சனி, 26 பிப்ரவரி, 2022

கடவுள் 'அவர்களுக்கு' மட்டுமே சொந்தமானவரா?!?!

#பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர்.

இந்நிலையில், "கொண்டாட்டத்துக்காக வானத்தை நோக்கிச் சுட வேண்டாம். தோட்டாக்கள் அப்பாவிப் பொதுமக்கள் மீது பாய்ந்து அவர்களின் உயிரைப் பறித்துவிடும். ஆகையால், வெற்றிக்காகக் கடவுளுக்கு நன்றி மட்டுமே சொல்லுங்கள்" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் தெரிவித்துள்ளார்# என்பது அண்மைச் செய்தி. [https://www.hindutamil.in/news/world/712598-avoid-shooting-in-the-air-and-thank-god-instead-mujahid-said-in-a-message-on-twitter.html

தலிபான்களும் பஞ்ஷிர்ப் போராளிகளும் போரிட்டுக்கொள்வதற்கான காரணம் எதுவாகவோ இருந்திடட்டும். மேற்கண்ட செய்திக்கிணங்க, 'பஞ்ஷிர்' மாகாணத்தைக் கைப்பற்றுவதற்கான போரில் தலிபான்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

இருதரப்பினருக்கான மோதலில் ஒருதரப்பார் வெற்றி பெறுவது தவிர்க்க இயலாத நிகழ்வு.

இங்கே, தலிபான் வீரர்கள் தங்களின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் வானத்தை நோக்கிச் சுட்டிருக்கிறார்கள். தலிபான் செய்தியாளர், "வானத்தை நோக்கிச் சுடாதீர்கள். தோட்டாக்கள் பாய்ந்து பொதுமக்கள் உயிரிழப்பார்கள். கடவுளுக்கு நன்றி மட்டும் சொல்லுங்கள்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

கடவுளுக்கு எதற்கு நன்றி?

கொலை ஆயுதங்களில் ஒன்றான துப்பாக்கியைக் கண்டுபிடிப்பதற்கான குரூரப் புத்தியை மனிதர்களுக்குக் கற்றுத் தந்ததற்காகவா?

தலிபான் வீரர்கள் 17 பேரைச் சுட்டார்களே, அப்போது அவர்கள் வைத்த 'குறி' சற்றேனும் பிசகாமல் பார்த்துக்கொண்டாரே அதற்காகவா?[வானத்தை நோக்கிச் சுட்டால் உயிரிழப்பு நேருமா?].

தலிபான் தலைவர்களே,

"அன்றாடம் கடவுளைத் தொழுகிறீர்கள்; எல்லாம் அவன் செயலே என்று எண்ணுகிறீர்கள். இவையெல்லாம் உங்களின் நம்பிக்கை சார்ந்தவை. எவரும் குறை சொல்ல வாய்ப்பில்லை. ஆனால்.....

நீங்கள் நடத்திய... நடத்தும் போர்களில், சக மனிதர்கள்[உங்களுக்கு எதிரிகள் ஆயினும் அவர்களும் கடவுளால்[அப்படி ஒருவர் இருந்தால்] படைக்கப்பட்டவர்களே.

தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களைக் கொல்ல, தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களையே ஏவுவாரா கடவுள்?

கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்தால்கூட இந்த உண்மை புரிந்திருக்கும். 

சிந்திக்கத் தவறியதால்தான்.....

"வெற்றியைக் கொண்டாடுங்கள் என்று[மட்டும்] சொல்லாமல், பெற்ற வெற்றிக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்" என்று உங்களின் வீரர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறீர்கள். 

கடவுள் உங்களுக்கு மட்டுமே சொந்தமானவரா தலிபான் தலைவர்களே?! 

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

'உயிர்களின் தோற்றம்'... மதங்கள் சொல்லும் மாயாஜாலக் கதைகள்!!!

உயிர்களின் தோற்றம் குறித்த கொள்கைகள் பலவாக உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

'நாம் வாழும் இந்தப் பூமியில் உயிர்கள் தோன்றவில்லை; வேறொரு கோளிலிருந்து இங்கு வந்து பல்கிப் பெருகின' என்பது ஒரு கொள்கை. இதை 'அண்டமூலக் கொள்கை[Cosmozoie] என்கிறார்கள். 

'உயிர்கள் எப்படித் தோன்றின?' என்பதே கேள்வி. வேறொரு கோளிலிருந்து வந்தன என்பதை ஏற்றுக்கொண்டாலும், அங்கே எப்படி அவை தோன்றின என்னும் கேள்விக்கு இது ஏற்புடைய பதில் அல்ல என்பது அறியத்தக்கது.

உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர்கள் தோன்றின என்பதும் ஒரு கொள்கை. இதற்குத் 'தான்தோன்றிக் கொள்கை[Spantaneous Generation] என்று பெயர். அழுகும் அல்லது, கெட்டுப்போகும் பொருள்களிலிருந்து ஈக்களும், புழுப்பூச்சிகளும் தோன்றுவதை ஆதாரமாக எடுத்துக்காட்டுகிறார்கள் இக்கொள்கையாளர்கள். இது அறிவியல் ஆய்வாளர்களால் ஏற்கப்படவில்லை

உயிர்களிலிருந்து உயிர்கள் தோன்றுகின்றன என்று பிரன்சிஸ்ரெடி[Francies, லூயிபாஸ்டியூர்[Louis Pasteur] முதலானோர் சொல்லியிருக்கிறார்களாம். போதிய தெளிவின்மையால் இக்கொள்கையையும் அறிவியலாளர்கள் ஏற்கவில்லை.

சார்லஸ் டார்வின்[Charles Darwin] அறிவித்த 'பரிணாம வளர்ச்சிக் கொள்கை அறிவியலாளரால் ஏற்கப்பட்டுள்ளது. இதற்கு மாறான கொள்கை எதுவும் இன்றளவும் அறிவிக்கப்படவில்லை என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

அறிவியலுலகம் டார்வின் கொள்கையை ஏற்றுக்கொண்டிருப்பினும், மக்களில் பெரும்பான்மையானவர்கள், 'உயிர்களைக் கடவுள் படைத்தார்' என்று மதங்கள் சொன்னதைத்தான் நம்புகிறார்கள்[ஏற்காத மதங்களும் உள்ளன].

கடவுள் உயிர்களைப் படைத்த விதம் குறித்து, உலகின் முன்னணி மதங்கள் சொல்லியிருக்கும் தகவல்கள் வெகு சுவையானவை. வாசியுங்கள்.

கிறிஸ்தவ மதம்:

முதல் இரண்டு நாட்களில் பகல், இரவு, வானம், பூமி ஆகியவற்றையும்[பூமி படைக்கப்படுவதற்கு முன்பே நாட்களைக் கணக்கிட்டது எப்படி?!], மூன்றாம் நாளில் புல், பூண்டு, மரஞ்செடிகொடி ஆகியவற்றையும், நான்காம் நாளில் விலங்குகளையும், ஐந்தாம் நாளில் நீர் வாழ்வன, பறப்பன ஆகியவற்றையும் படைத்தார் கடவுள் என்கிறது கிறித்தவ மதம்.

ஏழாம் நாளில் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார்.

இஸ்லாம் மதம்:

முதல் இரண்டு  நாட்கள்... நீர், காற்று, பூமி.

3ஆம் நாள்... கடல்வாழ் உயிரினம், ஊர்வன முதலானவை.

4ஆம் நாள்... ஜான் என்னும் தேவதை[?]

5, 6ஆம் நாட்களில்... முதல் மனிதன் 'ஆதாம்'; முதல் பெண் 'ஏவாள்'.

இந்து மதம்:

பரமாத்மாவால் படைக்கப்பட்ட 'பிரஹிமா[பிரம்மா]' ஒரு பிரஹ்ம ஆண்டு[16 லட்சம் கோடி ஆண்டுகள்] வரை வாழ்ந்து மானிடர், விலங்கு, பறவை முதலான உயிரினங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் படைத்தார்.

படைப்புத் தொழிலை முடித்து, பிரம்மா எவ்வளவு காலம் ஓய்வு எடுத்தார் என்பது பற்றி ஏதும் சொல்லப்படவில்லை.

"உணவுக்காகவும் உடலுறவுக்காகவும் அலையோ அலையென்று அலைந்து திரியும் உயிர்களுக்குத்தான் ஓய்வு தேவையென்றால், அளவிடற்கரிய சக்தி படைத்த கடவுளுக்கும் இது தேவையா?" என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம்.

"தேவைதாங்க. கடவுள் மனிதனுக்கு ஆறாம் அறிவைக் கொடுத்தாரோ இல்லையோ, கணக்குவழக்கில்லாமல் கோயில்களைக் கட்டி வைத்துக்கொண்டு,  வழிபாடு என்னும் பெயரில் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து இவன் படுத்துகிற பாடு கொஞ்சமா என்ன?

ஆகவே, ஓய்வு கடவுளுக்கும் தேவைதான்!

==========================================================================

உதவி: 'கடவுள் படைப்பா உயிர்கள்?', பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, சென்னை.