திங்கள், 28 ஆகஸ்ட், 2023

இச்சையுடன் “இச்... இச்... இச்”... நன்மைகளும் தீமைகளும்!

முத்தம் ஆசை, பாசம் போன்றவற்றின் உன்னதமான வெளிப்பாடு.

இதனால் ஏராள நன்மைகள் உண்டு; தீமைகளும் உள்ளன.

மூளையில் உள்ள டோபமைன்[Dopamaine] என்னும் சுரப்பிதான் நம்மை மகிழ்ச்சியாக இருக்கத் தூண்டுகிறது. மன அழுத்தம் இதன் இயக்கத்தைப் பாதிப்பதால், நாம் மன அழுத்ததிற்கு உள்ளாகாமல் இருப்பது மிக அவசியம் அல்லவா? 

அந்த மன அழுத்தம் முத்தமிடுவதால் குறைகிறதாம். ஆகவே முத்தமிடுவீர் என்கிறார்கள் முத்த ஆராய்ச்சியாளர்கள்..

யார் யாருக்கெல்லாம் எங்கெங்கெல்லாம் என்பது அவரவர் வயதையும், விருப்பு வெறுப்புகளையும் பொருத்தது.

உடம்பின் பிற உறுப்புகளின் தசைகளைப் போல முகத்தின் தசைகள் இயங்குவதற்கான வாய்ப்பு, உணவுண்ணும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மிகுதியும் அமைவதில்லை. எனவே, முத்தமிடுதல் முகத் தசைகளுக்கான சிறந்த பயிற்சியாகும். அதன் மூலம் முகத் தசைகள் சுருங்காமலும் தொங்கிப்போகாமலும்  இருக்கும் என்பதால், முகம் பொலிவு குன்றாமலிருக்கும்.

உமிழ்நீரின் பயன்கள் கணிசமானவை. வாயைச் சுத்தம் செய்வதோடு,  கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஊட்டச்சத்துகள் உமிழ்நீரில் உள்ளன.

ஒரு நல்லிரவு முத்தம் ஆக்ஸிடாஸின் எனப்படும்  காதல் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது. காதல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெற முடியுமாம்.


ஒரு பிரிட்டிஷ் ‘படுக்கை நிறுவனம்’[படுக்கும் முறைகளைச் சொல்லித்தரும் நிறுவனமா?!] நடத்திய கருத்துக்கணிப்புக்குப் பதிலளித்தவர்களில் 70% பேர் உறங்கச் செல்வதற்கு முன்பு முன் தங்கள் கூட்டாளிகளை முத்தமிடுவதால் நன்றாகத் தூங்குவதாகத் தெரிவித்தனர்.


முத்தம், மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.


உடற்பயிற்சி செய்கிற அளவுக்கு இல்லை என்றாலும், முத்தமிடுதல், கணிசமான அளவுக்குக் கலோரிகளைக் குறைக்கிறது.


“இச்” கொடுப்பதில் இப்படியான பல நன்மைகள் இருந்தாலும், கவனக்குறைவாக இதைச் செய்வதால் பல தீமைகளும் விளையும் என்கிறார்கள் மூத்த ‘முத்த’ஆராய்ச்சியாளர்கள்.


அவைகளில் குறிப்பிடத்தக்கவை:


வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மறக்கவே கூடாதது. தவறினால், உமிழ்நீர் மூலம் கிருமிகள் பரவிட வாய்ப்புள்ளது. எனவே, முத்தப் பரிமாறலுக்குப் பின்னரும் வாயை நன்கு கொப்பளிப்பது நல்லது[புணர்ச்சிக்குப் பிறகு பிறப்புறுப்புகளைச் சுத்தப்படுத்துவது போல].


வாயில் புண்கள் இருந்தால் முத்தமிடுதல் கூடாது.


மோனோநியூக்ளியோசிஸ், கோவிட்-19, எபோலா, ஜிகா போன்ற சில மோசமான வைரஸ்கள்  உமிழ்நீர் மூலம் பரவும்.


இருவரில் ஒருவருக்கு உண்ணும் உணவில் ஒவ்வாமை இருந்தால், அதை ‘அந்த’ நேரத்தில் உண்ணாமலிருத்தல் வேண்டும். அவ்வகை உணவை உண்டிருந்தால், முத்தமிடுவதற்கு 16 முதல் 24 மணி நேரம் காத்திருத்தல்[உருப்பட்ட மாதிரிதான்!] மிக மிக முக்கியம்.


குறைந்தது 10 வினாடிகள் நீடிக்கிற முத்தத்தில், சராசரியாக 80 மில்லியன் பாக்டீரியாக்கள் கடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அவர்கள் எளிதில் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றனர். முத்தமிடுவதால் ஏராளமான கிருமிகள் பரவக்கூடும், எனவே, அவர்களுக்கு முத்தம் தரும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

                                              

                                          *   *   *   *   *


குறிப்பு: இதெல்லாம் குளிர்ப் பிரதேசவாசிகள் அவ்வப்போது உடம்பைச் சூடேற்றுவதற்காக ஏற்படுத்திக்கொண்ட பழக்கம். நம் நாடு வெப்பம் மிகுந்தது. கன்னத்தில் முத்தம் கொடுத்தால் ‘நச நச’ வேர்வை முகம் சுழிக்க வைக்கும்; உதட்டில் தந்தால் உப்புக் கரிக்கும்.


“அப்புறம் எதுக்கு இந்தப் பதிவு?”ன்னு கேட்குறீங்களா?


வேறென்ன, நல்ல ‘சரக்கு’ எதுவும் கைவசம் இல்லை என்பதே அடியேன் பணிவுடன் உங்கள் முன்வைக்கும் பதில்!



https://www.msn.com/en-gb/health/familyhealth/the-surprising-side-effects-of-kissing/ss-AA1ftOXJ?ocid=msedgdhp&pc=U531&cvid=371b0c019f65402dacb01e17f1f84293&ei=18#image=2

சனி, 26 ஆகஸ்ட், 2023

ஆணின் ‘விரைவீக்கம்’ நோயும் பிரபல எழுத்தாளினியின் ‘கால்வேக்காடு’ சிறுகதையும்!!!

ஓர் அழகான பெண்; இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தவர். அவரின் கணவர் ‘விரை வீக்கம்’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர்[இதைக் கவனத்தில் கொள்ளுங்கள்].

தேடிப்போய் உதவி செய்யும் நல்ல மனம் கொண்டவர் என்பதால் ஊராரின் நன்மதிப்பைப் பெற்றவர், கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்.

கதையைத் தொடர்வதற்கு முன், கதையின் ‘உள்ளடக்கம்’ குறித்துக் கொஞ்சம் அலசிவிடுவோம்.

அந்தப் பெண்ணின் மீது நீண்ட நாட்களாகக் கண்[இரண்டு கண்ணும்தான்] வைத்திருந்த அதே ஊரைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி, அவருடன் தனிமையில் இருக்கும்போது ஒரு கேள்வி கேட்கிறான். அது.....

“அம்மா, அய்யாவுக்கு அடி பெருத்திருக்கே[விரை வீக்கம்]. உங்களோடு எப்படித் தாம்பத்தியம் வெச்சிக்கிட்டாரு? எப்படி ரெண்டு குழந்தைகளைப் பெத்துகிட்டீங்க?”

அவன் இப்படிக் கேட்டவுடன் அந்த அம்மா, “பொறுக்கி நாயே...” என்று சீறிக்கொண்டே கால் செருப்பைத் தேடியிருப்பார், அல்லது சரமாரியாக அவன் கன்னங்களில் அறைந்திருப்பார், அல்லது அவன் புட்டத்தின் மீது எட்டி உதைத்திருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்.

இந்தக் கதையில் அப்படி ஏதும் நிகழவில்லை என்பதோடு, வெறுமனே வேதனைப்படுகிறார் அந்தப் பெண். குழந்தைகளைப் பெற்ற பிறகே தன் கணவர் அந்த நோயால் பாதிக்கப்பட்டார் என்பதை[அந்தப் பொறுக்கி நாய்க்கு இது தெரியாமல்போனது எப்படி?] நினவுகூர்வதோடு, கதை அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது.

அடுத்து வரும் சம்பவங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதுமில்லை.

கதையின் முடிவும் எதார்த்தமானதாக இல்லை.

பண்ணைக்கார அம்மாவின் ரவிக்கையையும் பாடியையும் திருடிச் சென்றதோடு, தன் வீடு தேடிவந்து தன்னோடு படுத்துவிட்டுச் செல்வதாக ஒரு புரளியைப் பரப்புகிறான் அந்த தினக்கூலி[பெயர் மாணிக்கம்].

ஊரும் அதை நம்புகிறது.

பஞ்சாயத்து கூட்டப்படுகிறது.

பஞ்சாயத்தில், மாணிக்கத்தை நெருங்கி அவன் முகத்தில் காறித் துப்பிய அந்த அம்மா[தங்கம்மா] “இப்படியெல்லாமா கதை கட்டுவே... என் சேலையைத் திருடத் தோணலையா?” என்கிறார்.

பஞ்சாயத்தில் இப்படிக் கேட்ட தங்கம்மா அன்று அவன் அசிங்கமாகக் கேள்வி கேட்டபோது ஏன் மௌனம் சாதித்தார் என்பதாகக் கேள்வி ஏதும் கேட்டுவிடாதீர்கள். 

ஏனென்றால்.....

இந்தக் கதையை எழுதியவர் என்னைப் போன்ற ஒரு கத்துக்குட்டிக் கதாசிரியர் அல்ல; பிரபல எழுத்தாளர் ‘இந்துமதி’யாக்கும்!

கதையை வெளியிட்டது உலகத் தமிழ் வார இதழ்களில் ‘நம்பர் 1’ ஆகத் திகழும் ‘குமுதம்’(30.08.2023)ஆக்கும்!!

ஒரு கட்டத்தில், பஞ்சாயத்தைப் புறக்கணித்த தங்கம்மாவின் கணவர் அவரை அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறார்.

முக்கியக் குறிப்பு:

‘அவரது பிறப்புறுப்பு[விரை] வீங்க ஆரம்பித்தது. ... மகோதரம் என்றார்கள். புட்டை என்று பேர் சொன்னார்கள். பார்க்காத வைத்தியம் இல்லை. குணமாகவில்லை’ என்று விரை வீக்கம் நோய் குறித்து விளக்கம் தந்திருக்கிறார் இந்துமதி அம்மையார் அவர்கள்.

அவருக்காகவும், குமுதம் வரதராசனுக்காகவும் விக்கிப்பீடியா தரும் இந்நோய் குறித்த குறிப்பு இடம்பெறுகிறது. அதைத் தொடர்ந்து, விரை வீக்க அறுவைச் சிகிச்சை குறித்த ஒரு காணொலி இணைக்கப்பட்டுள்ளது[கொசுறாக இன்னொன்று>கண்டிப்பாக மணமானவர்களுக்கு மட்டும்]

//கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரை வீக்கம் (hydrocele / hydrocoele) என்பது ஆண்களின் விரையைச் (Testicle) சுற்றியிருக்கும் சவ்வுப் பையில் அளவுக்கதிகமாக நீர் சுரப்பதால் விரை வீக்கம் உண்டாகிறது. சிலருக்கு இந்தச் சுரப்பு நீர் சாதாரண அளவில் சுரந்தாலும், சுரப்பு நீர் உடலுக்குள் திரும்பிச் செல்கிற நிணநீர்ப் பாதையை அடைத்துக்கொள்வதால் விரை வீக்கம் உண்டாகிறது. யானைக்கால் நோய் (Filariasis) நோயினால்கூட விரை வீக்கம் ஏற்படுவதுண்டு.

விரையின் ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலோ வீக்கங்கள் காணப்படுவது இதன் அறிகுறியாகும்.

அறுவை மருத்துவத்தாலும் விரை வீக்கத்தைக் குணப்படுத்த இயலும். மருந்து மாத்திரைகளால் விரை வீக்கத்தைக் குணப்படுத்த இயலாது. விரை வீக்கம் பரம்பரை நோயன்று//