சனி, 8 ஜூன், 2019

பொய் சொல்லலாம் வாங்க!!![10% கற்பனை; 90% உண்மை]

மருத்துவ மனையிலிருந்த நண்பரைப் பார்க்க ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தேன்.

பழைய பேருந்து நிலையத்திற்குச் சற்றுத் தொலைவிலிருந்த திவள்ளுவர் சிலையைக் கடந்து மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் திரும்பியபோது, ஒரு தேனீர்க் கடையின் முன்னால் திரண்டிருந்த கும்பல் என் கவனத்தைக் கவர்ந்தது.

ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு முதியவரிடம், “என்னங்க ஐயா கும்பல்?” என்றேன்.

“டீ குடிக்க வந்த ரெண்டு பேருக்குள்ள ஏதோ தகராறு.  கும்பல் சேரவும் ரெண்டு பேர் ஜாதிக்காரங்களும் தலையிட ஆரம்பிச்சுட்டாங்க. எந்த நேரத்திலும் ‘கைகலப்பு’ நேரலாம். அது பெரிய ஜாதிக்கலவரமாக மாறவும் வாய்ப்பிருக்கு” என்றார் ’அனுபவசாலி’யான அந்தப் பெரியவர்.

அடுத்து நடக்கவிருப்பதை அறியும் ஆர்வம் இருந்தாலும், நண்பர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததால், நின்று கவனிக்க நேரமில்லை; ஸ்கூட்டரைக் கிளப்பினேன்.

நேர்ச் சாலையில், அரை நிமிடப் பயணம். இடப்புறம் திரும்ப வேண்டும். எதிரே வந்த ஒரு பைக்காரர், உரத்த குரலில், “என்ன சார் அங்கே கும்பல்?” என்று கேட்டு வழி மறிப்பது போல் நின்றார்.

“ஏதோ ஜாதிப் பிரச்சினை” என்று சொல்லிவிட இருந்தேன்; சொல்லவில்லை. அப்படி நான் சொல்ல, அந்த இரண்டு சாதிகளில் ஒன்றைச் சார்ந்தவராக இவர் இருந்துவிட்டால், நிச்சயம் தன் ஆட்களுடன் கை கோர்ப்பார். அதைத் தடுக்கும் நல்லெண்ணத்துடன், ”ரெண்டு குடிகாரனுங்க சண்டை போட்டுக்குறானுங்க. அதை வேலை வெட்டி இல்லாத ஒரு கும்பல் வேடிக்கை பார்க்குது. நீங்க போங்க சார். போயி உங்க வேலையைப் பாருங்க” என்று ஒரு பொய்யை உதிர்த்துவிட்டு வண்டியை நகர்த்தினேன். ஒரு ஜாதி மோதலைத் தடுப்பதில், என்னாலான சிறு பங்கைச் செலுத்திவிட்ட திருப்தி எனக்கு.

பொய் சொல்லக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆனா, நல்லதை நினைச்சி ஒரு பொய் சொல்லிட்டேன்.

என்னிடத்தில் நீங்க இருந்திருந்தா நீங்களும் இப்படி ஒரு பொய்யைச் சொல்லியிருப்பீங்கதானே?
========================================================================================
எப்போதோ எங்கேயோ படித்த நினைவு வருகிறதா? உங்களுக்கு நினவாற்றல் ரொம்பவே அதிகம்! 2013இல் 'கடவுளின் கடவுள்' தளத்தில் அடியேன் கிறுக்கியது!! ஹி...ஹி...ஹி!!!

வியாழன், 6 ஜூன், 2019

பதிவர் 'அம்பி' கிருஷ்ணமூர்த்தி[s]க்கு ஆயிரம்கோடி நம்ஸ்காரங்கள்!!!

இந்தப் பதிவை எழுத நேர்ந்ததற்காக, சமற்கிருதத்தைப் புறக்கணித்துத் தமிழுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மறைந்த உ.வே சாமிநாத அய்யர் வழிவந்தவர்களிடமும், மனப்பூர்வமாய் இன்று தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் 'தமிழ் இந்து' நாளிதழ் நிறுனத்தார் போன்றவர்களிடமும் என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்மணத்தின் மூலம் இன்று பெரிதும் பிரபலமடைந்திருக்கும் பதிவர்களில் முன்னணியில் இடம்பிடித்திருப்பவர், '[சு]வாசிக்கப் போறேங்க'   என்னும் தளத்தில் அனல் பறக்க அரசியல் பதிவுகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கும் [அம்பி]கிருஷ்ணமூர்த்தி.s அவர்கள்.

தன் பரம்பரை எதிரிகளான திராவிடக் கட்சிக்காரர்கள் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகும்வகையில், 'நாய்கள்', 'ஓநாய்கள்', 'விபச்சாரிகள்' போன்ற சொற்களால் இவர் விளாசித் தள்ளுவதைப் பார்க்கும்போது, ''அடேங்கப்பா, எத்தனை தைரியசாலி இந்த அம்பி!'' என்று வியக்கத் தோன்றுகிறது.

திராவிட இயக்கத்தவர்கள் இவரின் அரசியல் எதிரிகள் என்றால், ''நான் தமிழன்'', ''தமிழன்டா'' என்று சொல்பவர்களெல்லாம் இவரின் 'இனப் பகைவர்கள்' ஆவார்கள். திராவிடக் கட்சிக்காரர்களை அயர்ச்சி சிறிதுமில்லாமல் அடுத்தடுத்து வெளியிடும் பதிவுகள் மூலம் அதிர்ச்சிக்குள்ளாக்கும் இவர், சந்தடி சாக்கில் தமிழின உணர்வாளர்களையும் சாடுவதை  வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார்.

தமிழப் பற்றாளர்களை இவர் கிண்டலடிப்பது, மேலோட்டமாக இவரின் பதிவுகளைப் படிப்பவர்களுக்குப் புரியாது. அத்தனை நுணுக்கமாய்த் தாக்குதல் தொடுப்பதில் வல்லவர் இந்த 'அம்பி' கிருஷ்ணமூர்த்தி.

இன்று [06.06.2019] இவர் தமிழ்மணத்தில் இணைத்துள்ள பதிவின் தலைப்பு.....

ஏட்டிக்குப் போட்டி! அதுவும் #தமிழேண்டா இஷ்டைலில்!http://suvasikkapporenga.blogspot.com/2019/06/blog-post_40.html


[தமிழில், 'ட' எழுத்தை முதலாவதாகக் கொண்ட சொற்களின் முன்னால் 'இ' சேர்ப்பது மரபு அல்லவா? அதைக் கிண்டலடிக்கும் வகையில் 'இஷ்டைல்' என்று எழுதுகிறார் வம்புதும்பு பேசுவதில் கில்லாடியான இந்த அம்பி கிஷ்ணமூர்த்தி.

#நரேந்திர மோடி அமைச்சரவையில் மோடிக்கு அடுத்த இடத்தில் யார் என்ற கேள்விக்கு விடைகிடைத்து விட்டதாக தி டெலிகிராப் நாளிதழ் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது இப்படி...# 

என்றிவ்வாறாக, டெலிகிராஃப் நாளிதழை விமர்சனம் செய்யும் இந்த அம்பி [அதிமேதாவித்தனத்தில் ஹெச்.ராஜாவின் தம்பி], தமிழேண்டா இஸ்டைலில் என்றதன் மூலம் தமிழன்டா என்று சொல்லிப் பெருமைப்படும் தமிழர்களெல்லாம் முட்டாள்கள், அயோக்கியர்கள், இளிச்சவாயர்கள் என்கிறார்.

உண்மையில், இந்த அம்பி மகா மகா மகா மகா மகா புத்திசாலிதான். தமிழ்நாட்டில் தி.மு.க.அணி வென்றது போல மத்தியில் காங்கிரஸ் அணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால், 'இப்படி எழுதினால் என்னவெல்லாம் பரிசுகள் கிடைக்கும்' என்பது இந்த அம்பிக்குப் புரிந்தே இருக்கும். ஆனால் வெற்றி பெற்றவர்கள் அம்பியின் அபிமானக் கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லவா?

யாரை எப்படித் திட்டி எழுதினாலும் ராஜாதிராஜரான ஹெச். ராஜா அண்ணனும்  இந்துத்துவா ஆதரவுக் கட்சிக்காரர்களும் தன்னைப் பாதுகாப்பார்கள் என்பதால் அம்பி புகுந்து விளையாடுகிறார்.

கொஞ்சமும் எதிர்பாராத வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அம்பி அடுத்த வினாடியே அந்த ஆட்சியாளர்களின் ஆதரவாளராக மாறிவிடுவார் என்பதும் அறியத்தக்கது.

உண்மையில் 'அம்பி'கிஷ்ணமூர்த்தி உலகமகா புத்திசாலிதான். அவரிடம் கற்றுக்கொள்வதற்குரிய சங்கதிகள் நிறைய உள்ளன.