வெள்ளி, 23 மார்ச், 2018

'சூப்பர் ஆன்மிகவாதி' சாமியார் ஆன கதை!!!

'அவர்' ஆன்மிகப் பயணமாக இமயமலை சென்றார்.

ஜம்முவில், 'ரியாசி' மாவட்டத்தில் உள்ள 'ஷிவ்கோரி' மலைக் கோவிலில் உள்ள குகைக் கோவிலில் சிவபெருமானுக்குப் பூஜை செய்தார்.

'ஷிவ்கோரி' [140 கி.மீ] கோயிலுக்கு ஹெலிகாப்டரில் செல்லாமல், காரில் பயணித்தும், மலைச்சரிவுகளில் படுவேகமாக நடந்து சென்றும் அங்குள்ள ஆண்டவனைத் தரிசித்தார்.

தர்மசாலாவில் வழிபாடு நிகழ்த்திவிட்டு, 'பைஜாத்' பகுதியில் இருக்கும் குக்கிராமம் ஒன்றில் உள்ள 'மகா அவதார் பாபாஜி' ஆஸ்ரமத்தில் தங்கி ஆண்டவனைத் தியானித்தார்.

ரிஸிகேசில் உள்ள 'தயானந்த சரஸ்வதி' ஆசிரமத்திற்குச் சென்று அவரின் முழு உருவச் சிலைக்குப் பூஜை செய்தார். மேலும் அவர், அதாவது நடிகர் ரஜினிகாந்த் ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபட முயன்றபோது, நிருபர்கள், பேட்டி என்னும் பெயரில் தொல்லை கொடுத்தார்கள்.

மனம் சலித்த ஆன்மிக ஞானி ரஜினி சொன்னார்: ''1995ஆம் ஆண்டிலிருந்து இங்கே வருகிறேன். அரசியல்வாதிகள் அல்லாத நல்ல நண்பர்களுடன்[அரசியல்வாதிகள் எல்லோரும் கெட்டவர்கள் என்பதை உய்த்துணர்க] கங்கை, இமயமலை, சுத்தமான காற்று, தியானம், அமைதி என்று சில நாட்களைச் செலவிடத்தான் வந்தேன்.....

.....முன்பெல்லாம் எனக்குத் தனிமை கிடைத்தது. இப்போதெல்லாம் அது இல்லவே இல்லை. எல்லோரையும் போல் சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை. அதை நான் ரொம்பவே மிஸ் பண்றேன். கிட்டத்தட்ட ஜெயில் வாழ்க்கைதான் இப்போது. பிரபலம் என்றாலே பிரச்சினைதான். அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆகணும்'' என்று. 

அவருக்கு நாம் 'அட்வைஸ்' பண்ண நினைப்பது இதுதான்.....

''ரஜினி அவர்களே, நீங்கள் எதையும் மிஸ் பண்ணத் தேவையில்லை. ஜெயில் வாழ்க்கையையும் தவிர்க்கலாம். எதன் பொருட்டும் எந்தவொரு விலையையும் தருதல் வேண்டாம். இவற்றிற்கான ஒரே வழி நீங்கள் 'சாமியார்' ஆக மாறுவதுதான். அவ்வாறு மாறும்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழுவது இயற்கை. அது.....

'தமிழ்நாட்டில் 'சிஸ்டம்' சரியாக இல்லையே. அதைச் சரி செய்வது யார்?'

கவலைப்படாதீர்கள். அதை ஆண்டவன் பார்த்துக்கொள்வான்!

நன்றி சூப்பர் ஆன்மிகவாதி அவர்களே.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரஜினியின் பயண நிகழ்ச்சித் திரட்டல்: குமுதம்[28.03.2018] கட்டுரையலிருந்து. ''குமுதமே நன்றி!''
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கீழே ஒரு 'சூப்பர்' மூடநம்பிக்கை ஒழிப்புக் கதை. பழசுதான். படித்துவையுங்கள்.

                                           கடைக்குட்டி

தரகர் வந்து போன சிறிது நேரத்தில், வெளியே கிளம்பினார் வேல்சாமி.

“பொருத்தம் பார்க்கவா அப்பா?” கேட்டவள் அவரின் கடைசி மகள் யாழினி.

“சொல்லும்மா.”

“மனசைத் திறந்து சொல்லுங்கப்பா. மூனும் பொண்ணாப் பெத்திருக்கீங்களே, ஏம்ப்பா”.

“அது வந்தும்மா...........” உடைந்து சிதறின வார்த்தைகள். பேசும் சக்தியை இழந்திருந்தார் வேல்சாமி.

“அம்மா சொல்லியிருக்காங்கப்பா.  உங்க ரெண்டு பேர் ஜாதகப்படி, முதல் குழந்தை ஆண்பிள்ளைதான்னு நம்புனீங்க. அது நடக்கல. பெரிய அக்கா சாரு பிறந்ததுக்கு அப்புறமும் பையன் வேணும்னு ஆசைப்பட்டீங்க. ஜோசியரைப் பார்த்தீங்க. அடுத்தது பையன்தான்னு அவர் அடிச்சிச் சொன்னாரு. ஆனா, பையனுக்குப் பதிலா, அகல்யா அக்கா பிறக்கவும் ஆடிப் போனீங்க. அப்புறமும் ஆண் வாரிசு ஆசை உங்களுக்குப் போகல. ஒரு வி.ஐ.பி.ஜோதிடரைத் தேடிப் போய் உங்க ஆதங்கத்தை வெளிப்படுத்தினீங்க. அடுத்தது ஆண் சிங்கம்தான்னு அவர் உத்தரவாதம் தந்தாரு. என்ன ஆச்சு?.............”

பேசுவதை நிறுத்தி, பெத்த அப்பன் முகத்தை விஷமப் புன்னகையுடன் ஆராய்ந்தாள் யாழினி.

“மேலே சொல்லுமா.” பின்னாலிருந்து அம்மாவின் குரல். அவருக்குப் பின்னால் சாருவும் அகல்யாவும்.

“.....நீங்க எதிர்பார்த்த ஆண் சிங்கத்துக்குப் பதிலா ஒரு பொட்டச் சிறுக்கி  நான் தப்பாப் பொறந்து தொலைச்சிட்டேன். இதெல்லாம் ஒரு ‘ஃப்ளாஷ் பேக்’தான். நான் சொல்ல வந்தது என்னன்னா, ஜோசியத்தை நம்பி மூனு பொம்பளப் புள்ளைகளைப் பெத்து ஏமாந்த நீங்க, அதே ஜோசியத்தை நம்பி அவங்களக் கரையேத்த நினைக்கிறீங்களே, இது நடக்குமா அப்பா? நியாயமா அப்பா?.......

.......கல்யாணம்கிற ஓட்டப் பந்தயத்துல, ராசிப் பொருத்தம், யோனிப் பொருத்தம், செவ்வாய் தோஸம், புதன் தோஸம், மூலம், கேட்டை, கூமுட்டை, வரதட்சணைன்னு பல தடைகளையும் தாண்டி ஜெயிச்சி வந்தாத்தான்  ஒரு கன்னி கழுத்தில் ஒரு ராஜகுமாரன் மாலை சூட்டுவான். நடுவுல தடுக்கி விழுந்துட்டா அவ நித்திய கன்னிதான். உங்க மூனு பொண்ணுகளும் நித்திய கன்னிகளாவே இருந்துடட்டும்னு நினைக்கிறீங்களா அப்பா?”

“என்னை மன்னிச்சுடுமா.” -கையிலிருந்த ஜாதகங்களைப் பரண் மீது கடாசினார் வேல்சாமி.

வியாழன், 22 மார்ச், 2018

தன் பூணூல் அறுத்த அக்கிரகாரத்து அதிசய அறிஞன்!

வ.ராமசாமி என்னும் இயற்பெயர் கொண்ட 'வ,ரா.' மிகச் சிறந்த எழுத்தாளர்; சிறந்த பத்திரிகையாளர்; அறிஞர் அண்ணாவால், 'அக்கிரகாரத்து அதிசய மனிதர்' என்று பாராட்டப்பட்டவர்; பகுத்தறிவாளர்.

உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தண்டிக்கப்பட்டு ஆறு மாதம் சிறையில் இருந்தபோது, 'வாட் ஈஸ் பொயட்ரி?' என்னும் நூலை இயற்றியவர்.

நான்கு நாவல்களையும், ஏராளமான கட்டுரைகளையும் மொழியாக்கங்களையும் வரலாற்று நூல்களையும் வழங்கிய அற்புதப் படைப்பாளர்.

'உரைநடைக்கு வ.ரா' என்று பாரதியார் இவரைப் பாராட்டியுள்ளார்.

இளம் எழுத்தாளர்களைப் பெரிதும் ஊக்குவித்த பண்பாளர் வ.ரா.

சொல் வேறு, செயல் வேறு என்றில்லாமல் தன் கொள்கைக்கிணங்க வாழ்ந்துகாட்டிய உயர் குணச் செம்மல். தன் பரம்பரையினர் பின்பற்றிய மூடநம்பிக்கைகளைக் கண்டித்ததோடு, அவற்றைப் புறக்கணித்து வாழ்ந்த சீரிய சிந்தனையாளர்.

தான் சார்ந்திருந்த சாதியின் அடையாளமான பூணூலை அறுத்தெறிந்து புரட்சி செய்த துணிச்சல்காரர். மனித நேயம் போற்றி வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய வ.ரா. என்றென்றும் மறக்க இயலாதவர்; மறக்கக்கூடாதவரும்கூட.

வ.ரா.வை மறவோம்! அவர் வழியில் பகுத்தறிவு நெறி போற்றுவோம்!!
=================================================================================

உதவி: பாபநாசம் குறள்பித்தனின் 'ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மேதை'; ஜெயம் பப்ளிகேசன்ஸ், தி.நகர்; சென்னை.


இது ஒரு குட்டிப் பதிவு. எனவே, ஒரு குட்டிக்கதையையும் இணைத்திருக்கிறேன். உங்களை மகிழ்விக்கத்தான். படியுங்கள்.

 கதை:                                                     மட்டும்  

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய மகனிடம், “ஏண்டா குப்பு, நாளைக்கி லீவு போட்டுட்டு வந்தியா?” என்றார் அவன் அம்மா வேலம்மா.

“இல்லம்மா.”

“பொண்ணுப் பார்க்கப் போகணும். லீவு போடுடான்னு படிச்சிப் படிச்சிச் சொன்னேனேடா?” -முகம் சுண்டினார் வேலம்மா.

“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குறியே.''

''வேலை கிடச்சதும் பண்ணிக்கிறேன்னு சொன்னே. வேலைக்குப் போயி வருசம் ஒன்னாச்சி. மறந்து போச்சாடா?”

“இன்னும் ரெண்டு வருசம் போகட்டும்.”

அதிர்ச்சியடைந்த வேலம்மா, “காரணத்தைச் சொல்லுடா”  என்றார்.

''நான் பொடியனா இருக்கும்போதே அப்பா இறந்துட்டார். இருபது வருசம் போல கூலி நாழி செஞ்சி என்னை வளர்த்து ஆளாக்கினே; படிக்க வைச்சே. அந்த இருபது வருசமும் உன் ஒரே மகனான எனக்கே எனக்காக  மட்டுமே நீ வாழ்ந்தே. இரண்டே இரண்டு வருசமாவது இன்னொருத்திக்குப் பங்கு கொடுக்காம உனக்கே உனக்காக மட்டுமே நான் வாழ ஆசைப்படுறேம்மா. இனியும் கல்யாணம் பண்ணிக்கோன்னு என்னை வற்புறுத்தாதே”  என்று உறுதிபடச் சொன்னான் குப்புசாமி.

கண் கலங்கினார் வேலம்மா.

=================================================================================
கதை வெளியான இதழ்?

இதுவரை எந்த இதழுக்கும் கொடுப்பினை இல்லை!!!