சனி, 3 ஏப்ரல், 2021

'கருத்தரித்தல்'ஐத் தடுக்கும் ஐந்து முக்கியக் காரணிகள்!

இன்றைய வாழ்க்கைச் சூழலில், 'கருவுறுதல்' என்பது இயற்கையாக நிகழாததால், உலகளவில் 15% அளவிலான தம்பதிகள் அவதிப்படுவதாக ஓர் ஆய்வில்[‘இனப்பெருக்க உயிரியல் உட்சுரப்பியல்’ இதழில் வெளியானது] தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்படுவதாக உலகச் சுகாதார மையம் கூறுகிறது.

இவர்களுக்குச் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் அறியத்தக்கது.

ஆரோக்கியமற்ற சில பழக்கங்களைத் தவிர்த்து இயற்கை நெறிகளைப் பின்பற்றுவதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கீழ்க்காணும் குறைபாடுகள் பெரிதும் கவனிக்கத்தக்கவை.

உடற்பருமன்:

கருத்தரித்தலில் உடற்பருமன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடற்பருமன் அதிகரிப்பு அல்லது உடற்பருமன் குறைப்பு என இரண்டுமே, ஹார்மோன்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும். இவை கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும். இவை சில சமயங்களில் மாதவிடாய்ச் சுழற்சியையும் பாதிக்கும். எனவே, உடல் எடை சமநிலையில் இருக்க வேண்டியது மிக மிக மிக அவசியம்.

குண்டாவதாகக் கருதி காலை உணவைத் தவிர்ப்பது பெரும் தவறு.  ருசிக்காக அதிக அளவில் உண்பதும் தவறாகும்.

மரபியல் ரீதியாகவே உடற்பருமனாக இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம்.

இரும்புச்சத்துக் குறைபாடு:

இரும்புச்சத்துக் குறைபாடு இரத்தச் சோகையை ஏற்படுத்தும், இது கருத்தரிக்கும் வாய்ப்புகளைப் பாதிக்கும். எனவே, தினமும் உணவில் பச்சைநிறக் காய்கறி அல்லது கீரை வகைகளைச் சுழற்சி முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த உணவுகள் கருவுறுதலுக்குத் தேவையான இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மற்றும் சில பைட்டோநியூட்ரியன்ட்டுகளை வழங்கும் திறன் கொண்டவை. இரத்த ஓட்டத்தில் போதுமான அளவு இரும்புச்சத்து இருப்பின், அது மலட்டுத்தன்மையின் அபாயத்தைக் குறைக்கும்.

மதுவும் புகை பிடித்தலும்:

புகை பிடித்தல் நுரையீரலை மட்டுமின்றிக் கருவுறுதலையும் பாதிக்கும். ‘அமெரிக்கன் சொசைட்டி ஃபார் ரிப்ரொடக்டிவ் மெடிசின்’ இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சிகரெட் புகையில் காணப்படும் ரசாயனங்கள் பெண்களின் 'கருமுட்டைச் சிதைவு' விகிதத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட மற்றொரு ஆய்வில், அதிகப்படியாக மது குடிக்கும் பெண்களே, குழந்தையின்மைக் குறைபாடுகளை அதிக அளவில் எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம்:

சில சமயங்களில், உடல்நிலை சரியாக இருந்தாலும், மன அழுத்தம் அதிகமாக இருந்தால் கருத்தரித்தல் தாமதமாகும். மன அழுத்தம் என்பது, இன்றைய நவீன காலகட்டத்தில் முக்கியப் பிரச்சினையாக மாறிவிட்டது.  குறிப்பாக, மன அழுத்தம் இனப்பெருக்க ஹார்மோன்களைப் பாதிப்பதால் கருத்தரித்தல் தடைப்படும்.  

குழந்தையின்மையால் ஏற்படும் மன அழுத்தம் பெண்களுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. இதுபோன்ற சூழலில், யோகா மற்றும் நடைப் பயிற்சி செய்வது அவசியம். குறிப்பாக, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் வாழும்  பெண்களே மன அழுத்தம் காரணமாக அதிக அளவில் பாதிப்படைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவில் மருந்துகளின் வீரியம்:

இன்றைய உணவுப் பொருட்கள் அனைத்திலும், செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் அதிகமிருக்கின்றன. எனவே, தாய்மையடைய நினைப்பவர்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது.

நன்றி: https://www.nakkheeran.in/360-news/life/sad-couples-childless-pregnancy-unhappy-life

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

புணர்தல் இங்கே! கருத்தரித்தல் அங்கே!!

//"1978இல் உலகின் முதலாவது ``சோதனைக் குழாய் குழந்தை'' பிறந்ததில் இருந்து இந்த முறையில் 80 லட்சம் பேர் பிறந்திருக்கிறார்கள். கருமுட்டையில் மரபணு தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கான வசதிகள் அதி நவீனமயமாகிவரும் சூழ்நிலையில், இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் பெருமளவு அதிகரிக்கலாம்" என்கிறார் ஒரு பிரபல எழுத்தாளர்[பிரான்டன் அம்ப்ரோசினோ].

"என்னுடைய திடமான கணிப்பு என்னவென்றால் எதிர்காலத்தில் மக்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்வார்கள் - ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அது இருக்காது'' என்றிப்படிச் சொல்பவர் The End of Sex And The Future of Human Reproduction என்னும் புத்தகத்தின் ஆசிரியர் ஹென்றி டி.கிரீலி//[https://www.bbc.com/tamil/global-48896045].

"இன்னும் 20 முதல் 40 ஆண்டுகளில் உலகெங்கும் பெரும்பாலான மக்கள்[மருத்துவ வசதி மிக்கவர்கள்], சோதனைச்சாலையில் கருத்தரித்துக் கொள்வதை விரும்புவார்கள்'' என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

கருத்தரித்தலுக்கு முந்தைய மரபியல் பரிசோதனைகள் (PGD) எதிர்கொள்ளும் சட்டபூர்வ மற்றும் நெறிசார்ந்த சவால்கள் இப்புத்தகத்தில் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. "பெரும்பாலான மற்ற விசயங்களைப் போல, ஓரளவுக்கு உள்ளுறுப்புகளில் எதிர்மறையான தாக்கம் ஆரம்பத்தில் இருக்கலாம். ஆனால் பி.ஜி.டி. மூலமாகப் பிறக்கும் குழந்தைகள், காலப்போக்கில், பாலியல் உறவு இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்பவும் செய்வார்கள் என்றிவ்வாறு அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, சோதனைச்சாலைகளில் உருவாக்கப்பட்ட குழந்தைகளின் உலகில், பாலியல் உறவு மூலம் கருத்தரித்தலைச் சிறிய எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே விரும்புவார்களாம்.

ஆக,

'குழந்தை பெற்றுக் கொள்வதில் பாலியல் உறவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்ற நிலை உருவானால் - பாலியல் உறவு என்பதன் அர்த்தம், அதாவது, 'நோக்கம்' என்னவாக இருக்கும்?' -இது, எழுத்தாளர் பிரான்டன் அம்ப்ரோசினோ எழுப்பியிருக்கும் கேள்வி.

நம் பதில்,

'பாலுறவால் உருவாகும் இன்பத்தைப் பெறுவது மட்டுமே' என்பதாகத்தான் இருக்கும்.

நம் கேள்வி,

'உயிர்கள் அனைத்தும் உடலுறவு கொள்வதன் தலையாய நோக்கம் இனவிருத்திக்காக' என்னும் இயற்கை நெறியை, அல்லது, இறைவன் வகுத்ததாகச் சொல்லப்படும் விதியை மனிதர்கள் மாற்றியமைக்க முயல்வது மனித இனத்தை உயர்த்துமா, வீழ்த்துமா?!