வெள்ளி, 12 அக்டோபர், 2018

இந்தத் 'தில்' கிழவனைத் தினமும் நினையுங்கள்!!!

இந்த ஆண்டு[2018], இயற்பியலுக்கான  நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆர்தர் ஆஸ்கின்' என்பவர் பெற்றிருக்கிறார். இவரின் வயது 96.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இவர்,  ”ஆப்டிகல் டிவீசர்ஸ்” எனப்படும் லேசர் தொழில்நுட்பத்தில் நிகழ்த்திய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெறுகிறார். பரிசுத் தொகையான 6.5 கோடி ரூபாயில்[மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது] 50 சதவிகிதத்தை இவர் பெறுகிறார்.

சதம் அடிக்க நான்கே ஆண்டுகள் உள்ள நிலையில், இப்படியொரு பரிசைப் பெற்று உலகோரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் இந்தக் கிழவர். ஆனால், இதை அவர் ஒரு பொருட்டாக மதிக்கவில்லையாம்.

அவருடனான ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்வியும் அவரின் பதிலும்..... 

“அய்யா நீங்கள் மிகப்பெரிய உலக சாதனை புரிந்திருக்கிறீர்கள். அதற்காக உலகளவிலான அங்கீகாரமும் உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. எனவே, உங்களை நாங்கள் நேர்காணல் செய்யவேண்டும்.........”
“மன்னிக்கவும். நான் அடுத்த சாதனைக்கான ஆராய்ச்சி அலுவல்களில் மும்முரமாக இருப்பதால் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.”  

கிழவர் அப்படியென்ன செய்துவிட்டார்?  

'சிறிய பாகங்களைப் பிடித்துக்கொள்வதற்காக ஒரு இடுக்கி (ட்வீஸர்) பயன்படுத்தப்படுவதை,  நாமெல்லாம் 'வாட்ச் ரிப்பேர்', 'மொபைல் போன் ரிப்பேர்' கடைகளுக்குச் சென்றிருந்தால் பார்த்திருப்போம் இல்லையா? அதுபோல நானோ, மைக்ரோ துகள்களில் நடைபெறும் அணு ஆராய்ச்சிகளில் கண்களுக்கே புலப்படாதா ஒன்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள ஒரு உபகரணம் வேண்டுமென்பதை உணர்ந்து இவர் தொடங்கிய ஆராய்ச்சிதான் 'ஆப்டிகல் ட்வீஸர்'. லேசர்  உயர் ஒளிக்கற்றைகளைச் செலுத்தி அவை தரும் அழுத்தத்தின்மூலம் பிடித்துக்கொள்ளும் நுட்பத்தைக் கண்டுபிடித்ததுதான் இவரது சாதனை. குறிப்பாக, தற்போது 'லேசர்' மூலம் செய்யப்படும் கண் அறுவைச் சிகிச்சையின் போது பேருதவி புரியும் என்று மருத்துவத்துறை மகிழ்கிறது.
அமெரிக்காவின் பெல் ஆராய்ச்சி மையத்தில் மூத்த விஞ்ஞானியாக இருக்கும் இவர், இயற்பியலின் ஒளியியல்துறையில் மிகப்பெரிய சாதனைபுரிந்து, 96 வயதில் (இவர்தான் உலகிலேயே இதுவரை 'நோபல்' பெற்றிருப்பவர்களில் மூத்த வயதுடையவர்) 2018ஆம் ஆண்டுக்கான பரிசினை (மூன்றிலொருவராகப்) பெற்றிருக்கிறார். இவரிடம் இன்று செய்தியாளர் கேட்டபோதுதான் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
ஆமா, அப்படியென்ன அடுத்த ஆராய்ச்சி?
'சூரியசக்தியினை ஆக்கபூர்வமாக்குவது எப்படி?' என்பதாம்.'
கில்லாடிக் கிழவர்தான்!
நடுத்தர வயதைக் கடந்துவிட்டாலே, நமக்காகக் கதவு திறந்து வைத்துக் காத்திருக்கும் மரணத்தை எண்ணி மனம் கலங்குகிறோம். இந்தக் குடுகுடு கிழவருக்கு மட்டும் சாவுக்கு அஞ்சாத மனதிடமும் கொள்கைப் பிடிப்பும் வாய்த்தது எப்படி?

அது எப்படியானதாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், தினமும் ஒரு முறையாவது இந்தக் கிழவனை நினைப்போம். சாதி, மதம், சாமி, பூதம், சொர்க்கம், நரகம் என்று சொல்லித் திரியும் சுயநலவாதிகளைப் புறந்தள்ளிச் சுயசிந்தனையுடன், வாய்த்த அற்ப வாழ்நாளை அமைதியாகவும் பயனுள்ள வகையிலும் வாழ்ந்து முடிப்போம்.

நன்றி.

இப்பதிவும், IndiBlogger முகப்புப் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது.

திங்கள், 8 அக்டோபர், 2018

'சபரிமலை'...பெண்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெண்களே எதிர்ப்பது ஏன்?!

'10 - 50 வயதிலான பெண்களும் சபரிமலை சென்று ஐயப்பசாமியை வழிபடலாம்' என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஆண்கள் ஊர்வலங்கள் நடத்தியிருக்கிறார்கள் என்பது ஊடகச் செய்தி. கணிசமான அளவில் மகளிரும் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பது சுவை கூட்டும் கூடுதல் செய்தி.

பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்படுவதை இன்றளவில் மிகப் பெரும்பாலான ஆண்கள் ஆதிரிக்கிறார்கள். எனினும், குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கான சபரிமலை வழிபாட்டைப் பெரும்பாலான ஆண்கள் மட்டுமல்ல, கணிசமான அளவில் பெண்களும் ஆதரிக்கவில்லை என்பது  பெரும் புதிராக உள்ளது. அந்தப் புதிருக்கான விடை கீழே.....

ஐயப்பசாமி, சபரிமலையில் மட்டுமல்ல, வேறு பல ஊர்களிலும் குடிகொண்டிருக்கிறார்.
ஆரியங்காவில் அரசனாகவும், குளத்துப்புழையில் பாலகனாகவும், எரிமேலியில் தர்மசாஸ்தாகவும், அச்சன் கோயிலில் பூர்ணபுஷ்கலை[?] சமேதரராகவும் இருந்து அருள்பாலிக்கிறார். ஆனால், சபரிமலையில் மட்டும்  நித்திய பிரமச்சாரியாகக் காட்சியளிக்கிறார்{'இந்து தமிழ் [08.10.2018] நாளிதழில் பக்கம் 03இல், சேலம் மாநகர ப.ஜ.க. தலைவர் கோபிநாத்தும், ஐயப்ப சேவா சமாஜ தலைவர் தினேஷ்குமாரும் மற்றும் ஒருவரும் இந்து தமிழுக்கு அளித்த பேட்டியில் இடம்பெற்ற தகவல்}.

தன் பிரமச்சரியம் கலைந்துவிடுதல் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் ஐயப்பன். மடக்கிய முழங்கால்கள் இறுகக் கட்டப்பட்டுக் குந்திய நிலையில் அவர் காட்சி தரும் கோலமே அதை உறுதிப்படுத்துகிறது என்கிறார்கள் புராண இதிகாசங்களைக் கரைத்துக் குடித்தவர்கள். ஐயப்பன் கட்டை பிரமச்சாரி என்பதால்.....

குறிப்பிட்ட வயதிலான பெண்கள் அவர் முன் சென்றால் அவரின் பிரமச்சரிய விரதத்திற்குப் பங்கம் விளையும் என்பதே அவர்களுக்கான ஐயப்பன் வழிபாடு மறுக்கப்படுவதற்கான காரணம் ஆகும்.

காரணம் ஏற்கத்தக்கதே[?] என்பதால்.....

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் போராட்டங்களில் பெண்களும் பங்கு பெறுகிறார்கள் போலும்!

ஐயப்பன் ஒரு கடவுளா? கடவுள்கள் பலரா?

''ஆம்...ஆம்'' எனில், அவர்களைக் குடும்பஸ்தர்கள் என்றும் பிரமச்சாரிகள் என்று பாகுபடுத்துவது சரியா?

அதற்கும் ''ஆம்'' என்பதே பதிலாயின்.....

பருவப் பெண்கள் அவரின்[ஐயப்ப கடவுள்] பார்வையில் பட்டால் பிரமச்சரியம் பறிபோகும் என்று எண்ணுவது ஏற்புடையதா?

மோகினியாய் வடிவெடுத்த[அரக்கனை அழிக்க] விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன்[கையப்பன் என்பதே ஐயப்பன் ஆயிற்று. சிவன் மோகினியைப் புணர விரும்பிப் பின்தொடர்ந்து சென்று கையைப் பற்றியதால் மோகினியின் கையிலிருந்து பிறந்தவர் கையப்பன்] என்பது போன்ற கதைகளையும்  மேற்கண்டவை போன்ற பல தகவல்களையும் ஆன்மிகவாதிகள் பரப்புரை செய்வது நியாயமா?

மேற்கண்டவை போன்ற பல வினாக்களைத் தொடுத்து என்னிடம் அவற்றிற்கான பதில்களை எதிர்பார்க்கிறீர்களா நீங்கள்?

மன்னியுங்கள். 

பன்முகச் சிந்தனையாளரான உங்களுக்கே பதில்கள் தெரியக்கூடும். அறிவில் சிறியனும் வறியனுமான என்னை அருள்கூர்ந்து சீண்ட வேண்டாம்.

நன்றி.