ஞாயிறு, 10 ஜூன், 2018

வாருங்கள்...நாமும் 'சத்குரு' ஆகலாம்!!!

சத்குரு ஜக்கி வாசுதேவின் ஒரு தத்துவப் பதிவை அண்மையில் அவரின் வலைத்தளத்தில்https://isha.sadhguru.org/in/ta/.../sakthireethiyaga-undagum-uravu-eppadippattathu நுழைந்து படிக்க நேர்ந்தது. வரிக்கு வரி மனிதர் குழப்புகிறார். படியுங்கள். குறுக்கீடு செய்யாமல் பதிவின் இறுதியில் என் பித்துக்குளித்தனமான கேள்விகளை[வண்ணம் தீட்டியிருக்கிறேன்]ப் பட்டியலிடுகிறேன். 

'மக்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவுமுறை என்பது உடல் ரீதியானதாகவோ, மன ரீதியானதாகவோ, உணர்ச்சி ரீதியானதாகவோ இருக்கிறது' உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்படாத சக்தி ரீதியான உடலுடன் உங்களுக்கு ஒரு கணம் தொடர்பு ஏற்படுமேயானால், உங்களுடைய வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைபெறத் துவங்குகிறது.

எனவே, உங்கள் உறவுமுறை என்பது இந்த மூன்று அம்சங்களின் கூட்டாகத்தான் இருக்கக்கூடும். சிலவற்றில் மன ரீதியான அம்சம் அதிகமாக இருக்கலாம், சிலவற்றில் உணர்ச்சியின் ஆதிக்கம் இருக்கலாம், சிலவற்றில் உடல் ஆதிக்கம் இருக்கலாம். ஆனால் இந்த மூன்றும் எங்கோ ஓர் இடத்தில் சம்பந்தப்படுகின்றன. எனவே உங்கள் உறவுமுறை எப்படிப்பட்டதாக இருந்தாலும், உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக அவை எந்த நிலையில் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டி செல்ல முடியாது. இவை நல்வாழ்வுக்காகவும், சௌகரியத்துக்காகவும் உள்ளன. வாழ்க்கையில் நாம் செய்கின்ற எல்லாவற்றிலும் பங்குதாரர்களைக் கொண்டிருக்கிறோம். நீங்கள் தொழிலைத் தேடிச் சென்றால் ஒரு விதமான பங்குதாரர்களைத் தேடுகிறீர்கள். வீட்டில் நம்மோடு இருப்பதற்கு வேறுவிதமான பங்குதாரரைத் தேடுவீர்கள். மற்றொன்றுக்கு, அதற்கேற்றவாறு பங்குதாரரைத் தேடுவீர்கள். எனவே ஒவ்வொருவிதமான உறவுக்கும் ஒவ்வொருவிதமான பங்குதாரர்களை நீங்கள் தேடுகிறீர்கள்.

சக்தி அடிப்படையில் என்று சொல்லும்போது அது இந்த மூன்று விஷயங்களுக்கும் சம்பந்தப்பட்டது அல்ல. உங்களுடைய எண்ணம், உங்களுடைய உணர்ச்சி, உங்களுடைய உடல் இந்த மூன்றிலும் எதற்குமே இந்தப் பரிமாணங்களில் இடம் இல்லை. நீங்கள் ஒருவருடன் அமர்ந்திருக்கும்போது, உங்கள் உடல், மனம், உங்கள் உணர்ச்சிகள் கடந்த ஏதோ ஒன்று துடிப்புடன் செயல்படத் தொடங்குகிறது. நீங்கள் இதுவரை கற்பனையும் செய்திராத விதத்தில் அது நடக்கத் தொடங்குகிறது.
இப்போது பலரும் நம்மிடம் வந்து இந்த யோகாவில் அமர்ந்த சிறிது நேரத்தில், இந்த நோய் போய்விட்டது, அந்த நோய் போய்விட்டது என்று சொல்வார்கள். இவையெல்லாம் நடப்பது ஏன் என்றால், யாரோ ஒருவர் இங்கே அமர்ந்துகொண்டு அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பதால் அல்ல.
உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்படாத சக்திரீதியான உடலுடன் உங்களுக்கு ஒரு கணம் தொடர்பு ஏற்படுமேயானால், உங்களுடைய வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைபெறத் துவங்குகிறது. தீட்சை என்பதன் அடிப்படை என்னவென்றால் ஒரு மனிதனை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ இல்லாமல் சக்தி ரீதியாக நீங்கள் தொடுகிறீர்கள்.
ஆனால், உங்கள் மனதையும், உங்கள் உடலையும், ஓரளவுக்கு உங்கள் உணர்ச்சியையும் ஈர்க்காவிடில், உங்களைத் தொடுவது என்ற கேள்வி எழுவதற்கே வாய்ப்பில்லை. எனவே ஒரு குரு சிஷ்ய உறவு முறையில் வேறு எவராலும் தொடப்பட முடியாத பரிமாணத்தை சக்தி ரீதியில் நாம் செய்கிறோம். வேறு ஒருவராலும் தொடப்பட முடியாத இடம் அது. 

சத்குருவின் போதனை முடிந்தது. இனி நம் கேள்விகள்.....

*//உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்படாத சக்தி ரீதியான உடலுடன் உங்களுக்கு ஒரு கணம் தொடர்பு ஏற்படுமேயானால்...//
'உடலோடு சம்பந்தப்படாத...' என்று சொல்லிவிட்டு, 'சக்தி ரீதியான உடல்'னு சொல்றாரே, அது என்னங்க சக்தி ரீதியான உடல்?

*//சிலவற்றில் மன ரீதியான அம்சம் அதிகமாக இருக்கலாம், சிலவற்றில் உணர்ச்சியின் ஆதிக்கம் இருக்கலாம், சிலவற்றில் உடல் ஆதிக்கம் இருக்கலாம். ஆனால் இந்த மூன்றும் எங்கோ ஓர் இடத்தில் சம்பந்தப்படுகின்றன//
எங்கோ ஓரிடம்னு சொல்றாரே, அந்த எங்கோ ஓரிடம் எங்கே இருக்கு?

*//நீங்கள் ஒருவருடன் அமர்ந்திருக்கும்போது, உங்கள் உடல், மனம், உங்கள் உணர்ச்சிகள் கடந்த ஏதோ ஒன்று துடிப்புடன் செயல்படத் தொடங்குகிறது//
மேலே சொன்ன 'எங்கோ ஓரிடம்' என்பது போல்தான் இதுவும்; அது என்ன ஏதோ ஒன்று?

*//யாரோ ஒருவர் இங்கே அமர்ந்துகொண்டு அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பதால் அல்ல//
வெளிப்படையா நான் நிகழ்த்துலேன்னு சொல்ல வேண்டியதுதானே?

*//தீட்சை என்பதன் அடிப்படை என்னவென்றால் ஒரு மனிதனை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ இல்லாமல் சக்தி ரீதியாக நீங்கள் தொடுகிறீர்கள்//
மேற்கண்ட மூன்றின் ரீதியாக அல்லாமல், சக்தி ரீதியாக[உடம்பின் சக்தியை மூளையில் சுமந்துகொண்டு], அதாவது, ஏதோ அதீத சக்தி இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு[நானும் குழம்பி உங்களையும் குழப்புகிறேன்!!], என் பெண்டாட்டி பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் தொட்டுத் தொட்டுத் தொட்டுப் பார்த்தேன். ஒரு வித்தியாசமும் தெரியலீங்க.

*//ஆனால், உங்கள் மனதையும், உங்கள் உடலையும், ஓரளவுக்கு உங்கள் உணர்ச்சியையும் ஈர்க்காவிடில், உங்களைத் தொடுவது என்ற கேள்வி எழுவதற்கே வாய்ப்பில்லை//
அந்த மூனுக்கும் சக்தி ரீதியாத் தொடுறதுக்கும் சம்பந்தம் இல்லேன்னு சொன்னவர் இப்போது, மூன்றையும் ஈர்க்காவிடில் தொடுவது வாய்ப்பில்லை என்கிறாரே, ஏன் இந்த முரண்பாடு?

சத்குருவின் இந்தப் போதனையைப் பலமுறை படிச்சேன். இருக்கிற கொஞ்சூண்டு மூளையைக் கசக்கோ கசக்குன்னு கசக்கிப் பார்த்தேன். ஒன்னுமே புரியல.

உங்களுக்குப் புரியுதா பாருங்க. புரிஞ்சா.....

ஆனந்தவிகடன் மாதிரியான பத்திரிகையில், அதன் ஆசிரியரை வசியம் பண்ணி அஞ்சாறு போதனைக் கட்டுரைகள் எழுதுங்க. ஜக்கி போலவே பிரபல ஆன்மிக போதகர் ஆயிடலாம். மாறாக.....

இந்த என் பதிவு அபத்தமானதுன்னு நினைச்சா என்னைக் கண்டிச்சி எழுதுங்க...தயங்காம எழுதுங்க.

நன்றிங்க.

வெள்ளி, 8 ஜூன், 2018

காமயுகம்!!!

காம வேட்கை மிக்கவர்கள் காமுகர்கள். உலக அளவில்  அன்று முதல் இன்றுவரை பெருமளவில் காமுகர்கள் இருந்திருக்கிறார்கள். காமுகர்கள் இருந்த அளவுக்குக் 'காமுகி'கள் இருந்தார்களா தெரியவில்லை. இருந்திருந்தால், 'காமுகி' என்னும் சொல்லும் பயன்பாட்டில் மிகுதியாக இருந்திருக்கும்.

கடந்த காலங்களில் எப்படியோ இனி எதிர்காலத்தில் காமுகன் என்னும் சொல்லுக்கு நிகராகக் காமுகி என்னும் சொல்வழக்கும் நிலைபெறும் என்றே தோன்றுகிறது. காரணம், காம இச்சையைக் கட்டுப்படுத்தி வாழும் நோக்கம் சிறிதுமின்றி மனம்போன போக்கில் வாழும் பெண்களை[ஆண்களைப் போலவே] நிறையவே காண முடிகிறது[ஆதாரம்: ஊடகச் செய்திகள்].

கழுத்தில் தாலி ஏறிய சூட்டோடு ஏற்கனவே காம சுகம் தந்தவனுடன் காணாமல் போகிறார்கள். கள்ள உறவுக்குத் தடையாக இருந்தால் காதலனுடன் சேர்ந்து கணவனையே கழுத்தை நெறித்துக் கொல்கிறார்கள். கையில் காசுபணம் இருந்தால் அடியாட்களைத் தேடுகிறார்கள். பாலூட்டும் குழந்தைகளை மட்டுமல்ல, பருவம் எய்திய பிள்ளைகளைத் துறந்தும் 'உடன்போக்கு' நிகழ்த்துகிறார்கள். இவர்களுள் படித்தவர், படிக்காதவர் என்னும் வேறுபாடெல்லாம் அதிகம் இல்லை.

இம்மாதிரியான அண்மைக்கால நிகழ்வுகளைச் சேகரித்தால் அது குறித்த பட்டியல் மிக நீளும்.

கள்ள உறவுக்கு முன்னால் பிள்ளைப்பாசம், குடும்பப்பற்று, மதிப்பு, மானம், மரியாதை என்று எவையெல்லாம் கவுரவமான வாழ்க்கைக்குத் தேவையோ அவையெல்லாம் காணாமல் போகின்றன.

சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் [காலைக்கதிர், 07.06.2018. மற்ற விவரங்கள் வேண்டாம்]. 

அந்தப் பெண்ணுக்கு வயது 45. கணவன் தரும் கட்டில் சுகம் கட்டுபடி ஆகவில்லை. 21 வயதே ஆன கட்டிளம் காளை ஒருவனுடன் கட்டுப்பாடில்லாமல் கள்ள உறவு கொள்கிறாள். காலக்கணக்கெல்லாம் இல்லாமல் உறவு தொடர்கிறது. 

ஆசைக்கு எல்லை ஏது? 45 வயதான ஆசைநாயகியின் 15 வயதே ஆன சிறுமியையும் அனுபவிக்கத் திட்டமிடுகிறான் காதகன். ஆசைநாயகியிடம் மனம் திறக்கிறான். தன்னைக் கைகழுவிவிடுவானோ என்று அஞ்சினாளோ என்னவோ, 45 வயதான அந்த நடுத்தர வயதுச் சிறுக்கி, தன் மகள் என்றும் பாராமல், அவளின் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துக் காமக்கிராதகனுக்கு மணம் செய்து வைக்கிறாள்.

சின்னஞ்சிறு வயதில் அவள் ஒரு பிள்ளைக்குத் தாயும் ஆகிறாள்.

தாய்மை நிலையை எய்திய பிறகுதான், சிறுமிக்குத் தன் தாயின் கள்ள உறவு தொடர்வது உள்மனதை உறுத்துகிறது. இருவரையும் கண்டிக்கிறாள். விளைவு.....

இருவரும் சேர்ந்து இவளைத் அடித்தும் உதைத்தும் துன்புறுத்துகிறார்கள்.

பொறுத்தது போதும் என்று முடிவுகட்டிய சிறுமி காவல் நிலையத்தில் புகார் செய்கிறாள்.

நடுத்தர வயதுக் காமுகியையும், காமுகனையும் கைது செய்து விசாரித்துக்கொண்டிருக்கிறது காவல்துறை.

''காமம் பொல்லாதது'' என்று யாரோ ஓர் அனுபவசாலி சொல்லிவிட்டுப்போன புன்மொழி நினைவுக்கு வருகிறது. ''காமம் மிக நல்லது'' என்று சொல்லும் காலமும் வருமா? எப்போது?
========================================================================
இச்சம்பவம் குறித்து இன்று வேறொரு பதிவு எழுதப்பட்டுள்ளது[சற்று முன்னர்தான் கவனித்தேன்]. எனினும், என்னுடைய இந்தப் பதிவு விமர்சன நோக்கில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.