சனி, 27 ஏப்ரல், 2019

ஜென் கதைகளின் கதை!

பலராலும் மிக விரும்பிப் படிக்கப்படுபவை 'ஜென் கதைகள்'; குட்டிக் குட்டியான இக்கதைகள் உலக அளவில் மிக மிகப் பிரபலம்; பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஜென் கதைகள் எளிதாகப் புரிந்துகொள்ளத் தக்கவை. சுவாரசியமானவை. ஆழமான உள்ளர்த்தம் கொண்டவை. உலக அளவில் இவை பரவலாக வாசிக்கப்படுவதற்கான காரணங்கள் இவை.

இக்கதைகளை, கி.பி.6ஆம் நூற்றாண்டில் சீனாவில் அறிமுகப்படுத்தியவர் இந்தியாவிலிருந்து சீனா சென்ற போதி தர்மர் ஆவார்.

ஜென் என்னும் சொல் தியானம், உணர்தல் போன்ற பொருள்களை உள்ளடக்கியது. இப்பிறப்பை முழுமையாக உணர்ந்து வாழத் தூண்டுபவை இக்கதைகள்.

கி.பி.960 முதல் கி.பி.1141 வரை, சீன நாட்டுச் 'சங்' மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கதைகள் மக்களிடையே வெகு வேகமாகப் பரவின.

ஒரு காலக் கட்டத்தில், சீன தேசத்து ஆட்சியாளர்களின் ஆதரவு வெகுவாகக் குறைந்தபோது, ஜென் பிரிவு ஜப்பானில் தன் சிறகுகளை விரிக்கத் தொடங்கியது.

ஜென் பிரிவு இந்தியாவிலிருந்து சீனாவுக்கும் பின்னர் ஜப்பானுக்கும் சென்றாலும் இன்றளவில் ஜப்பானில் மட்டுமே நிலையானதோர் இடத்தைப் பெற்றுள்ளது.

*சென் புத்தமதம் மகாயான புத்தமதத்தின் ஒரு பிரிவு ஆகும். சீன அரசு மரபுகளில் ஒன்றான தாங் அரசமரபு காலத்தில் சான் புத்தமதம் என்ற பெயரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சீன சமயத்தின் தத்துவக்கோட்பாடான தாவோயிசத்தால் வலிமையாகப் பாதிக்கப்பட்டு சீன புத்தமதத்தின் ஒரு தனிப்பிரிவாகச் சான் புத்தமதம் வளர்ந்தது. Wikipedia*
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: 'சீன மதங்கள்', New Horizon Media Pvt.Ltd., Chennai.

புதன், 24 ஏப்ரல், 2019

புதிய உயிரினங்களின் தோற்றத்திற்கான 'காலவரம்பு' என்ன?

பரிணாம வளர்ச்சி காரணமாகவே உயிரினங்கள் பல்கிப் பெருகின என்றார் அறிவியல் அறிஞர் டார்வின்.

''இந்தப் பரிணாம வளர்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்வு எனில், இதனால் புதிய புதிய உயிரினங்கள் தினம் தினம் தோன்றிக்கொண்டே இருக்கின்றனவா?'' -இப்படியொரு சந்தேகம் நம் போன்றவர்களுக்கு எழுவது இயல்பு. விஞ்ஞானிகளின் பதில்.....

''இல்லை'' என்பதே.

''பரிணாம வளர்ச்சி என்பது குறைவான கால அளவில் நிகழ்வதில்லை. அதாவது, சில ஆண்டுகளிலோ சில நூறு ஆண்டுகளிலோ நடைபெறுவதல்ல; மிகப் பல ஆயிரம் ஆண்டுகளிலான படிப்படியான வளர்ச்சிக்குப் பின்னரே புதிய உயிர்கள் தோன்றுகின்றன. ஆகவே....

நாம் வாழும் காலத்தில் ஒரு புத்தம் புதிய உயிரினம் தோன்றியிருப்பதைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல'' என்கிறார்கள், அனைத்தும் கடவுளின் படைப்பே என்பதை மறுத்துரைக்கும் அறிவியல் பேரறிஞர்கள்.
=================================================================================
நன்றி: 'உயிர்கள்', New Horizon Media Pvt. Ltd, Alwarpet, chennai, 600 018.