//ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மார்ச் 14, 1879 அன்று பிறந்தார்; தன்னை ஓர் உலகக் குடிமகனாகக் கருதியதால், தனது 16 வயதிலேயே ஜெர்மானியக் குடியுரிமையைத் துறந்தார். ஐன்ஸ்டீன் தனது பொதுச் சார்பியல் கோட்பாட்டை 1915இல் வெளியிட்டார். அந்தக் கோட்பாடு, மே 1919இல் நிரூபிக்கப்பட்டது, அவர் ஒரே இரவில் பிரபலமடைந்தார்; நாஜிக்கள் அணுகுண்டு ஒன்றை உருவாக்கக்கூடும் என்பதை அறிந்து நேச நாடுகளை அணுகுண்டு தயாரிக்கத் தூண்டிய அவரே, ஹிரோஷிமா & நாகசாகி குண்டுவீச்சுகளைத் தொடர்ந்து தன் செயலுக்காக அவர் பின்னர் வருந்தினார். 1952இல் இஸ்ரேலிய ஜனாதிபதி சாய்ம் வெய்ஸ்மான் இறந்தபோது, தனக்கு வழங்கப்பட்ட அந்தப் பதவியை அவர் மறுத்தார்// என்பன போன்ற, போற்றுதற்குரிய அவரின் வாழ்க்கை நிகழ்வுகள் பலரும் அறிந்தவைதான்.போற்றுதலுக்கு மாறாக, விமர்சனங்களுக்கு உள்ளான அவரின் வாழ்க்கை நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:
‘1902இல், மிலேவா மாரிக் என்னும் பெண்[ஐன்ஸ்டீனின் மாணவி> ஐன்ஸ்டீனின் ஆரம்பக்கால அறிவியல் வெற்றிகளில் ஒரு முக்கியப் பங்கு வகித்தவர்> அது பெரும்பாலும் சரித்திரத்தில் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது] திருமணம் புரியாமலே இவருடன் உறவுகொண்டு ஒரு பெண்ணையும் பெற்றெடுத்தார் என்பது செய்தி. இதன் மூலம் இது விசயத்தில் கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாதவர் ஐன்ஸ்டீன் என்பது அறியப்படுகிறது.
கட்டுப்பாடு காப்பவர் அல்ல என்பதோடு, பின்னர் அவர் திருமணம் செய்துகொண்ட அவரிடம்{மிலேவா மாரிக்கிடம்[இரு மகன்கள்]}, அவர் தன் மனைவி என்பதையே அலட்சியப்படுத்தி, மனிதாபிமானமே இல்லாமல் விதித்த நிபந்தனைகள்:
“என்னுடனான உன் உறவுகளில் நீ பின்வரும் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: 1.என்னிடமிருந்து எந்தவிதமான நெருக்கத்தையும் நீ எதிர்பார்க்கக் கூடாது; எந்த வகையிலும் என்னைக் குறை கூறவும் கூடாது; 2.நான் சொன்னால் என்னுடன் பேசுவதை நிறுத்த வேண்டும்; 3.நான் சொல்லும்போதெல்லாம் எந்த எதிர்ப்பும் இன்றி உடனடியாக என் படுக்கையறையையோ அல்லது படிக்கும் அறையையோ விட்டு வெளியேற வேண்டும். நம் பிள்ளைகளின் முன்னிலையில், வார்த்தைகளாலோ அல்லது நடத்தைகளாலோ என்னைக் குறைத்து மதிப்பைக் குறைக்கக்கூடாது.”
மேலும், மிலேவா மாரிக்கிடம், “என்னுடன் விவாகரத்துக்கு நீ சம்மதித்தால் எனக்கு நோபல் பரிசு கிடைக்குமாயின், அந்தத் தொகையை உனக்குக் கொடுப்பேன்” என்றார். ஆனால், தான் பெற்ற 32,250 அமெரிக்க டாலர்களைத் தானே செலவழித்தார்.
பின்னர், ஐன்ஸ்டீன் அவரது தாயார் வழி முதல் ஒன்றுவிட்ட சகோதரியான ‘எல்சா’ என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். இதுவும் மனதை உறுத்திகிற நிகழ்வுதான்.
அடுத்த நிகழ்வு ஐன்ஸ்டீன் மீது பெருமதிப்புக்கொண்டவர்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாகும்.
அது.....
ஐன்ஸ்டீன் 1935இல் மார்கரிட்டா கொனென்கோவா என்னும் பெண்ணைச் சந்தித்தார். இருவரும் காதலர்களாக ஆனார்கள்.
மேலும் ஒரு குறிப்பிடத்தக்க செய்தி: ஐன்ஸ்டீனின் நுண்ணறிவு ஈவு(IQ) பற்றி உண்மையில் யாருக்கும் தெரியாது. சில ஆதாரங்கள் அந்த இயற்பியலாளரின் நுண்ணறிவு ஈவு 160 என்று கூறுகின்றன. ஆனால், அது ஒருபோதும் சோதிக்கப்படவில்லை.
அறிவியல் உலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனமும் இன்றளவும் போற்றுகிற அறிஞர் ஐன்ஸ்டீன் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் அவரும் ஒரு சராசரி மனிதரே என்பதை அடையாளப்படுத்துகின்றன.