ஞாயிறு, 6 அக்டோபர், 2019

ஹரிபோல் ஹரிபோல் ஹரி ஹரிபோல்!!!

“இந்துமத முன்னோடிகள் ஏராளமான கற்பனைக் கதைகளைச் சொல்லிச் சொல்லி[மற்ற மதத்தவரும் சொல்லியிருக்கிறார்கள். அவை எண்ணிக்கையில் குறைவு] மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்த்துவிட்டார்கள். இனியும் அம்மாதிரிக் கதைகளை நம்பிச் சீரழியக்கூடாது” என்று சொல்வதோடு, அவ்வப்போது எடுத்துக்காட்டாகச் சில கதைகளைப் பதிவு செய்து வாசிக்கத் தூண்டுவதை வழக்கமாக்கிகொண்டிருப்பவன் நான்.

என் நோக்கத்தைப் புரிந்துகொள்ள மனமின்றி, “கற்பனை என்று நீ சொல்கிற பல கதைகள் அற்புதமான ஆன்மிக நெறி வளர்க்கும் கதைகளாகும். அவற்றை நாங்கள் நம்புகிறோம். நீ நாத்திகன். எங்களுக்குப் புத்தி சொல்லும் அருகதை உனக்கு இல்லை. இனி இப்படியெல்லாம் எழுதுவதை நிறுத்து” என்று என்னை எச்சரிப்பதைப்[மின்னஞ்சல் மூலம்] பக்தகோடிகள்  சிலர் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

‘அவர்களின் எச்சரிக்கைகளை நான் பொருட்படுத்துவதில்லை. வழக்கப்படுத்திக்கொண்ட பணியைத் தொடர்வோம்’ என்பதே என் நிலைப்பாடு.

’பிரபுபாதா’ என்றொரு ஆன்மிக தாதா. உலகெங்கும் பல கோயில்களையும் யோகா மையங்களையும் உருவாக்கியதோடு, ‘இஸ்கான்’ என்னும் ‘ஹரே கிருஷ்ணா’ அமைப்பை ஏற்படுத்தி லட்சக்கணக்கான தொண்டர்களின் ஒத்துழைப்புடன் ஆன்மிகப் பணி புரிந்தவராம். அவர் ஆற்றிய ஒரு சொற்பொழிவைக் ‘கிருஷ்ண அமுதம்’ என்னும் பக்தி இதழ் வெளியிட்டிருக்கிறது.

அதன் நகல் பதிவு கீழே.

“ஹரிபோல்”[இதன் பொருளைக் கூகுளில் தேடினேன்...தேடினேன்...தேடிக்கொண்டிருக்கிறேன்!] என்று உச்சரித்துக் கரகோஷம் எழுப்பிய பக்தர்களைப் போன்றவரா நீங்கள்?

ஓரிரு நாட்களில் செய்யும் ஹரி நாம சங்கீர்த்தனத்தாலே அறுபதாயிரம் வருடம் செய்த தவத்தின்[இது சாத்தியமா?] பயனை அடைய முடியும் என்று நம்புகிறீர்களா? உண்மையாகவா?

“ஆம்” எனின் நீங்கள் வாழ்க! நீடுழி வாழ்க!!

வெள்ளி, 4 அக்டோபர், 2019

துறவி பரமாச்சாரியார் ஏன் அழுதார்?

#இது ஸ்ரீரங்கத்துச் சம்பவம்.

ஆலய நுழைவுப்போராட்டங்கள் நடந்த காலக்கட்டம் அது.

கூட்டம் கூட்டமாய்க் கோயிலின் வாசல் முன் நின்றுகொண்டு, கோயிலில் உள்ள கடவுள்களைத் தரிசிக்கத் தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று அனுமதி மறுக்கப்பட்டவர்கள் அப்போது போராடினார்கள்.

ஸ்ரீரங்கத்திலும் அது நடந்தது.

ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குள் நுழையத் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும், ரங்கநாதரைத் தரிசிக்கத் தங்களுக்கும் உரிமை தேவை என்றும் முழக்கங்கள் எழுப்பிக்கொண்டிருந்தார்கள் அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.

அவர்கள் கோயிலின் முன்னால் திரள ஆரம்பித்தபோதே, அதைத் தடுத்து நிறுத்துவதற்காக, அக்கிரகாரவாசிகள் ஒன்றுகூடி ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆளாளுக்கு ஒரு யோசனையை அள்ளித் தெளித்தவாறிருந்தனர்.

இளம் பிராயத்துப் பிராமணர்கள், “நாம் எல்லாரும் கோயில் வாசலில் நின்னுப்போம். அவா வந்தா அடிச்சி வெரட்டிடலாம்” என்று சொல்லிக் குதித்தார்கள்.

ஒரு நடுத்தர வயதுக்காரர், “அபிஷ்டுகளா, அவனுக மேல நம் கை பட்டா தீட்டாயிடும். கை படாம வெரட்டணும்” என்று ஆச்சாரமான யோசனை ஒன்றைத் தெரிவித்தார்.

‘ஆம்பிளைகள் யாரும் போக வேண்டாம். கோயிலுக்குப் போற மாதிரி அர்ச்சணைத் தட்டில் மிளகாய்ப் பொடியை நம்ம பொம்மனாட்டிகள் மறைச்சி வெச்சிண்டு சாமி கும்பிடுற மாதிரி போகட்டும். அவா பக்கதில் போனதும் அவா மேல மிளகாய்ப் பொடியைத் தூவட்டும். அவா எல்லாரும் அடிச்சிபிடிச்சி ஓடிடுவா’ என்று ஏகமனதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

மடிசார் கட்டிண்டு முப்பதுக்கும் மேற்பட்ட மாமிகள் கிளம்பினார்கள்.

முன்னேற்பாட்டின்படி, போராட்டக்காரர்களை நெருங்கியதும் அவர்கள் மீது மிளகாய்ப் பொடியை இறைத்தார்கள்.

போராட்டம் நடத்தியவர்கள் கண்ணெரிச்சல் தாங்க இயலாமல் கூச்சலிட்டவாறே கதறியபடி கலைந்துபோக முயன்றார்கள்.

பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார், மொளா பிராமணப் பொம்மனாட்டிகள் மீது தடியடி நடத்தி அவர்களை கலையச் செய்தார்கள்.

இதை நான் சங்கராச்சாரியாரிடம் சொன்னபோது, “ஐயய்யோ, அபச்சாரம்...அபச்சாரம். போலீஸ்காரங்க நம்ம பொம்மனாட்டிகளை அடிச்சுட்டாளா?” என்று கேட்டவாறே கண்ணீர்விட்டு அழுதார் அவர்.

அவர் அழுது அதுவரை நான் பார்த்ததில்லை#
===========================================================================
‘இந்துமதம் எங்கே போகிறது?’ என்னும் தம் நூலில் இந்த நிகழ்வைப் பதிவு செய்தவர் ‘ராமானுஜ தாத்தாச்சாரியார்’