திங்கள், 24 ஜூலை, 2017

‘அது’க்கு ஏது காலமும் நேரமும்!!!

மீனாட்சியின் நடவடிக்கை  குணசீலனுக்குப் புரியாத புதிராய் இருந்தது.

தொட்டுத் தழுவிப் படுக்கைக்கு இட்டு வந்தால், தட்டிக் கொடுத்துப் படுக்க வைத்துவிட்டு வெளியெ போகிறாளே! கொஞ்சம் முன்னால், “என்னைத் தொடு; இன்பத்தில் துவட்டி எடு” என்று அழைப்பு விடுத்த அவளின் ஏக்கப் பார்வை எங்கே போனது?

குழப்பத்துடன் படுக்கையில் புரண்டான் குணசீலன்.

சற்று நேரத்தில் திரும்பி வந்த மீனாட்சி, “தெரு முனைக் கடையில் காய்ச்சல் மாத்திரை வாங்கியாந்தேன்” என்று ஒரு தம்ளரில் சுடுநீருடன் மாத்திரையும் நீட்டினாள்.

“எனக்குக் காய்ச்சல்னு யார் சொன்னது?” எரிந்து விழுந்தான் குணசீலன்.

“உன் உடம்பு சொல்லிச்சி. நம்மளோடது திடீர்க் கல்யாணம்; சொந்த பந்தங்கள் எதிர்த்ததால போலீஸ் ஸ்டேசனில் மாலை மாத்திகிட்டோம். முதலிரவிலாவது என்னைப் பட்டுச் சேலையில் பார்க்கணும்னு ராத்திரி பகலா ஆட்டோ ஓட்டினே. உடம்பு கெட்டுப் போச்சு. முதலிரவை இன்னொரு நாள் வெச்சுக்கலாம்.”

‘இன்னிக்கி ரொம்ப நல்ல நாள்னு சோதிடர் சொன்னாரு. அதில்லாம விடிஞ்சா ஆடி மாசம் பொறக்குது.”

மீனாட்சி, முகத்தில் குறும்பு கொப்பளிக்கச் சிரித்தாள். “ஆடி மாசத்தில் ராத்திரியே வராதா?”

“அப்படியில்ல. ஆடி மாசம் ’அதுக்கு’ ஆகாத மாசம்னு சொல்லுவாங்க.”

“ஆன மாசம் ஆகாத மாசம்; கெட்ட நேரம் நல்ல நேரம்; ராகு காலம் எமகண்டம் இதெல்லாம் பணக்காரங்களுக்குத்தான். உழைச்சிச் சம்பாதிக்கிற நமக்கு எதுக்கய்யா? சந்தோசம் நம்மைத் தேடி வர்றதில்ல; நாமதான் அதைத் தேடி அலையறோம். அது கிடைக்கும்போது தவற விட்டுடக் கூடாது. உடம்பு குணமானதும் ‘அது’ வெச்சுக்கலாம்” என்றாள் மீனாட்சி.

குண்சீலனை இழுத்து அணைத்து மடியில் கிடத்தி மாத்திரையை ஊட்டினாள்; அவன் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தாள்; நெஞ்சில் இதமாகத் தட்டிக் கொடுத்தாள்; “ஆராரோ...ஆரிரரோ...” என்று கிறங்கடிக்கும் குரலில் சிரித்துகொண்டே தாலாட்டுப் பாடினாள்.

ஐம்புலன்களின் ஆர்ப்பாட்டம் இல்லாத, உணர்ச்சிப் போராட்டம் இல்லாத ஒருவித இன்ப சுகத்தில் மிதந்து உறங்கிப் போனான் குணசீலன்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

ஞாயிறு, 23 ஜூலை, 2017

‘வெறுமை’யில் உறைதல்!!!

பிரபஞ்ச வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள், மனித இனம் கண்டிராத ஏனைய பொருட்கள், அனைத்துக்கும் ஆதாரமாக விளங்கும் கணக்கிலடங்காத அணுக்கூட்டங்கள், இருள், ஒளி, ஒலி என்று எவை எவையெல்லாம் உள்ளனவோ அவை அனைத்தும் நீங்கிய அல்லது நீக்கப்பட்ட ஒரு நிலையை ‘வெறுமை நிலை’ என்கிறோம்.

எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்சவெளியில் இத்தகைய ஒரு ‘வெறுமை நிலை’ சாத்தியமா? [இது குறித்து 2011 ஆம் ஆண்டிலும் பின்னரும் எழுதிய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்]

‘சாத்தியமே இல்லை’ என்பதுதான் விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்தாக இருக்கக்கூடும். ஒருவேளை அது சாத்தியம்தான் எனின்.....

அது  எப்படியிருக்கும் என்பதை ஆழ்ந்து...மிக ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் [அந்த ‘வெறுமை’யை] உணர இயலுமா?

’இயலாது’ என்பதே இன்றளவும் ஏற்புடைய கருத்தாக இருக்கக்கூடும்.

‘பிரபஞ்ச வெளி’யில் வெறுமை உருவாவதும் அதை உணருவதும் சாத்தியமே இல்லை என்றாலும்.....

ஆழ்ந்த[கனவுகளற்ற] உறக்கத்தின்போதும், முழு மயக்கதின்போதும் மரணத்தைத் தழுவிவிட்ட நிலையிலும்  நம் எண்ணங்களையும், ஆசாபாசங்களையும், உணர்ச்சிகளையும் சிந்திக்கும் திறனையும், ‘நான்’ என்னும் உணர்வையும் முற்றிலுமாய் இழந்துவிடுவதும்கூட ஒரு ‘வெறுமை நிலை’தானே? ஆக.....

புறத்தே ஒரு வெறுமையை உணர்வது சாத்தியம் இல்லையென்றாலும் அகத்தளவில் அந்த ‘வெறுமை நிலை’யை எய்துகிறோம்; அதில் உறைகிறோம் என்று தயக்கமின்றிச் சொல்லத் தோன்றுகிறது.