திங்கள், 5 ஏப்ரல், 2021

கடவுள் கற்பிக்கப்படாமல் இருந்திருந்தால்.....

100 விழுக்காடு விலங்காக வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பு உண்டாக்கக் கற்றபோதே அவனது ஆறாவது அறிவு செயல்படத் தொடங்கிவிட்டது.

அது படிப்படியாக  வளர, ஒரு தலைவனின் ஆளுமையின் கீழ் குழு சேர்ந்து [பல்வேறு குழுக்களாக]வாழக் கற்றுக்கொண்டான்; பாதுகாப்பான குடியிருப்புகளை உருவாக்குதல், உணவைப் பதப்படுத்துதல், வேட்டைக்கான கருவிகளைப் படைத்தல் என்றிப்படி .....

மனிதனின் வாழ்க்கையைப் பாதுகாப்பானதாக மாற்றவும் வசதிகள் நிறைந்ததாக ஆக்கவும் அந்த ஆறாவது அறிவு பயன்பட்டது.

மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காக மட்டுமே அது பயன்படும் நிலை நீடித்திருந்தால்.....

கடவுளைக் கற்பித்து, அச்சுறுத்தி மனிதனின் பகுத்தறிவு முடக்கப்படாமல் இருந்திருந்தால்.....

மனித இனத்தின் முன்னேற்றம் இன்று இருப்பதைக் காட்டிலும் மிகப் பல மடங்கு அதிகரித்திருக்கும். மனிதன் வேற்றுக் கிரகங்களில் குடியேறியிருக்கக்கூடும்; அவனுடைய ஆயுள் நிச்சயமாகச் சில நூறுகளைக் கடந்திருப்பதும் சாத்தியமே!

அன்றிலிருந்து இன்றுவரை, கடவுளை நம்ப வைப்பதிலும், அவர் பற்றி விதம் விதமான கதைகளை இட்டுக்கட்டுவதிலும், அவை பற்றி விவாதிப்பதிலும், மத அழிப்பு நடவடிக்கைகளிலும், இம்மாதிரியான பிற செயல்களிலும் மனித அறிவில் பெரும் பகுதி வீணடிக்கப்பட்டுவிட்டது.

ஆதிமனிதன் இயற்கையின் சீற்றங்கள் கண்டு அஞ்சினான்.

சீற்றங்கள் கண்டு அஞ்சியதில் வியப்பில்லை; தவறுமில்லை. ஏனென்றால், தன்னைத் தாக்கி அழிக்கவல்ல அதீத சக்திகளைக்  கண்டு அஞ்சுவது உயிர்களின் இயல்பு.

அஞ்சியதோடு நில்லாமல், அந்த அழிவுச் சக்திகளையே அவன் வழிபட ஆரம்பித்ததுதான் பெரும் தவறாக அமைந்துவிட்டது. [நீரையும் நெருப்பையும் காற்றையும் மனித இனம் கடவுள்களாக வழிபட்டதும், இன்றும் வழிபடுவதும் அறியத்தக்கது]

வலியவனால் தாக்கப்பட்டபோது, எளியவன் அவனைப் பணிந்து  வழிபட்டுத் தன்னைக் காத்துக்கொண்ட அந்த வாழ்க்கை அனுபவம்தான் மனிதன் கடவுளை வழிபடக் காரணமாக அமைந்தது என்பது அனைவரும் உணர வேண்டிய உண்மை.

அந்த அடிப்படையில்தான் ‘மேலானவர்’ என்று நம்பப்பட்ட கடவுளும் மனிதர்களால் பணிந்து துதிக்கப்பட்டார்.

அறிவைச் செலவழித்து ஆழ்ந்து சிந்திப்பது என்பது அரிய செயல்.

மூளை உழைப்பு என்பது கடினமான ஒன்று.

தனக்கு வேண்டியவற்றை, அயராமல் ஓயாமல் நம்பிக்கை இழக்காமல் சிந்தித்துச் சிந்தித்து, உழைத்துப் பெறுவதைக் காட்டிலும், குறுக்கு வழியிலும் குறுகிய காலத்திலும் தன்னை வருத்திக் கொள்ளாமல் ஆசைப்பட்டதையெல்லாம்  அடைய நினைப்பதும் மனித குணம்தான் !

இக்காரணத்தால்.....

தன் விருப்பங்களை நிறைவேற்ற மனிதன் ‘கடவுள்’ என்ற ஒருவரை நாடியதில் ஆச்சரியம் இல்லை!

அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டிய கவுதம புத்தன் போன்ற அறிஞர்கள் கடவுளைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை; அந்த அறிஞர்களையே கடவுளாக்கியது மட்டுமல்ல, மனிதராய்ப் பிறந்து மனிதராகவே வாழ்ந்து மரித்தவர்களையே கடவுளின் மறுபிரதி ஆக்கி, 'மகான்' என்றும், 'அவதாரம்' என்றும் போற்றி வழிபட்டு, சிந்திக்கும் அறிவை மழுங்கடித்துக்கொண்டார்கள் நம் மக்களில் மிக மிக மிகப் பெரும்பாலோர்.

மக்களை மூடர்கள் ஆக்கியதில் மதவாதிகளின் பங்கு அளப்பரியது. மனிதனின் ஆறறிவு வளர்ச்சிக்குத் தடைக் கற்களாய் அமைந்தவர்கள் இவர்களே.

இவர்கள் கடவுளைக் காட்டி, மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல் தடுத்ததுடன் நில்லாமல், தம் பகுத்தறிவைப் பயன்படுத்தி அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய பல  அறிஞர்களைத் தண்டித்தார்கள். இதனால், மனிதனின் ஆறறிவு வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது.

‘ஆயிரம். ஆண்டுகள்தான் வாழ்ந்தென்ன பயன்? மனிதனை மனிதனாக வாழ வைத்திருப்பது கடவுள் நம்பிக்கைதானே? அந்த நம்பிக்கையை மனிதனின் அடிமனதில் ஆழப் பதித்தவர்கள் மதவாதிகள் அல்லவா?’ என்றெல்லாம் பக்தியுள்ளம் கொண்டவர்கள் நினைப்பது புரிகிறது. அது தவறு என்பது என் அசைக்க இயலாத நம்பிக்கை.

மனிதனை மனிதனாக, அதாவது, நற்பண்புகளும் உயர் குணங்களும் உள்ளவனாக வாழத் தூண்டியது அவனுக்கு இயற்கையாக வாய்த்த பகுத்தறிவுதான்; மதமோ கடவுள் நம்பிக்கையோ அல்ல. ஆழ்ந்து சிந்தித்தால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

சனி, 3 ஏப்ரல், 2021

'கருத்தரித்தல்'ஐத் தடுக்கும் ஐந்து முக்கியக் காரணிகள்!

இன்றைய வாழ்க்கைச் சூழலில், 'கருவுறுதல்' என்பது இயற்கையாக நிகழாததால், உலகளவில் 15% அளவிலான தம்பதிகள் அவதிப்படுவதாக ஓர் ஆய்வில்[‘இனப்பெருக்க உயிரியல் உட்சுரப்பியல்’ இதழில் வெளியானது] தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்படுவதாக உலகச் சுகாதார மையம் கூறுகிறது.

இவர்களுக்குச் செயற்கைக் கருத்தரிப்பு மையங்களை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் அறியத்தக்கது.

ஆரோக்கியமற்ற சில பழக்கங்களைத் தவிர்த்து இயற்கை நெறிகளைப் பின்பற்றுவதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கீழ்க்காணும் குறைபாடுகள் பெரிதும் கவனிக்கத்தக்கவை.

உடற்பருமன்:

கருத்தரித்தலில் உடற்பருமன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடற்பருமன் அதிகரிப்பு அல்லது உடற்பருமன் குறைப்பு என இரண்டுமே, ஹார்மோன்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும். இவை கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும். இவை சில சமயங்களில் மாதவிடாய்ச் சுழற்சியையும் பாதிக்கும். எனவே, உடல் எடை சமநிலையில் இருக்க வேண்டியது மிக மிக மிக அவசியம்.

குண்டாவதாகக் கருதி காலை உணவைத் தவிர்ப்பது பெரும் தவறு.  ருசிக்காக அதிக அளவில் உண்பதும் தவறாகும்.

மரபியல் ரீதியாகவே உடற்பருமனாக இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம்.

இரும்புச்சத்துக் குறைபாடு:

இரும்புச்சத்துக் குறைபாடு இரத்தச் சோகையை ஏற்படுத்தும், இது கருத்தரிக்கும் வாய்ப்புகளைப் பாதிக்கும். எனவே, தினமும் உணவில் பச்சைநிறக் காய்கறி அல்லது கீரை வகைகளைச் சுழற்சி முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த உணவுகள் கருவுறுதலுக்குத் தேவையான இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மற்றும் சில பைட்டோநியூட்ரியன்ட்டுகளை வழங்கும் திறன் கொண்டவை. இரத்த ஓட்டத்தில் போதுமான அளவு இரும்புச்சத்து இருப்பின், அது மலட்டுத்தன்மையின் அபாயத்தைக் குறைக்கும்.

மதுவும் புகை பிடித்தலும்:

புகை பிடித்தல் நுரையீரலை மட்டுமின்றிக் கருவுறுதலையும் பாதிக்கும். ‘அமெரிக்கன் சொசைட்டி ஃபார் ரிப்ரொடக்டிவ் மெடிசின்’ இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, சிகரெட் புகையில் காணப்படும் ரசாயனங்கள் பெண்களின் 'கருமுட்டைச் சிதைவு' விகிதத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட மற்றொரு ஆய்வில், அதிகப்படியாக மது குடிக்கும் பெண்களே, குழந்தையின்மைக் குறைபாடுகளை அதிக அளவில் எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம்:

சில சமயங்களில், உடல்நிலை சரியாக இருந்தாலும், மன அழுத்தம் அதிகமாக இருந்தால் கருத்தரித்தல் தாமதமாகும். மன அழுத்தம் என்பது, இன்றைய நவீன காலகட்டத்தில் முக்கியப் பிரச்சினையாக மாறிவிட்டது.  குறிப்பாக, மன அழுத்தம் இனப்பெருக்க ஹார்மோன்களைப் பாதிப்பதால் கருத்தரித்தல் தடைப்படும்.  

குழந்தையின்மையால் ஏற்படும் மன அழுத்தம் பெண்களுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. இதுபோன்ற சூழலில், யோகா மற்றும் நடைப் பயிற்சி செய்வது அவசியம். குறிப்பாக, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் வாழும்  பெண்களே மன அழுத்தம் காரணமாக அதிக அளவில் பாதிப்படைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவில் மருந்துகளின் வீரியம்:

இன்றைய உணவுப் பொருட்கள் அனைத்திலும், செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் அதிகமிருக்கின்றன. எனவே, தாய்மையடைய நினைப்பவர்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது.

நன்றி: https://www.nakkheeran.in/360-news/life/sad-couples-childless-pregnancy-unhappy-life