வெள்ளி, 9 மார்ச், 2018

'அந்த ஆள்' ராஜா அல்ல; சேவகன்!!

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பக்தியின் பெயரால் தமிழர் மனங்களில் மூடநம்பிக்கைகளைத் திணித்து, கடவுளின் பிரதிநிதிகளாகத் தம்மை நிலைநிறுத்திச் சுக வாழ்வு வாழ்ந்தது ஒரு கூட்டம்/கும்பல்.

பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பரப்புரை இந்த வந்தேறிகளின் முகத்திரையைக் கிழித்ததோடு தமிழர்களைத் தன்மானம் மிக்கவர்களாகவும் வாழவைத்தது. இது அண்மைக்கால வரலாறு.

ஆத்திகம், அரசியல் என்று பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய, சூட்சும புத்தியுடைய இந்தக் கும்பல், பெரியாரின் புகழைச் சிதைக்கவும் தங்களின் இழந்த கௌரவத்தை மீட்டெடுக்கவும் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

பெரியாரின் தன்னலமற்ற பகுத்தறிவுச் சிந்தனைகளால், சிந்திக்கக் கற்று, மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவந்த தமிழர்கள், அவரின் மறைவுக்குப் பின்னர், அவரின் கொள்கைகளைப் போற்றி வளர்க்கப் போதிய தலைவர்கள் வாய்க்காத காரணத்தால்  மீண்டும் காட்டுமிராண்டிகளாக மாறத் தொடங்கினார்கள்.

தமிழர்களின் இத்தகையதொரு மாற்றத்தைத்தான் இந்தக் கூட்டத்தினர் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

தக்க சூழ்நிலை வாய்க்கவே, தாங்கள் இட்டுக்கட்டிய ஆன்மிகக் கதைகளைத் தமிழர்களிடையே பரப்புவதில் தீவிரம் காட்டினார்கள். தமிழில் வெளிவரும் மிகப் பல தினசரிகளும்  பருவ இதழ்களும் இவர்களுக்குத் துணை நின்றன; நிற்கின்றன. இதன் விளைவு.....

தமிழகத்தில் பகுத்தறிவாளர்களின் எண்ணிக்கை சரிந்து, மூடத்தனங்களைச் சுமந்து திரியும் மூடர்களின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்தது; அதிகரிக்கிறது.

இந்தச் சூழ்நிலைதான், எச்சி ராஜா என்று பெயர்கொண்ட ஒரு நபரை, வெறி பிடித்த தெரு நாயைப் போல் நாடெங்கும் குரைத்துக்கொண்டு  திரிய வைத்திருக்கிறது; பெரியாரை இழிவுபடுத்தியதற்கு மன்னிப்புக் கேட்காமல், வருந்துவதாக மழுப்பிவிட்டுப் பெரியாரவர்கள் தமிழை மேம்படுத்துவதற்காகச் சொன்ன கருத்துகளைத் திரித்து, அவர் தமிழை இழிவுபடுத்தியதாகப் பொய் சொல்லி அலைய வைத்திருக்கிறது.

உண்மையில், தந்திர புத்தியும் குயுக்தியும் நிறைந்த இந்தக் கும்பலுக்குத் தலைமை தாங்கும் தகுதியுடைய ஆளல்ல இந்த நபர். ஒரு சேவகன் மட்டுமே. இந்த ஆளை இயக்குவது, தமிழனைத் தன்மானம் இழக்கச் செய்வதற்காக முனைப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இந்தக் கும்பல்தான். பரம்பரை பரம்பரையாய்க்  கல்வி கற்பதை மட்டுமே குலத்தொழிலாகக்[கோயில்களில் மணியடிப்பது, மந்திரம் சொல்வதெல்லாம் துணைத் தொழில்] கொண்டவர்கள் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள். நாட்டை ஆளும் அரசியல்வாதிகளின் நிரந்தர ஆதரவு இவர்களுக்கு எப்போதும் உண்டு. தமிழர்கள் இவர்களை முற்றிலுமாய்ப் புரிந்துகொள்ளுதல் இன்றைய காலத்தின் கட்டாயம்.

ஜாதி, மதம், கட்சி போன்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, சுயநலப்போக்கைக் கைவிட்டுத் தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.

தமிழர்கள் இணைவார்களா? அஞ்சாமையுடன் செயல்படுவார்களா?

செவ்வாய், 6 மார்ச், 2018

நான் ஒரு 'ஞான சூன்யன்'!!!

எத்தனை சிந்தித்தாலும்.....

அண்டவெளியிலுள்ள கோள்களும் உயிர்களும் ஏன் தோன்றியன, அல்லது தோற்றுவிக்கப்பட்டன என்னும் கேள்விக்கு விடை தெரியவில்லை 

இவை அனைத்தும் எப்போது தோன்றின, அல்லது தோற்றுவிக்கப்பட்டன என்னும் கேள்விக்கும் பதில் அறிவது சாத்தியப்படவில்லை.

இவை எப்படித் தோன்றின, அல்லது தோற்றுவிக்கப்பட்டன என்னும் வினாவுக்கும் விடை காண இயலாமல் மூளை சோர்ந்துபோகிறது.

இடையிடையே, கோடானுகோடி கோடி கோடி உயிர்களுக்கிடையே 'நான்' ஒருவன் ஏன் பிறந்தேன் என்னும் கேள்வியும் என்னை மருட்டுகிறது.

ஞானிகள் மகான்கள் என்றெல்லாம் போற்றப்படுபவர்கள், கடவுள், பாவபுண்ணியம், மறுபிறப்பு, சொர்க்கம் நரகம் என்று எதையெதையோ சொல்லியிருக்கிறார்கள். இவற்றில் 'எது உண்மை? எது பொய்?' என்றெல்லாம் உள்மனதில் எழும் கேள்விகளுக்கு இந்நாள்வரை பதில் கிடைத்திடவில்லை.

'பிறவி' என்னும் நிகழ்வுடன் 'சாவும்' நேர்கிறதே, அது ஏன் என்னும் கேள்வி  அவ்வப்போது வாட்டி வதைக்கிறது.

'செத்த பின்னர் என்ன ஆகிறோம்?' என்னும் கேள்வி என்னுள் தீராத கவலையைப் பதிவு செய்கிறது.

இவற்றோடு, இவை போன்ற விடை அறிய இயலாத பல கேள்விகளுக்கு நான் விடை காண்பது சாத்தியமே இல்லை என்பது புரிந்ததால்.....

என் சுயசரிதையில்['என்னைத் தெரியுமா?'], 'அறிவுஜீவி' என்று  என்னைப் பற்றி நான் குறிப்பிட்டிருப்பதை நினைக்கும்போதெல்லாம் வாய்விட்டுச் சிரிக்கிறேன்; இப்போதுகூட, சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!