வெள்ளி, 22 ஜூன், 2018

மாசேதுங் சொன்ன கடவுள் கதை!!!

சீனாவில், பல ஆண்டுகள் அதிபராக இருந்தவர் மாசேதுங். ஆலய வழிபாடுகளைத் தடைசெய்து பெரும் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தியவர். 

அவர் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, கீழ்க்காணும் சுவையான கதையைச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைப்பது வழக்கமாம்.

கதை.....

#ஒரு கிராமத்தில் ஓர் ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள்.

இவர்களுடைய இருப்பிடத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு நகரம் இருந்தது. குறுக்கே ஒரு மலையும் இருந்ததால், மலையைச் சுற்றித்தான் நகரத்துக்குச் செல்லவேண்டும். அதனால் நெடுந்தொலைவு பயணம் செய்யவேண்டியிருந்தது.

''இந்த மலை நமக்கு இடையூறாக இருக்கிறது. இதை உடைத்து ஒரு பாதையை ஏற்படுத்தினால், நம்மால் சுருக்காக நகரத்துக்குச் சென்றுவர முடியும். மூவரும் சேர்ந்து வேலையைத் தொடங்குவோம்" என்றான் விவசாயி. மகன்களும் சம்மதித்தார்கள்.

மூவரும் கடப்பாறைகளையும் பிற தளவாடங்களையும் பயன்படுத்தித் தினமும் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் மலையை உடைக்க ஆரம்பித்தார்கள்.

இவர்களின் இந்தச் செயலைக் கண்ணுற்ற ஒருவர், ''நீங்கள் செய்யும் செயலைக் கவனித்தால் சிரிப்புத்தான் வருகிறது. வெறும் கடப்பாறையையும் சில கருவிகளையும் வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய மலையை உடைக்க முடியுமா? உருப்படியா வேறு வேலை இருந்தால் பாருங்கள்'' என்றார்.

''இந்த வேலையை நாங்கள் நிறுத்திவிடப் போவதில்லை. எங்களுக்குப் பிறகு எங்களின் வாரிசுகளும் இதைத் தொடருவார்கள். என்றாவது ஒரு நாள் இந்த மலையை உடைத்து நகரத்துக்குப் பாதை போடப்படும். இந்தப் பாதை என் குடும்பத்துக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பயன்படும்'' என்று உறுதிபடச் சொன்னான் விவசாயி. சொன்னதோடு நில்லாமல், தன் மகன்களுடன் மலையை உடைக்கும் வேலையைத் தொடர்ந்தான்.

''புத்தி சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டேன்'' என்று முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்து அகன்றார் அந்த ஆள். இதன் பிறகும், இரவு பகல் பாராமல் மூவரும் மலையை உடைக்கும் பணியில் மிகக் கடுமையாக உழைத்தார்கள்.

இவர்களின் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்த கடவுள், இரண்டு தேவதைகளை அனுப்பினார்.

இவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்த இரவு நேரத்தில் தமக்குள்ள அபூர்வ சக்தியால் மலையைத் தரைமட்டம் ஆக்கினார்கள் தேவதைகள்.

விடிந்ததும், இக்காட்சியைக் கண்ட தந்தையும் மகன்களும் அளவிறந்த மகிழ்ச்சிக்கு ஆளானார்கள்#

கதையைச் சொல்லி முடித்ததும் கதை குறித்த விமர்சனத்தையும் தருவாராம் மாசேதுங். 

''இன்றளவும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதால், விவசாயக் குடும்பத்துக்குக் கடவுள் உதவி செய்ததாக ஒரு கற்பனைக் கதையைச் சொன்னேன். இதையோ, இம்மாதிரிக் கதைகளையோ இனியும் நீங்கள் நம்புதல் கூடாது. 

உண்மையில் மக்களாகிய நீங்கள்தான் கடவுள்.

இந்த விவசாயியைப் போல உயர்ந்த குறிக்கோளும் தளராத நம்பிக்கையும் கடின உழைப்பும் உள்ளவர்களுக்கு நீங்கள் உதவிட வேண்டும். இதன் மூலம் தனி மனிதன் மட்டுமல்ல, இந்த நாடே பயன் பெறுகிறது.''

மாசேதுங் மகா புத்திசாலி.
========================================================================
பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதோவொரு பருவ இதழில் வாசித்த கதை இது[இப்போது என் மொழிநடையில்]. இதழின் பெயரோ எழுதியவர் பெயரோ நினைவில் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

புதன், 20 ஜூன், 2018

உச்சந்தலையிலிருந்து ஒரு திரவம்...! உடல் முழுதும் பரவசம்!!

#சின்ன வயதிலிருந்தே ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை எனக்கு இருந்தது. அதே சமயம்.....

'கடவுள் இருக்கிறாரா, இல்லையா?' என்னும் கேள்வியும் ஓட ஓட என்னை விரட்டியது. அதன் விளைவாக.....

அரவிந்தர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்றோரின் கடவுள் கொள்கைகளை ஆழ்ந்து கற்றேன். கடவுளைக் காண்பதற்குப் போராடினேன். பலன் கிட்டவில்லை.

கல்லூரியில் படித்த காலத்தில் 'தியானம்' குறித்து அறிய நேர்ந்தது. தீவிர தியானப் பயிற்சியில் ஈடுபடலானேன். அதன் மூலம் புதிய சில அனுபவங்களைப் பெற்றேன்.

ஒரு நாள், கடினமான தியானத்தில் ஈடுபட்டிருந்தபோது, கண்ணுக்குள் பளீர் வெளிச்சம். அதில் மிதந்தேன். உச்சந்தலையிலிருந்து ஒரு திரவம் சுரந்து உடம்பெங்கும் பரவுவது போல் இருந்தது. உடம்பு முழுக்கப் பரவச உணர்வு பரவியது.

இப்படியே சில மாதங்கள் கடந்தன. ஒரு கட்டத்தில், அருகிலிருக்கும் எதைத் தொட்டாலும் கடவுளைத் தொடுவது போலவே தோன்றும். எல்லாமே எனக்குக் கடவுளாகத் தெரிந்தன. ஆனால், அதற்கப்புறம், அடுத்தடுத்துக் குழப்பங்களை ஏற்படுத்தும் கேள்விகள் என்னுள் முளைக்க ஆரம்பித்துவிட்டன.

விடுதிக்குச் சென்று சாப்பிடும்போது சாப்பாடும் எனக்குக் கடவுளாகத் தெரிந்தது. கூடவே, கீழ்க்காண்பவை போன்ற   கேள்விகளும் எழுந்தன. 

'சாப்பாடும் கடவுள். நானும் கடவுள். கடவுள் தன்னைத்தானே சாப்பிடுவது எவ்வகையில் சரி, அல்லது சாத்தியம்? நானும் கடவுள்; விக்கிரகமும் கடவுள். கடவுள் கடவுளைத் தொழுவது தேவைதானா?

இவ்வாறான கேள்விகளால் மனம் நாளும் குழம்பியது. பித்துப் பிடித்தவன் போல் ஆனேன். உடம்புக்கு முடியாமல் போனது.

எங்கள் வீட்டிலோ,  என்னை 'மோகினி' அடித்துவிட்டதாக நினைத்தார்கள்; கவலைப்பட்டார்கள்.

இந்நிலையில், தாகூரைப் படிக்க நேர்ந்தது. எனக்கிருந்த குழப்பமும் நீங்கியதுபோல் உணர்ந்தேன்.

தாகூர் சொல்கிறார்: ''இயற்கை மட்டுமே உண்மை. கடவுள் என்று ஒருவர் இல்லை.''

அதன் பின்னர், ''கடவுள் உண்டா?'' என்று யாரேனும் கேட்டால், ''இல்லை. கடவுள் என்பது மக்களுக்குப் போதையூட்டும் ஓர் அழகான கருத்தாக்கம்'' என்றே பதில் சொன்னேன்[தி இந்து, 20.06.2018].#

மேலே விவரிக்கப்பட்ட நிகழ்வு.....

இந்தியாவுக்கேற்ற பொதுவுடைமை இயக்கத்தை உருவாக்கும் சிந்தனைப் பயணத்தை மேற்கொண்டவர்களில் மிக முக்கியமான ஒரு புள்ளியாகக் கருதப்படும் கோவை ஞானியின் வாழ்க்கையில் நிகழ்ந்ததாகும்.
வயது 80ஐக் கடந்துவிட்ட இவர், 50களில் கடுமையான நீரிழிவு  நோய் காரணமாகக் கண்பார்வையை இழந்துவிட்டவர். ஆனாலும், திடமனதுக்காரரான இவர், வாசிப்பையோ, எழுதுவதையோ பேசுவதையோ நிறுத்திவிடாதவர். இன்றளவும், காலை 11 மணி தொடங்கி, மாலை 08 மணிவரை மீனாட்சி என்பவர் வாசிக்க, இவர் கேட்கிறார்; எழும் சிந்தனைகளுக்கு அவர் மூலம் எழுத்து வடிவம் தருகிறார்; பல நல்ல நூல்களின் ஆசிரியர்[பள்ளி ஆசிரியராக இருந்தவர்].

ஞானி அவர்களுக்கும் 'தமிழ் இந்து'வுக்கும் நம் நன்றிகள்.