புதன், 2 மே, 2018

காமமே கடவுளாக.....!

மனிதன் எதைக் கண்டெல்லாம் அஞ்சுகிறானோ அதையெல்லாம் கடவுளாக்கி வழிபடுவது அவனின் இயல்பாக இருந்தது; இருக்கிறது.

வாயு பகவான், வருண பகவான், அக்கினி தேவன், நாக தேவன் என்னும் இவை சில உதாரணங்கள். இன்றெல்லாம், மன்மதன் என்று மக்களால் அறியப்பட்ட  காமன் என்பவனும்  இவ்வகைக் கடவுளரில் ஒருவன் ஆவான்.

உயிர்களை, இனப்பெருக்கம் செய்யத் தூண்டும் கடவுள் என்று இவனின் புகழ் பாடுகிறது ரிக்வேதம். பிராமணர்கள் இவனைப் 'பிராமணக் கடவுள்' என்றும் 'பிரம்மனின் மகன்' என்றும், 'விஷ்ணு பகவானின் அடி மனதில் அவதரித்தவன்' என்றும் சொல்லிப் பெருமிதப்படுகிறார்களாம்.

முழுமுதல் கடவுளான சிவபெருமான் மீதே காம உணர்ச்சியைத் தூண்டும் மலரம்புகளை வீசிய கில்லாடி இந்த மன்மதன் என்னும் காமன்[தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சிவனின் யோகத்தைக் கலைத்துப் பார்வதியை முயங்கவைத்து, முருகனை ஈன்றெடுப்பதற்காக அம்பெய்தான் என்பது கதை]. அதன் காரணமாக அக்கடவுளால் எரிக்கப்பட்டாலும், ரதியின் வேண்டுகோளுக்கிணங்க, ரதியைத் தவிர வேறு எவர் கண்ணுக்கும் புலப்படாத உருவிலியாக வாழ அனுமதிக்கப்பட்டவன்.

படைப்புக் கடவுளான பிரம்மனால் முதன்முதலில் படைக்கப்பட்ட பெண் கலைமகள். ஒரு சமயம், பிரமன் மீதே அம்பு போட்டு, அவரை மான் வடிவில் நடமாடிய கலைமகளுடன் புணர்ச்சி செய்யத் தூண்டியவன் இந்தப் பொல்லாத காமன்தான்[தேவர்கள் வத்தி வைக்க, சிவன் பிரமனைச் சபித்ததும், கலைமகளின் வேண்டுதலுக்கு இணங்கப் பின்னர் உயிர்ப்பித்ததும் தனிக்கதை].

மிகு காமத்தில் அமிழச் செய்பவன், பூங்கொத்துடன் காட்சி தருபவன், மலர்க்கணைகளை ஏந்தியவன், ஆன்மாவிலிருந்து பிறந்தவன், மகிழ்ச்சி வடிவினன், மயக்குபவன், அழகன், ஒளிந்திருந்து வேட்டையாடுபவன் என்றிப்படி இன்னும் எப்படியெல்லாமோ இலக்கியங்களில் வர்ணிக்கப்படுபவன் இவன்.

கிரேக்க நாட்டவரால் 'ஈராஸ்' என்றும் அழைக்கப்படுபவனும், இலத்தீனில், 'கூபிட்' என்று குறிப்பிடப்படுபவனும் இவனே.

அழகுப் பெண்கள் படை வீரர்களாக அணிவகுக்க, தென்றல் என்னும் தேர் ஏறி, மீன் கொடி ஏந்தி, கரும்பு வில் வளைத்து, மலரம்புகளை எய்து காம இச்சையைத் தூண்டுவதே இந்தக் காமக்கடவுளின் தொழில்[இளசுகளுக்கு ஒன்றிரண்டு, கிழடுகளுக்கு ஏழெட்டு என்று அவரவர் அகவக்கேற்ப அம்பின் எண்ணிக்கை மாறுபடும்]  ஆகும்.

மதுராந்தகத்தில் இன்றும்கூட இந்தக் காமக்கடவுளுக்கு விழா எடுக்கப்படுகிறதாம். ஆசைப்பட்டதுபோல் கணவன் வாய்ப்பதற்காகவும், கட்டிக்கொண்ட கணவன் என்றும் பிரியாமல் இருப்பதற்காகவும் பெண்கள் இவனை வழிபடுவது வழக்கமாம்.

இளவேனில் காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும் காமன் விழா நடைபெறுகிறது. வட மாநிலங்களில் கொண்டாடப்படும் 'ஹோலி'ப் பண்டிகை இதனுடன் தொடர்புடையது என்கிறார்கள்.

அருவுருவான காமனிடம் வரம் கேட்டு, சங்ககாலப் பெண்கள் 'காமவேள் கோட்டம்' சென்று வணங்கி நோன்பு மேற்கொண்டதாகச் சங்க நூல்கள் இயம்புகின்றன.

சீவகசிந்தாமணி, பெருங்கதை போன்ற இலக்கியங்களும் காமவேள் குறித்துப் பேசுகின்றன.

இவன் வெறும் காமக்கூத்து நிகழ்த்துகிற கடவுள் மட்டுமல்ல, இவனைத் திருமாலுடன் இணைத்து வணங்கினால் வீடுபேறு கிட்டும் என்ற நம்பிக்கையும் இன்றளவும் நிலவுவதாகச் சொல்கிறார்கள்.

சைன மதத்தினர்கூட, இவனை நினைந்து நோன்பு மேற்கொண்ட செய்தியும் வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் காமக்கிழத்தனை[கிழத்தன் - தலைவன்]த் தீய கடவுள் என்று வெறுத்து வழிபட மறுத்தவர்கள் புத்தமதத்தினர் மட்டுமே.

உலகம் போற்றும் காமன் என்னும் மன்மதக் கடவுளை நாமும் போற்றுவோம்.

வாழ்க  மன்மதன்!
=================================================================================
உதவி: 'தமிழில் காமன் பாடல்கள்', முனைவர் பொன்.சண்முகம், அருள் பதிப்பகம், சென்னை - 78. [முனைவருக்கு நன்றி].

திங்கள், 30 ஏப்ரல், 2018

மயக்கும் வாலிபமும் அறிஞர் அண்ணாவின் வியத்தகு சாதனைகளும்!!

கல்லூரி மாணவராக இருந்தபோதே ஆழ்ந்து சிந்தித்து எழுதும் திறன் வாய்த்திருந்தது அறிஞர் அண்ணாவுக்கு. 'ஆனந்த விகடன்', 'ஆனந்த போதினி'[1964இல் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது, என் கதை இந்த இதழில் வெளியானது! இருந்தும்... இன்றுவரை நான் 'கத்துக்குட்டி'தான்!  ஹி...ஹி...ஹி!] ஆகிய இதழ்களில் அவருடைய படைப்புகள் வெளியாயின.

1931ஆம் ஆண்டில் 'தமிழரசு' என்னும் வார இதழில், 'மகளிர் கோட்டம்' என்னும் அவரின் கட்டுரை பிரசுரம். அப்போது அவரின் வயது.....

இருபத்தொன்றுதான்.

1932இல், கல்லூரியில் நடைபெற்ற 'சேஷைய சாஸ்திரி கட்டுரைப் போட்டி'யில், 'அணிவகுப்பு' என்னும் தலைப்பிலான ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரை முதல் பரிசு பெற்றது.

'கொக்கரக்கோ' என்னும் வசீகரமான தலைப்பில் விகடனில்[1934] இடம்பெற்ற அவரின் படைப்புக்கு விகடன் ரூ20/=[அன்று இது மிக உயரிய சன்மானம்] வழங்கியது.

1935இல் 'பால பாரதி' என்னும் ஏட்டின்[நீதிக்கட்சித் தலைவர் பாசுதேவ் என்பவருடன் இணைந்து தொடங்கியது] ஆசிரியர் ஆனார். அதில் பொதுவுடைமைத் தத்துவம் பேசும் கட்டுரைகளும், தொழிலாளர் நலம் பேணும் பதிவுகளும் முக்கிய இடம் பெற்றன.

1937இல் காஞ்சி மணிமொழியார் தொடங்கிய 'நவயுகம்' என்னும் வார இதழின் ஆசிரியரானார் அறிஞர் அண்ணா.

1938இல், 'விடுதலை', 'குடியரசு' ஆகிய இதழ்களில் உதவியாசிரியர்.

1942இல், அப்போது பிரபல நடிகராயிருந்த கே.ஆர்.ராமசாமி போன்றோரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட 'திராவிட நாடு' இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
அதில்.....

'உங்கள் ஆஸ்திகம் உங்கள் வைதிகம்
உங்கள் கடவுள் உங்கள் கோயில்
உங்கள் குருக்கள் உங்கள் அய்யர்
உங்கள் மந்திரம் உங்கள் வேதாந்தம்
உங்கள் யோகம் உங்கள் யாகம்
உங்கள் விரதம் உங்கள் பூசனை 
உங்கள் மடங்கள் உங்கள் சடங்குகள்
இவைகள் இதுவரை சாதித்ததென்ன?
ஆயிரம் ஆண்டாய் அசைத்ததென்ன?...'

என்பன போன்ற விழிப்புணர்வூட்டும் படைப்புகள் மட்டுமல்லாமல், அறிவியல், வரலாறு, தமிழ் இலக்கியம், புராணப் புரட்டு, மூடநம்பிக்கை, வர்க்க பேதம், தொழிலாளர் நலன் குறித்த ஏராளமான படைப்புகளும் வெளியாயின.

பெரியாரின் இலட்சியங்களைப் பரப்புரை செய்த  தன்மான ஏடாகவும் இது திகழ்ந்தது.

கலைஞர் மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், என்.வி.நடராசன், அரங்கண்ணல், தில்லை வில்லாளன் போன்றோரின் ஆக்கபூர்வமான எழுத்துகளும் இடம்பெற்றன.

திராவிடநாடு ஆரம்பிக்கப்பட்டபோது 'உலகப்போர்' தொடங்கியிருந்தது. தமிழகத்திலும் தமிழருக்கு எதிரான ஆளும் வர்க்கத்தாரின் செயல்பாடுகளைக் கண்டித்துக் களம் இறங்கியிருந்தது திராவிடர் கழகம். இச்சூழ்நிலையில்.....

'திராவிடநாடு' இதழில் அண்ணா எழுதிய முதல் தலையங்கத்திற்கு, 'கொந்தளிப்பு' என்று அவர் தலைப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: ''பேரறிஞர் அண்ணாவின் திராவிடநாட்டில் சிந்திய முத்துக்கள்', முதல் பதிப்பு: 2010; அதியமான் பதிப்பகம், கோவை.