புதன், 31 ஜூலை, 2019

ஐயகோ பாவம் அத்தி வரதர்!!!

‘அத்தி வரதர் இருக்க வேண்டிய இடம் குளமா,கோயிலா?’ என்னும் தலைப்பில் நேற்று[30.07.2019] இரவு 10.00 மணிக்கு நெற்றியில் விபூதி பூசிய ஒருத்தரும் நாமம் போட்ட இன்னொருத்தரும் சன் தொலைக்காட்சியில்[பகுத்தறிவுப் பரம்பரையில் வந்தவங்களுக்குச் சொந்தமானது] விவாதம் பண்ணினாங்க.
அத்தி வரதர் க்கான பட முடிவு
விவாதம் ரொம்பக் காரசாரமாவே ஆரம்பிச்சுது. அதைப் பின்தொடரவும் விவாதத்தில் வென்றவர் யாருன்னு அறிந்துகொள்ளவும் ரொம்பவே ஆசைப்பட்டேன். அந்த ஆசை நிறைவேறல. 

‘அத்தி வரதர் இருக்க வேண்டிய இடம் குளமா, கோயிலா?’ங்கிற தலைப்பைப் பார்த்ததுமே வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பிச்சதுதான் காரணம்.

சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியலைங்க.. சிரிச்சிச் சிரிச்சி ரெண்டு கண்ணிலேயும் கண்ணீர் நிறைஞ்சு வழிஞ்சதுல விவாத நிகழ்ச்சியைப் பார்க்க முடியாம போச்சு. கட்டுக்கடங்காத சிரிப்புக்குக் காரணம் என்னன்னு கேட்குறீங்களா?

பல ஆண்டுகளா குளத்துக்குள் கிடந்த அத்தி வரதரைத் தூக்கிவந்து கோயிலில் படுக்க வைச்சாங்க. அது சயனம் கோலமாம். தரிசனம் பண்ணினா செத்தப்புறம் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்னு ஊடகங்களுக்குத் தகவல் சொல்ல, அவங்களும் இதை ஊதிப் பெருசாக்கினாங்க. மக்கள் கூட்டம் அலைமோதிச்சி. சொர்க்கத்தில் இடம் பிடிக்கறதுன்னா சும்மாவா?

நாளையிலிருந்து நின்ற கோலத்தில் வரதர் தரிசனம் தருவாராம்.

கோயிலுக்குள் இருந்த வரதரைக் குளத்துக்குள் தூக்கிப் போடுறது; அப்புறம், தூக்கிவந்து கோயிலுக்குள் படுக்க வைக்கிறது; நிற்க வைக்கிறதுன்னு வரதரைப் படாத பாடுபடுத்துறாங்க இந்த மனுசங்க.

இதுல எதுக்காவது வரதர்கிட்டே இவங்க ‘permission' வாங்கினாங்களான்னா, இல்ல. தரமாட்டார்னு பயப்படுறாங்களா? கனவுல வந்து சொன்னாருன்னு அடிச்சிவிட்டாப் போதுமே. பக்தி விசயம்கிறதால பக்தகோடிகள் யாரும் சந்தேகம் கிளப்ப மாட்டாங்க.

வரதரின் நின்ற கோலத் தரிசனம் முடிஞ்சதும் மறுபடியும் குளத்துக்குள் சயன கோலத்தில் கிடத்துறது வழக்கமாம்.

இதுக்குத்தான் இப்போ எதிர்ப்புக் கிளம்பியிருக்கு. கோயிலுக்குள்ளேயே அவர் இருக்கணும்னு சிலர் சொல்ல, அது விவாதத்துக்குரியதா ஆயிடிச்சி. இதன் விளைவுதான் ‘சன்’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற இரு நபர்களுக்கிடையேயான விவாதம்.

காரசாரமான இந்த விவாதம்தான் எனக்குள் அடங்காத சிரிப்பை வரவழைச்சுது. அபூர்வ சக்தி படைத்த அத்தி வரதர் இருக்கவேண்டிய இடத்தையும், இருத்தற்குரிய கோலத்தையும் முடிவு செய்கிறவர்கள் அற்ப மனிதர்களா என்பதை நினச்சிச் சிரிச்சேன்...இரவு உறங்கப்போகும்வரை சிரிச்சேன்; நடுநடுவே உறக்கம் கலைஞ்சி சிரிச்சேன்.

காலையில் எழுந்தப்புறமும் இது குறித்த நினைப்பு வந்தபோதெல்லாம் சிரிச்சேன்.

இன்னமும் சிரிப்பு அடங்கலீங்க. சிரிப்பைக் கட்டுப்படுத்திட்டுத்தான் இந்தப் பதிவை எழுத ஆரம்பிச்சேன்னா பாருங்களேன்!
=================================================================================

திங்கள், 29 ஜூலை, 2019

சிந்தனைக்கு எல்லை உண்டா?!

#விஞ்ஞானி ஐன்ஸ்டைன் காகிதத்தில் கணக்குப் போட்டுத்தான் ஒப்புமைத் தத்துவத்தைக் கண்டறிந்தார். அவர் சொல்லியுள்ள ஒரு கருத்துரை நம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. அது.....‘ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் நான் சிந்தித்தேன். அதற்குப் பிறகு என் மனம் திடீரென்று எங்கோ தாவிச் சென்று இந்தத் தத்துவத்தைக் கண்டறிந்தது#
மனம் க்கான பட முடிவு
‘மனோசக்தியின் அற்புத ஆற்றல்’[ராஜி புத்தக நிலையம், நாகப்பட்டினம்; முதல் பதிப்பு: 2015] என்னும் தம் நூலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார் பி.சி.கணேசன் என்னும் எழுத்தாளர். ஐன்ஸ்டைனின் கூற்றுக்கான ஆதாரம் எதையும் நூலாசிரியர் காட்டினார் அல்லர்.

ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் விஞ்ஞானி சிந்தித்தார் என்கிறார் பி.சி.கணேசன். அதென்ன குறிப்பிட்ட எல்லை? சிந்திப்பதற்கு எல்லையோ வரம்போ உண்டா? இல்லையே. அப்புறம் எப்படி ஒரு எல்லைவரைதான் சிந்தித்ததாகச் சொன்னார்?

‘மனம் தாவிச் சென்றது’ என்பதும் விவாதத்திற்குரியது.

நம்மை முற்றிலுமாய் இயக்குவதும் சிந்திக்க வைப்பதும் மூளைதான். மனம் என்று ஒன்று இருப்பதே இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அது தாவிச் செல்வது எப்படி?

ஆக, ஐன்ஸ்டீனின் கூற்றுக்குப் போதிய விளக்கம் தராததோடு உரிய ஆதாரங்களையும் இணைக்காதது பெரும் தவறு ஆகும்.

“நான் விண்வெளியிலிருந்து எண்ணங்களைப் பெறுவதுண்டு” என்று விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னதாகவும் இதே நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கட்டுரை ஆசிரியர். இதற்கும் ஆதாரம் ஏதும் தரப்படவில்லை. விண்வெளியிலிருந்து பெறுவது குறித்த விளக்கமும் இல்லை.

எதையாவது எழுதிப் பிரபலம் ஆகவேண்டும் என்று நினைக்கிற நம் எழுத்தாளர்களில் பெரும்பாலோருக்கு, விவாதத்திற்குரிய கருத்துகளை முன்வைக்கும்போது அவற்றிற்கான சான்றுகளையும் தருதல் வேண்டும் என்னும் பொறுப்புணர்ச்சி கொஞ்சமும் இல்லை என்பது வருந்துதற்குரியது.
=================================================================================