புதன், 13 ஜனவரி, 2021

விவேகானந்தரின் 'விளங்காத' கடவுள் கொள்கை!

#"நம் மக்களை வாழ வைப்பது மதமல்ல; தொழில் கல்வியே" என்று அடித்துக் சொன்னவர்; "ஏழைகளுக்கு உணவும் உடையும் வேண்டும். ஜாதிக் கொடுமைகள் ஒழிய வேண்டும்" என்றெல்லாம் மேடைதோறும் முழங்கியவர்;  இந்தியாவைப் புனித மண்ணாகக் கருதியவர்;  இளைய தலைமுறையினரின் சிந்தனையில் புதிய அலைகளை உருவாக்கியவர்...#  என்றிப்படி, விவேகானந்தர் பெற்ற சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால்.....

அவர் கொண்டிருந்த கடவுள் கொள்கை மட்டும் நம்மை மண்டை காய வைக்கிறது!

சிறுவனாக இருந்தபோதே நரேந்திரனுக்கு[விவேகானந்தர்]த் 'தியானம்' செய்வதில் ஈடுபாடு இருந்ததாம். கடவுளைக் காண வேண்டும் என்ற வெறி அவரை ஆட்டிப் படைத்ததாம்.

காணும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே 'கடவுள் ஒருவரே' என்ற பிரம்மசமாஜக்  கொள்கைகளைக் கடைபிடித்தார் என்கிறது அவர் வரலாறு.

ஒரு கட்டத்தில், அதில் திருப்தியடையாமல், "கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் உண்மையான வழிபாட்டுக்குச் செவிமடுத்து, பக்தன் முன் தோன்ற வேண்டும்" என்று நினைத்தார்.

"இறைவா, உன் உண்மையான வடிவத்தைக் காண என்னைத் தகுதி உடையவன் ஆக்கு" என்று தினம் தினம் அவரை வேண்டினார். பலன் இல்லை.

அறிஞர்கள், மதத் தலைவர்கள் என்று யாரைக் கண்டாலும், "கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார். பதில் இல்லை.

கடவுளைப் பார்த்தவர் என்று சொல்லப்படும் ராமகிருஷ்ணரைச்[பரமஹம்சர்] சந்தித்தபோது அவரிடமும் இதே கேள்வியை முன் வைத்தார்.

ராமகிருஷ்ணர், ‘உன்னை எப்படிப் பார்க்கிறேனோ, உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ; அதே போல, கடவுளை உனக்கும் காட்டுகிறேன்" என்றார்.

காட்டினாரா அவர்?

ஊஹூம்!

அந்தக் கடவுளின் அவதாரம்[ராமகிருஷ்ணர்] தொண்டைப் புற்றுநோயால் அவதிப்பட்டுத் தன் 33ஆம் வயதில் இறந்த அந்த வினாடிவரை காட்டவில்லை! 39 வயதுவரை வாழ்ந்த இந்த வீரத் துறவி விவேகானந்தரும் அந்த மகான் மூலம் கடவுளைப் பார்த்ததாக அறிவிக்கவே இல்லை.

ஆனால், உணர்ந்ததாக மட்டுமே  சொல்கிறார்.

"உன்னை எப்படிப் பார்க்கிறேனோ, உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ அதே போலக் கடவுளைக் காட்டுகிறேன்" என்று சொன்னாரே ராமகிருஷ்ணர்,  அது என்ன பொய்யா, மெய்யா?

பொய்...பொய்யே.

தன்  குரு  மூலம் 'கடவுளை உணர்ந்தேன்' என்கிறாரே விவேகானந்தர் , அது எப்படிச் சாத்தியமாயிற்று?

அவரே சொல்கிறார்.....

".....அன்று அவர்[ராமகிருஷ்ணர்] தொட்டபோது முற்றிலுமாய் என் புற உணர்வை இழந்தேன்...... வண்டிகள் வந்தன. ஆனால், மற்ற நேரங்களைப் போல் ஒதுங்க வேண்டும் என்று தோன்றவில்லை[எதிரே வந்த வண்டி நிற்காமல் வந்திருந்தால் அப்போதே பரலோகம் சேர்ந்திருப்பார் விவேகானந்தர்!]. அந்த வண்டி எதுவோ அதுவே நான் என்று தோன்றியது. என் கைகால்கள் உணர்வற்றவை போலிருந்தன. சில வேளைகளில் சாப்பிடும்போதே தரையில் சாய்ந்துவிடுவேன். என் தாய் பயந்தார். எனக்குப் பயங்கர நோய் வந்துள்ளது என்று நினைத்தார்...."

அவர் தாய் சொல்வது போல, விவேகானந்தர் மனநோய்க்கு ஆளாகியிருந்தார். அதன் காரணமாகத் 'தன் நிலை' இழந்திருந்தார். இவ்வாறு தன்னிலை இழப்பதைக் கடவுளை உணர்ந்த ஒரு நிலை எனக் கருத முடியுமா? 

கடவுளை உணர்ந்ததாகச் சொல்லும் அவர், அவ்வாறு உணர்ந்த அனுபவத்தையாவது பிறர் அறிய / உணர விவரித்திருக்கிறாரா?

இல்லை.

'ஏழைகளுக்காகக் கடவுள் ஏதும் செய்ததில்லை; அவர் இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று காரசாரமாகப் பேசிய விவேகானந்தர் எப்படி மனம் மாறினார்?

“ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ, சமயத்திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை கிடையாது” என்றாரே, அப்புறம் எப்படி, தான் காணுகிற ஒவ்வொரு பொருளும் கடவுளே என்றார்?

கடவுளின் அவதாரமாகக் கருதப்படும் ராமகிருஷ்ணர், புற்று நோய்க்கு ஆளானது ஏன்? அதிலிருந்து விடுபட முடியாமல் போனது எதனால்?

“மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக்கொள்கிறான். தனக்குத்தானே அமைத்துக்கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல” என்று சொல்லித் 'தலைவிதி'த் தத்துவத்தை எதிர்த்தவர், பின்னர் "மனிதனே கடவுள்" [மனிதனை மனிதனாகவே பார்க்கலாமே. கடவுளை எதற்கு இழுக்கிறார்?] என்கிறார். ஏன் இந்த முரண்பாடு?

மேற்கண்ட கேள்விகள் என்னுடையவை. பதில்கள் உங்களுடையவை; உங்கள் மனப்பக்குவத்திற்கேற்ப.

[[23.04.2014இல் எழுதியது]
********************************************************************************************
விவேகானந்தர் பற்றிய தகவல்களைப் பெற, பசுமைக்குமாரின் 'விடிவெள்ளி விவேகானந்தர்'[அறிவுப் பதிப்பகம், சென்னை] என்னும் நூலும், இணையப் பதிவுகளும் உதவியாக இருந்தன. சில தகவல்கள் ஏற்கனவே பலராலும் அறியப்பட்டவை.

செவ்வாய், 12 ஜனவரி, 2021

வாழ்க்கை வாழ்வதற்கே! கடவுள், மதம், ஆன்மா, ஆவி, மறுபிறப்பு, சாதிபேதம் என்றெல்லாம் விவாதித்து வீணடிக்க அல்ல!!

கடவுள், படைப்பு நோக்கம், பிரபஞ்சத் தோற்றம்  என்று புரியாத எதைப்பற்றியெல்லாமோ புரியாமலே பேசப்படுவது தத்துவம். அதென்ன வாழ்க்கைத் தத்துவம்?

எளிதாகப் புரிவதும், சுவாரசியமானதும் ஆன பயனுள்ள பதிவு இது. வாசியுங்கள்.

இந்தப் பூமியின் வயசு ஏறத்தாழ[The age of the Earth is approximately] 4.54 ± 0.05 billion years (4.54 × 109 years ± 1%).[1][2][3][4 [-Wiki] என்று விஞ்ஞானிகள் அடிச்சிவிட்டிருக்காங்க.   

இவங்க சொல்றதெல்லாம் சரியா தப்பான்னு ஆராயறதுக்கான அறிவெல்லாம் நமக்கு இல்ல. கோடி கோடி ஆண்டுகள்னு பொத்தாம் பொதுவாச் சொல்ல மட்டும்தான்  நமக்குத் தெரியும்.

பூமியின் ஆயுசு இப்படின்னா, சூரியனுடையது இதைவிடவும் மிகப் பல மடங்கு அதிகம் என்கிறார்கள்.

சூரியனைவிடவும் பலப்பல மடங்கு பெருசான நட்சத்திரங்களின் ஆயுசு இன்னும் இன்னும் இன்னும் அதிகம். இதுகளுக்கு அப்பன், முப்பாட்டன் கொள்ளுப் பாட்டன், எள்ளுப்பாட்டன் எல்லாம் இருக்காங்க. அதுகளுடைய ஆயுசையும் கணக்குப் பண்ணிகிட்டுப் பொழுதைக் கழிக்கிறாங்க விஞ்ஞானிங்க.

எல்லார்த்தையும் உள்ளடக்கிய ஒன்னுதான் 'அண்டம்'கிறான்; அப்புறம் 'பிரபஞ்சம்'கிறான். 'வெளி'[Space]யில் அவ்வப்போது நிகழ்கிற பெருவெடிப்புகள் காரணமா இதுகளெல்லாம் தோன்றுவதும் அழிவதுமாக இருக்கிறதுகளாம்.

கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும் இந்த நிகழ்வுகளுக்கு 'முற்றுப்பெறுதல்' என்பதே இல்லை என்கிறார்கள். முற்றுப்பெறாத இம்மாதிரி நிகழ்வுகளை உள்ளடக்கிய பிரபஞ்ச[வெளி]த்தின்  ஆயுளோடு மனிதர்களுடைய ஆயுளையும் ஒப்பிட்டுப் பார்த்தா..... 

மனிதர்களுடைய ஆயுள் அற்பம்...அற்பம்...வெகு அற்பம்... அற்பத்திலும் அற்பம்[துல்லியமாகச் சொல்ல வார்த்தைகள் இல்லை].

மனுசங்க ஆயுள் நூறு[சிலர் கூடக்குறைய வாழலாம்]. அதுல, தூங்கினது, துக்கிச்சது, பொறாமைப்பட்டது, கலகம் செய்ததுன்னு இப்படி விரயம் பண்ணினதையெல்லாம்  கழிச்சா, எஞ்சியிருப்பதுதான் அவர்களுடைய ஆயுள்.

அது எவ்வளவு தேறும்?

ஒரு அஞ்சு ஆண்டு?..... ஊஹூம்... பத்து?..... ஊஹூ...ஊஹூம்...... 

ஒரு பத்து ஆண்டுன்னே வைச்சுக்குவோம். 

இந்தப் பத்து ஆண்டுகளை எப்படிக் கழிக்கணும்?

தம்மையும் கவனிச்சிக்கணும். தம்மைச் சார்ந்தவங்களுக்கு மட்டுமல்லாம, ஒட்டுமொத்த மனுச குலத்துக்கும் மத்த உயிர்களுக்கும் உதவி செஞ்சி வாழணும். அப்படி வாழ்ந்து கழிச்சிருந்தாத்தான், அந்தப் பத்து வருசத்தையும் பயனுள்ள வகையில்  வாழ்ந்ததா அர்த்தம்.

எனவே, அடியேன் வலியுறுத்த விரும்புவது.....

சூது, வாது, வஞ்சகம், பொறாமைன்னு எத்தனையோ கெட்ட கெட்ட குணங்களுக்கு மனசில் இடம் தந்ததோடு, கடவுளைக் கற்பிச்சி மதங்களை உருவாக்கி, ஒருத்தனோடு ஒருத்தன் அடிச்சிகிட்டு லட்சம் லட்சமா செத்துத் தொலைஞ்சது மட்டுமல்லாம, ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம்னு எதையெதையோ கற்பனை பண்ணி, கணக்குவழக்கில்லாத மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகி, அந்தக் கொஞ்சமே கொஞ்சம் வாழ்நாளையும் வீணடிச்சாங்க மனுசங்க; இப்போதும் வீணடிக்கிறாங்க.

நாமும் வீணடிக்கலாமா?

கூடாதுங்க...கூடவே கூடாதுங்க!

வருகைக்கு நன்றிங்க!

===========================================================================