வியாழன், 6 மார்ச், 2025

புனித மதங்களும் பொல்லாத பேய்களும் பிசாசுகளும்!!!

முன்னறிவிப்பு:

இது மீள்பதிவு எனினும், ஏற்கனவே இதை நீங்கள் வாசித்திருக்க வாய்ப்பே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இது வெளியானபோது வருகை புரிந்து இதை வாசித்து வயிறு எரிந்தவர்கள்[மதப் பற்றாளர்கள்] 21 பேர் மட்டுமே. ஹி... ஹி... ஹி!!!

இந்து மதத்தில் பேய்களின் எண்ணிக்கை அதிகம். அவற்றில் ஜாதிமதப் பாகுபாடும் உண்டு. பூசாரிகளைக் கேட்டால் கதை கதையாகச் சொல்லுவார்கள்.

கிறித்துவ மதத்தின் ‘புனித’ நூலாகக் கருதப்படும் பைபிளிலும், இசுலாம் மதத்தின் ‘புனித’ நூலாகக் கருதப்படும் குர்-ஆனிலும் பேய் பிசாசுகள் பற்றிய கதைகள் உள்ளன. 

இன்றும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், கிறித்துவ மதப் போதகர்களால், ‘சரீரச் சுகமளிக்கும்’ கூட்டங்களில் பேய் விரட்டும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கத்தோலிக்க மதத் தலைவர் ‘போப்’, பேய் விரட்டலுக்கான நெறிமுறைகளை அறிவித்திருக்கிறார். ஏர்வாடி என்னும் ஊரிலுள்ள முஸ்லீம் தர்கா பேய் விரட்டலுக்குப் புகழ் பெற்ற இடமாகும்.

தற்கொலை செய்துகொண்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், விபத்தில் இறந்தவர்கள் ஆகியோரே பேயாகவும் ஆவியாகவும் உலவுவதாக நம்பப்படுகிறது. ஆனால், செத்துப்போன ஆடு, மாடு கோழி போன்றவை ஆவியாய்ப் பேயாய் அலைவதில்லையா? ஆவி&பேய் நம்பிக்கையாளர்கள் ஏனோ இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

இந்தப் பேய், பிசாசு ஆவிகளெல்லாம் இருப்பது உண்மையா?

இயற்பியல், வேதியியல், உயிரியல் முதலான காரணங்களாலும் உளவியல் காரணங்களாலும் பேய் பிடித்தது போன்ற மயக்க உணர்ச்சிகளுக்கு மக்கள், குறிப்பாகப் பெண்கள் ஆளாகிறார்கள் என்கிறது அறிவியல்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வால்டர்ஹெஸ், மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜே. டெல்காடோ ஆகியோர், மின் துடிப்புகள்[Electric Impulses] மூலம், மூளையின் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தூண்டிவிட்டு, சினம், அச்சம், பசி, வருத்தம், காதல், காமம், ஆர்வம், விருப்பு, வெறுப்பு போன்றவற்றை நடைமுறை வாழ்வில் உணர்வதுபோல் செயற்கையாகத் தூண்டும் முயற்சியில் வெற்றி பெற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்கள்.

மனித மனமானது கருத்தேற்றங்களினால்[suggetions] பாதிக்கப்படக்கூடும் என்பது உளவியல் உண்மையாகும்.

மதக் கருத்துகளை ஊட்டுதலும், மூளைச் சலவை[Brain Washing] செய்தலும் மெதுவானதும் தொடர்ச்சியானதுமான மன வசிய முறைகளாகும். பேய், பிசாசு, ஆவி தொடர்பான கருத்துகள் / எண்ணங்கள் இம்முறையில் சிறு வயதிலிருந்தே மனதிற்குள் திணிக்கப்படுகின்றன.

பேய் பிடித்தவரைப் போல் பிதற்றுதல், அயல் மொழியில் பேசுதல், சாமி ஆடுதல் போன்றவை எல்லாம் மேற்சொன்ன கருத்தேற்றங்களின் விளைவே ஆகும்.

பேய் பிடித்து அயல்மொழியில் பேசுபவர் குளோசோலேலியா[Clossolalia] என்னும் மன நோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர் பேசுவது உண்மையில் அயல்மொழி அல்ல என்பதை அந்தக் குறிப்பிட்ட மொழி தெரிந்தவரை அருகில் வைத்து நிரூபிக்கலாம்.

படிப்பறிவில்லாத கிராம மக்களே பெரும்பாலும் பேய், பிசாசு, ஆவி ஆகியவற்றின் தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள்.

படிப்பறிவற்ற கிராமப்புறப் பெண்களைப் ‘பேய் பிடிப்பதற்கு’க் குறிப்பிடத்தக்க சில காரணங்கள் உள்ளன. பருவம் அடையும் பெண்ணுக்குத் தன் உடலிலும் உணர்விலும் ஏற்படும் மாற்றங்கள் பற்றிச் சரியான புரிதல் இருப்பதில்லை. பாலியல் உறவு, குழந்தைப் பிறப்பு ஆகியவை பற்றியெல்லாம் போதுமான அறிவும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், கணவனால் அதீதமான காம இச்சையுடன் புணரப்படுவதாலோ, உடலுறவில் போதிய திருப்தியைப் பெற இயலாததாலோ பேய் பிடித்தல் போன்ற மன நோய்க்கு அவள் ஆளாகிறாள்.

மனநோய் மருத்துவரை அணுகிக் குணப்படுத்தக்கூடிய இம்மாதிரிக் கோளாறுகளை, பேய் பிடித்ததாக நம்பி ஏமாறுவதும், ஏமாற்றப்படுவதும் இம்மண்ணில் இடம்பெறாமல் தடுப்பது நம் அனைவருடைய கடமையும் ஆகும்.
                                           
                                      *   *   *   *   *

***பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகளிலிருந்து திரட்டிய கருத்துகளின் தொகுப்பே இப்பதிவு.

புதன், 5 மார்ச், 2025

அவர்கள் பாவப்பட்டவர்கள்! நாம் வெறும் பார்வையாளர்கள்!!

*பார்வையற்றவர்களில் சுமார் 10-15 சதவீதம் பேர்கள் எதையும் பார்க்க இயலாதவர்கள்.

*அவர்களில் சிலரால் வண்ணங்களையும், பொருள்களின் வடிவங்களையும், மாறுபட்ட அளவிலான ஒளியையும் பார்க்க முடியும்.

*பார்வையற்றவர்கள் பார்வை உள்ளவர்களைவிடவும் அதிகம் கனவு காண்பார்கள்.

*பார்வையற்றவர்கள் தூங்கும்போது தெளிவான கனவுகளை அனுபவிக்கும் வாய்ப்பு வேறு எவரையும் போலவே உள்ளது. வித்தியாசம் என்னவென்றால், அவர்களின் கனவுகள் ஒலிகளாலும் வாசனைகளாலும் ஆனவை.

*பார்வைக் குறைபாடுள்ளவர்களில் 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பிரம்புகளைப் பயன்படுத்துகிறார்கள். அயல்நாடுகளில் வழிகாட்டி நாய்களைப் பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.

*வழிகாட்டி நாய்களால் போக்குவரத்து விளக்கு பச்சையா அல்லது சிவப்பா, வேறு நிறத்துக்கு மாறுமா என்பதையெல்லாம் அறிய முடியாது. ஆனால், ஒரு கார் வந்தால் உடனே நின்றுவிடும்.

*பார்வையற்றவர் அல்லது பார்வைக் குறைபாடுள்ள ஒருவர், போக்குவரத்து சத்தம் போன்ற கேட்கக்கூடிய குறிப்புகளைப் பயன்படுத்தி, எப்போது கடப்பது பாதுகாப்பானது என்று தீர்மானித்துச் செயல்படுவதுண்டு.

*உலகளவில் 80 சதவீத பார்வைப் பிரச்சினைகளை உடனடி மருத்துவப் பராமரிப்புகளின் மூலமும், வழக்கமான கண் பரிசோதனைகள் மூலமும் தவிர்க்கலாம்; குணப்படுத்தவும் செய்யலாம்.

*50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களிடையே குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணம் கண்புரை ஆகும், இதை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

*அமெரிக்காவில் பார்வையற்றவர்களில் 70 சதவீதம் பேர் போதுமான உறக்கமின்றித் தவிப்பவர்கள்.

*பார்வையிழப்பு மற்ற புலன்களைக் கூர்மைப்படுத்துகிறது என்பதை ஆய்வாளர்கள் மறுத்துள்ளார்கள்.

பார்வைக் குறைபாடுகளை நீக்குவதற்காக உலகச் சுகாதார அமைப்புகள் பாடுபடுகின்றனவாம். இது போதாது.

ஒட்டுமொத்த விஞ்ஞானிகளும் கருந்துளை வெண்துளை, பெரு வெடிப்பு, பிரபஞ்ச எல்லை, கடவுள் அணு போன்றவை பற்றிய ஆராய்ச்சிகளையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, மனிதாபிமானத்துடன் பார்வை இழப்பை முற்றிலுமாய்த் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறிதல் வேண்டும்

உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்!

                        *   *   *   *   *

https://www.perkins.org/10-little-known-facts-about-blindness/