வெள்ளி, 8 ஜூலை, 2016

இது என்ன மூடர்களின் தேசமா!?

“மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் என்பது மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. -இப்படிப் பேசியிருப்பவர் கர்நாடக சட்ட மேலவை பாஜக தலைவர்[தலைவர்தான்!!!] ஈஸ்வரப்பா.

“காலங்காலமாக, சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். ஜோதிடம், மாந்திரீகம் போன்றவற்றின் தூண்டுதலால் அப்பாவிக் குழந்தைகள் நரபலி கொடுக்கப்படுகின்றனர். ஏழைகளுக்கும் பாமர மக்களுக்கும் ஏராளமான பொருள் இழப்பு ஏற்படுகிறது....

.....மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் போராட்டத்தில் அறிவுஜீவிகளும் பொதுநல ஆர்வலர்களும் தாக்கப்படுகிறார்கள். இதைக் கண்டிக்க வேண்டிய ஊடகங்கள், மூடநம்பிக்கையை வளர்க்கும் ராசிபலனுக்கும், சனிப்பெயர்ச்சிக்கும், ஜோதிடத்துக்கும் அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கின்றன. 

எனவே, மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் வகையில்,  ‘மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்’[கடந்தமுறை நிறுத்திவைக்கப்பட்டது] தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும்” என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்[இன்றைய நாளிதழ்ச் செய்தி].

சித்தராமையாவின் இந்த அறிவிப்புத்தான் ஈஸ்வரப்பாவின் மேற்கண்ட கூற்றுக்குக் காரணமாக அமைந்தது.

“பொது மக்களின் நம்பிக்கைகளில் தலையிட சித்தராமையாவுக்கு எந்த உரிமையும் இல்லை. மத நம்பிக்கைகளில் தலையிடுகிறார். அவர் நிறைவேற்ற நினைக்கும் இந்தச் சட்டத்தை பாஜக எதிர்க்கும்; சட்ட மேலவையில் அந்த மசோதாவைத் தோல்வியுறச் செய்வோம்” என்றெல்லாம் குமுறியிருக்கிறார் ஈஸ்வரப்பா. இது, பாஜக அனுதாபிகளையே முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

இவருடைய இந்த ஆவேசப்  பேச்சு பிரதமர் மோடியின் கவனத்திற்குச் செல்லும்தானே?

மோடி என்ன செய்யப்போகிறார்?

ஈஸ்வரப்பாவைக் கண்டிப்பாரா? 

கண்டித்தால்...அவரின் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தால் அறிவுஜீவிகளும் மக்களின் அறிவு வளர்ச்சிக்குப் பாடுபடுவோரும்  அவரைப் போற்றுவார்கள்.

ஈஸ்வரப்பாவை அரவணைத்து, அவரின் மூடநம்பிக்கைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவாரேயானால்.....

‘புண்ணிய பூமி’ என்று போற்றப்படும் இந்த இந்தியத் திருநாடு, ‘மூடர் தேசம்’ என்று எள்ளி நகையாடப்படும்.

நம் பிரதமர் யோசிப்பாரா?
===============================================================================
மன்னிப்பு வேண்டல்:
‘பாஜக’, தமிழ்மணம் இணைப்புப் பட்டியலில், ‘பஜக’ என்றுள்ளது. பிழை பொறுத்தருள்க.



வியாழன், 7 ஜூலை, 2016

ஒரு இந்து முதியவருக்கு இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம் பெண்!

இந்து மதத்தவரான ஒரு முதியவருக்கு, அவருடைய மகன்[மதம் மாறியவர்] செய்யத் தவறிய  கடமையை ஒரு முஸ்லிம் பெண் செய்திருக்கிறார். இது மனிதாபிமானத்தின் உச்சம்!
‘யாகூ பீவி’ ஒரு முஸ்லிம் பெண். தெலங்கானா மாநிலத்தில் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். 

05.07.2016 அன்று, இல்லத்தில் தங்கியிருந்த ஒரு முதியவர்,  தான் சாகும் தறுவாயிலிருப்பதை உணர்ந்து,  இந்துக்களின் பழக்க வழக்கங்களின்படி தன் சடலத்துக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவர் இறந்துபட்ட நிலையில், முதியவரின் மகன்[மதம் மாறியவர்] இந்து முறைப்படி சடங்கு செய்ய இயலாது என்று மறுத்துவிடுகிறார்.

முஸ்லிம் பெண்ணான யாகூ பீவி, முதியோர் இல்லத்திலிருந்து இடுகாடுவரை முதியவரின் சடலத்தின் முன்னால் தீச்சட்டி சுமந்து சென்றார்; இந்துக்களின் வழக்கப்படியே ஈமச் சடங்குகளைச் செய்து முடித்தார். 

யாகூ பீவியின் மனித நேயத்தை நாம் போற்றப் புகுந்தால் அது வார்த்தைகளில் அடங்காது.

“முதியவர் இரண்டு ஆண்டுகளாக என் பராமரிப்பில் இருந்து வந்தார். என் தந்தையாகவே அவரைப் பாவித்து வந்தேன். இதன் காரணமாகவே மதத்தை மறந்து, அவருடைய மகளாக இந்து முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்தேன். இது என் கடமை மட்டுமல்ல; மனிதாபிமானமும்கூட” என்று நிருபர்களிடம் சொல்லியிருக்கிறார் யாகூ பீவி.
===============================================================================
நன்றி: ‘தி இந்து[07.07.2016]