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை மத்திய மாநில அரசுகள் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

ஒரு பரிந்துரை: வதந்திகளைப் பரப்புவதற்கென்றே ஒரு தனித் துறையை[ரகசியமானது] ஆரம்பிக்கலாம். அதற்கான உறுப்பினர்களை நியமிப்பதில் பிரபல வி.வி.வி.ஐ.பி. ஜோதிடர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம்.
============================================================================================