செவ்வாய், 26 மார்ச், 2019

ஒரு ஓட்டுக்கு ரூபாய் 2 லட்சம்!!!

ஒரு ஓட்டுக்கு வெறும், 500 ரூபாய், 5,000 ரூபாய் என்று விலை பேசப்படும் தமிழக வாக்காளர்களே! உங்கள் ஓட்டின் உண்மையான விலை என்ன தெரியுமா? வெறும் 500 ரூபாயோ, 5,000 ரூபாயோ அல்ல; 2 லட்சம் ரூபாய். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? 

இப்படி ஒரு கணக்கை துாக்கிப் போடுகிறது, ஒரு, 'வாட்ஸ் ஆப்' புள்ளி விவரம்.....  

தமிழக மக்கள் தொகை குத்துமதிப்பாக 7.50 கோடி; இதில், 1.75 கோடி பேர் குழந்தைகள். மீதமுள்ள, 5.75 கோடி பேர் வாக்காளர்கள். இதில், ஆண்கள், 3.50 கோடி. இவர்களில், 30 சதவீதம் பேர், 'குடிமகன்'கள் என, வைத்துக் கொண்டால், 1 கோடி பேர் குடிக்கின்றனர்.

ஒரு குவார்ட்டர் பல விலைகளில் விற்றாலும், 50 ரூபாய் லாபம். ஒரு கோடி பாட்டிலுக்கு, 55 கோடி ரூபாய் லாபம். இது, ஆண்டுக்கு, 20,075 கோடி; ஐந்து ஆண்டுகளுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் லாபம். இது, உன் பணத்தில் இருந்து, உன்னிடம் கொள்ளை அடித்தது. மணல் கொள்ளைஇதில், ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய்; ஐந்து ஆண்டுக்கு, 1.25 லட்சம் கோடி ரூபாய்; தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளைகளிலும் தலா, ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய்; ஐந்தாண்டுகளுக்கு, 1.25 லட்சம் கோடி ரூபாய். ஆம் இது, உன் தாய் மண்ணில் அடித்த கொள்ளை. இன்னும்.....

நாள் ஒன்றுக்கு, 4,000 மெகாவாட் மின்சாரக் கொள்முதலில், யூனிட்டுக்கு, 22 காசுகள் கமிஷன் பெறுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. மொத்தம், 30 ஆயிரம் மெகாவாட்டிற்கும் கணக்கிட்டால், 66 கோடி ரூபாய்; ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய்; ஐந்து ஆண்டுகளுக்கு, 1.20 லட்சம் கோடி ரூபாய் கமிஷன் போகிறது. இது, உன் பணத்தில் இருந்து, உன்னிடமே கொள்ளை அடித்தவை.

அரசுக் கட்டுமான ஒப்பந்தங்கள் மூலம், அரசுக்கு மறைமுக இழப்பு, 5 லட்சம் கோடி ரூபாய்; போக்கு வரத்து, பணி நியமனம், பொது வினியோகம் என்ற வகையில், தலா, ஒரு லட்சம் கோடி ரூபாய்; இலவசங்கள் என்ற பெயரில், மறைமுக இழப்பு 2 லட்சம் கோடி ரூபாய்; என, 10 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை நடந்துள்ளது.

மொத்தம், பத்து இனங்களிலும், 15 லட்சம் கோடி ரூபாய் வரை, மக்கள் வரிப்பணம் மறைமுகமாக கொள்ளை அடிக்கப்படுகிறது. 

இவற்றையெல்லாம் கணக்கிட்டால், தமிழகத்தில் உள்ள, 5.75 கோடி ஓட்டுகளுக்கும், சராசரியாக, தலா, 2 லட்சம் ரூபாய் தரலாம். குறுக்கு வழிகளில் கோடிகோடியாய்ச் சம்பாதித்த பணக்கார வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் மக்களுக்குத் தருகிறார்கள். அதை அவர்கள் பெற்றுக்கொள்வதில் தவறே இல்லை எனலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: தினமலர் 04.05.2016

திங்கள், 25 மார்ச், 2019

'கிலி' ஜோதிடம்!!

''ஜோதிட சிம்மம் சுந்தரேசன்தானே?[பெயர் மாற்றப்பட்டுள்ளது]''

''ஆமா. நீங்க யாரு?''

''நான் சேலத்திலிருந்து குப்புசாமி பேசுறேன்.''

''சொல்லுங்க.''

''உங்களண்ட ஜோசியம் பார்க்க வரணும். நேரம் ஒதுக்க முடியுமா?''

''மன்னிக்கணும். இன்னும் ஆறு மாசத்துக்கு என்னால அப்பாய்ன்மெண்ட் தரமுடியாது.''

''தயவு பண்ணுங்கய்யா. நாங்க பத்துப்பேர் சேர்ந்து பத்து வருசத்துக்கு முந்தி 'சமதர்ம ஜனநாயக் கட்சி'[ஏதேனும் கட்சி இருந்தால் மன்னித்திடுக] ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிச்சோம். இன்னிக்கும் பத்துப்பேர்தான் உறுப்பினரா இருக்கோம். ரொம்பக் கவலையா இருக்கு. அதனாலதான் இதோட எதிர்காலத்தை நீங்க கணிச்சிச் சொல்லணும்னு வேண்டிக்கிறேன்.''

''பத்துப்பேர் உள்ள ஒரு அரசியல் கட்சிக்குப் பலன் சொல்லணுமா? விளையாடாதீங்க. ஃபோனை வையுங்க.''

''கொஞ்சம் பொறுங்க ஜோதிடரே. பா.ஜ.க., காங்கிரஸ்னு பெத்த பெரிய அரசியல் கட்சிகளுக்கெல்லாம் ஜோசியம் சொல்லுற நீங்க எங்க சின்னக் கட்சிக்கெல்லாம் சொல்ல மாட்டீங்களா?''

''என்ன சொல்லுறீங்க?''

''ராகுலின் ஜாதகப்படி அவருக்குப் பிரதமர் ஆகும் வாய்ப்பு இல்லேன்னாலும், அவர் சார்ந்திருக்கிற காங்கிரஸ் கட்சிக்கு இப்போ நல்ல நேரம்கிறதால அவர் ஆட்சியைக் கைப்பற்றுவார்னு சொல்லியிருக்கீங்க. பா.ஜ.க.வுக்கு இப்போ நல்ல நேரம் இல்லேன்னும் சொல்லியிருக்கீங்க. இது முந்தா நாள் பத்திரிகைச் செய்தி.''

''அது வந்து... அந்தக் கட்சிகளோட ராசியை வைத்துக் கணிச்சிச் சொன்னேன்.''

''மனுசங்களுக்குப் பிறந்த நேரத்தைக்கொண்டு ராசி, நட்சத்திரம்னு கணக்குப் போட்டு, நல்ல நேரம் கெட்ட நேரம்னு அடிச்சி விடுறீங்க. கட்சிகளுக்கெல்லாமும் பிறந்த நேரம் இருக்கா? கட்சியை ஆரம்பிச்சவங்க அது ஆரம்பிக்கப்பட்ட நேரத்தைப் பதிவு பண்ணியிருக்காங்களா? அப்படியே பதிவு பண்ணியிருந்தாலும் அதுதான் கட்சி பிறந்த நேரம்னு சொல்லிப் படிச்சவன் படிக்காதவன்னு அத்தனை பேரையும் முட்டாள் ஆக்குறீங்களே, உங்களைக் கண்டிப்பாரில்லையா? தண்டிப்பாரில்லையா?''

பேசி முடித்து ஜோதிடரின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான் குப்புசாமி.

பேசிகளுக்கிடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.