வெள்ளி, 30 மார்ச், 2018

கி.மு.287 - கி.மு.212இல் ஓர் இரும்பு மனிதன்!!!

கி.மு.287க்கும் கி.மு.212க்கும் இடைப்பட்ட காலத்தில், 'சைரக்யூஸ்'[Syracuse] நாட்டில் வாழ்ந்த அதிசயக் கணித & இயற்பியல் விஞ்ஞானி ஆர்க்கிமெடிஸ்[Archimedes of Syracuse was a Greek mathematician]
சைரக்யூஸ் நாட்டின் மன்னரிடமிருந்து அவசர அழைப்பு வந்தது இவருக்கு. இவரின் திறமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் மன்னர்.

அவர் சொன்னார்: ''ரோம் நம் மீது படையெடுக்கிறது. அவர்களின் கப்பல் படை நம் கடற்கரையை நெருங்கிவிட்டது. அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் நாம் தோல்வியைத் தழுவுவோம்.'' 

அவருக்குத் தைரியம் ஊட்டிய ஆர்க்கிமெடிஸ், கடற்கரையை நெருங்கிக்கொண்டிருந்த எதிரியின் கப்பல் படைகளைக் குறி வைத்து, வளைந்த உலோகத் தகடுகளால் ஆன பிரமாண்டமான குழிந்த கண்ணாடிகளை அமைத்தார்.

எதிரிகளின் கப்பல்கள் கடற்கரையை நெருங்கியதும், அந்தக் கண்ணாடிகளைக் கொண்டு சூரிய ஒளியைக் குவியச் செய்து கப்பல்களின் மீது பாய்ச்சி, அவற்றைத் தீப்பற்றச் செய்தார். ரோம் படை பின்வாங்கியது. சைரக்யூஸ் மன்னர், ஆர்க்கிமெடிசைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார்.

தோல்வியுற்ற ரோம், சைரக்யூஸ் மீது மீண்டும் படையெடுக்க அடுத்த வாய்ப்புக்காகக் காத்திருந்தது.

ஆர்க்கிமெடிஸ் என்னும் நிலவுக் கடவுளுக்கு விழா எடுத்து சைரக்யூஸ் மக்களும் படை வீரர்களும் களிப்பில் ஆழ்ந்திருந்த தருணத்தில் சைரக்யூஸ் கோட்டைக்குள் புகுந்துவிட்டது ரோமானியப் படை.

ஆர்க்கிமெடிசின் அறிவியல் அறிவை உணர்ந்து அவர் மீது மிக்க மதிப்புக் கொண்டிருந்த ரோமானிய மன்னர், ''ஆர்க்கிமெடிஸ் என்ற அற்புத மனிதரை ஒன்றும் செய்துவிடாதீர்கள்'' என்று ஆணை பிறப்பித்தார்.

ஆனால், அந்த ஆணை அனைத்து வீரர்களையும் சென்றடையாத நிலையில்.....

கடைவீதியில் அமர்ந்து ஒரு கணிதப் புதிரைத் தீர்ப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார் கணித மேதையான ஆர்க்கிமெடிஸ். ரோமானிய அரசர் பிறப்பித்த ஆணையை அறியாத ரோமானிய வீரன் ஒருவன் அவரைக் கொல்வதற்காக[கொல்வதற்கு வேறு காரணமும் சொல்லப்படுகிறது] உருவிய வாளுடன் நெருங்கினான்.

இதைக் கண்ணுற்ற ஆர்க்கிமெடிஸ், ''எனதருமை நண்பனே, கொஞ்சம் பொறு. கணிதப் புதிரை முடித்துவிடுகிறேன்'' என்று அன்புடன் வேண்டினார். அதைக் கண்டுகொள்ளாத ரோமானிய வீரனோ.....

வாளைப் பாய்ச்சி அந்த அதிசயக் கணித அறிவியல் மேதையின் உயிரைக் குடித்தான்.

இது நம் நெஞ்சைக் கனக்கச் செய்யும் ஒரு வரலாற்று நிகழ்வு.

இதை நீங்கள் ஏற்கனவே நிச்சயம் அறிந்திருப்பீர்கள். இருந்தும் இதை இங்கே நான் பதிவிடக் காரணம்.....

கொடூர மரணத்தைத் தழுவவிருந்த அந்தச் சில வினாடிகளில், மரண பயத்துக்குக் கிஞ்சித்தும் இடம் தராமல் ஆர்க்கிமெடிஸ் என்னும் அறிஞனால் எப்படித் தன் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடிந்தது என்னும் பிரமிப்புதான்.

ஆற்றும் வினையின்மீது கொள்ளும் அதீத ஆர்வமும், மனதை ஒருமுகப்படுத்த உதவும் இடைவிடாத மனப்பயிற்சியும்தான் காரணங்களோ?!

நன்றி: விக்கிப்பீடியா; 'எடையூர் சிவமதியின் 101 விஞ்ஞானிகள்', நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை.

புதன், 28 மார்ச், 2018

திருப்பதி தாங்குமா?!?!?!

'திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் ஶ்ரீராம பட்டாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான ஶ்ரீதேவி, பூதேவி சமேதரராய் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இரவில், உற்சவ மூர்த்திகளை அர்ச்சகர்கள் கோயிலுக்குள் கொண்டு சென்றனர்.

அப்போது, ஒரு அர்ச்சகரின் கையிலிருந்த பூதேவி சிலை கை தவறிக் கீழே விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தால் அச்சமடைந்த அர்ச்சகர்கள் உடனடியாக அந்தச் சிலையை எடுத்து, இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் பரிகார பூஜைகள் செய்தனர். வயது முதிர்ந்த அர்ச்சகரின் கை நடுக்கத்தால் அந்தச் சிலை கீழே விழுந்ததாகத் திருப்பதி தேவஸ்தானம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது// - இது இன்றைய 'தி இந்து'[28.03.2018] நாளிதழ்ச் செய்தி.

அர்ச்சகரோ இச்சகரோ நாம் யாவரும் மனிதர்களே,

ஒரு பொருளைக் கையாளும்போது சில வேளைகளில் அது கையிலிருந்து நழுவுதல் தவிர்க்க இயலாதது; இதற்குக் கடவுளர் சிலைகளும் விதிவிலக்கல்ல.

தவறி விழும்போது சிலைக்குச் சேதாரம் ஏற்படலாம். கடவுளுக்குப் பாதிப்பு நேருமா? அர்ச்சகர்கள் யோசித்திருக்க வேண்டும்.

கடவுள் எங்கும் நிறைந்தவர். அணுவிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார் என்னும் தத்துவத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்காகச் சிலை வழிபாடு ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

ஆக, மனிதர்கள் தம் வசதிக்காகவே கடவுளர் சிலைகளை உருவாக்கினார்கள். இவர்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் பழுதடைவதோ தவறிக் கீழே விழுவதோ இயற்கை.

இதை உணராமல் இந்தப் பகுத்தறிவு யுகத்திலும், அர்ச்சகர்கள் அச்சம் கொள்வதும் பரிகார பூஜை செய்வதும் அறிவுடைமை ஆகாது.

[தெய்வக் குத்தம் நேர்ந்துவிட்டதாக நம்புவது, பரிகார பூஜைகள் செய்வது போன்றவற்றைக் கவனத்தில் கொண்டுதான், கடவுள் நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படுகின்றன என்று நம் போன்றவர்கள் சொல்ல நேர்கிறது].

இதே செய்தியை இன்றைய 'தினகரன்'[28.03.2018] நாளிதழும் வெளியிட்டிருக்கிறது. செய்தியறிந்து, பக்தகோடிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் அது குறிப்பிட்டிருக்கிறது.

திருப்பதி மலைக்கோயில் 'பக்தர்களால் 'கலியுக வைகுண்டம்' என்று போற்றப்படுவதாக ஒரு கூடுதல் செய்தியையும் அது வெளியிட்டுள்ளது. 

இது தெரிந்தால் ஊருலகத்திலுள்ள அனைத்துக் குடுகுடு கிழடுகள்[நான் உட்பட] மட்டுமல்லாமல் சாவோடு சடுகுடு விளையாடிக்கொண்டிருக்கும் அத்தனை பாவப்பட்ட ஜென்மங்களும் திருப்பதி சென்று நிரந்தரமாய் 'டென்ட்' அடித்துவிடுமே, திருப்பதி தாங்குமா?!
-----------------------------------------------------------------------
உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ கீழ்வரும் நிமிடக் கதையையும் படிச்சுடுங்க.

கதை:                                            சேணம்

 “வர்றேம்மா...” -புறப்படப்போன வேலைக்காரி தங்கம்மா தயங்கி நின்றாள்.

“என்ன தங்கம்மா?” -முதலாளியம்மா கேட்டாள்.

“என் மகன் முத்துவோட உடுப்பெல்லாம் கிழிஞ்சிடிச்சி. புதுசு எடுக்கணும். ரெண்டாயிரம் ரூபா குடுங்க. மாசா மாசம் சம்பளத்தில் பிடிச்சுக்குங்க” என்றாள் முனியம்மா.

“முத்துக்கு என்ன வயசு?”

“பத்து நடப்புங்க.”

“சொல்றேன்னு தப்பா நினைச்சுடாதே” என்ற பீடிகையுடன் தொடர்ந்தார் முதலாளியம்மா, “எங்க யுவனுக்கு முத்து வயசுதான். அவன் போட்டுக் கழிச்ச பழைய டிரஸ் நிறைய இருக்கு. எதுவும் கிழியல; சாயம் போகல. கொஞ்சம் செட் தர்றேன். முத்து உடுத்துக்கலாம். தரட்டுமா?”

மீண்டும் தயக்கத்திற்குள்ளான தங்கம்மா, “நீங்க சாப்பிடுறதில் மீந்துபோனதை எங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் நாங்க எல்லோரும் சாப்பிடுறோம். அது மாதிரி இது இல்லீங்க. நீங்க உடுத்துறது உயர்ந்த ரகத் துணி. நாங்க உடுத்துறது படு மட்ட ரகம். உங்க உயர்ந்த ரகத் துணிகளை நாங்க போட்டுகிட்டா, அது குதிரைக்குப் போடுற சேணத்தைக் கழுதைக்குப் போட்ட மாதிரி இருக்கும். என்னை மன்னிச்சுடுங்கம்மா. துணி வேண்டாம். பணம் மட்டும் குடுங்க போதும்” என்றாள்.