சனி, 29 ஜூலை, 2017

அணுக்கள் போடும் குத்தாட்டம்!

அணு, அண்டம், கடவுள் குறித்தெல்லாம் அறிந்துகொள்வதில் அளப்பரிய ஆர்வம் கொண்டவன் நான். ‘அணு’ குறித்து நான் சேகரித்த கருத்துகளில் சிலவற்றை முறைப்படி இங்கு தொகுத்திருக்கிறேன். என்னைப் போன்ற அறிவியல் ஆர்வலர்களுக்கான பதிவு இது. நிறைவான அறிவியல் அறிவு உள்ளவர்கள், இதில் பிழை காணின் அலட்சியப்படுத்துக. [G+ பின்னூட்டப் பெட்டியை இணைத்தபோது உண்டான குளறுபடியில் ஏற்கனவே இருந்த பின்னூட்டப் பெட்டியும் காணாமல் போய்விட்டது. எவ்வளவோ முயன்றும் மீட்டெடுக்க இயலவில்லை!]

‘அணு’ என்றால் என்ன?

‘ஒரு பொருளை உடைத்துக்கொண்டே போனால் இறுதியில் எஞ்சி நிற்கிற அந்த ஒன்றுக்கு, ‘அணுத்திரளை’ அல்லது ‘மூலக்கூறு’[Molecule] என்று பெயர். அணுத்திரளையை வேதியியல் மாற்றங்களின் மூலம் உடைக்கலாம். அவ்வாறு உடைக்கும்போது மிஞ்சுவது எதுவோ அதுதான் ‘அணு’ஆகும்.

அணு மிக மிகச் சிறியதொரு துகள் ஆகும். அதனைக் கண்ணால் காண முடியாது. அரைக்கோடி அணுக்களை அணி வகுத்து நிற்க வைத்தால், நாம் எழுதும்போது வைக்கும் ஒரு முற்றுப்புள்ளிக்குள் அடங்கிவிடும்.

இந்த அணுவைச் சிறிய அணு, பெரிய அணு என்றும் பாகுபடுத்துகிறார்கள்.

அணுவில் மிகச் சிறியது நீரிய அணு[Hydrogen Atom]. இதன் குறுக்களவு ஓர் அங்குலத்தில் பத்துக் கோடியில் ஒரு பங்கைக் காட்டிலும் குறைவானது. இதன் உட்கருவில் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. வட்டத்தில் ஒரே ஒரு எலக்ட்ரான் சுற்றுகிறது. மிகப் பெரிய அணு ‘யுரேனிய’ அணு. இதன் குறுக்களவு நீரிய அணுவின் குறுக்களவைக் காட்டிலும் இரண்டரை மடங்கு பெரியதாகும். இதன் உட்கருவில் 92 புரோட்டான்களும் 143 நியூட்ரான்களும் செறிந்துள்ளன. இதைச் சுற்றியுள்ள ஏழு வட்டங்களில்92 எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன.

அணுவின் நடுப்பகுதியை ‘உட்கரு’ என்பார்கள். அணுவின் எடை முழுதும் இந்த உட்கருவிலேயே செறிந்துள்ளது. உட்கருவில்[Nucleus] புரோட்டான்களும் சிலவகை அணுக்களில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் அடங்கியுள்ளன. உட்கருவைச் சுற்றியுள்ள பல வட்டங்களில் எலக்ட்ரான்கள் சுழன்றுகொண்டிருக்கின்றன [எலக்ட்ரானும், ப்ரோடானுமே சம அளவான எதிரெதிர் மின்சக்தியைக் கொண்டவை. அணுவில் இவையிரண்டும் சம அளவில் இருப்பதால் இவற்றின் சக்திகள் ஒன்றையொன்று ஈர்த்து அணுவின் அமைப்பை நிலையானதாக்குகின்றன -www.kalanjiam.com/science/physics/ atoms ].

நியூட்ரான் என்பது ப்ரோடானும், எலக்ட்ரானும் இணைந்தது. அதனால் மின்சக்தி சமனப்பட்டு சக்தியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கிட்டதட்ட ப்ரோடானின் எடை 1.0087amu. இது இல்லாமல் ப்ரோடான், எலக்ட்ரான் மட்டும் கொண்ட அணுக்கள் உள.

இப்பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் (திட, திரவ, மற்றும் வாயுக்கள்)அணுக்களால் ஆனவை. எனவே அணுக்கள் பொருட்களின் (matter) அடிப்படை ஆதாரமாக கருதப்படுகின்றன. இருந்தாலும் இவ்வணுக்கள் பெரும்பாலும் பிற அணுக்களுடன் கூட்டுச் சேர்ந்தே காணப்படுகின்றன. ஹீலியம் போன்ற ஒரு சில வாயுக்கள்   மட்டும் தனிப்பட்ட அணுக்களால் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.

ஓர் அணுவை எடுத்தால் அது இரும்பு அணுவா, ஆக்ஸிஜன் அணுவா அல்லது ஹைட்ரஜன் அணுவா என்று கூறமுடியும். அணுவைப் பிரித்த பிறகோ அல்லது அணுவின் ஒரு பகுதியை மட்டும் நோக்கினாலோ அதனுடைய இரும்பு, ஆக்ஸிஜன் போன்ற அடையாளங்கள் மறைந்து விடும். எல்லா அணுக்களிலும் அணுக்கூறுகள் ஒரே மாதிரியாக உள்ளன. அணுக்கூறுகளின் எண்ணிக்கையைப் பொருத்து அவற்றின் தன்மை வேறுபடுகிறது.

ஓர் அணுவின் அமைப்பை வரைபடமாக வரைய இப்படத்தை ஞாபகத்தில் வைக்கலாம்.[https://oseefoundation.org/2013/06/24/%e0%ae%85%e0%ae%a3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/]
19_1_atoms__isotopes
அணுவை/அணுக்களைச் சிதைக்கும்போது அது/அவை மிகப் பெரும் ஆற்றலாக மாறுகிறது/மாறுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு கிராம் எடையுள்ள நிலக்கரியை அணுச்சிதைவு செய்தால், 2500 டன் நிலக்கரியை எரித்தால் எவ்வளவு வெப்பம் கிடைக்குமோ அவ்வளவு வெப்பம் கிடைக்கும். கதிரவனின்[சூரியன்] மேற்பரப்பிலுள்ள வெப்பம் சுமார் 6000 டிகிரி செண்டிகிரேட்தான். அதே சூரியனை அணுச்சிதைவு செய்தால், கோடானுகோடி சூரியன்களின் வெப்பத்தைப் பெற முடியுமாம்.

சூரியனுக்கும் கோள்களுக்கும் இடையே வெட்டவெளி இருப்பது போல,  அணுவின் உட்கருவுக்கும் சுழன்றுகொண்டிருக்கும் எலெச்ட்ரானுக்குமிடையே மிகப்பெரும் வெட்டவெளி காணப்படுகிறது.

உட்கருவுக்கும் சுழன்றுகொண்டிருக்கும் எலெக்ட்ரானுக்குமிடையே மின்னாற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலைவிட, அணுவின் உட்கருவில் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள அணுத்திரளைகளின் ஆற்றல் பல லட்சம் மடங்குகள் பெரியது; வலிமை வாய்ந்தது. அணுத்திரளைகள் அணு அணுவாக உடைக்கப்படும்போது அவற்றில் முடங்கிக் கிடக்கும் ஆற்றல் அளவிறந்த வெப்பமாக வெளிப்படுகிறது. இந்த ஆற்றல்தான் ஹீரோஷீமாவை அழித்தது; நாகசாகியை நாசமக்கியது.

அணுக்கள் பெருக்கமடையும் இயல்புடையவை. ஒரு திராட்சைப் பழத்திலுள்ள ஒவ்வோர் அணுவும் ஓர் அங்குல விட்டமுள்ள பந்து போல் பெருக்கம் அடைவதாகக் கற்பனை செய்தால் அந்தத் திராட்சைப் பழம் இந்தப் பூமியின் அளவு பெருக்கம் அடைந்துவிடுமாம்[அடேங்கப்பா!].

இதற்கு மேலும், வாசித்தறிந்தவற்றைத் தெளிவாகவும் சுவையாகவும் சொல்லும் திறன் எனக்கு இல்லாததால் இத்துடன் இப்பதிவை நிறைவு செய்கிறேன். நன்றி.
===============================================================================
நன்றி: 1.www.kalanjiam.com 2.https://oseefoundation.org 3.‘அறிவியல் விருந்து’[சுப்பு ரெட்டியார்], அய்யனார் பதிப்பகம், சென்னை.

 



செவ்வாய், 25 ஜூலை, 2017

சுதந்திரத் ‘திராவிடநாடு’ உருவாகியிருந்திருந்தால்.....?

“தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய இவை ஒரு தனிநாடாக இருந்திருந்தால், உலகின் 30 வளர்ச்சிபெற்ற நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்திருக்கும்”  -சொல்பவர் ‘ருச்சிர் சர்மா’ என்னும் பொருளாதார வல்லுநர்.

“இந்த மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 22 சதவீதமாகவும், மொத்த வேலை வாய்ப்பில் 28 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாட்டின் பங்கு 11.27% ஆகும்.

38% பொறியாளர்களையும் 49% மருத்துவப் பட்டதாரிகளையும், 25% முதுநிலைப் பட்டதாரிகளையும் இவை உருவாக்குகின்றன” என்கிறார் வல்லுநர்.

இந்தி மொழி தெரியாததால் வடமாநிலங்களிலான வேலை வாய்ப்பைத் தமிழர்களாகிய நாம் இழக்கிறோமா என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் என்ன?[இந்திவாலாக்களின் அடிவருடிகள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியது]

“இந்தி கற்காததால் 1% தமிழர்கள் மட்டுமே பாதிக்கப்படக்கூடும். அவர்கள் இங்கே இந்தி கற்றுக்கொள்வதில் எந்தவொரு தடையும் இல்லை. இந்த ஒரு சதவீதத்தினருக்காக ஒட்டுமொத்த தமிழர்களும் இந்தியைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுவிட்டால், இப்போது தமிழ்மொழியால் காக்கப்படும் வணிக பொருளாதார வாய்ப்புகள் இந்திச் சந்தைக்குத் திறந்துவிடப்படும். வடநாட்டுக் காட்சி ஊடகங்கள் தமிழகத்தில் செல்வாக்குப் பெறும். இந்தித் திரைப்படங்கள் வாயிலாக இந்திக்காரர்களின் கலாச்சாரம் இங்கே பரவும்” என்கிறார் ருச்சிர் சர்மா.

அவர் தொடர்ந்து தரும் தகவல்கள்.....

‘தமிழ்நாட்டவர்கள் வெளி மாநிலங்களில் வேலை செய்வதைவிடவும் இங்கே வேலை செய்யும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை அதிகம்.

வட மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியைக் கடந்த 10 ஆண்டுகளாக ருசிக்கத் தொடங்கியுள்ளன. 2007 - 2010 ஆண்டுகளுக்கிடையே வட மாநிலங்களின் சராசரிப் பொருளாதாரம் 4.5 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அவர்கள் தங்களின் பொருளாதார வளர்ச்சியை ஏறுமுகத்தில் தக்கவைத்துக்கொள்ள அவர்களின் வணிகங்கள் எல்லை கடந்து பரவ வேண்டும். அதற்குத் தடையாக உள்ள மொழி என்னும் தடைச் சுவர் உடைக்கப்பட வேண்டும்.

அந்தக் காரியத்தை இந்திய அரசாங்கத்தைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. ஆகையால்.....

வடநாட்டவர் ஆளுமை செய்யும் மத்திய அரசைக்கொண்டு மொழிச்சுவர் உடைக்கப்பட்டுவருகிறது. இது வெறும் ‘ஒற்றை இந்தியா’ கொள்கையின் விளைவல்ல; ஒரு பெரும் பொருளாதாரத் திட்டமிடலின் செயல் வடிவம் ஆகும்.

இந்தியைத் தென் மாநிலங்களில் பரப்புவதன் மூலம், தென் மாநிலங்களில் வடவருக்கான வேலை வாய்ப்புகளைப் பெருக்க முடியும். அதனால், தென் மாநிலத்தவருக்குப் பெரும் இழப்புகள் ஏற்படும்.

இது வடமாநிலத்தவர் தென் மாநிலத்தவர் மீது தொடுத்துள்ள மறைமுகமான பொருளாதார அடக்குமுறையாகும். தமிழகத்தைப் பொருத்தவரை தமிழும் ஆங்கிலமும் தவிர வேறு எந்தவொரு மொழியையும் படித்தாக வேண்டிய பொருளாதார, சமூக, சமயக் கட்டாயம் ஏதுமில்லை.
===============================================================================
இங்கு, ‘தி இந்து’[25.07.2017]வில் ‘திருச்செந்தில்’அவர்கள் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. திருச்செந்திலுக்கும் ‘தி இந்து’வுக்கும் என் நன்றி.