சனி, 20 ஆகஸ்ட், 2022

மிதிபட்டுச் சாகும் பக்தர்கள்! 'முன்யோசனை' செய்யாத மோடியும் யோகியும்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவிலுள்ள பாங்கே பிஹாரி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், மூச்சுத்திணறி இருவர் பலியானதுடன் 6 பேர் நிலை கவலைக்கிடமாகிவிட்டது// -இது இன்றைய செய்திhttps://www.hindutamil.in/news/india/844132-2-dead-in-up-krishna-jayanthi-stampede-2.html [20 Aug, 2022]

ஜென்மாஷ்டமிக்காக, மதுராவிற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வந்திருந்தார். இந்த தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ந்ததோடு, பலியானவர்களுக்குத் தன் ஆழ்ந்த அஞ்சலியையும் தெரிவித்தாராம்.

கோயில்களில், விசேட நாட்களில் நடக்கும் சிறப்புப் பூஜைகளின்போது பக்தர்கள் முட்டிமோதிக்கொண்டு தரிசனம் செய்ய முயற்சிப்பதும், பலவீனமானவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் மிதிபட்டுச் சாவதென்பதும் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகிற செய்தி.

இம்மாதிரிச் செய்திகள் பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி போன்ற அதிகாரம் படைத்தவர்களைச் சென்றடைகிறது என்பது உறுதி. அவர்களும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கத் தவறுவதில்லை.

இரங்கல் தெரிவிப்பது மாமூலான சமுதாயச் சடங்கு என்பதைத் தவிர இதனாலெல்லாம் பயனேதும் இல்லை என்பது மேற்கண்டவர்களுக்குத் தெரியும். பக்தர்களுக்குப் புத்தி புகட்டி, இம்மாதிரியான அவலங்கள் இனியும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது இவர்களின் கடமை.

இத்தகைய கடமை குறித்த சிந்தனையே இவர்களுக்கு இல்லை என்பது மனதை வேதனைக்குள்ளாக்கும் உண்மை.

* * * * *

09.08.2022இல் மேற்கண்டது போன்ற நிகழ்வு   ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தின் சிகார் நகரக் கோயிலில் இடம்பெற்றபோது பிரதமருக்கு நான் எழுதிய மடலை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.

[இதை என்னைப் போன்ற சாமானியர்கள் எழுதுவதால் பயன் ஏதும் இல்லை என்பதால், தகுதியுள்ள எவரேனும் இப்பரிந்துரையை உரிய முறையில் கொண்டுசேர்ப்பார்கள் என்பது என் நம்பிக்கை].

மடல்:

#.....பக்தர்களிடையே ஏன் இந்த அவசரம்?

காத்திருந்த அத்தனை பேருக்கும் தரிசனம் தராமல் சாமி ஓடி ஒளிந்துகொள்ளுமா?

அந்தக் கோயிலில் இருக்கும் சாமி உலகில் வேறு எங்கும் இருக்கும்தானே. சாவகாசமாக அங்கு சென்று தரிசித்துக் கோரிக்கை வைக்கலாம். இது ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை?

சக பக்தர்களைத் தங்களின் கால்களால் மிதித்துக் கொல்லும் கொலை பாதகச் செயலைச் செய்துவிட்டுச் சாமி தரிசனம் செய்து புண்ணியம் தேட நினைக்கிறார்களே, கிடைப்பது புண்ணியமா, பாவமா?

இவர்களெல்லாம் பக்தர்களா, படு பாதகர்களா?

கிஞ்சித்தும் சிந்திக்கும் அறிவே இல்லையா?

இவ்வாறான கேள்விகளைப் பக்தர்களிடம் இந்தச் சிறியேனைப் போன்ற சாமானியர்கள் கேட்பதால் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை என்பதால் இந்தியப் பிரதமர் அவர்களுக்கு இப்பதிவைக் காணிக்கை ஆக்குகிறோம்.

பிரதமர் அவர்களே,

சிகார் நகரக் கோயிலில், நெரிசலில் மிதிபட்டு இறந்தவர்களுக்காக அனுதாபம் தெரிவித்திருக்கிறீர்கள். அது தங்களின் மனிதாபிமானத்தைக் காட்டுகிறது.

இது தேவைதான் எனினும், இம்மாதிரி அனுதாபம் தெரிவித்தல் இனியும் இத்தகைய அவலங்கள் நிகழாமல் தடுக்குமா?

நிச்சயமாக இல்லை.

இது தங்களுக்கும் தெரியும்.

அனுதாபம் தெரிவிப்பதோடு, பிரதமர் என்ற வகையில், சாமி தரிசனத்துக்காக நாள் கணக்கில் காத்திருந்து வாழ்நாளை வீணடிக்கும் பக்தர்களிடம் மேற்கண்ட கேள்விகளை நீங்கள் கேட்பீர்களேயானால்[ஊடகங்கள் அதைப் பரப்புரை செய்யும்] பலன் கிட்டும் என்பது நிச்சயம்.

இப்படிக் கேள்விகள் கேட்டுப் பக்தர்களைத் திருத்துவதோடு, கோயில் நிகழ்வுகளையும் மாற்றி அமைப்பதும் மிக அவசியம் ஆகும்.

விடியற்காலையில்தான் நடை திறக்கிறார்கள். அதுவரை அதைச் சாத்தி வைப்பது ஏன்?

நாளெல்லாம் பக்தர்கள் தங்களின் குறை சொல்லிப் புலம்புவதைக் கேட்டுக் கேட்டுக் கேட்டுச் சோர்ந்துபோன சாமிக்கு ஓய்வு அளிப்பதற்காகவா? 

நிச்சயமாக இல்லை.

அனைத்தையும் படைத்த கடவுள்தான் அனைத்துக் கோயில்களிலும் வேறு வேறு உருவில் குடிகொண்டிருக்கிறார் என்கிறார்கள். அவரைப் பொருத்தவரை 'இது நல்ல நாள்', 'இது கெட்ட நாள்', 'இது நல்ல நேரம்', 'இது கெட்ட நேரம்' என்ற வேறுபாடுகள் கிடையாது. 

ஆகவே, நடை சாத்தும் வழக்கத்தைக் கைவிட்டு, எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் சந்நிதியைத் திறந்து வைத்தல் வேண்டும். அதன் மூலம், இடர்ப்பாடு இல்லாமல் பக்தர்களால் சாமியைத் தரிசிக்க முடியும்.

இது நடைமுறை ஆக்கப்பட்டு எல்லா நேரமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது சாத்தியப்படுமானால்.....

சாமி தரிசனத்துக்காக வரிசையில் கால்கடுக்க நின்று நின்று நின்று நேரத்தை வீணடிப்பதும், பக்தர்களைப் பக்தர்களே உயிர்ப்பலி கொடுக்கும் கொடூரமும் தவிர்க்கப்படும் என்பதைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதில் பக்தன் என்றில்லாமல், ஒரு மனிதாபிமானி என்ற வகையில் என் கடமையைச் செய்தவன் ஆகிறேன்.

நன்றி பிரதமர் அவர்களே!#

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

'கடவுள் நம்பிக்கை'யால் விளையும் தீமைகள்!!!

*கடவுள் கண்களால் பார்க்க முடியாதவர் என்று சொல்லப்படுவதால், கண்களால் பார்க்க முடியாதவை என்று கருதப்படுகிற ஆவி, பேய், பிசாசு போன்ற தீய சக்திகள் இருப்பதாக நம்பி, மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் மனிதர்கள்; அவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையற்ற பல சடங்குகளைச் செய்து அறிவையும் பொருளையும் நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.

*நாம் உறும் துன்பங்களுக்கும் இன்னல்களுக்கும் இயற்கை நிகழ்வுகளும், வாழ்க்கைச் சூழலும், சிந்தித்துச் செயல்படுவதில் உள்ள குறைபாடுகளுமே காரணம் என்பதைப் புரிந்துகொள்ளாமல், இவை அனைத்திற்கும் விதி, அல்லது, நாம் செய்த பாவ புண்ணியங்கள் காரணம் என நம்புகிறார்கள். இதனால் சிந்திக்கும் ஆற்றல் படிப்படியாகச் சிதைவுறுகிறது. 

*தாங்க இயலாத இழப்புகளையோ, விடுபட முடியாத இடுக்கண்களையோ எதிர்கொள்ளும்போது, எல்லாம் 'அவன்' செயல் என்றெண்ணி அவனைச் சரணடைகிறார்களே அல்லாமல், அவற்றைத் தாங்கிக்கொள்ளும் மனத் திண்மையை மேம்படுத்திக்கொள்ள முயலுவதில்லை கடவுளை நம்புகிறவர்கள்.

*இயற்கை, எளிதில் விடுவிக்க இயலாத பல 'புதிர்'களை உள்ளடக்கியது. 'ஏன்?, எப்படி?, எப்போது?' போன்ற வினாக்களை எழுப்பி, சளைக்காமல் சிந்தித்துக்கொண்டே இருந்தால்தான் அப்புதிர்களை ஒவ்வொன்றாக விடுவிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்[மனித வாழ்வை மேம்படுத்தும் வகையிலான பல கண்டுபிடிப்புகளை அறிவியலாளர்கள் நிகழ்த்தியது இவ்வகைச் சிந்தனையால்தான்]; அந்த அறிவால் தொடர் துன்பங்களைக் களைவது, ஆயுளை நீட்டிப்பது போன்ற பயன்களைப் பெறுதல் சாத்தியமாகும். எல்லாம் கடவுளின் செயல் என்று நம்புவது இம்முயற்சிக்கு வைக்கும் முற்றுப்புள்ளி ஆகும்[மிகப் பெரும்பாலான விஞ்ஞானிகள் கடவுளைப் பொருட்படுத்தாதவர்கள் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது].

*கடவுளைக் கொண்டாடி வழிபடுவதால் இந்நாள்வரை மக்களுக்கு எந்தவொரு நன்மையும் விளைந்ததில்லை என்பதை உணர மறுக்கிறார்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்[தற்செயலாக விளையும் நன்மைகளைக் கடவுளின் செயல் என்று போற்றுவது வழக்கமாகியுள்ளது]. காரணம், கடவுளை நிந்தித்தால் தண்டிக்கப்படுவோம் என்னும் அச்ச உணர்வு அவர்களின் மனங்களில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான்.

*"நான் கடவுளை நேரில் பார்த்தவன்", "நனே கடவுள்", "நான் கடவுளின் குரு" என்றிப்படிப் பொய்யுரைத்துக் கோடி கோடியாய்ப் பணம் சம்பாதித்த அயோக்கியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் கடவுள் பித்துதான்.

*கடவுள் நம்பிக்கையால்தான் மதங்கள் உருவாயின என்பதும், அவை மூட்டிய கலவரங்களால் கோடிக்கணக்கான மனித உயிர்கள் பலியிடப்பட்டன என்பதும் மறக்க இயலாததும், மறக்கக்கூடாததுமான கொடூர நிகழ்வுகளாகும்.

*கடவுளை வழிபட்டால் நன்மைகள் விளையும் என்ற நம்பிக்கை திணிக்கப்பட்டதால், அவரைத் துதிபாடத் தம் நேரத்தையும் பொருளையும் நிறையவே செலவழித்தார்கள்/செலவழிக்கிறார்கள் மக்கள். இதனால், சக மனிதர்களுக்கு உதவும் இரக்கக் குணம் போதிய அளவுக்கு வளர்ச்சியடையவில்லை.

*இவ்வுலகம் மட்டுமல்லாது, இங்கு வாழும் பல உயிரினங்களும் மனிதருக்காகவே கடவுளால் படைக்கப்பட்டவை என்று சில மதங்கள் மக்களை நம்ப வைத்ததால், அவ்வுயிர்கள் ஈவிரக்கம் இல்லாமல் வதைக்கப்படுகின்றன; உணவாக்கப்படுகின்றன.

*மதவாதிகள், தங்களின் 'மத நூல்கள்[வேதங்கள்] கடவுள்களால் வழங்கப்பட்டவை என்று அன்று முதல் இன்றுவரை ஆணித்தரமானதொரு பொய்யைச் சொல்லிச் சொல்லிச் சொல்லி, அம்மதங்களைப் பின்பற்றுவோரை நிரந்தர மடையர்கள் ஆக்கிவிட்டார்கள். அதற்கு அவர்களுக்கு உதவிகரமாக அமைந்தது கடவுள் நம்பிக்கைதான். 

***கடவுள் நம்பிக்கையால் பெரும் தீங்குகள் விளைந்தன என்னும் மேற்கண்ட கருத்துரைகளை அலட்சியப்படுத்தி, "கடவுள் நம்பிக்கையால்தான் மக்கள் நல்லவர்களாக வாழ்கிறார்கள்; தவறு செய்ய அஞ்சுகிறார்கள்" என்று ஆன்மிகர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான நம் பதில்:

கொடூரமான குணம் வாய்ந்த உயிரினங்களுக்கிடையே, அமைதியாகவும் பிற உயிரினங்களைத் துன்புறுத்தாமலும் வாழ்கிற உயிரினங்களும் உள்ளன. மனிதர்களிலும் இப்படி வாழ்பவர்கள் உள்ளனர். இது இயற்கையாய் அமைந்த வாழ்வியல் முறையாகும். இது தவிர, மக்கள் நல்லவர்களாக வாழ்வதற்குச் சீரிய சிந்தனையாளர்களின் கருத்தாக்கங்களும், கடவுளை முன்னிலைப்படுத்தாத சில சமயங்களின் வழிகாட்டலும் காரணங்களாக அமைந்தன என்றும் சொல்லலாம்.

எனவே, கடவுள் எனப்படுபவருக்கும் மக்கள் நல்லவர்களாக வாழ்வதற்கும் எள்ளத்தனைத் தொடர்பும் இல்லை என்பதும், கடவுள் நம்பிக்கையால் தீமைகளே மிக மிக அதிகமாக விளைகின்றன என்பதும் அறியத்தக்கனவாகும்.

===========================================================================