சனி, 28 ஜூலை, 2018

கேளு...கேளு...கேள்வி கேளு!!!

'உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உள்நிலையில் உச்சத்தைத் தொட முடியும்' என்கிறார் ஓர் உலகறிந்த ஞானி. அற்ப ஆயுளில் செத்துத்தொலைக்கப் பிறந்தவன் மனிதன். சாவதற்குள் உச்சத்தை எங்கு தேடி அலைவது?!
#இந்தக் 'குரு பவுர்ணமி' நாளில்தான் இந்த உலகின் 'ஆதி யோகி' என்னும் முதல் குரு பிறந்தார். ஆதியோகியான சிவன் 'ஆதிகுரு'வாக மாறி சப்தரிஷிகளுக்கு[ளுடன்] யோக விஞ்ஞானத்தைப் பகிர்ந்துகொண்டார். நீங்கள் கடவுளாக வணங்கும் சிவனை, 'யோக கலாச்சாரத்தில் ஆதி யோகியாகப் பார்க்கிறோம். அதாவது, முதல் யோகியாகப் பார்க்கிறோம். சிவன் இந்த மண்ணில் நம்மைப் போன்றே மனிதனாக வாழ்ந்து உள்நிலையில் உச்சத்தைத் தொட்டவர். அதனால்தான் சிவனுடைய புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உள்நிலையில் உச்சத்தைத் தொட முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் சிவன்#

கோவை 'ஈஷா யோக மையம்' சார்பில், 'ஆதி யோகி' சிலையின் முன்பு நேற்றுக் கொண்டாடப்பட்ட குரு பவுர்ணமி விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்காக, 'சத்குரு' ஜக்கி வாசுதேவ் ஆற்றிய உரையின்[தினத்தந்தி, 28.07.2018] சாராம்சம் இது.

சத்குருவின் உரையைத் தொடர்ந்து ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சி, கூட்டுத் தியானம், 'கேள்வி - பதில்' நிகழ்ச்சி போன்றவையும் இடம்பெற்றதாகத் தினத்தந்தி குறிப்பிட்டிருக்கிறது.

''ஆதிசிவன் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிற கடவுள். அவர் பிறப்பு இறப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். தான் இருக்கும் கோலத்தில்[?] இருந்துகொண்டே ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை அருளியிருக்க முடியும். இந்த உலகில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை.  நீங்களோ, முதல் குருவாக இந்த உலகில் அவதரித்து ரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தைக் கற்றுத் தந்ததாகச் சொல்கிறீர்கள். இது கதையா? அல்ல என்றால், அதற்கான ஆதாரம் உள்ளதா?'' 

''ஆதிசிவன், குரு பவுர்ணமி நாள் பார்த்துப் பிறந்தது ஏன்? மற்ற நாட்களில் பிறந்திருக்கக் கூடாதா? கடவுளும்கூட நல்ல நாள், கெட்ட நாளெல்லாம் பார்ப்பாரா?''

''அவர் மனித குருவாகப் பிறந்தார் என்றால், அந்த மனித குருவின் தோற்றம் எவ்வாறு இருந்தது?''

''ஆதிசிவன் இம்மண்ணில் மனிதனாகப் பிறந்து வாழ்ந்து 'உள்நிலையில் உச்சம்' தொட்டவர் என்கிறீர்கள். அதென்ன, உள்நிலையில் உச்சம் தொடுவது? மனத்தளவில் உச்சம் தொடுவது என்று கொள்ளலாம்தான். ஆனாலும், அதென்ன உச்சம் தொடுவது? எது உச்சம்? அதன் வரம்பு என்ன?''

''சிவனை யோக கலாச்சாரத்தில் ஆதியோகியாகப் பார்க்கிறோம் என்கிறீர்கள். யோகம் ஒரு கலையாக இருக்கலாம். இதைக் கலாச்சாரங்களில் ஒன்றாகச் சேர்க்க முடியுமா? இப்படியொரு கலாச்சாரம் இருக்கிறதா?''

''உள்நிலையில் உச்சம் தொடுவது, யோக கலாச்சாரம் என்பவையெல்லாம் ஞானியான உங்களுக்குப் புரிந்திருக்கலாம். எங்களுக்குப் புரியும்படியாகச் சொல்வது உங்கள் கடமை அல்லவா? எதையெதையோ சொல்லிச் சொல்லி எங்களை ஒருவித மயக்க நிலையில் அல்லவா ஆழ்த்துகிறீர்கள்?''

சத்குருவின் பக்தர்களே,

மேற்கண்டவை, 'பசி'பரமசிவமாகிய என் மனதில் உதித்த கேள்விகள். இவற்றையும், இவை போன்ற நீங்கள் கேட்க விரும்பும் பிற கேள்விகளையும் சத்குருவுக்குச் சமர்ப்பணம் செய்யுங்கள்[இக்கேள்விகள் எவ்வகையிலும்  உங்களின் மனங்களை நோகடிப்பதற்காக அல்ல; உங்களின் பக்தி, பலவகை மூடநம்பிக்கைகளுக்கு வழிகோலுவதைத் தடுப்பதற்காகவே].

அவர் அளிக்கும் விளக்கங்கள் உங்களுக்கு மனநிறைவைத் தருமாயின்.....

உங்களாலும் 'உள்நிலையில் உச்சத்தை'த் தொடுவது இயலக்கூடும்.

உண்மையில் இத்தகையதொரு உச்சத்தைத் தொடுவது உங்களின் விருப்பம் என்றால், அது நிறைவேற என் மனம் நிறைந்த வாழ்த்தகள். 

வெள்ளி, 27 ஜூலை, 2018

இந்தப் புண்ணிய பூமியில்தான் 'இது'வும் நிகழ்ந்தது!!

'அவர்கள்' நான்கு வர்ணத்திற்குள்ளும் வராதவர்கள்; தீண்டப்படாத சூத்திரச் சாதி மக்களையும்விடக் கீழானவர்கள்; 'பஞ்சமர்கள்'.

அவர்கள் ஓட்டு வீடுகளில் வசித்தல் கூடாது; காலில் செருப்பு அணியக்கூடாது; பெண்கள் இடுப்புக்கு மேலே எந்தவொரு ஆடையும் உடுத்துதல் கூடாது. 

இளம் பெண்களின் மார்பகங்கள் பெரிதாக ஆக, விதிக்கப்பட்ட அதற்குரிய வரியைச் செலுத்துதல் வேண்டும்.

ஆண்கள் தோளில் துண்டு போடக்கூடாது. முழங்காலுக்குக் கீழே ஆடை எதுவும் உடுத்துதல் ஆகாது. [நாயடி அல்லது புலையன் ஒருவனை ஒரு உயர் மேல்மட்டச் சாதிக்காரன் [பிராமணன] பார்க்க நேரிட்டால் அவன் தீட்டுப்பட்டவனாகக் கருதப்படுவான்.  இங்ஙனம் தீட்டுப்பட்டவன் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி நீராடித் தன்னைச் சுத்திகரிக்க வேண்டும்”.
(A. Sreedhara Menon – Social and cultural History of Kerala – 1979 – Page 68 – as quoted by Dr. Ivy Peter)

அந்த இன மக்கள் இம்மாதிரிக் கொடுமைகளுக்கு உள்ளானது கன்னியாக்குமரியை உள்ளடக்கிய அன்றைய திருவிதாங்கூர் மாவட்டத்தில்.

இச்சூழலில் இடம்பெற்ற ஓர் உண்மை நிகழ்வின்  சுருக்கம் பின்வருமாறு:

திருநெல்வேலியில்,  'அந்த'ச் சாதிப் பெண்கள் மேலாடை உடுத்த அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அந்த ஊரைச் சார்ந்த பெண்ணொருத்தி இரணியலைச்[இங்கு, பெண்களுக்கு மேலாடை உடுத்த அனுமதியில்லை] சேர்ந்த அதே சாதி இளைஞனுக்கு மணம் செய்விக்கப்படுகிறாள்.

இரணியலில் இருக்கும் கணவன் வீட்டுக்குப் புறப்படும்போதே,  அவளின் உறவினர்கள் மேலாடையை அகற்றிவிட்டுச் செல்லுமாறு வற்புறுத்துகிறார்கள்.

அவளோ, ''எல்லோரும் என் மார்பகங்களைப் பார்ப்பார்கள். அதை என்னால் சகிக்க முடியாது'' என்று சொல்லி, அதை அகற்றாமலே கணவன் ஊரான இரணியலுக்குச் செல்கிறாள்.

மேலாடையை அகற்றுமாறு அந்த ஊர் மேல் சாதிக்காரர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள். உடன்படாத அந்த 'ரோஷக்காரி' அதை உடுத்திய நிலையிலேயே கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்கிறாள்.

அவள் செத்தொழிந்த பின்னரும் அதை அகற்றும் முயற்சியில் 'அவர்கள்' ஈடுபடுகிறார்கள். பெண்ணின் கணவன் அழுது புலம்பி வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. 

பரிதாபத்துக்குரிய அந்த இளம் பெண்ணின் மேலாடை அகற்றப்பட்டு, அவளின் மார்பகங்களை எல்லோரும் பார்த்த பின்னரே அவள் அடக்கம் செய்யப்படுகிறாள்.

இது அன்றைய நிகழ்வு.

நெஞ்சுருக வைக்கும் நடையில் இதைச் சிறுகதையாக வடித்தெடுத்தவர், மறைந்த எழுத்தாளர் சு,சமுத்திரம் அவர்கள்.

கதையின் முழு வடிவம் நினைவில் இல்லை. என் நடையில் அதை வடித்தெடுத்தால் அதன் சிறப்புக்குப் பங்கம் விளையும் என்பதால் கதைக்கான நிகழ்வை மட்டும் தந்திருக்கிறேன்.

இது கடந்த கால நிகழ்வுதான், ஆயினும்,  மறத்தற்கரியது.

இந்நிகழ்வை மட்டுமல்ல, இம்மாதிரிக் கொடும் பாதகங்களுக்கு அடித்தளம் இட்டவர்களையும்  மறத்தல் சாத்தியம் அல்ல.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியேனும், இந்த மண்ணில் நல்லவை மட்டுமே நடக்கட்டும்.