வெள்ளி, 13 மே, 2022

இந்தி வளர்ச்சிக்கு வாரி வழங்கும் 'இந்தி'ய அரசு!!!

ஐ.நா.சபையிடம், இந்தி மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்க 'இந்தி'ய அரசு ரூ6.16 கோடியை வாரி வழங்கியிருக்கிறது[இது அவ்வப்போது நடைபெறும் நிகழ்வு]. உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கானோரிடம் இந்தியைக் கொண்டுசெல்லும் நடவடிக்கையாம் இது. இது நேற்றைய[12.05.2022] செய்தி.


உலகெங்கிலும் தமிழ் பேசுவோர் தொகையும் இலட்சக்கணக்கில்தான்[கோடிக்கணக்கில்!] இது 'இந்தி'ய அரசுக்குத் தெரியாதா?

தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்க, எத்தனை முறை எத்தனைக் கோடி ரூபாய்களை எங்கெல்லாம் இந்த 'இந்தி'ய அரசு கொடுத்திருக்கிறது.

இந்தி, பெரும்பான்மையோரால் பேசப்படுகிற மொழி[உண்மையில் 35%தான்] 44% என்று வைத்துக்கொண்டாலும்[https://timesofindia.indiatimes.com/india/hindi-mother-tongue-of-44-in-india-bangla-second-most-spoken/articleshow/64755458.cms], அது மட்டுமே வளர்ந்திட வேண்டும்; ஏனையோரால்[56%] பேசப்படும் மொழிகள் சீந்துவாரற்றுச் சிதைந்து அழிய வேண்டும் என்று ஒன்றிய அரசை நிர்வகிப்போர் ஆசைப்படுவது எந்த வகையில் நியாயம்?

ஏன் இந்த ஓரவஞ்சனை?

இந்தியின் வளர்ச்சியில் மட்டுமே கருத்துச் செலுத்தினால், மற்ற மாநில மொழிகள் தாமாக அழிந்துவிடும். மொழி அழிந்தால், அம் மொழி பேசுவோரின் இன உணர்வும் காலப்போக்கில் அழிந்தொழிவதைத் தவிர வேறு வழியில்லை. இந்தி மட்டுமே இந்தியாவை ஆளும். இந்தியத் தாய்மொழியாகக் கொண்டவர்களோ, அதி தீவிரமாய் அதை ஆதரிப்போரோ நிரந்தரமாய் ஆதிக்கம் செலுத்தலாம் என்பதை ஒன்றிய அரசின் அதிகார வர்க்கம் மிக நன்றாகப் புரிதுகொண்டிருக்கிறது[ரஷிய மொழி ஆதிக்கத்தால் உடைந்து சிதறிய சோவியத் யூனியனை அடியோடு மறந்துவிடுகிறார்கள்].

இந்தியை மட்டுமே பேணி வளர்க்கும் இவர்களின் தொடர் முயற்சியைக் கண்டித்துத் தமிழர்கள் மட்டுமே குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கன்னடர்களும், கடவுள் தேசத்து மலையாளிகளும், சுந்தரத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தெலுங்கர்களும் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்?

விழித்தெழுந்து மிகு துடிப்புடன் இவர்கள் குரலெழுப்பிப் போராடும் நாளும் வருமா?

ஆதங்கத்துடனும் ஆர்வத்துடனும் காத்திருப்போம்!

புதன், 11 மே, 2022

'பாலுறவு'... மனிதர்கள் செய்ததும், செய்வதும், செய்யத் தவறியதும்!!!

மனிதர்கள் விலங்காக வாழ்ந்தவரை இனவிருத்திக்காக மட்டுமே உடலுறவு கொள்வது வழக்கமாக இருந்தது.

சிந்திக்கும் அறிவு வாய்த்த பின்னர், அதற்கான நேரத்தை அதிகரிப்பதிலும், அதன் மூலம் பெறும் சுகத்தைப் பன்மடங்காக்குவதிலும் ஆர்வம் காட்டினார்கள் அவர்கள்; ஆய்வுகளும் நிகழ்த்தினார்கள்.

கணிசமான அளவு வெற்றியும் கண்டார்கள்.

லேகியங்கள், பஸ்பங்கள், கிரீம்கள் என்று எதையெதையோ பயன்படுத்தினார்கள்; பயன்படுத்துகிறார்கள்; அந்தரங்கப் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள்; அண்மையில் கண்டறியப்பட்ட 'வயாகரா'வை இதற்கான 'வரப்பிரசாதம்' என்கிறார்கள்.

"இது போதும்" என்று மனம் திருப்தி அடையாத நிலையில் புதிய புதிய சாதனங்களைக் கண்டறியும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்.....

ஆறாம் அறிவைப் பெற்றதன் விளைவாக, அன்று உடலுறவின் மீதிருந்த இயல்பான 'ஆசை' அதீத வெறியாக மாறியிருப்பதை உணரத் தவறினார்கள்.. விளைவு.....

பாலியல் அத்துமீறல்கள், முறையற்ற உடலுறவுகள், சிறுமிகளையும் இளம் பெண்களையும் கடத்திச் சென்று வல்லுறவு கொள்ளுதல், இரவு நேரக் களியாட்டங்கள், குத்துவெட்டுகள், கொலைகள் என்று பாலியல் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டன.

குற்றவழக்குத் தண்டனைகள் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்துவது அத்தனை எளிதாக இல்லை. இதற்குரிய மனப் பக்குவத்தைப் பெறுவதற்கான பயிற்சிகள் மீதும் நம் மக்களுக்கு ஈடுபாடு இல்லை.

இக்காரணங்களால், பாலுறவு இன்பத்தையும் அதற்கான நேரத்தையும் அதிகரிக்கப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் செலுத்திய அதே ஆர்வத்தை, பாலுணர்வு வெறியைக் குறைப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான சாதனங்களைக் கண்டுபிடிப்பதிலும் செலுத்தியிருக்க வேண்டும்.

செலுத்தவில்லை.

மனித இனம் செய்யத் தவறிய மாபெரும் குற்றம் இதுவாகும்.

அறிவியல் அறிஞர்களையும், மருத்துவத்துறை நிபுணர்களையும் ஊக்குவித்துத் பாலியல் வெறியைக் குறைப்பதற்குத் தேவையான வழிவகைகளையும் சாதனங்களையும் கண்டறிந்து, அவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருதல் உடனடித் தேவையாகும்.

இதை மனதில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆட்சியாளர்கள்&சமூக ஆர்வலர்கள் போன்றோர் கடமையாகும்.