செவ்வாய், 13 ஜனவரி, 2026

அணுவும் அணுக்களும் கடவுளும்... ஒரு சிறு குறு ஆய்வு!

//பொருள்கள் உருவாகக் காரணமாக இருப்பவை அணுக்கள். பொருள்கள் அழிந்தாலும்,  மீண்டும் மீண்டும் இணைந்து வேறு வேறு வடிவங்களாக[பொருள்களாக> உயிர்களாக] அணுக்கள் மாறுகின்றனவே தவிர அழிவதில்லை. மேலும், அவை சுழற்சியில்[அண்டவெளியில்> பிரபஞ்சத்தில்] இருந்துகொண்டே இருக்கின்றன//

இதன் மூலம், அணுக்கள் இணைவதையும்[இரண்டறக் கலந்து?] பிரிவதையும் வழக்கமாக்கிகொண்டிருப்பவை என்பதை அறிய இயலுகிறது.

இங்கே ‘அணுக்கள்’ என்பது அணுக் கூட்டத்தைக் குறிக்கிறது. அதாவது, கூட்டமாக இயங்குகிற அணுக்களில் எதுவும் அழிவதில்லை என்பதும் உறுதியாகிறது.

கூட்டமாக இயங்கும்போது எந்தவொரு அணுவும் அழிவதில்லை என்றால்.....

ஓர் அணு தனித்திருக்கும்போதும் அழியாமல் இருக்குமா? 

இணையத் தேடலில் கிடைத்த விடை:

  • அறிவியல் ஆராய்ச்சிகளின்படி, அது அழிவதில்லை.

  • Scanning Tunneling Microscope (STM) மற்றும் Atomic Force Microscope (AFM) போன்ற கருவிகள் மூலம் தனி அணுக்களைப் பிடித்து நகர்த்த முடியும், இது அணுக்கள் தனித்து இயங்க முடியும் என்பதைக் காட்டுகிறது; அது ஒரு ஆதரவுப் பொருளுடன் இணைந்து ஒரு அமைப்பாகச் செயல்படுகிறது. வாயு நிலையில்(Gaseous state): அணுக்கள் வாயு நிலையில் தனித்திருக்கலாம், ஆனால் திடப்பொருட்களில் அவை பெரும்பாலும் கூட்டாகவே இருக்கும். 

  • சுருக்கமாக, அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஓர் அணுவைத் தனிமைப்படுத்தி இயக்க முடியும்[விரிவான தகவல்கள் இங்கு இடம்பெறவில்லை]. ஆனால் இயற்கையில், அணுக்கள் பெரும்பாலும் கூட்டாகவே இயங்குகின்றன.

ஐயம்:

அணு தனித்து இயங்கட்டும், கூட்டணி[அணுக் கூட்டம்] சேர்ந்தும் இயங்கட்டும், சுற்றிவளைத்து இங்கே முன்வைக்கப்படும் கேள்வி.....

அண்டவெளியிலுள்ள கணக்கிலடங்காத அணுக்களுக்கு அழிவே இல்லை என்றால், இவற்றை[என்றென்றும் இருந்துகொண்டே இருப்பவை]ப் படைப்பதற்கு எவரும் தேவையில்லை என்பதை அறிய இயலுகிறது. அப்புறம் ஏன் இந்தக் கூரு கெட்ட மனிதர்கள் கடவுளென்று ஒருவரைக் கற்பனை செய்து அவருக்குக் கோயில்கள் கட்டி, வழிபாடுகள் நிகழ்த்திக் கூத்தடிக்கிறார்கள்?                                                         *   *   *  *  * 
*****அணு அழிவின்மை விதி(Law of Conservation of Mass): பொருள்கள் உருவாவதற்கு மூல காரணமாக இருக்கும் அணுக்கள், ஒருபோதும் உருவாக்கப்படுவதோ அழிக்கப்படுவதோ இல்லை; மாற்றப்படுகின்றன.

உடல் சிதைவு: நம் உடல் அணுக்களால் ஆன மூலக்கூறுகளால் ஆனது; நாம் இறந்த பிறகு, இந்த மூலக்கூறுகள் சிதைந்து, அணுக்கள் மீண்டும் மண்ணில் கலந்து, தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களின் பகுதிகளாக மாறுகின்றன.

புதிய வடிவங்கள்: ஒரு கட்டிடம் இடிந்து போனாலும் அல்லது ஒரு பொருள் எரிந்து போனாலும், அதிலுள்ள அணுக்கள் அழிவதில்லை; அவை காற்று, சாம்பல் மற்றும் பிற பொருட்களின் பகுதிகளாக மாறுகின்றன. 

திங்கள், 12 ஜனவரி, 2026

மோடியே சிவபெருமான்! சிவபெருமானே மோடி!!

முன் குறிப்பு:

மோடி பற்றிய விமர்சனங்களை இயன்ற அளவுக்குத் தவிர்ப்பதே என் விருப்பம். எனினும், இவருடைய குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகள் அவ்வப்போது எழுதத் தூண்டுகின்றன என்பது விரும்பத்தகாதது.

                                   *   *   *   *   *

//குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தில் நடைபெற்றுவரும் சோம்நாத் சுவாபிமான் பர்வ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். ஜனவரி 8 முதல் 11 வரை நடைபெறும் இந்த ஆன்மிக & பண்பாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக, சோம்நாத் ஆலயத்தில் 72 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும் ‘ஓம்’ ஜபத்தில் பிரதமர் கலந்துகொண்டார்//* என்பது செய்தி.

ஒரு நாட்டின் பிரதமருடைய அன்றாட வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள்.

நிலுவையில் உள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கண்டறிவது[சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் & அலுவலர்களுடன்], அண்ட நாடுகளுடனான மோதல்களைச் சமாளிப்பதற்கும் உறவை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் பற்றிப் பரிசீலிப்பது, நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் பல தீட்டுவது என்றிப்படி ஏராளமான பொறுப்புகளைச் சுமந்துகொண்டிருப்பவர் அவர்.

போதுமான அளவுக்கு ஓய்வெடுப்பதற்கும், போதிய அளவுக்கு உறங்குவதற்கும்கூட நேரம் இல்லாமல் உழைப்பவர் அவர்.

மோடி நம் நாட்டுப் பிரதமர். இவர் எப்படி?

இதுவரையினான தன் பதவிக் காலத்தில், அதிக அளவிலான நாட்கள் உலகம் சுற்றுவதில்[பிற நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கு அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்வது தேவைதான். அதற்கு ஓர் எல்லையுண்டு]செலவழித்திருக்கிறார். எஞ்சிய நேரத்தில் பெரும்பகுதியைக் கோயில் கட்டுவதற்கும், கோயில்களுக்குச் செல்வதிலும் கழித்தார்; கழிக்கிறார். மிச்சமிருக்கும் கொஞ்சமே கொஞ்சம் நேரத்தைத்தான் பிரதமருக்கான அலுவல் நிமித்தம் செலவழித்தார்; செலவழிக்கிறார்.

அண்மையில் சோம்நாத் கோயிலுக்குச் சென்று, பக்தியின் மீதான தன் ஈடுபாட்டைப் படம் எடுத்துவெளியிட்டு, அந்தக் கொஞ்சம் நேரத்திலும் பெரும் பகுதியை வீணடித்திருக்கிறார்.

பக்தி வளர்ப்பதற்கென்றே[+பணம் சம்பாதிப்பதும் சொகுசாக வாழ்வதும்] இந்த நாட்டில் பல சாமியார்கள் இருக்கும்போது இவருக்கு எதற்கு அவ்வப்போது சாமியார் வேடமும் நாடகமும்?

இவருடைய இம்மாதிரியான நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாமலும், குறைந்தபட்சம் கொஞ்சம் கண்டனங்கள்கூடத் தெரிவிக்காமலும், நம் மக்கள் ‘தேமே’ன்னு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது நம்மைப் பெரு வியப்பில் ஆழ்த்துகிறது!

* * * * *